4 வருட போராட்டத்துக்குப்பின் கிடைத்த வெற்றி இது..!



கொலைகாரன் இயக்குநரின் சக்சஸ் ஸ்டோரி

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘கொலைகாரன்’ ரிலீஸ் அன்னிக்கு நானும் விஜய்ஆண்டனி சாரும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தியேட்டர் விசிட் போயிருந்தோம். அவர் இதுவரை ஒரு டஜன் படங்களுக்கு மேல நடிச்சுட்டார். ஆனா, அவர் படத்தின் முதல் ஷோ அன்னிக்கு தியேட்டர் விசிட் அடிச்சிருக்கறது இதான் முதல்முறை.  

படம் முடிஞ்சதும் ஆடியன்ஸ் அத்தனை பேரும் எங்ககிட்ட சந்தோஷமா கை குலுக்கி, ரசிச்ச சீன்ஸ் பத்தி பேசிட்டே இருந்தாங்க. பெரிய வாழ்த்து மழையே பொழிஞ்சாங்க. எனக்கு இது ரொம்ப புது அனுபவமா இருந்துச்சு. அடுத்தடுத்து இன்னும் எனர்ஜியோட ஓடணும்னு தோண வச்சுடுச்சு...’’ நெகிழ்ந்து மகிழ்கிறார் ‘கொலைகாரன்’ படத்தின் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ்.

‘‘இன்னொரு ஹீரோ அர்ஜுன் சாருக்கும் நிறைய பாராட்டுகள். அதில் சிலதை என்கிட்ட ஷேர் பண்ணி அவரும் ஹேப்பியானார். என் முதல் படம் ‘லீலை’ ரொமாண்டிக்  ஜானர். அப்புறம் நாலு வருஷ இடைவெளி ஆகிடுச்சு. இடையே நிறைய ஸ்கிரிப்ட்ஸ் பண்ணி வச்சிருந்தாலும், விஜய் ஆண்டனி சாருக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டா ‘கொலைகாரன்’ வந்திருந்தது. அவருக்கும் இந்த த்ரில்லர்  கதை பிடிச்சிருந்தது. இது ஒரு நான் லீனியர் ஸ்கிரிப்ட்.

பொதுவா லீனியர் ஸ்கிரிப்ட்னா அது மக்களுக்கு எளிதா புரியும். உதாரணமா, ஒரு கதை மே மாசத்துல ஆரம்பிக்குது. ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகுது. அவங்க ஜூன் மாசத்துல என்ன பண்ணுவாங்க... ஜூலையில எப்படி இருக்காங்க... இப்படி கதை ஒரு கோர்வையா போறதுதான் லீனியர் ஸ்கிரிப்ட்டின் வழக்கம்.

நான்லீனியர் ஸ்கிரிப்ட்னா… அது துப்பறியும் நாவல் மாதிரி அத்தியாயத்துக்கு அத்தியாயம் சீன்ஸ் மாறுபடும். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை நான் உள்வாங்கினதை விட  படத்தோட எடிட்டர் கெவின், இந்தக் கதையை டபுள் மடங்கு உள்வாங்கியிருந்தார். இன்னிக்கு இந்தப் படம் எல்லார்க்குமே எளிதா ரீச் ஆகுறதுக்கு காரணம் அவர்தான்.  ஒரு சீன் கூட வேஸ்ட்டேஜ் ஆகல.  

அதைப்போல, மொத்தப் படத்தையும் ஷூட் பண்ணிட்டு பின்னணி இசைக்காக சைமன் கே கிங்கிட்ட கொடுத்தேன். அவரோட ‘ஆர்ஆர்’ ஒர்க் முடிஞ்சதும் படத்தை பார்த்தா... ஒரு உயிரோட்டமான த்ரில்லரா ஆக்கியிருந்தார். ஸோ, இப்படி பலரின் ஒர்க் இதுல இருக்கு. அத்தனை பேருக்குமே நன்றி சொல்லிக்கறேன்...’’ - நிறைவாகப் பேசும் ஆண்ட்ரூ லூயிஸ், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யர்.  ‘வாலி’யில் இருந்து ‘குஷி’ வரை அவருடன் இருந்திருக்கிறார்.

