கொலைகாரன்



கொடூரமாகக் கொன்ற குற்றவாளியை இனங்காண நடக்கும் போராட்டமே ‘கொலைகாரன்’. ஒரு கொலை நடக்கிறது. முகம் தெரியாத அளவுக்கு அடித்து உடல் எரிக்கப்படுகிறது. யாரென அடையாளம் காணப்புகுந்தால் ஆயிரம் முடிச்சுகள்.
ஒவ்வொன்றாக ஆராயத் தொடங்குகிறார் துப்பறியும் அதிகாரி அர்ஜுன். அடிதடியில் இறங்காமல், இந்த வேலையில் ஈடுபடும் அவருக்கு ஹீரோயின் அஷிமா, அவர் அம்மா சீதா, இவர்களின் எதிர் வீட்டில் வசிக்கும் விஜய் ஆண்டனி ஆகியோர் மீது சந்தேகப்பார்வை விழுகிறது.

இவர்களில் இந்த கொலையை செய்தது யார், ஏன், எப்படி என ஆராயப்புகுவதே பின்கதை. புள்ளிகள் இணைத்து ஓவியம் தீட்டுவது எளிது. அதற்கு புள்ளிகள் சரியாக இருக்க வேண்டும். அப்படி தனக்கான புள்ளிகளைக் கொண்ட ஸ்க்ரிப்ட்டை கண்டறிந்ததுதான் விஜய் ஆண்டனியின் பலம்.

அவருக்கு மக்கள் புளூ டிக் அடிப்பதை உடனே அனுமானிக்க முடிகிறது. படம் முழுவதும் வில்லனை, ஹீரோ செய்யும் மூக்குடைப்புகளும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைகளுமே மாஸ் என அறிப்படும் கோலிவுட்டில் புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளை வைத்து கெத்து காட்டுகிறார் இயக்குநர் லூயிஸ் ஆண்ட்ரூ.

எல்லோருக்கும் இசைவான அண்டர் கரண்டில் அருமையான இணைப்பைக் கொண்ட திரைக்கதை அமைப்பு நச்! அர்ஜுன் புலன்விசாரணை செய்யும் காட்சிகளில் ‘பின்றான்டா’ என ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு தியேட்டரே லைக்ஸ் போடுகிறது.

ஆரம்பத்தில் மகா அமைதிகொண்டும் பின் அதிரடியில் இறங்கும்போதும் விஜய் ஆண்டனி உச்சம் காட்டுகிறார். யார்தான் கொலை செய்தது என நமக்கான மூளை சுறுசுறுப்படையும் போது படத்திலும் அதற்கான வேலைகள் நடக்கிறது. நிஜமாகவே அவரது கேரியரில் நல்ல படம். எந்த சந்தேகம் வந்தாலும் பரபர திரைக்கதையில் அதை நினைவில் வைக்காமல் மறக்கடிக்கிறது இயக்கம்.

அர்ஜுன் உண்மையிலேயே க்ளாஸ். நிஜ மனிதர்களை கேண்டிட் கேமராவில் படமாக்கியது போல விசாரணைக்காட்சிகள். அருமையான ஆக்‌ஷன் காலத்துக்குப் பிறகு இப்படி கனிந்த கதாபாத்திரங்களுக்கு அவரை மாதிரியானவர்கள் திரும்புவதே உத்தமம்!

பயப்படுவதும், பின்வாங்குவதும் காதலிப்பதுமாக புதுமுகம் மாதிரி தெரியவில்லை அஷிமா. சீதா, நாசர் என அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.தமயந்தி, அருண்பாரதி பாடல்களில் நிறைவுகாட்டும் சைமனின் இசை, பின்னணியிலும் கொடிநாட்டுகிறது. பதற்ற நிமிடங்கள், விறுவிறு விசாரணை, குற்றங்களின் படப்பிடிப்பு என எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது முகேஷின் ஒளிப்பதிவு.

கொலை பின்னணியில் குற்றத்தை கண்டுபிடிக்கும்போது வரும் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம். பெரிய வேலையை விட்டுவிட்டு விஜய் ஆண்டனி சாதாரண வேலையில் இருப்பது நம்பும்படி இல்லை. அருமையான த்ரில்லராக அசரடிக்கிறது கொலைகாரன்.

குங்குமம் விமர்சனக் குழு