பகவான்-32



வேண்டாத விருந்தாளி!

எல்லாமே சரியாகத்தான் நடந்துகொண்டிருந்தது.ரஜனீஷ்புரத்திலும் சரி, ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளில் அமைந்திருந்த ரஜனீஷ் மையங்களிலும் சரி,அன்றாட நிகழ்வுகள் சிறப்பாகவே நடந்தேறி வந்தன. ஓஷோவின் புதிய சமுதாயம் என்கிற கனவு நனவாகும் நாள் நெருங்கி விட்டதாகத்தான் அனைவரும் கருதிக் கொண்டிருந்தார்கள்.

ரஜனீஷ் அகாடமி மற்றும் நூலகங்கள் சிறப்பாக உருவாகிக் கொண்டிருந்தன. பகவானின் கருத்துகளும், சிறந்த உரைகளும் நூல் வடிவில் பல்வேறு மொழிகளில் பிரசுரமாகத் தொடங்கியிருந்தன. அவருக்காகவே சிறப்புப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. விழாக்கள் திட்டமிடப்பட்டு அவை வெகு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன.

அதே நேரம் பகவானைக் குறித்த எதிர்மறையான செய்திகளும் ஊடகங்களில் பரவலாக வரத் தொடங்கின. ரஜனீஷ்புரம் குறித்த சர்ச்சைகள் கிசுகிசுக்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ உலகம் முழுக்க அறியப்படும் விவிஐபியாக ஓஷோ உருவெடுத்திருந்தார்.

ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்ய நிறைய தொழிலதிபர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாமே பகவான் எதிர்பார்த்த மாதிரிதான் நடந்துகொண்டு இருந்தது. ஷீலா, இரவும் பகலுமாகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்.ஆனால் -“ஏதோ சரியில்லை...” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார் ரஜனீஷ்.ஒரு நாள் திடீரென ஷீலாவை அழைத்தார்.

“ஷீலா, எனக்கு புதியதாக முப்பது ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வேண்டும்!”பகவானை ஆச்சரியமாகப்பார்த்தார் ஷீலா.“பகவானே! ஏற்கனவே நம்மிடம் கிட்டத்தட்ட நூறு ரோல்ஸ்ராய்ஸ்கள் இருக்கின்றன...”“எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா? நான் கேட்டது வேண்டும். அதுவும் ஒரே மாதத்தில். முடியுமா முடியாதா என்று மட்டும் சொல்!”பகவானிடம் அதுநாள் வரை ‘முடியாது’ என்கிற வார்த்தையை ஷீலா சொன்னதே இல்லை. எப்போதுமே அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ‘உடனே செய்துவிடுகிறேன்’ என்றுதான் சொல்வார்.

அன்று ஏனோ, எதுவுமே சொல்லாமல் நின்றார்.ஏனெனில் முப்பது கார்களுக்கு மூன்று முதல் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். அன்றைய தேதியில் அது மிக மிகப்பெரிய தொகை.ரஜனீஷ்புரத்தின் பட்ஜெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுக்க பரவியிருந்த மற்ற மையங்களுக்கு செலவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிதியிலும் கையை வைக்க வேண்டியிருக்கும்.பகவான் கேட்டதைச் செய்துகொடுத்தால், மற்ற பணிகள் மொத்தமாக பாதிக்கப்படும். ஏன் அவர் கார்களுக்காக குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறார் என்று குழம்பினார் ஷீலா.

எப்படியாயினும் ஆசிரம நிதியில் கை வைப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.இரண்டு நாட்கள் கழித்து பகவானைச் சந்தித்தார் ஷீலா.“பகவான்! இப்போதைக்கு புதிய கார்கள் வாங்குமளவுக்கு நமக்கு நிதி வசதியில்லை. தயவுசெய்து மன்னிக்கவும்...” என்று கேட்டுக் கொண்டார்.
“பரவாயில்லை ஷீலா!” என்று புன்னகையோடு சொன்னார் பகவான்.

மறுநாளே ஷீலாவை அழைத்தார். அவரது கையில் ஒரு பேப்பரை நீட்டினார். சுமார் நாற்பது பெயர்கள் அதில் எழுதப்பட் டிருந்தன. அனைவருமே பெரிய பணக்காரர்கள். பகவானின் சீடர்கள்.“இவர்கள் அனைவரையும் நான் நேரடியாக சந்திக்க வேண்டும். ஒரே சந்திப்பில் அத்தனை பேரும் வரவேண்டும். ஏற்பாடு செய்...” என்றார்.

அப்போது வரை எதுவாக இருந்தாலும் ஷீலாவைக் கேட்டே செய்யும் பகவான், தானே தன்னிச்சையாக ஒரு முடிவெடுக்க முனைந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார் ஷீலா.எதுவும் சொல்லாமல், அந்தப் பட்டியலில் இருந்த ஒவ்வொரு தொழிலதிபரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.“பகவான், உங்களைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறார். ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்...” என்று தகவல் தெரிவித்தார்.

அழைப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அத்தனை பேரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். இதுநாள் வரை கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகவே பகவானைச்சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள். தங்கள் பெயரைக் குறிப்பிட்டு பகவான் அழைத்திருப்பதை தங்களுக்கு பெரிய கவுரவமாக எடுத்துக் கொண்டார்கள். அதிலும் இம்முறை பகவானை அவர் வசிக்கும் வீட்டிலேயே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக வீட்டில் அவர் வெகுசிலரைத் தவிர வேறு யாரையும் சந்திப்பதில்லை.

