NGK



பால்வீதி தாண்டி, வேறு இடம் தேடிக் கிடைத்த ‘இரண்டாம் உலகத்தில்’ காதல் சொன்ன செல்வராகவன் தமிழில் அரசியல் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘ஆயிரத்தில் ஒருவனில்’ காலவெளியைத் தாண்டியவரின் கை வண்ணத்தில் இது புது எண்ணம். நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை அரசியல் பித்தலாட்டங்களையும் போகிற போக்கில் போட்டுத் தாக்கியதற்காகவே கைகுலுக்கல்கள்.

‘மக்களால் நான்... மக்களுக்காக நான்…’ எனச் சொல்ல முற்படும் இன்னொரு மாஸ் ஹீரோ படம். வழக்கம்போல் ஏற்ற இறக்கமாக அடித்து ஆரம்பிப்பதில் சற்றே தளர்ந்து அதையே படம் முழுக்க கொண்டு போயிருக்கிறார் செல்வராகவன். செயலற்ற, மக்களுக்குப் பலனில்லாத அரசியலை சாடுவதில் அவருக்கு இருக்கிற அக்கறையை முற்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அரசியல்வாதிகளின் அக்கிரமத்தை உணர்த்துவதே ஒன்லைன். அதைச் சிரமப்பட்டு நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குநர். கதையை நடத்துவதில் நம்பகத்தன்மை வராதது குறை. சூர்யா நரம்பு புடைக்க உயிர் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அவரின் அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. இயக்குநரின் கைப்பாவையாக இருந்திருப்பதை பல இடங்களில் மனதில் நிறுத்தி உணர முடிகிறது. இளவரசுவிடம் இறுதியில் இறங்கி, ஆனால், அரசியலில் உயரத்துடிக்கும் இடங்களில் அவரின் கிண்டலும், கேலியும் நல்வகை.

இளவரசுவை புதுவடிவம் எடுக்க வைத்திருக்கிறார். குப்பைத் தொட்டியில் அடித்து தள்ளப்படும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது பாலாசிங்கின் படுஇயல்பான நடிப்பு. அலாவுதீனின் அற்புத விளக்கு மாதிரி அவரை யாராவது எப்போதாவதுதான் உரசிப் பார்க்கிறார்கள். தலைவாசல் விஜய்க்கு இரண்டே வார்த்தையில் டயலாக் கொடுத்து தலைவர் பொன் வண்ணனோடு உட்கார வைக்கிறார்கள். வீறு கொண்டு எழும் வேல ராமமூர்த்தி ஒரு வார்த்தையும் பேசாமல் தலைவரின் அருகிலேயே இருக்கிறார்.

‘ப்ரேம’த்தின் வாசனையோடு கன்னம் சிவந்த சாய்பல்லவியை எதிர்பார்த்தால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. முன்னர் அரசியலுக்கு வாழ்த்துச் சொல்லி கணவனை அனுப்பிவிட்டு, பின்னர் முழுவதும் அவரை சந்தேகிக்கிறார்.

கார்ப்பரேட் வசமிருந்து அரசியலை இயக்குவதில் ஆரம்பித்து சூர்யாவைக் கண்டதும் காதல் கொள்வது வரைக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இது புது ஏற்பாடு. ஆனால், அவர் உதிர்க்கும் அத்தனை வார்த்தைகளிலும் உறைந்து கிடக்கிறது இன்றைய அரசியலின் உண்மை.

டெம்ப்ளேட் என்றாலும் கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கிறது யுவன்ஷங்கரின் பாடல்கள். சிவக்குமார் விஜயன் கேமரா ஆக்‌ஷன் படத்திற்கான இலக்கணத்துடன் இன்ச் கேப் கிடைத்தால் கூட சர்ரென நுழைந்து லாவகமாக வெளியேறி மிளிர்கிறது.குறைகளைத்தாண்டி பேசும் பொருளில் இந்த ‘என்ஜிகே’யை உணர முடிகிறது.

குங்குமம் விமர்சனக் குழு