வெடித்த டிவி பாம்!



போஸ்ட் மார்ட்டம்-8

ஆந்திராவின் 50 ஆண்டுக்கால இரத்த சரித்திரம்


சென்னா ரெட்டியின் வீட்டுக்கு அருகில்தான் பெண்கள் கல்லூரி.1989 முதல் 1993 வரையிலான காலக்கட்டத்தில் அந்தக் கல்லூரியில் படித்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கி வகுப்புக்கு இரண்டு பேர், மூன்று பேர் மட்டுமே படிப்பதற்காக வந்துள்ளனர்!அந்த அளவுக்கு ஓபுல் ரெட்டியும், சூர்ய நாராயண ரெட்டியும் தங்களது மன்மத விளையாட்டை அந்த ஊரில் விளையாடித் தீர்த்திருக்கிறார்கள்!

கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் தமது பள்ளியறைக்குத் தூக்கிச் சென்றிருக்கும் இந்த ரெட்டிகளைப் பார்த்து அன்றைய அனந்தப்பூர் மாவட்டமே அலறியதாக இப்போதுதான் மீடியாக்களில் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்!
அன்று? கப்சிப்! தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியை வீடு புகுந்து பாலியல் வல்லுறவு செய்த செய்திதான் முதன் முதலில் ஓபுல் ரெட்டி யார் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியது!

ஆனால், நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லாததால் ஓபுல் ரெட்டி கைது செய்யப்படவில்லை. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து தர்மாவரத்திற்கு குடியேறிய இரண்டு பெண்களை ஓபுல் ரெட்டி கற்பழித்ததும் தொடர்ந்திருக்கிறது.  தெரியாத பெண்கள் என்றில்லை. ஓபுல் ரெட்டி தன்னிடம் வேலை செய்யும் ஆட்களின் வீடுகளிலும் கை வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் டாக்டர் குள்ளயப்பா என்பவரின் மகளையும் அவர் சீரழித்ததாகச் சொல்கிறார்கள்.

ஓபுல் ரெட்டி ஒரு சாடிஸ்ட் என்பதை அவரது மரணத்துக்குப் பிறகுதான் தைரியமாக மக்கள் சொல்லியிருக்கிறார்கள். உயிருடன் ஒருவரை ரயில் முன் எறிந்து அதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு ஓபுல் ரெட்டி கொடூரமானவர் என்பதெல்லாம் அப்போதுதான் வெளிச்சத்துக்கே வந்தது.

போலவே ஒரு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரின் உடலில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு கிலோ வீதம் கொஞ்சம் கொஞ்சமாக சதையை வெட்டி எடுத்து வீசி எறிந்தார் என்பதும்; ஒருவரின் வயிற்றில் டிரில்லிங் மெஷினை வைத்து ஓட்டை போட்டு கொலை செய்தார் என்பதும்.

இப்படிப்பட்ட ஓபுல் ரெட்டிக்கு சிறிதும் சளைத்தவரல்ல அவரது நண்பரான மட்டலச்செருவூ சூர்ய நாராயண ரெட்டி என்கிற சூரி!வீடு புகுந்து பெற்றோர்கள் முன்னிலையிலேயே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்தார் என்ற புகார்தான் இவரது லிஸ்ட்டில் முதலாவது. அடுத்தது ஓர் அரசு ஊழியரை கற்பழித்த புகார்.

ஓபுல் ரெட்டி, சூர்ய நாராயண ரெட்டி ஆகியோரின் அட்டூழியங்களை பொறுக்க முடியாத மக்கள் நக்ஸலைட்டுகளிடம் உதவி கேட்டார்கள்.இதை ஏற்ற நக்ஸடைட்டுகள் எடுத்ததுமே இவ்விருவரையும் நெருங்காமல் முதலில் அவர்களது கைத்தடிகளைப் போட்டுத் தள்ளினார்கள்.இதனால் கோபம் கொண்ட இரு ரெட்டிகளும் தங்கள் பங்குக்கு துப்பாக்கிகளை ஏந்தினார்கள்.

