பகவான்-33



பிரித்தாளும் சூழ்ச்சி!

ஷீலாவை ஓரங்கட்ட ஆரம்பத்திலிருந்தே மற்றவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் -பகவானின் அபரிமிதமான அன்பு இருந்தவரை ஷீலாவை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

எனினும், தொடர்ந்து ஷீலா குறித்து எதிர்மறையான விஷயங்களே பகவானின் காதில் விழுந்துகொண்டிருப்பதைப் போன்ற ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்தானே?

ஷீலா, தன்னை மீறி வளர முயற்சிக்கிறார் என்கிற எண்ணம் ஓஷோவுக்கு பலமாக ஏற்பட்டது.எனவேதான், ஷீலாவின் அதிகாரத்தைப் பறித்து தன்னுடைய நம்பிக்கைக்குரியவர்கள் சிலரிடம் பகிர்ந்தளித்தார்.

அவர்களில் முக்கியமானவர் சுவாமி மைத்ரேயா.ஒரு காலத்தில் பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தார். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக பத்து ஆண்டுகள் பணியாற்றியவர். அவரை பீகாரின் முதல்வராக ஆக்க வேண்டுமென்று நேரு விரும்பியதாகக்கூட சொல்வார்கள்.

அவருடைய இயற்பெயர் மதுர பிரசாத் மிஸ்ரா.1960களின் தொடக்கத்தில் அவருக்கு ரஜனீஷ் அறிமுகம். அதில் தொடங்கி அரசியலை விட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். பகவானுக்கு சீடராக மட்டுமின்றி நெருக்கமான நண்பராகவும் ஆனார்.தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி பூனா ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். சுவாமி மைத்ரேயாவாக சன்னியாசம் வாங்கி, ஓஷோவின் கருத்துகளை வட இந்தியா முழுக்க பரப்பிக் கொண்டிருந்தார்.

ஷீலாவின் ஆதிக்கத்தின்போது அதிகம் பாதிக்கப்பட்டவர் சுவாமி மைத்ரேயாதான். முன்னாள் அரசியல்வாதி என்பதால் ஏதாவது அரசியல் செய்து தன்னைக் கவிழ்த்து விடுவாரோ என்று ஷீலா இவரை கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடத்தி வந்தார்.ஷீலாவின் பல் பிடுங்கப்பட்ட காலத்தில் ரஜனீஷ்புரத்தில் மைத்ரேயா விஸ்வரூபம் எடுத்தார். பகவான், தன்னுடைய அடுத்த நிலையில் தேர்ந்தெடுத்திருந்த மூன்று சன்னியாசிகளில் மைத்ரேயாவே முதன்மையானவராக இருந்தார்.

இதையடுத்து மைத்ரேயா தன்னை ஜூனியர் பகவானாகக் கருதிக் கொண்டிருந்தார். ரஜனீஷ்புரத்துக்கு வரும் பக்தர்களின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து, ‘நீ ஆத்ம ஞானம் பெற்றுவிட்டாய்...’ என்று அறிவிக்கத் தொடங்கினார்.

ஷீலாவால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை.கசப்பான உறவில் இருந்தபோதும் பகவானிடம் மைத்ரேயாவைப் பற்றி போட்டுக் கொடுத்தார்.அவரது பேச்சை பகவான் செவிமடுக்கவில்லை.இருப்பினும் அடுத்தடுத்த கூட்டங்களில் ‘ஆத்ம ஞானம் பெறுவது என்பது வெறும் பேச்சளவில் நடக்கும் நிகழ்வு அல்ல...’ என்று மறைமுகமாக மைத்
ரேயாவுக்கு உள்குத்து குத்தத் தொடங்கினார்.

இதை ஷீலா ரசிக்கும் வேளையில், வேண்டுமென்றே ஷீலாவை வெறுப்பேற்றுவதற்காக மைத்ரேயா குறித்து மிகவும் புகழ்ச்சியான கருத்துகளையும் தெரிவிப்பார்.ஆத்ம ஞானம் குறித்து பகவானிடம் தன்னை ஷீலாதான் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதை மைத்ரேயா புரிந்துகொண்ட அதே வேளையில், பகவானுக்கு தன்னிடம் அபரிமிதமான அன்பு இருப்பதையும் உணர்ந்துகொள்வார்.ரஜனீஷ்புரத்தில் ஷீலாவை மட்டம்தட்ட ரஜனீஷ் பயன்படுத்திய தந்திரம் இது.

அதாவது யாரைப்பற்றி ஷீலா போட்டுக் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்காக, தான் கோபம் கொள்ளவில்லை என்பதாக உணர்த்திவிடுவார்.ஷீலா, புதிய புதிய எதிரிகளை இதனால் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

ரஜனீஷ்புரத்தில் புதிய புதிய கோஷ்டிகள் உருவாயின.ஒவ்வொரு கோஷ்டியும், இன்னொரு கோஷ்டியோடு கருத்தியல்ரீதியாக மட்டுமின்றி வன்முறையாகவும் மோதிக்கொண்டன.ஷீலா குழுவினர், மாற்று கோஷ்டித் தலைவர்களைக் கொல்வதற்கு முயற்சிப்பதாகவும் தகவல்கள் பரவின.

குறிப்பாக அம்ரிதோ என்பவரை விஷம் வைத்துக் கொல்வதற்கு முயற்சிகள் நடந்ததாக பகவான் வரை தகவல் போனது.

அம்ரிதோ, பகவானுக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர் இல்லை.ஆனால் -பகவானுடைய நம்பிக்கைக்குரிய பெண் சன்னியாசியான ஹஸ்யாவின் கணவர் அவர்.ஹஸ்யாவுக்கு ஹாலிவுட்டில் தொடர்புகள் ஏராளம். நிறைய ஹாலிவுட் நட்சத்திரங்களை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்து வந்து, ரஜனீஷ்புரத்தை அமெரிக்க ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கியதில் அவருக்கு பங்கு அதிகம்.