சந்திப்பு வெகு சிறப்பாக நடந்தது.“நான் உங்களுக்கு கொடுக்க முடிந்தது வாழ்க்கை வழிகாட்டுதல்களை மட்டுமே. பதிலுக்கு உங்களால் எவ்வளவோ கொடுக்க முடியும்” என்று நேரடியாகவே பகவான் பேசினார்.ஷீலாவுக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் இதுநாள் வரை தன்னிடம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தவர், இப்போது நேரடியாக பக்தர்களிடம் அவராகவே கேட்கிறாரே என்று அதிருப்தி அடைந்தார்.

இதுபோன்ற சந்திப்புகளின் போது எப்போதும் பகவானின் காலுக்கு அருகிலேயே அமர்வார் ஷீலா. அன்றைய சந்திப்பில் மட்டும் தனக்கு ஆர்வமில்லை என்பதைக் காட்டிக்கொள்ள கடைசி வரையில் நின்றவாறே இருந்தார்.பகவானின் அன்றைய பேச்சு சென்டிமென்டாகத்தொடர்ந்தது.

“நேரம் வந்துவிட்டது. வெகுவிரைவில் இந்த உடலை விட்டு நான் விலகப் போகிறேன்...”பகவான் சொன்னதுமே, அந்தக் கூட்டம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.நிறையப் பேர் ஓடிவந்து அவரது காலில் விழுந்து, கண்ணீரால் கழுவினார்கள்.

“இப்படிப் பேசாதீர்கள் பகவானே. நாங்கள் அனாதைகள் ஆவோம்...” என்று கதறினார்கள்.ஷீலாவுக்கோ ஏதோ நாடகம் நடந்துகொண்டிருப்பது போலிருந்தது. அந்த நாடகத்தில் வசனம் எதுவும் கொடுக்கப்படாத மவுன பாத்திரமாக தானும் நடித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

அந்த இடத்தில் இருந்து உடனே விலகி வெளியே செல்ல விரும்பினார். எனினும், அப்படிச் செய்தால் பகவானை அவமானப்படுத்துவதாகும் என்பதை உணர்ந்து பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

“நான் உடலை விட்டுப் பிரிந்த பின்னும் என்னுடைய பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும்...” என்று கூறிவிட்டு சுமார் இருபது பெயர்களை வாசித்தார் ஓஷோ.“நான் குறிப்பிட்டவர்கள் என்னுடைய பணிகளைத் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்...” என்று சொல்லிவிட்டு, ஷீலாவை ப்பார்த்தார்.தன்னை பகவானுக்கு இணையாகக் கருதிக் கொண்டிருந்த ஷீலா, ரஜனீஷ்புரத்தில் தன்னைத் தனிமைப்படுத்தி, தன்னுடைய அதிகாரங்களைப் பறித்து, நிறைய பேருக்கு பரவலாகக் கொடுக்க நினைக்கிறார் பகவான் என்பதைப் புரிந்து கொண்டார்.நாடகம் முடிந்தது.

பகவானிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினார் ஷீலா.மறுநாள், புத்தா ஹாலில் ஒரு கூட்டம்.பகவானை காரில் அழைத்துச் செல்ல ஷீலா வந்திருந்தார்.எப்போதுமே காலையில் பகவானைச் சந்தித்ததுமே வணங்குவார். அன்று அமைதியாக நின்றார்.பகவானும் எதுவும் நடக்காததைப் போல காரில் ஏறி அமர்ந்தார்.ஷீலாதான் காரை ஓட்டினார்.

இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.புத்தா ஹால் வந்ததுமே, காரில் இருந்து இறங்கி நேராக கூட்டத்துக்குச் சென்றார் பகவான்.காரிலேயே அமர்ந்திருந்தார் ஷீலா.பகவானுக்கும், ஷீலாவுக்கும் பிளவு ஏற்பட்டு விட்டதை ரஜனீஷ்புரம் உணர்ந்தது.ஆங்காங்கே கிசுகிசுப்பான குரலில் இதைப்பற்றித்தான் எங்கும் பேச்சு.ஆசிரமம் இரண்டுபட்டது.

ஷீலாவுக்கு ஆதரவாக அதுநாள்வரை நின்றவர்களில் பெரும்பாலானோர், இவரிடம் பேச்சு வார்த்தைகூட வைத்துக் கொள்ளாமல் பகவான் பின்னால் நின்றார்கள்.எனினும் -சொற்ப எண்ணிக்கையில் சிலர் ஷீலாவின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களாகவே தொடர்ந்தார்கள்.

ஆசிரமத்தில் வழக்கமான பணிகளை ஷீலா மேற்கொள்ள முடியவில்லை. அந்தப் பணிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டிருந்தன. அதுபற்றி எந்தத் தகவலையும் ஷீலாவுக்கு முன்கூட்டி யாரும் தெரிவிக்கவில்லை.ரஜனீஷ்புரத்தை உருவாக்கியவர் என்கிற பெருமைக்குரிய ஷீலா, அதே ரஜனீஷ்புரத்தில் வேண்டாத விருந்தாளியாகத் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்