இரு குடும்பங்களுக்கு இடையிலான பகையில் அடியாளாக நுழைந்த நக்சல்பாரிகள்!போஸ்ட் மார்ட்டம்-7

அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடபுரம் என்னும் கிராமத்தில் 28-05-1957-ல் பிறந்தவர்தான் பரிதலா ரவி. இவருடைய அப்பா ஸ்ரீராமுலு, அப்போதே 300 ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். பரிவு கொண்டவர்.  இதனாலேயே தனது நிலங்களின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்தப் பகுதி ஏழை மக்களுக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் கனகன்பள்ளி பண்ணையாரான கங்குல நாராயண ரெட்டி என்பவரிடமும், சென்னகொத்தபள்ளி பண்ணையார் சேனா சென்னா ரெட்டி என்பவரிடமும்தான் இருந்திருக்கின்றன. இவர்களிடம் இருந்த 600 ஏக்கர் நிலங்களை பராமரித்ததும் அவற்றை ஏழை, எளிய உழைக்கும் மக்களிடம் கொடுத்து பாடுபட வைப்பதும் வேறு யாருமல்ல... பரிதலா ரவியின் அப்பா ஸ்ரீராமுலுதான்!

மார்க்சிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட ஸ்ரீராமுலு, 1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எனப்படும் நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்தார்.
ஏற்கனவே உழைக்கும் மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் உண்டு. இப்பொழுது அதற்கேற்ற சித்தாந்தமும் சேர்ந்து கொள்ள... மடமடவென நக்சல்பாரி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

என்றாலும், நக்சல்பாரி இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்றான அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஸ்ரீராமுலு இறங்கியதில்லை என இந்த நிமிடம் வரை மார்க்சிய லெனினிய இயக்கம் சொல்லி வருகிறது! ரைட். விஷயத்துக்கு வருவோம்.அனந்தப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் இருவர் கைகளில் மட்டுமே இருந்தன என்று பார்த்தோம் இல்லையா!இதில் கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை ஸ்ரீராமுலு ஏழைகளுக்கு வாரிக் கொடுத்ததையும் அதன் வழியாகக் கிடைத்த புகழை, தானே அனுபவித்ததையும் கண்ட இன்னொரு பண்ணையாரான சென்னா ரெட்டி ஆத்திரமடைந்தார்.

மெல்ல மெல்ல கங்குல ரெட்டியின் மனதை மாற்றி ஸ்ரீராமுலுவுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்!இதனால் கங்குல ரெட்டி, சென்னா ரெட்டி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஸ்ரீராமுலுவுக்கு பகைவர்களானார்கள்! தங்கள் நிலங்களை பராமரிக்கும் பொறுப்பை ஸ்ரீராமுலுவிடம் தருவதையும் நிறுத்தினார்கள்.இந்த விஷயத்தை, தான் சார்ந்த நக்ஸல் இயக்கத்தினரிடம் எடுத்துச் சொல்லி மக்களை போராட்டத்துக்கு தயார்படுத்தத் தொடங்கினார் ஸ்ரீராமுலு.

சென்னா ரெட்டிக்கு பயமும் கோபமும் ஒருசேர எழுந்தது. இனியும் ஸ்ரீராமுலுவை விட்டுவைத்தால் தங்கள் கதி அதோகதிதான் என்ற முடிவுக்கு வந்தவர், ஸ்கெட்ச் போடத் தொடங்கினார். ஸ்ரீராமுலுவின் உதவியாளர்களில் ஒருவர், வகையாக சிக்கினார். இவரை வைத்தே ஸ்ரீராமுலுவை போட்டுத் தள்ள சென்னா ரெட்டி முடிவு செய்தார்.