விளைவு? கேங் வார் என்னும் அளவுக்கு இருபுறமும் வெட்டுக் கொலை. 1990ல் சென்னா ரெட்டி மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் ஆட்கள் பத்தாபாளையம் கிராம தலைவரான போயா வெங்கட ராமுடு என்பவரை படுகொலை செய்தனர்.இந்த போயா வெங்கட ராமுடு யார் தெரியுமா? பரிதலா ரவியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்!இந்தக் கொலை அரங்கேறிய சில நாட்களிலேயே வேப்பகுண்டா கிராம சங்கத்தின் செயலாளர் வரதப்பாவையும் கொலை செய்து டீஸல் ஊற்றி எரித்தனர்.

இப்படியாக சென்னா ரெட்டி, சூர்யநாராயண ரெட்டி ஆகிய இருவருமே இணைந்தும் தனித்தனியாகவும் பல கொலைகளைச் செய்திருக்கிறார்கள்.
நேமிலிவரம் கிராம முன்சீஃப் சுப்பராயுடுவை கங்கணப்பள்ளிக்கு கடத்திச் சென்று அங்கேயே வெட்டினார்கள்.1994ல் ராயுடுரகம் என்ற ஊரில் நாராயணப்பா என்பவரை சதக் சதக். இவரும் பரிதலா ரவிக்கு நெருக்கமானவர்!ஒரு குடியரசு தினத்தன்று கொடியேற்ற காரில் புறப்பட்டார் தகரகுண்டா கிராமத்தின் தலைவரான போயா நாகராஜு.

இதை அறிந்த சூர்யநாராயண ரெட்டியும் அவரது ஆட்களும் குண்டு வீசி காருடன் அவரைச் சிதறடித்தனர். இந்த நாராயணப்பாவும் பரிதலா ரவியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்! இப்படி தனக்கு நெருக்கமானவர்களை எல்லாம் சென்னா ரெட்டியும், சூர்யநாராயண ரெட்டியும் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்வதைக் கண்ட பரிதலா ரவி, பதிலடி கொடுக்கத் தயாரானார்.  அதற்கான சரியான தருணத்தை நக்ஸல் அமைப்பினரே ஏற்பாடு செய்தனர்! 1991ல் அழித்தொழிப்பு பிராஜெக்ட்டில் நக்ஸல்களுடன் கை கோர்த்தார் பரிதலா ரவி!  

போதாதா..? 91ம் ஆண்டே இரத்த ஆண்டாக ஆந்திர வரலாற்றில் பதிவாகும் அளவுக்கு பல கொலைகளும் படுகொலைகளும் அரங்கேறின. முதல் பலி பெனுகொண்டா எம்எல்ஏவான சேனா சென்னா ரெட்டிதான்!பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டில் ரிலாக்சாக சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியை அணுகிய போலீஸ் உடையணிந்த நக்ஸல்கள், முதலில் ஒரு சல்யூட்டை அவருக்கு வைத்துவிட்டு பின்பு சரமாரியாக அவரைச் சுட்டனர்.இந்தக் களேபரத்தில் சென்னாவின் அடியாட்கள் சிலரும் கொல்லப்பட்டார்கள்.

எம்எல்ஏவான சென்னா ரெட்டியின் மரணத்தை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.டெக். மூன்றாமாண்டு மாணவராக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியின் மூத்த மகன் ரமணா ரெட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் காடே லிங்கப்பா நின்றார். தேர்தல் பிரசாரத்திலேயே தங்களது கை வரிசையை ரெட்டி தரப்பு காட்டியது. தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் சிலர் இந்தத் தேர்தலில் கொல்லப்பட்டனர்.

