தலபுராணம்-மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்…சேப்பாக்கம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது கிரிக்கெட்தான். இந்தியாவிற்குள் கிரிக்கெட் நுைழந்து சுமார் முந்நூறு வருடங்கள் ஆகப்போகிறது. 1721ம் வருடம் பிரிட்டிஷ் மாலுமிகளால் இன்றைய குஜராத் மாநிலம் பரோடா அருகே கிரிக்கெட் விளையாடப்பட்டதாகக் குறிப்புகளில் உள்ளன.

ெமட்ராஸில் முதன்முதலாக 1792ம் வருடம் தீவுத்திடல் மைதானத்தில் பிரிட்டிஷார் கிரிக்கெட் ஆடியதை தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த ஓவியம் பறைசாற்றுகிறது. இவர்கள் இருவரும் முறையே மாமா - மருமகன் உறவு கொண்டவர்கள்!‘‘இப்போதைய இராணுவத் தலைமைச் செயலகத்துக்கு அருகில் உள்ள மெய்க்காப்பாளர் வரிசை இருக்கும் இடத்துக்குப் பின்னால் தீவுத் திடலில், அந்த நேரத்துக்கு தயாரிக்கப்பட்ட தரையில் கிளப்பின் ஆரம்ப விளையாட்டுகள் நடந்தன. பங்கேற்போர் களைப்பாறிய கூடாரத்தை டேனியலின் படத்தில் காணலாம்...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.முத்தையா.

இங்கே கிரிக்கெட் விளையாடப்பட்டதே தவிர முறையான கிளப் என்று எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில்தான் 1842ம் வருடம் அலெக்சாண்டர் ஜெ.ஆர்பத்நாட் மெட்ராஸ் சிவில் சர்வீஸில் சேர்ந்தார். ரக்பி விளையாட்டுப் பிரியரான ஆர்பத்நாட் இங்கே கிரிக்கெட்டும் ஆடினார்.

அத்துடன் நிற்காமல், 1846ம் வருடம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பையும் தோற்றுவித்தார். அப்போது அவரின் வயது இருபத்திநான்கு.
ஆனால், ஆவணங்கள் எல்லாம் 1848ம் வருடம் ஆகஸ்டில் இருந்தே கிடைக்கப் ெபறுகின்றன. கிரிக்கெட்டை மதமாகவும், ெமட்ராஸ் கிரிக்கெட் கிளப்பை தேவாலயமாகவும் ஆர்பத்நாட் கருதியதாகக் கூறுவார்கள். அவ்வளவு ஆர்வம்!

கிளப்பின் முதல் தலைவராக அன்றைய கவர்னர் சர் ஹென்றி போட்டிங்கர் போட்டிகள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பிறகு, ஆக்ட்டிங் கவர்னராக இருந்த டேனியல் எலியட், பின்னர் வந்த கவர்னர் லார்டு ஹாரிஸ் என மெட்ராஸின் கவர்னராக இருந்தவர்களே கிளப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வழக்கமானது 1925ம் வருடம் வரை தொடர்ந்தது.

அது மட்டுமல்ல, இந்தக் கிளப்பில் உள்ளூர் இந்தியர்கள் யாரும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 90 வருடங்கள் வரை இந்நிலை நீடித்தது. பிறகு, பிரிட்டிஷ் இராணுவ அணி, கிளப் அணி எனச் சில அணிகள் வார இறுதி நாட்களில் தங்களுக்குள் போட்டிகள் நடத்தின. 1860களின் தொடக்கத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தீவுத்திடலில் கூவம் நதி அருகே இருந்த மைதானத்திலேயே கிரிக்கெட் ஆடி வந்தது.

அவ்வப்போது, கிண்டி அரசினர் இல்லத்தின் (இன்றைய கவர்னர் மாளிகை) முன்பிருந்த மைதானத்திலும் கிரிக்ெகட் ஆடப்பட்டது. 1865ம் வருடம் தீவுத்திடல் மைதானத்தை நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், சுற்றி வேலிகள் அமைக்கவும் அரசிடம் கோரிக்கை வைத்தது கிளப்.
ஆனால், இந்தத் திட்டம் அன்றைய தலைமைச் செயலராக இருந்த ஆர்பத்நாட்டாலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது. காரணம், இதற்கு இராணுவம் சம்மதிக்கவில்லை என்பதே!  

இதே வருடத்தில் கிளப்பின் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெ.பென்னிகுவிக், ஆர்பத்நாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், இந்த முறை தீவுத்திடல் மைதானத்தை வேண்டி கோரிக்கை வைக்கவில்லை.மாறாக, சேப்பாக்கம் நிலத்தை வேண்டி அனுமதி கேட்டார். ஏனெனில், அப்போது நவாப்பின் சொத்துகளான சேப்பாக்கம் மாளிகையையும், அதைச் சுற்றியிருந்த நிலங்களையும் அரசு தன்வசப்படுத்தி இருந்தது.