எண்பதுகளின் மத்தியில் உலகமெங்கும் டிவி புரட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. கலர் டிவிக்கள் பரவலாகத் தொடங்கிய அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க சேனல்களின் செய்திப் பசிக்கு ரஜனீஷ்புரம் பலியானது.ரஜனீஷ்புரத்தின் கோஷ்டி மோதல்களை பிரதானமாக டிவி சேனல்கள் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.டிவி சேனல்களை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஷீலாதான் கில்லியாக இருந்தார்.

பகவானும், அவரும் அமர்ந்து டிவிக்களில் ரஜனீஷ்புரம் பற்றி வந்த செய்திகளின் வீடியோ ரெக்கார்டிங்கை பார்ப்பார்கள். அவற்றுக்கு எப்படி பதிலளிப்பது என்று யோசிப்பார்கள்.

எதிர்மறையாகவே பெரும்பாலான செய்திகள் உருவாக்கப்பட்டதைக் குறித்து ஷீலா கவலைப்படவில்லை. ‘There’s no such thing as bad publicity...’ என்பதை திரும்பத் திரும்ப ஓஷோவுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

“நம்மைப் பற்றி செய்திகள் வருவதுதான் நமக்குரிய முக்கியத்துவத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது. நேர்மறையாக மட்டுமே வரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எதிர்மறையாக வந்தாலும், நம்மை அறியாதவர்களிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே அவற்றைப் பார்க்க வேண்டும்...” என்று அவர் கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால் -ரஜனீஷ்புரம் குறித்து ஊடகங்கள் எதிர்மறையாக வெளிப்படுத்தும் செய்திகளை பகவான் கவலையோடுதான் பார்த்தார். ஷீலாவோ சர்ச்சைக்குரிய வகையில் டிவிக்களுக்கு பேட்டி கொடுப்பது, செய்திகளை அளிப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஆஸ்திரேலிய டிவி ஒன்றுக்கு ஷீலா அளித்த பேட்டி, பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.பேட்டியாளர் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலானவற்றை, ‘F’இல் தொடங்கும் மோசமான நான்கு எழுத்து வார்த்தைகளால் எதிர்கொண்டார் ஷீலா.

அவருடைய உடல்மொழியும் அந்தப் பேட்டியில் அகங்காரமாக வெளிப்பட்டது. ஓர் ஆன்மீக நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேட்டியளிக்கும் நிர்வாகி, ஹாலிவுட் நட்சத்திரம் கிசுகிசுக்களை எதிர்கொள்வதைப் போல நடந்துகொள்வது பரவலாகவே அதிருப்திகளை ஏற்படுத்தியது.

இயல்பில் இனிமையாக பேசக்கூடிய, நகைச்சுவையாக பிரச்னைகளை கையாளக்கூடிய ஷீலா, ஊடகங்களிடம் மட்டும் ஏன் இப்படி பொறுப்பற்றதனமாக, முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

இதுகுறித்து ஷீலா, பின்னாளில் தன்னுடைய நூலில் சொல்லும்போது, “அதற்கு நான் காரணமல்ல. பகவான் எழுதிய வசனத்துக்கு டிவி முன்பாக நான் நடித்தேன்...” என்று பந்தை பகவான் பக்கமாகவே திருப்பிவிட்டார். அவர் சொல்வது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இப்போது பகவானும் இல்லை.

எனினும் -செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ரஜனீஷ், மிகவும் நேர்மையாக வெளிப்படையாகவே பேசினார். சர்ச்சைகளுக்குள் போக விரும்பாமல் தன்னுடைய கருத்துகளை நேர்மறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் அக்கறை மட்டுமே அவரிடம் இருந்தது. பத்திரிகையாளர்களை தன்னுடைய நண்பர்களைப் போலவே மிகவும் மரியாதையோடு நடத்தினார்.ஊடகங்களுடனான பகவானின்அணுகுமுறைக்கும், ஷீலாவின் அணுகுமுறைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது.

ஷீலா இப்போது எங்கிருக்கிறார்?

அமெரிக்காவில் ரஜனீஷ்புரம் என்கிற அரசாங்கத்தை உருவாக்கி, ஐந்தாண்டுகள் கோலோச்சிய ஷீலா, பின்னாளில் அதே அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் டாலர்கள் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், நன்னடத்தையின் காரணமாக விடுதலை ஆகி சுவிட்சர்லாந்துக்கு 90களின் தொடக்கத்தில் இடம்பெயர்ந்தார்.

சுவிட்சர்லாந்தில் ஊனமுற்றோருக்காக இரண்டு ஆசிரமங்கள் அமைத்து, இத்தனை ஆண்டுகளாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். எழுபது வயது கடந்த நிலையில், ரஜனீஷ்புரத்தின் வில்லி, தான் அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சிகளில்தான் இன்னமும் ஈடுபட்டிருக்கிறார்.“பணக்காரர்களும், பிரபலமானவர்களும் பகவானுக்கு நெருக்கமாக விரும்பினார்கள்.

அவர்கள் காட்டிய தவறான பாதையே ரஜனீஷ்புரத்தின் அழிவுக்கு வழிவகுத்தது. அவர்களே ரஜனீஷ்புரத்துக்கு போதையை அறிமுகப்படுத்தினார்கள். பகவானைப் பாதுகாப்பது மட்டுமே என்னுடைய கடமையாகவும், நோக்கமாகவும் இருந்தது. பகவானும் இதை உணர்ந்திருந்தார்...” என்று இப்போது கூறுகிறார் ஷீலா.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்