1975ம் ஆண்டு மே 29ம் தேதி.பக்ஸம்பள்ளி என்னும் ஊரில் நடந்த ஒரு கல்யாணத்துக்குச் செல்ல ஸ்ரீராமுலு பேருந்தில் புறப்பட்டார்.அசைன்மென்ட் கொடுக்கப்பட்ட உதவியாளர் அவரைப் பின்தொடர்ந்தார்.சரியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஸ்ரீராமுலுவை வெட்டிச் சாய்த்தார். அலறிய மக்கள் உதவியாளரைப் பிடிப்பதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்தப் படுகொலைதான் 50 ஆண்டுகளாகத் தொடரும் இரத்த சரித்திரத்தின் தொடக்கப் புள்ளி! ஸ்ரீராமுலு படுகொலை செய்யப்பட்டபோது பரிதலா ரவிக்கு வயது 18. தன் அப்பாவைப் போல் இவர் எந்த நக்ஸல் இயக்கத்திலும் இல்லை; எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.
ஆனால், பரிதலா ரவியின் அண்ணன் ஹரி, தன் தந்தையைப் போலவே பண்ணையார்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்ரீராமுலுவின் படுகொலைக்குப் பின், அந்தத் தீவிரம் அதிகமானது. முறைப்படி நக்ஸல் இயக்கத்தில் இணைந்தார் ஹரி.மார்க்சிய லெனினிய இயக்கத்தில் ஹரி இருந்த காலத்தில் பல படுகொலைகளுக்கு சாட்சியாகவும், சில கொலைகளுடன் நேரடித் தொடர்பிலும் அவர் இருந்ததாக காவல்துறை ரெக்கார்ட் தெரிவிக்கிறது.

இதனால் அப்பொழுது தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக ஹரியும் இருந்திருக்கிறார்!

இதனால் தலைமறைவாக வாழ்ந்து வந்த ஹரி, 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி, தன் வீட்டுக்கு ரகசியமாக வந்திருக்கிறார்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த வெங்கடபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர், பெரும் படையுடன் வந்து ஹரியைச் சுற்றி வளைத்தார்! உஷாரான ஹரி, வீட்டுக்குள் புகுந்து கதவை இறுக மூடி தாழிட்டார்.

இப்படி நடக்கலாம் என முன்பே எதிர்பார்த்த இன்ஸ்பெக்டர் கபீர், சட்டென ஹரியின் தங்கையைப் பிடித்தார். ‘வீட்டை விட்டு வெளியே வராவிட்டால் இந்த இடத்திலேயே உன் தங்கையை வன்புணர்வு செய்துவிடுவேன்...’ என கபீர் கர்ஜிக்க... தங்கையைக் காப்பாற்ற போலீஸில் சரணடைந்தார் ஹரி.

தரதரவென அவரை இழுத்துச் சென்ற போலீஸார், இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த நசனகொட்டா கிராமத்து மக்கள் முன்னிலையில் ஹரியைச் சுட்டுக் கொன்றார்கள்!இன்ஸ்பெக்டர் கபீரை விலைக்கு வாங்கி, ஹரியைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டவர்கள் கங்குல நாராயண ரெட்டியும், சென்னா ரெட்டியும்தான்!

இதன்பிறகும் இவ்விரு பண்ணையார்களின் ஆத்திரம் அடங்கவில்லை. ஸ்ரீராமுலு, இவரது மூத்த மகன் ஹரி.... ஆகிய இருவரை மட்டும் கொன்றால் போதுமா..? இன்னமும் பரிதலா ரவி உயிருடன் இருக்கிறாரே..? நாளை அவர் பழிவாங்க முற்பட்டால் அது ஆபத்தாயிற்றே..?
எனவே பரிதலா ரவியையும் போட்டுத் தள்ள முடிவு செய்தார்கள்.

ஆனால், பரிதலா ரவி எங்கிருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை! ஏனெனில் அப்பொழுது அவர் உருவகொண்டா நகரத்தின் அருகேயுள்ள சீர்பிகொட்டாளா என்னும் கிராமத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்! அந்த ஊர் அவரது தாயார் பிறந்த கிராமம். அங்குதான் ரவியின் மாமா கொண்டையா வாழ்ந்து வந்தார்.

