இந்தியாவை விற்பனை செய்கிறதா பாஜக..? தேர்தல் நிதி பத்திரம் எழுப்பும் கேள்விகள்



பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் துறையாக மாறிவிட்டது இந்திய தேர்தல் முறை. ஆம். கட்சிகளை பின்னணியில் இருந்து இயக்குவது கார்ப்பரேட் நிறுவனங்களே என்பதை சமீபத்திய ேதர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தொழிலதிபர்களின் ஆதரவு இல்லாமல் கட்சி நடத்துவது இன்று சாத்தியமில்லை. தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், பேரணி, விளம்பரம், வாக்காளர்களுக்கு பணம், தொண்டர்களுக்கு பணம், மது, பிரியாணி பொட்டலம் என பல ஆயிரம் கோடி ரூபாயை கட்சிகள் செலவழிக்கின்றன.

எனவே ஆட்சிக்கு வரும் கட்சி, கைநீட்டி பணம் வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்னணியில் இருந்துகொண்டு மக்களுக்கு விரோதமான மற்றும் ஆபத்தான கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. அரசாங்கம் வழியாக அவற்றைச் செயல்படுத்துகின்றன.

இதற்கு ஒரு சோறு பதம் மத்தியில் ஆளும் பாஜக. கடந்த 2014ல் ஆட்சியை பிடித்த பாஜக, தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதால், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அது, நடந்து முடிந்த மற்றும் அதற்கு முந்தைய தேர்தல்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த கட்சிக்கு அளித்த நன்ெகாடைகளில் இருந்தே தெரியவருகிறது.

நன்கொடை வழங்குவதில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லாததால் கறுப்புப் பணத்தை பதுக்குவோருக்கு பாதுகாப்பு அரணாக மத்திய பாஜக அரசு விளங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.இவையெல்லாம் எப்படி சாத்தியமானது..?கடந்த 2018 ஜனவரியில் மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம்தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.

இந்த பத்திரத்தை குறிப்பிட்ட சில ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் கிளையில், ஒரு நிதியாண்டில் 4 முறை மட்டுமே பெற முடியும். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் 10 நாட்கள்வரை இந்தப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு 15 நாட்களுக்குள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நன்கொடை வரவு வைக்க வேண்டும்.

அதுவும், சம்பந்தப்பட்ட கட்சியானது கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஒரு சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சியாக இருக்க வேண்டும்.  இந்தியர் அல்லது இந்தியாவில் பதிவு செய்துள்ள எந்த ஒரு நிறுவனமும் வங்கியில் பத்திரத்தைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம்!

பத்திரத்தைப் பெறுபவரின் தகவல்கள் வங்கியிடம் மட்டுமே இருக்கும். அரசியல் கட்சிகள் அவர்களுடைய பெயரை வெளியிட வேண்டிய தேவை இல்லை!தேர்தல் ஆணையத்திடம் நன்கொடைப் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்கிற தகவல் மட்டுமே இருக்கும். ஆனால், அந்த நன்கொடையை யார் அளித்தார் என்கிற தகவல்கள் இருக்காது!

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்னும் ‘அசோசியேஷன் ஃபார் டெமோகிரடிக் ரிஃபார்ம்ஸ் மற்றும் காமன் காஸ்’ ஆகிய அமைப்புகள் தேர்தல் நிதி பத்திரம் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருவதுடன் அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளன.  