‘‘பூர்வீகம் தூத்துக்குடி. ஆனா, நான் படிச்சு வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். சினிமாவில் இயக்குநராகணும்னு எங்க அப்பா விரும்பினார். ஆனா அவர் ஆசை நிறைவேறல. அவர் ஒரு நல்ல ரைட்டர். ஸ்கிரிப்ட் நாலேஜ் உள்ளவர். என் ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில்தான் எழுதுவேன். எழுதி முடிச்சுட்டு அப்பாகிட்ட அதை தமிழ்ல எழுதிக் கொடுக்கும்படி கேட்பேன். ‘லீலை’ ஸ்கிரிப்ட்டை அவர்தான் தமிழ்ல பண்ணிக் கொடுத்தார். அவரால இயக்குநர் ஆக முடியலைனாலும் என்னை அவர் டைரக்டராக்கி அழகு பார்த்திருக்கார்.

லயோலால விஸ்காம் படிக்கிறப்ப டைரக்டராகும் ஆசை வந்தது. விஜய் ஆண்டனி சார் எனக்கு காலேஜ் சீனியர். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, தியாகராஜன் குமாரராஜா இவங்க எல்லாம் என் காலேஜ் மேட்ஸ். இப்பவும் என் ஸ்கிரிப்ட்டை புஷ்கர் - காயத்ரிகிட்ட குடுத்து கருத்து கேட்பேன். என் மீது அக்கறை காட்டும் நண்பர்கள்ல அவங்களும் உண்டு.

காலேஜ்ல நான் ஃபைனல் இயர்ல இன்டர்ன்ஷிப் வாய்ப்பு தேடும்போது எங்க காலேஜ் ஹாஸ்டல்ல எஸ்.ஜே.சூர்யா சார் தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. உடனே அவரைப் போய் பார்த்தேன். அப்ப, அவர் ‘வாலி’ ஆரம்பிச்ச டைம். என் ஆர்வத்தைப் பார்த்து இன்டர்ன்ஷிப்ல
சேர்த்துக்கிட்டார்.

டிகிரி முடிச்சதும், அவர்கிட்டேயே அசிஸ்டென்ட் ஆனேன். ‘வாலி’யில் கடைசி அசிஸ்டென்ட். எங்க டைரக்டர் எப்பவும் நிறைய கத்துக் கொடுப்பார். சின்னச் சின்ன விஷயங்கள்லயும் நுணுக்கமா ஒர்க் பண்ணுவார்.

அஜித், விஜய், பவன்கல்யாண், மகேஷ்பாபுனு அவர் இயக்கின டாப் ஹீரோக்களின் படங்கள்ல எல்லாம் ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட இருந்தப்ப நிறைய ஹிட்ஸ் பார்த்து சினிமால இதெல்லாம் ஈஸினு நினைச்சிருக்கேன். பெரிய ஹீரோக்களோட ஒர்க் பண்ணின அனுபவம் இருந்ததால, வெளிய போய் தனியா படம் ட்ரை பண்ணினா முதல் பட வாய்ப்பு தேடி வரும்னு நினைச்சேன்.

ஆனா, முதல் படம் கிடைக்கறது எவ்ளோ சிரமமானதுனு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சது. ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பில் ‘லீலை’ இயக்கினேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகவே நாலு வருஷங்களாகிடுச்சு. சினிமாவைப் பத்தின புரிதல் எனக்கு அப்ப அவ்ளோ இல்லை. தவிர அடுத்த படம் இயக்கியே ஆகணும் என்கிற சூழலும் இல்லை. அதனால கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன்.

ஆனா, ஒரு நல்ல படத்தை முதல் படமா இயக்கின சந்தோஷம் இருக்கு. காலேஜ்ல படிக்கிறப்ப நிறைய வாசிப்பேன். ஆங்கில நாவல்களைத் தேடித் தேடி படிப்பேன். ‘கொலைகாரன்’ ஸ்கிரிப்ட்டை தனியா உட்கார்ந்து எழுத அந்த ஆர்வம்தான் கைகொடுத்தது.

அடுத்து ரெண்டு ஸ்கிரிப்ட்ஸ் ரெடியா இருக்கு. வேற வேற ஜானர்ஸ். ‘கொலைகாரன்’ கொடுத்த வரவேற்பினால், அந்த ஸ்கிரிப்ட்ஸை எடுத்து மறுபடியும் செதுக்க ஆரம்பிச்சிருக்கேன்...’’ பொறுப்பும் அக்கறையுமாக சொல்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்!  

மை.பாரதிராஜா