இதற்குக் காரணம், 1855ம் வருடம் நவாப் குலாம் முகமது கவுஸ் கானுக்கு வாரிசு இல்லாததால், கவர்னர் ஜெனரலான டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த Doctrine of Lapse சட்டத்தின்படி நவாப்பின் சொத்துகளை அரசே எடுத்துக் கொண்டதுதான்.இதனால் காலியாக இருந்த சேப்பாக்கம் நிலத்தின் ஒரு பகுதியை தங்களின் கிரிக்கெட்டிற்காக கிளப் கேட்டது. இப்போது அனுமதி கொடுத்தார் கவர்னர். பிறகு, இந்த இடத்தை செப்பனிட சந்தா கோரப்பட்டது.

இதில் சேகரிக்கப்பட்ட 783 ரூபாயில் 730 ரூபாய் தரையை மட்டமாக்குவதற்குச் செலவழிக்கப்பட்டது. இதனால், பணப் பற்றாக்குறை ஏற்பட மைதானத்தைச் சுற்றி வேலி கட்ட முடியவில்லை. பின்னர், மீண்டும் பணம் வசூலிக்கப்பட்டு முதல் பெவிலியன் கட்டப்பட்டது. இந்தப் பெவிலியனை அன்றைய கட்டடக்கலை நிபுணர் ராபர்ட் சிஸ்ஹோல்ம் வடிவமைத்தார். இதற்கு 3 ஆயிரத்து 700 ரூபாய் செலவானது. 1866ம் வருடம் இந்தப் பெவிலியன் திறப்பு விழா கண்டது.  

‘‘அந்தக் காலத்தில் செவ்வக வடிவில் இருந்த மைதானத்தின் நீளமான பக்கங்கள் வடக்கிலும், தெற்கிலுமாக இருந்தன. மரத்தாழ்வாரம் உடைய சிறிய பெவிலியன், வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் கிழக்கு நோக்கி இருந்தது. இப்போதைய வாலாஜா சாலைக்கு சமதூரத்தில் ஆடுகளம் இருந்தது...’’ என மைதானம் முதலில் உருவான போதிருந்த வடிவத்தை விளக்கி யுள்ளார் எஸ்.முத்தையா.

இந்த மைதானத்தில்தான் கிளப்பிற்கும், கல்கத்தாவிற்கும் இடையே முதல்தர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதற்கிடையே 1860களில் உள்ளூர் மக்களிடமும் கிரிக்கெட் அறிமுகமானது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிகள் ஆடப்பட்டன.

1877ல் மெட்ராஸில் தாதுப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரம், பக்கிங்ஹாம் கால்வாய் தோண்டும் பணி நடந்தது. இதில், மைதானத்தின் கிழக்கில் சில பகுதிகள் வெட்டப்பட்டன. இதற்கு கிளப் ஆட்சேபம் தெரிவித்தது. இதனால், கிளப் தன்னுடைய ஆட்டத்தை மீண்டும் தீவுத்திடல் மைதானத்திற்கே மாற்றியது.

கால்வாய் வேலைகள் முடிந்ததும் 1879ம் வருடம் சேப்பாக்கம் மைதானத்திற்கே திரும்பியது கிளப். இப்போது மைதானமும், பெவிலியனும் தெற்கு நோக்கி மாற்றி சீரமைப்பு செய்யப்பட்டன. ஆனால், இந்த மாற்றம் போட்டிகளைக் காண முடியாமல் கண்களைக் கூசச் செய்தது.
இந்தப் பெவிலியனை 1888ம் வருடம் அடித்த பெரும்புயல் பதம் பார்த்தது. இதனால், 1891ம் வருடம் அன்றைய கட்டடக் கலை நிபுணர் ஹென்றி இர்வினால் புது பெவிலியன் வடிவமைக்கப்பட்டது.

இந்தக் கிளப் கிரிக்கெட்டிற்கென உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, மற்ற விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தியது.
‘‘1883ம் வருடம் இங்கே ெடன்னிஸ் விளையாடப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து முதல்முறையாக தென்னிந்தியாவில் டென்னிஸ் போட்டிகளையும் நடத்தியது. 1894ம் வருடம் ஹாக்கி விளையாட்டை தொடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு மாகாணத்தின் முதல் தடகளப் போட்டிகளை நடத்தியது. 1900ல் ஸ்குவாஷ் கோர்ட்டும், பின்னர் முதல்முறையாக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டுக்கான டேபிள்களையும் கொண்டு வந்தனர்.

இன்று கிரிக்கெட், ஹாக்கி, பேட்மின்டன், டென்னிஸ், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர், டேபிள் டென்னிஸ், ஜிம், நீச்சல்குளம் எனப் பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகள் எம்சிசியில் வந்துவிட்டன...’’ என இணையத்தில், தான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் கிரிக்கெட் வீரரும், தமிழ்நாடு கிரிக்கெட் பற்றி நூல் எழுதியவருமான வி.ராம்நாராயண். தொடர்ந்து, 1892ம் வருடம் சேப்பாக்கத்தில் ‘தி சிலோன் ஐரோப்பியன் XI’ அணியுடன் எம்சிசி விளையாடியது. இதுவே, சேப்பாக்கத்திற்கு வந்த முதல் வெளிநாட்டு அணி.

