கொலைகார வவ்வால்கள்... பன்றிகள்... பரவும் நிபா வைரஸ்...



உலகை அச்சுறுத்த எத்தனையோ காரணிகள் இருக்கின்றன.  காற்று, நீர், மண் மாசுபாடு, ரசாயன வெளிப்பாடு, காலநிலை மாற்றங்கள், புற ஊதாக் கதிர்வீச்சு போன்ற சுற்றுச்சூழல் அபாய காரணிகளால் 100க்கும் மேற்பட்ட நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி மக்கள் கொத்து கொத்தாக மடிகின்றனர்.

எனவேதான் பெரியம்மை எய்ட்ஸ், மலேரியா, காசநோய், போலியோ, காலரா, வயிற்றுக்கடுப்பு, டைபாய்டு, சிக்கன் குன்யா, பன்றி / டெங்கு / மூளைக்காய்ச்சல், எபோலோ, ‘நிபா’ வைரஸ் (Nipah Virus - NiV) போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கொடுமையான சில நோய்களுக்கு நீண்டகால தொடர் விழிப்புணர்வால் அந்நோய் பாதிப்பில் இருந்து மக்களை இந்நிறுவனம் காப்பாற்றி இருந்தாலும் இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பரவிவரும் சில நோய்களால் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் ‘சைலண்ட் மோடில்’ மெல்ல மெல்ல செத்து மடிகின்றனர்.

இருந்தும், உலக சுகாதார நிறுவனம் 194 நாடுகளை ஒருங்கிணைத்து, பொது சுகாதாரத்துக்கான விழிப்புணர்வுகளைச் செய்து வருகிறது. எந்தவொரு நாட்டிலும் சுகாதார பிரச்னைகளால் மக்கள் மடிகிறார்கள் என்றால், இந்நிறுவனம் தாமாகவே தலையிட்டு அதற்கான தீர்வையும் அளிக்கிறது.இந்த இன்ட்ரோ எதற்குத் தெரியுமா? ‘நிபா’ வைரஸ் குறித்து விளக்கத்தான்!

‘கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது; 33 பேரின் ரத்த மாதிரிகள் புனே பரிசோனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன; 350க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்; மக்கள் வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்; வவ்வால் கடித்த பழங்களைச் சாப்பிட வேண்டாம்; நோய்த்தடுப்பு குழுக்கள் பரிசோதனை; மாநில எல்லையில் மருத்துவக் குழு கண்காணிப்பு; முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; மத்திய குழு அனுப்பிவைப்பு’ என்று எத்தனையோ தலைப்புகளில் இன்று கேரள மாநில செய்திகள் உள்ளூரில் மட்டுமன்றி தேசிய, சர்வதேச செய்திகளிலும் முதலிடம் பெறுகின்றன.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டும் கடந்தாண்டைப் போல் ‘நிபா’ பீதி கேரளாவை உலுக்கி வருகிறது. மக்கள் அச்சத்துடனே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். என்னதான் காரணம்? எப்படி கேரளாவை மட்டும் அதிகளவில் ‘நிபா’ தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது? இதற்கான மாற்றுவழி என்ன? இங்கு மட்டும் இந்த பிரச்னையா? உலகில் வேறெங்கும் இல்லையா?
பல சந்தேகங்கள் எழுகின்றன.

‘2018 மே 3ம் தேதி ‘நிபா’ வைரஸால் தாக்கப்பட்டு இறந்த கேரளாவைச் சேர்ந்த முதல் இளைஞர் முகம்மது சபித் (26); அவர், 2018 ஏப்ரல் 11 முதல் 27ம் தேதி வரை ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்திருப்பார்’ என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
முகம்மது சபித்துக்கு எப்படி ‘நிபா’ வைரஸ் தாக்குதல் வந்தது என்றால், இந்த இளைஞர் வளைகுடா நாட்டில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தவர். ஏப்ரல் முதல்வாரம் கேரளா திரும்பும்போது அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

மே 2ம் தேதி அதிக காய்ச்சலுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் புறநோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் அவருக்கு சாதாரண சிகிச்சையே வழங்கப்பட்டது. தொடர்ந்து மே 3ம் தேதி காய்ச்சல் அதிகமானதால் அதே மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மே 4ம் தேதி காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதால் மே 5ம் தேதி முகம்மது சபித் மருத்துவமனையிலேயே இறந்தார்.

இந்த சோகமான நிகழ்வில் சபித் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 3 நாட்களில் மட்டும், அதே மருத்துவமனையில் இருந்த 10 பேருக்கு ‘நிபா’ வைரஸ் தாக்கியது.இதனால் சபித்தை கவனித்த செவிலியர் லினியும் இறந்தார்; சபித் மூலம் அவரின் குடும்பத்தார் 3 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி மாநிலம் முழுவதும் பலருக்கு பரவத் தொடங்கியது.

‘சபித் மூலம் மட்டுமே 17 பேருக்கு வைரஸ் பரவி அனைவரும் இறந்துள்ளனர்’ என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்த ‘நிபா’ ஏற்கனவே இந்தியாவைப் பொறுத்தவரை 2001 பிப்ரவரியில் சிலிகுரியில் 66 பேரைத் தாக்கியதில் 45 பேரை சாகடித்தது. அதேபோல் 2007 ஏப்ரலில் நொய்டாவில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு ஐவரும் உயிரிழந்தனர்.