‘பெயர் தெரியாமல் நன்கொடை அளிப்பது முறைகேட்டுக்கு வழிவகுக்கும்’ என்று மேற்கண்ட அமைப்பினர் தெரிவித்தாலும், ‘வாக்காளர்களுக்கு அவர்களின் வேட்பாளர்கள் குறித்து அறிந்துகொள்ள உரிமை உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று அவர்களுக்கு ஏன் தெரியவேண்டும்’ என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இப்படியெல்லாம் பலவாறாக பேசப்பட்டு வரும்நிலையில், ‘நன்கொடை வழங்குவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை; ஆனால், பெயர் வெளியிடாமல் நன்கொடை வழங்குவதை எதிர்க்கிறோம்’ என தங்கள் தரப்பை கூறியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய தகவலானது பத்திரம் வழங்கப்பட்ட வங்கி (Issuing Bank), வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் ரிசர்வ் வங்கி வரை சென்று கடைசியில் நிதியமைச்சகத்தை சென்றடையும். அதற்குமேல் யாருக்கும் தெரியாது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பாஜக கட்சி, தனக்கு சாதகமாக தேர்தல் நிதி பத்திர சட்டத்தை அமைத்துக் கொண்டதுடன் எதிர்க்கட்சிகளுக்கான நிதியாதாரத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது என்கிறார்கள்.இச்சட்டத்தால் பெரிய கட்சிகள் மட்டுமே பலனடையும். கூடவே தேர்தல் அரசியலில் சிறு கட்சிகளை வளரவிடாமல் முடக்க முடியும். இப்படி எத்தனையோ வலைப்பின்னல்கள் இந்த தேர்தல் நிதி பத்திரத்தில் உள்ளன.

கறுப்புப்பணத்தை ஒழிக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் ஆளும் பாஜக கட்சி, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தேர்தல் நிதி வசூலில் முன்னிலை பெற்றுள்ளது. 6 தேசிய கட்சிகள் சேர்த்து பெற்ற மொத்த நன்கொடை ரூ.985 கோடி. இதில் பாஜக மட்டும் ரூ.915 கோடி பெற்றுள்ளது! அதாவது 92.5%!இப்போது வெளியாகியிருக்கும் 2016 - 17 மற்றும் 2017 - 18ம் நிதி ஆண்டுக்கான அறிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை 93% இலிருந்து 160% ஆக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாஜக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகளும், ரூ.20,000க்கும் மேல் தன்னார்வ பங்களிப்பாக ரூ.1,059.25 கோடியைப் பெற்றுள்ளன. இதில், பாஜக மட்டும் ரூ.915.59 கோடியை 1,731 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் ரூ.55.36 கோடியை 151 நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது. குறைந்த அளவாக சிபிஐ 2 சதவீதம் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையைப் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நிறுவனம் 2 ஆண்டுகளில் 46 நன்கொடைகள் மூலம் ரூ.429.42 கோடியை அளித்ததில், பாஜக மட்டும் ரூ.405.52 கோடியைப் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.23.90 கோடியைப் பெற்றுள்ளது. மேற்கண்ட விவரங்கள் ‘தெரிந்த நிறுவனங்களிடம் இருந்து’ பெறப்பட்டவை.

‘தெரியாத நிறுவனங்களிடம் இருந்து’ அரசியல் கட்சிகள் பெற்ற 916 நன்கொடைகளின் விவரங்கள் எதையும் கட்சிகள் அளிக்கவில்லை. 76 நன்கொடைகளுக்கு ‘பான்’ எண் விவரங்களும் இல்லை.

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை பெறும்போது ‘பான்’ எண் விவரம் கட்டாயம் என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. ஆனால், பாஜக பெற்ற நன்கொடையில் 98% நன்கொடைகளுக்கு ‘பான்’ விவரங்கள் இல்லை. என்ன தொழில் செய்கின்றனர் என்ற எந்த விவரமும் இல்லாத நிறுவனங்கள் மூலம் ரூ.22.59 கோடி கட்சிகளுக்கு நிதியாக ‘வந்துள்ளது’.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 2016 - 17ம் ஆண்டில் ரூ.49.94 கோடியும், 2017 - 18ம் ஆண்டில் உற்பத்தித் துறை சேர்ந்த நிறுவனங்கள் தேசிய கட்சிகளுக்கு ரூ.74.74 கோடியும் நன்கொடை வழங்கி உள்ளன. உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள், தேர்தல் ஆணைய விதிகள், அரசியல் சாசன நெறிமுறைகள் உள்ளிட்ட எதையும் அரசியல் கட்சிகள் பின்பற்றுவதில்லை என்பதே தேர்தல் நிதி பத்திரம் திட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த விஷயத்தில் பெரும்பாலான கட்சிகள் ஒரே நேர்க்கோட்டிலேயே செல்கின்றன என்பதே உண்மை. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்காலத்தில் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு பலகீனமாக மாறும் என்ற அச்சம் ஏற்படுகிறது!                             

செ.அமிர்தலிங்கம்