எப்படி நடக்கிறது சினிமா ஸ்டோரி டிஸ்கஷன் ?ஒரு Healthy Guide

விறுவிறுப்பான, நறுக்குத்தெறித்ததான, தரமான ஒரு நல்ல திரைக்கதை அமைவதற்கான ஆணிவேர் ‘ஸ்டோரி டிஸ்கஷன்’ என்று சொல்லப்படும் கதை விவாதத்தில்தான் அடங்கியிருக்கிறது என்பார்கள். பழைய கறுப்பு வெள்ளை படங்கள் இன்றும் பசுமையாகப் பேசப்பட கோர்வையான கதைக்களமும் ஒரு காரணம்.ஃபிலிமில் இருந்து டிஜிட்டல் வெர்ஷனாக சினிமா மாறியபோது, கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், ‘கதை இலாகா’வைச் சேர்ந்தவர்கள் போன்ற செட்டப்புகள் கெட்அவுட் ஆகிவிட்டனர்.

ரைட். ஒரு சினிமாவுக்கான கதை எப்படி உருவாகிறது? அந்தக் கதைக்கான சீன்ஸை எப்படிப் பிடிக்கிறார்கள்? ஸ்டோரி டிஸ்கஷன் டீமில் என்ன நடக்கும்? அவர்கள் என்னென்ன பேசிக்கொள்வார்கள்?

ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்கிறார்கள் சில இயக்குநர்கள்.‘‘சினிமா ஒரு கூட்டு முயற்சி. குழுவா உட்கார்ந்து பேசப்பேசத்தான் கதை கிடைக்கும். சீன்ஸ் விரியும். கதை விவாதம் எந்தளவுக்கு சினிமாவுக்கு ஆரோக்கியமோ, அந்தளவுக்கு நம் உடலும் ஹெல்தி ஆகுது!’’ எனப் புன்னகைக்கிறார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன். ‘ஆண்பாவம்’, ‘நெத்தியடி’ என ஒரு காலத்தில் காமெடி ஸ்கிரிப்ட்டில் கலக்கியவர், இப்போதும் ‘ஹெல்ப்’, ‘தி பாட்’ என ஷார்ட்ஃபிலிம்ஸை இயக்கி அப் கம்மிங் இயக்குநர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்..

‘‘முன்னாடி ‘கதை இலாகா’னு ஒண்ணு தனியாவே இருந்தது. ஸ்கிரிப்ட்ல பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய ஜாம்பவான்களும் நம்மளோட டிஸ்கஷன்ல இருப்பாங்க. கதையோட்டம் தங்குதடையில்லாம அமைய அவங்க அனுபவங்களும் கைகொடுக்கும். இப்ப உள்ளவங்க தனியா உட்காந்து கதை பண்றாங்க. அதை தப்புனு சொல்லமுடியாது. ஆனா, அந்தக் காலகட்டம் வேறயாச்சே! அப்ப டிஸ்கஷன்ல நம்மளோட அசிஸ்டென்ட்ஸ், கோ - டைரக்டர்ஸ் தவிர கதாசிரியர்கள், வசனகர்த்தாக்களும் இருப்பாங்க.

நமக்குத் தோணும் ஒரு கருத்தையோ இல்ல ஒன்லைனையோ எல்லோர்கிட்டயும் பகிர்ந்துக்கும்போது, அதே சாயல்ல அவங்க பார்த்த படங்கள், படிச்ச கதைகளை நம்மகிட்ட சொல்லுவாங்க.ஸோ, அந்தக் கதை ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதானு டிஸ்கஷன்லயே தெரிஞ்சுடும். பொதுவா ஒரு கதையை உருவாக்கும்போது அது மெதுவாகத்தான் நகரும். யோசனையாவே இருக்கும். ஆனா, அது ட்ராவல் ஆக ஆரம்பித்ததும் மடமடனு வேகம் பிடிக்கும். கேரக்டர்ஸ் சிக்குவாங்க. டயலாக்ஸ் சுடச்சுட ரெடியாகிடும்.