மாமாவின் பராமரிப்பில் இருந்த பரிதலா ரவி, மாமனின் மகள் சுனிதாவை 1986ல் மணந்து கொண்டார். எத்தனை காலம்தான் இப்படி மறைந்து வாழ்வது..? வெளியே வந்தால் படுகொலை செய்ய இரு பண்ணையார்களின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து, தான் தப்பிக்க வேண்டுமானால், தனக்கு பாதுகாப்புத் தேவை...

என்ன செய்யலாம் என்று யோசித்த பரிதலா ரவிக்கு நக்ஸல் இயக்கத்தின் நினைவு வந்தது! தனக்கான பாதுகாப்பை அவர்களால் மட்டுமே தர முடியும் என உறுதியாக நம்பிய பரிதலா ரவி, நக்ஸல் இயக்கத்தில் முறைப்படி இணைந்தார்! போதாதா? பழிவாங்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. இங்குதான் ஒரு டுவிஸ்ட். ஸ்ரீராமுலு, ஹரியின் கொலைக்கு பழிவாங்க நக்ஸல் இயக்கமே களத்தில் இறங்கியது! முதலில் கங்குல நாராயண ரெட்டியின் கூட்டாளிகளான நரசன்னா மற்றும் யாடி ரெட்டியை சுட்டுக் கொன்றது நக்ஸல் இயக்கம்.

1983ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அனந்தப்பூரில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்த பெனுகொண்டா சட்டமன்ற உறுப்பினர் கங்குல நாராயண ரெட்டியை சரமாரியாக வெட்டி நக்ஸல்கள் கொன்றார்கள். இந்தப் படுகொலைச் செய்தி பரவியபோது இதனைச் செய்தது பரிதலா ரவிதான் என்றே ஆந்திரா முழுவதும் செய்திகள் பரவின. ஆனால், இதனைச் செய்தது ‘நாங்கள்தான்’ என்று நக்ஸல் அமைப்பினர் இன்றைக்கும் சொல்கிறார்கள்.

அதுவரையில் பெனுகொண்டா தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த நாராயண ரெட்டி கொல்லப்பட்ட பின்பு, ராமச்சந்திர ரெட்டி என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ரெட்டிகாரு வந்த பின்புதான் அனந்தப்பூர் தொகுதியின் அமைதி முற்றிலுமாகச் சிதைந்தது என்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் பண்ணையாரான சென்னா ரெட்டியும், அவரது மகன்களான ரமணா ரெட்டி - ஓபுல் ரெட்டி ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்ட நாராயண ரெட்டியின் மகனான கங்குல சூர்ய நாராயண ரெட்டி, கூட்டணி அமைத்து அனந்தப்பூர் மாவட்டத்தையே கதிகலங்க வைத்திருக்கிறார்கள். இதில் சூர்ய நாராயண ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டி ஆகியோர் மீதுதான் க்ரைம் ரேட் அதிகம். அத்தனையும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள். ஊரில் எந்தப் பெண்ணையும் இவர்கள் விட்டு வைத்ததில்லை என்கிறார்கள்.

இந்த இருவரிலும் ஓபுல் ரெட்டிதான் சாடிஸ்ட். 45 வயதுக்கு மேற்பட்ட, அதுவும் மணமான பெண்களைத்தான் குறி வைத்து குதறி எடுப்பாராம்! தான்,  டிக் செய்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவளது கணவன் முன்னிலையிலேயே கதறக் கதற சிதைப்பது ஓபுல் ரெட்டிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்கின்றன ஆந்திர மீடியாக்கள்.

இந்த அட்டூழியங்கள் போதாதென்று அப்பகுதிக்கு பொறுப்பாளர்களாக இருந்த தெலுங்கு தேசத் தலைவர்களையும் இங்கி பிங்கி பாங்கி போட்டு கொலை செய்திருக்கிறார்கள். 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்தபோது பெனுகொண்டா தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வானவர் சாட்சாத் சென்னா ரெட்டிதான்!அவ்வளவுதான். அதிகாரம் கைக்கு வந்ததும் தங்கள் வெறியாட்டத்தை இந்த ‘ரெட்டி காரு’க்கள் அரங்கேற்றத் தொடங்கினார்கள்!

(தொடரும்)   

கே.என். சிவராமன்