முதன்முதலாக 1998ல் மலேசியாவில்தான் ‘நிபா’ வைரஸ் நோய் தாக்குதல் கண்டறியப்பட்டு சிங்கப்பூர், பங்களாேதஷ் உள்ளிட்ட நாடுகள் வரை பரவியது. இவை, பெரும்பாலும் பன்றிகளில் இருந்தே தொற்றுநோயாகப் பரவியுள்ளது.

பங்களாதேஷில் மட்டும் 2001, 2003, 2004, 2007 - 15 வரை ஒவ்வொரு ஆண்டும் நிபா வைரஸ் பாதிப்பால் 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
‘நிபா’ வைரஸ் தொற்று ஏற்படுபவர்களுக்கு முதலில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், தசைவலி, தொண்டை வறட்சி, தூக்க கலக்கம், மனக்குழப்பம், நரம்பு சம்பந்தமான பிரச்னை போன்றவை ஏற்பட்டு அவர்கள் 24 மணி முதல் 28 மணி நேரத்திற்குள் கோமாவுக்குச் சென்றுவிடுவர்.

முதலில் மனிதனுக்கு நிபா வைரஸ் பரவியது பன்றியிலிருந்துதான். நோய்வாய்ப்பட்ட பன்றி மற்றும் சதையிலிருந்து நிபா வைரஸ் பரவுகிறது. ஆனால், இந்தியா மற்றும் பங்களாதேஷில் ‘நிபா’ வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வவ்வால்கள் மூலமே பரவியுள்ளது.

இதுபோன்று தொற்றுநோய்க் கிருமி பாதிப்பு திடீரென ஏற்படும்போது உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையைக் கேட்டு தேசிய நோய்த் தடுப்பு மையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மேற்பார்வையில், மாநில சுகாதார அமைச்சகம் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பு, தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து மக்களைக் காக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பும்.

‘நிபா’ - பெயர்க் காரணம்

மலேஷியாவில் 1998 - 99ம் ஆண்டுகளில் மக்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோது அதற்குக் காரணம் பன்றிகள் என்பதைக் கண்டறிந்து சுமார் 10 லட்சம் பன்றிகளைக் கொன்றனர். ‘கும்பங் சங்கை நிபா’ (KUMPUNG SUNGAI NIPAH) என்ற இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பவர்களை முதலில் இந்நோய் பாதித்ததால், ‘நிபா வைரஸ்’ என்றும் ‘நிபா காய்ச்சல்’ என்றும் பெயர் வந்தது. அப்போது, ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட 257 பேரில், 105 பேர் இறந்தனர். சிங்கப்பூருக்கும் இந்த நோய் பரவி, 11 பேர் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் இறந்தார்.
சரி... பன்றிகளுக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது?

பழம் தின்னும் வவ்வால்களிடம் இருந்துதான்! இந்த வைரஸ் 20 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டாலும், இவை 1947ம் ஆண்டிலேயே தோன்றியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய (Zoonotic disease) நோய் என்கின்றனர். இந்நோய் நேரடியாக வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது, அவை கடித்த அல்லது சுவைத்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

மேலும், வவ்வால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என்று வீட்டு வளர்ப்பு அல்லது மனிதத் தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். இப்படி பலவழிகளில் ‘அட்டாக்’ செய்யும் ‘நிபா’ வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.

மருந்தும் இல்லை; தடுப்பூசியும் இல்லை!

‘நிபா’ வைரஸை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை.இப்போதைக்கு ரிபாவிரின் (Ribavirin) போன்ற மருந்துகளை கொடுக்கின்றனர். ‘நிபா’ வைரஸுக்கு எதிரான மருந்து மட்டுமல்ல... இதற்கான தடுப்பூசிகளும் இல்லை.

அதனால், காய்ச்சல் கண்டவரை அல்லது ‘நிபா’ பாதிப்புக்கு ஆளானவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர கண்காணிப்பில் வைப்பதே சரி. இல்லையென்றால், அவருக்கு மருத்துவம் பார்ப்பவரையும் பதம் பார்த்துவிடும்.இதில் வேடிக்கை என்னவென்றால் நிபா வைரஸுக்குக் காரணமான வவ்வால்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதுதான்!ஆனால், பன்றிகள் மற்றும் பிற விலங்குகள் ‘நிபா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வவ்வால்களைப் பிடித்து சாப்பிடக்கூடியவர்களும் உள்ளனர். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. தரையில் விழுந்துகிடக்கும், பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து ‘அணில் கடித்தது; இனிப்பாக இருக்கும்’ என்று நினைத்து சாப்பிட்டால் கூட சிக்கல்தான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) நிபா வைரஸுக்குத் தடுப்பு மருந்துளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.என்றாலும் ஆராய்ச்சிப் பணிகள் மந்தகதியிலேயே நடக்கின்றன.

செ.அமிர்தலிங்கம்