என்னோட ‘ஆண்பாவம்’ படத்தின் கதையை உருவாக்க பத்து மாதங்களானது. அதே மாதிரி டைம், ‘கோபாலா கோபாலா’வுக்கும் ஆச்சு. ஆக, கதையைப் பொறுத்தே டிஸ்கஷனுக்கான கால அவகாசமும் முன்ன பின்ன இருக்கும்...’’ என்ற ஆர்.பாண்டியராஜன், ‘சினிமா செலவு பிடிக்கும் மீடியம்’ என்கிறார்.

‘‘இப்ப ஒரு சீன் வருமா வராதானு ஷார்ட் ஃபிலிம் எடுத்து தெரிஞ்சுக்கலாம். அப்ப இந்த வசதி இல்ல. அதனாலயே கவனமா பேசி செதுக்குவோம். பேசப் பேசத்தான் ஒரு கதையை எந்த ஃபார்முலாக்குள்ள அடக்க முடியும்னு புரியும். இப்ப டிஜிட்டல் காலம். ‘கட்’னு ஒரு முறை சொன்னா போதும். கேமராவை ஸ்டாப் பண்ண முடியும். ஃபிலிம் கல்ச்சர்ல கேமரா ஓடிக்கிட்டே இருக்கும். ‘கட்’டையே ‘கட்... கட்... கட்...’னு தொடர்ச்சியா சொல்லுவோம்.

கதை விவாதிக்கிறப்ப டீ கொண்டு வர்ற பையன் வரை கருத்துக் கேட்டு ஃபைனல் பண்ணுவோம். ஒரு சீன் திருப்தியா வந்துடுச்சுனா உடனே ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செஞ்சு சந்தோஷமா சாப்பிடுவோம். வயிறும் மனசும் உற்சாகமானதும் அடுத்த சீன் பத்தி பேசத் தொடங்குவோம்.டிஸ்கஷன்ல அதிகம் உட்கார்ந்தவங்கதான் பின்னாடி புகழ்பெற்ற இயக்குநர்களா ஜெயிச்சிருக்காங்க!

தனியா உட்கார்ந்து ஒரு கதையை ரெடி பண்ண நானும் ட்ரை பண்ணியிருக்கேன். ஒரு நகைச்சுவை சீன் பிடிச்சா, அதை எதிர்ல இருக்கிறவங்ககிட்ட சொல்லி, அவங்க ரியாக்‌ஷனைப் பார்த்தாதான் அந்த காமெடி எடுபடுமா இல்லையானு புரியும்; மெருகேறவும் செய்யும்.

டிஸ்கஷன் அப்ப நமக்கு கோவம் வரும். சண்டை போட்டுப்போம். ரொம்ப நாளா சீன் பிடிக்காம இருந்தா டென்ஷன் ஆவோம். இதெல்லாமே கதையும், திரைக்கதையும் பக்காவா வரணும்னுதான்...’’ என்ற பாண்டியராஜன், ‘டிஸ்கஷனில் பேசப்படும் காட்சிகளை வேறு இடத்தில் சில உதவியாளர்கள் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்.

‘‘இப்படிச் செய்யறது துரோகம். ஒரு இடத்துல பேசப்பட்ட சீனை இன்னொரு இடத்துல சொல்றது மட்டுமில்ல... வேறொரு இடத்துல அதே சீன் பேசப்படும்போது ‘ஏற்கனவே அங்க இதை பேசியிருக்காங்க’னு உண்மையை சொல்லாம மவுனம் காக்கறதும் தப்புதான்.
ஆனா, அங்கொன்றும் இங்கொன்றுமா நடக்கிற இந்தத் தவறுகளை வைச்சு டிஸ்கஷனே தப்புனு முடிவுக்கு வருவதுதான் பெரும் தப்பு!’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஆர்.பாண்டியராஜன்.

இந்தக் கருத்தில் உடன்படுகிறார் இயக்குநர் ஷங்கரின் சீடரும், ‘ஈரம்’, ‘குற்றம் 23’ படங்களின் இயக்குநருமான அறிவழகன்.‘‘ஒரு கதையை குழுவா விவாதிக்கறப்பதான் கேரக்டர் ஸ்கெட்ச் சரியா அமையும். இடைவேளை அப்ப எதை வைக்கலாம்... பாடல் காட்சிகளை எங்கு இணைக்கலாம்ங்கிற மாதிரியான விஷயங்களை பலரோடு பேசும்போதுதான் ஃபைனல் செய்ய முடியும். ஓரளவு லாஜிக் மிஸ்டேக்ஸை டிஸ்கஷன்ல சரிபண்ணிடலாம்.

