செயற்கை நிலவு!



உலகில் தயாராகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஈடான போலியை உருவாக்கி சந்தைப்படுத்துவதில் கில்லாடி சீனா. அந்த வகையில் புது வரவு செயற்கை நிலவு. பல வருடங்களாக நிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த சீனா, கடந்த அக்டோபரில் நிலவைப் போல எட்டு மடங்கு வெளிச்சம் தருகிற செயற்கை நிலவை உருவாக்கப்போவதாக அறிவித்தது. இது விண்வெளித் துறை ஜாம்பவான்களான அமெரிக்கா, ரஷ்யாவையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

வெறுமனே அறிவிப்பு தருவதோடு மட்டுமல்லாமல் செயற்கை நிலவுக்கான சோதனைகளைப் பல்வேறு நகரங்களில் அரங்கேற்றி வருகிறது சீனாவின் விண்வெளித்துறை. இந்த சோதனை வெற்றிபெற்றால் 2020-இல் செயற்கை நிலவு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். தெரு விளக்குகளுக்கு மாற்று தான் இந்த செயற்கை நிலவு.

‘‘இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் தெரு விளக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரம் சேமிக்கப்படும். அத்துடன் அந்த மின்சாரத்துக்காகச் செலவிடப்படும் பல மில்லியன் டாலர் பணமும் மிச்சமாகும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் உலகமே இதைப் பின்பற்றி பெருமளவில் மின்சாரத்தைச் சேமிக்கும். இதனால் மின்சார உற்பத்திக்காக சுரண்டப்படும் நிலங்களும், இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்...’’ என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.

ஒரு கண்ணாடியைப் போல சூரியனிடமிருந்து ஒளியை உள்வாங்கி பூமியில் பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்தது இந்த செயற்கை நிலவு. இதன் செயல்பாடுகளை சரிப்படுத்தத்தான் அடிக்கடி செயற்கைக்கோள்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது சீனா. 10 கி.மீ முதல் 80 கி.மீ சுற்றளவுக்குள் ஒளியைப் பாய்ச்சும் திறன் கொண்ட இந்த செயற்கை நிலவு, பூமிக்கு மேல் 500 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும்.

மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையமும் பூமியிலிருந்து 500 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை நிலவின் வெளிச்சத் திறன், அதன் அளவு, எவ்வளவு நேரம் செயல்பட வேண்டும், எவ்வளவு தூரத்துக்கு ஒளியைப் பாய்ச்ச வேண்டும்... போன்றவற்றை பூமியிலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் இதில் ஹைலைட்.             

த.சக்திவேல்