எல்லா எதிர்ப்பையும் மீறி அல்லது எதிர்பார்த்தது போலவே ரமணா ரெட்டி வெற்றி பெற்றார். இந்த வெற்றி அனந்தப்பூரையே அதகளமாக்கத்தான் உதவியது.இந்த நேரத்தில்தான் ஆந்திர அரசியலையே புரட்டிப் போடக் கூடிய ஒரு நிகழ்வு நக்ஸல்கள் இயக்கத்தில் நடந்தது!
அதுவரையில் ஏழை, எளிய மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு போராடி வந்த நக்ஸலைட் அமைப்பு என்றழைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு இரண்டாகப் பிரிந்தது!

புகழ் பெற்ற போராளியான கொண்டப்பள்ளி சீதாராமையா, மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்கள் யுத்தக் குழு - சீதாராமையா என்றே ஒரு தனிப் பிரிவு தோன்றியது. சென்னா ரெட்டியை சுட்டுக் கொன்ற புகழ் பெற்ற இன்னொரு போராளியான பொட்டுல்ல சுரேஷ் இந்த குரூப்பைச் சேர்ந்தவர்தான்இந்த நேரத்தில் ரவி எடுத்த ஒரு பகீர் முடிவுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்துக்கே காரணமாக அமைந்தது.  சூர்ய நாராயண ரெட்டியைப் பழிவாங்க வேண்டும். என்ன செய்யலாம்?பரிதலா ரவியின் டீம் ரூம் போட்டு யோசிக்கத் தொடங்கியது.

ஆனால், எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை. ஏனெனில் சூர்யநாராயண ரெட்டியின் குடும்பத்தினர் மீது ஊர் மக்களுக்கு அப்பொழுதும் அன்பு இருந்தது. தவிர அடுத்தடுத்து தன் சகாக்கள் படுகொலை செய்யப்பட்டதால் கர்நாடகாவில் சூர்யநாராயண ரெட்டி பதுங்கி இருந்தார்.

எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் என்ன செய்வது என தீர்மானிக்க முடியாமல் பரிதலா ரவி கோஷ்டி திணறியது. இந்த நேரத்தில்தான் சிம்கார்ட் நழுவி செல்போனில் விழுந்த கதையாக சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் நடக்கவிருக்கும் செய்தி அவர்களை எட்டியது.

உடனே பரபரப்பானார்கள். சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் இருந்த டிவி ரிப்பேர். அதை சரிசெய்ய டிவியைக்கொண்டு வந்து மெக்கானிக்கிடம் கொடுத்துவிட்டுச்சென்றார்கள்.இதை மோப்பம் பிடித்த பரிதலா ரவியின் ஆட்கள், அந்த மெக்கானிக்கை கையில் போட்டுக் கொண்டு, டிவியை ஆன் செய்ததுமே பாம் வெடிக்கும்படி செட் செய்திருக்கிறார்கள்.

பக்காவாக பாம் பொருத்தப்பட்டதும் பத்திரமாக டிவியை சுமந்து வந்து சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் பொருத்தினார்கள். இவர்கள் வெளியேறவும் சூர்யநாராயண ரெட்டியின் அம்மா, டிவியை ஆன் செய்யவும் சரியாக இருந்தது.டமால். இடி விழுந்தது போல் பெரும் ஓசை. தொடர்ந்து புகை மண்டலம்.எல்லாம் அடங்கியதும் தான் வீட்டில் இருந்த சூர்யநாராயண ரெட்டியின் அம்மா, அண்ணன், அண்ணி, தங்கை மற்றும் வேலையாட்கள் உடல் சிதறி இறந்திருப்பதே தெரிந்தது!

திரைப்படத்துக்கு சவால்விடும் வகையில் 1993ம் ஆண்டு நிகழ்ந்த இந்த பாம் ப்ளாஸ்ட் பரிதலா ரவி Vs சூர்யநாராயண ரெட்டிக்கு இடையிலான பகையை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்தப் பகைக்குள் இப்போதைய சீமாந்திராவின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி வந்தது தனிக்கதை!

(தொடரும்)

கே.என். சிவராமன்