ஆக்சுவலா வெவ்வேறு சூழல்கள்ல வளர்ந்த அஞ்சாறு பேர் ஒண்ணா உட்கார்ந்து ஒரு விஷயத்தைப் பேசறப்ப அதுக்கான டைமென்ஷன் சரியா அமையும்னு உறுதியா நம்பறேன். தினமும் விவாதிப்பதை மினிட்ஸா எடுப்பேன். ஓகே ஆன சீன்ஸை உடனே என் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணுவேன். மறுநாள் அதை பாலீஷ் பண்றதும் உண்டு.

பொதுவா கதையை தனியாதான் யோசிப்பேன். ஆனா, அதை டெவலப் செய்ய கண்டிப்பா டிஸ்கஷனைக் கூட்டுவேன்...’’ என்ற அறிவழகன், தன் குருநாதர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோதுதான் ஓர் இயக்குநருக்கு எந்தளவுக்கு தேடல் முக்கியம் என்பதை உணர்ந்ததாகச் சொல்கிறார்.

‘‘நல்லா நினைவுல இருக்கு... ‘அந்நியன்’ டிஸ்கஷன்ல ஷங்கர் சாரையும் சேர்த்து ஆறு பேர் இருந்தோம். ஒரு சீன்ல அவர் ‘நரகத்துல என்ன தண்டனைகள் கொடுக்கலாம்’ என்ற கேள்வியைக் கேட்டு அங்கிருந்த சுஜாதா சார்கிட்ட ‘இதைப் பத்தி புத்தகம் எதாவது வந்திருக்கா சார்’னு கேட்டார்.

உடனே கருட புராணம் பத்தி சுஜாதா சார் ஒரு லெக்சர் அடிச்சார். இதுக்குப் பிறகு ஃப்ரெஷ்ஷா அவ்வளவு சீன்ஸ் வர ஆரம்பிச்சது. இதுக்கெல்லாம் காரணம் ஷங்கர் சாரின் தேடல்தான். ‘அந்நியன்’ கிளைமேக்ஸ் பத்தி டிஸ்கஷன் நடந்தப்ப அம்பி, அந்நியனா மாறும் இடத்தை டைரக்டர் சொன்னதும் உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு. அப்பவே இந்த ப்ளாக் திரைல பேசப்படும்னு நினைச்சோம். அதே மாதிரி இப்ப வரை அந்த கிளைமாக்ஸ் பேசப்படுது...’’ வியந்தபடி சொல்கிறார் அறிவழகன்.

நாளை இயக்குநராகப் போகும் கனவுடன் வாழும் இன்றைய அசோசியேட் டைரக்டர்ஸும் டிஸ்கஷன் என்பதை வரவேற்கிறார்கள்.‘‘என் அனுபவத்தையே சொல்றேன் கேளுங்க...’’ என்றபடி ஆரம்பித்தார் டைரக்டர் லிங்குசாமியின் அசோசியேட் ஆன அருண் உத்ராபதி. ‘‘லிங்குசாமி சாரின் ‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’ படங்கள் அப்ப காலைல 10 மணிக்கு ஆபீஸ் வந்துடுவோம். ரைட்டர், அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் உட்பட எல்லாரையும் டிஸ்கஷன்ல சார் உட்கார வைப்பார்.

கடைசி அசிஸ்டென்ட் ஒரு பேப்பர்ல நாங்க பேசற எல்லாத்தையும் நோட் பண்ணுவார். ஒவ்வொரு நாள் மாலையும் அன்னிக்கி நாங்க பேசினது ரிப்போர்ட்டா ரெடி ஆகும். ஓகே ஆகாத சீன்ஸ் வேற கதைக்கு சூட் ஆகலாம்னு எங்க டைரக்டர் எப்பவும் சொல்லுவார். அதனால எதையுமே வேஸ்ட்டுனு சொல்லாம எல்லாத்தையும் பதிவு பண்ணுவோம்.