பின்னர், அதே வருடம் ‘லார்டு ஹாக் XI’ அணியும் எம்சிசியுடன் சேப்பாக்கத்தில் ஆடியது. கிரிக்கெட்டிற்கான தென்னிந்தியாவின் மையப் புள்ளியாக சேப்பாக்கம் மைதானம் மாறியிருந்தது.

இதற்கிடையே, மெட்ராஸ் கிளப்பில் இந்தியர்கள் அனுமதிக்கப்படாததால் புதிய கிரிக்கெட் கிளப் ஒன்று உருவானது. அதன்பெயர் மெட்ராஸ் யுனைடெட்  கிரிக்கெட் கிளப். இப்போது மெட்ராஸ் யுனைடெட் கிளப். இதனை நிறுவியவர் புச்சிபாபு நாயுடு. ஆங்கிலேயர்களைப் போலவே வாழ்ந்து மடிந்த மனிதர். துபாஷி குடும்பத்திலிருந்து வந்தவர். தவிர, அவரும் துபாஷாகவே இருந்தார். இதனால், எம்சிசியில் இருந்த நிறைய பேர் அவரின் நண்பர்களாகவே இருந்தனர்.

இந்நிலையில் யுனைடெட் கிளப்பை உருவாக்கிய புச்சிபாபு, எஸ்பிளனேடு பகுதியில் ஒரு மைதானமும் அமைத்து அங்கே இந்தியர்களைக் கிரிக்கெட் பயிற்சி எடுக்கச் செய்தார். இதில், இந்திய வீரர்கள் பலரும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள்.‘‘இங்குள்ள பெற்றோர் கிரிக்கெட்டை ேவஸ்ட் ஆஃப் டைம் என்று நினைத்தனர். மிகுந்த தயக்கத்துடனே தங்கள் வீட்டுப் பையன்களை விளையாட அனுமதித்தனர்.

பெரும்பாலும் பையன்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது வேஷ்டியில் வருவர். இங்கே வந்ததும் ஆடையை மாற்றிக் கொள்வர். இதற்காக, புச்சிபாபு ஷர்ட்ஸ், டவுசர்ஸ், கிரிக்கெட் பூட்ஸ், பேட், பால், க்ளவ்ஸ் எனத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்து தந்தார்.
என்றேனும் ஒரு நாள் யுனைடெட்  கிளப் அணி, எம்சிசியால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது அவரின் கனவாகவே இருந்தது...’’ என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் சென்னை வரலாற்றாளர் வி.ராம்.

இதன்பிறகு, எம்சிசியில் உறுப்பினர்களாக இருந்த நண்பர்கள் பாட்ரிட்ஜ் மற்றும் கிங் ஆகியோரின் மூலம் எம்சிசி பெவிலியனை யுனைடெட்  கிளப் பயன்படுத்தச் செய்தார்.ஆனால், மதிய உணவை இந்தியர்கள் பெவிலியனில் சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மரத்தடியில் உண்டனர். பின்னர், புச்சிபாபு நண்பர்களுடன் பேசி இந்தியர்களுக்கு தனி டேபிள் ஏற்பாடு செய்தார்.

1890ம் வருடம் எம்சிசியும், யுனைடெட்  கிளப்பும் கிரிக்கெட்டில் மோதினர். இதுவே, பின்னாளில் மாகாண ஐரோப்பியர்கள் மற்றும் மாகாண இந்தியர்களுக்கு இடையேயான பெரிய போட்டியாக உருவெடுத்தது. இந்தப் போட்டி கிறிஸ்துமஸ் வாரத்தில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.  ஆனால், 1908ம் வருடம் டிசம்பர் 19ம் தேதி புச்சிபாபு இறந்துபோனார்.

இதனால், அணியினர் கலங்கிப் போயினர். இந்நேரம், புச்சிபாபுவின் உதவியாளராகவும், கிரிக்கெட் வீரராகவும் இருந்த சுப்ரமணியம் டிசம்பர் 31ம் தேதி இந்த மாகாணப் போட்டியை நடத்தத் திட்டமிட்டார்.

அதுவும் மழையால் நடத்த முடியாமல் போனது. பிறகு, 1909ம் வருடம் சுப்ரமணியம் ‘புச்சிபாபு நினைவு கிரிக்கெட் போட்டி’க்கு ஏற்பாடு செய்தார். அதுவே, இன்றுவரை புச்சிபாபு மெமோரியல் டோர்ன மென்ட் என நடந்து வருகிறது.

தொடர்ந்து 1915ம் வருடத்திலிருந்து மாகாண போட்டி நடக்கத் தொடங்கியது. இது பொங்கலையொட்டி நடந்ததால் ‘பொங்கல் போட்டி’ என்றே அழைத்தனர். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் அறிமுகமாகும் வரை இதுவே மிகப் பிரபலமாக இருந்த போட்டியாகும்.
சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட், முதல் ஒருநாள் போட்டி, ஸ்டேடியம் உருவான விதம் உள்ளிட்ட பல விஷயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.                           

பேராச்சி கண்ணன்

ராஜா