முக்கியமான ப்ளாக்ஸ் அப்ப அது தொடர்பான படங்கள், புத்தகங்களை எல்லாம் நாங்க படிப்போம். எவ்வளவு விவாதிச்சாலும் அதை ஃபைனல் பண்றது டைரக்டர்தான். ஆனா, ஸ்பாட்ல நடிகர்கள்கிட்ட சில டயலாக்ஸை சொல்லும்போது, ‘இவர்தான் இதை சொன்னார்’னு தன் உதவியாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுப்பார். அதே மாதிரி சில சீன்ஸ் அப்பவும் அதுல நடிக்கிறவங்ககிட்ட ‘இந்தக் காட்சியைச் சொன்னது இன்னார்தான்’னு கூப்பிட்டு அறிமுகப்படுத்துவார்!’’ என்கிறார் அருண் உத்ராபதி.

எல்லாம் சரி... கதாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
‘‘இப்ப எல்லாம் கதையை ரெடி பண்ணிட்டு கடைசியா கருத்து கேட்கத்தான் எங்ககிட்ட வர்றாங்க!’’ என வெடிகுண்டை வீசுகிறார் பெயர் சொல்ல விரும்பாத, பல வருடங்கள் அனுபவம் கொண்ட அந்தக் கதாசிரியர்.‘‘ஆனா, அந்தக் காலத்துல இல்லாத ஓர் ஆரோக்கியமான போக்கு இப்ப இருக்கு. முன்னாடி ஓர் இயக்குநர் கதை பண்ணினா அடுத்த இயக்குநர்கிட்ட அந்தக் கதையைப் பத்தி மூச்சு கூட விடமாட்டாங்க. இதனாலயே ஒரே சமயத்துல ஒரே கதையம்சம் கொண்ட மூணு நான்கு படங்கள் வெளியாகி சிரிப்பா சிரிச்சிருக்கு!

இப்ப உள்ள யங்ஸ்டர்ஸ் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. ஸ்கிரிப்ட்டை தங்களுக்குள்ள ஷேர் பண்ணிக்கறாங்க. தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், நலன் குமாரசாமினு பலரையும் இதுக்கு உதாரணமா சொல்லலாம்...’’  என்கிறார் அனுபவஸ்தரான அந்தக் கதாசிரியர்.‘‘ஆனா, குறும்படம் வழியா படம் இயக்க வர்றவங்க ஒன் மேன் ஆர்மியாதான் செயல்படறாங்க...’’ என்ற குரல் கோலிவுட்டில் சலசலக்கிறது.

‘‘அது உண்மைதான்...’’ என்கிறார் ‘8 தோட்டாக்கள்’ படம் வழியே கவனத்தை ஈர்த்திருக்கும் இயக்குநர் கணேஷ். ‘‘எப்பவும் தனியா உட்காந்துதான் கதை பண்றேன். எழுதி முடிச்சதும் என் நட்பு வட்டத்துல உள்ள இயக்குநர்கள்கிட்ட அந்தக் கதையை சொல்லுவேன். அவங்க சொல்ற கமெண்ட்ஸை கவனமா நோட் பண்ணுவேன். எப்படி சிறுகதை, நாவல் எழுதறவங்க தனியா தங்கள் வேலையை செய்யறாங்களோ அப்படித்தான் நானும் செயல்படறேன்.

ஏன்னா தனியா உட்கார்ந்து யோசிக்கிறப்பதான் அந்த கதைல ஒரு லைஃப், ஒரு உண்மைத்தன்மை இருக்கும்னு நினைக்கறேன். இப்ப அதர்வாவை வைச்சு படம் பண்றேன். இதுவும் தனியா உட்கார்ந்து எழுதினதுதான்.

அதுக்காக ஸ்டோரி டிஸ்கஷன் தப்புனு சொல்ல வரலை. கூட்டமா உட்கார்ந்து கதை யோசிக்கறது எனக்கு சரியா வரலைனுதான் சொல்ல வர்றேன்!’’ எனப் புன்னகைக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.எது எப்படியோ... வெளியாகும் படங்கள் தரமாகவும் என்டர்டெயின்மென்ட்டுடனும் இருக்கவேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்!              

மை.பாரதிராஜா