தமிழக முதல்வர் இதைப் பிடிப்பாரா?



சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்...’’ என பல மேடைகளில் சூளுரைத்து வருகிறார். ‘‘எட்டு வழிச்சாலை வந்தால் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.

அத்துடன் அங்கே வீற்றிருக்கும் இயற்கை வளங்கள் பாதிப்படைந்து இயற்கைக்கும் மக்களுக்கும் கேடு உண்டாகும்...’’ என தொடர்ந்து எச்சரித்து வருகிறது ‘பூவுலகின் நண்பர்கள்’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு. இதுகுறித்து அந்த அமைப்பின் இதழ்களில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவரும் கப்பிக்குளம் ஜெ.பிரபாகரைச் சந்தித்து உரையாடினோம்.

‘‘இந்தியாவின் தென்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை இரண்டும் தென்னகத்து இயற்கை அரண்கள். அதிலும் மேற்கைவிட கிழக்குத் தொடர்ச்சி மலை மிகவும் பழமையானது. இந்த மலையானது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையான வங்காள விரிகுடாவுக்கு இணையாக மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் போய் முடிகிறது.

மலையின் பெரும்பகுதி ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்தாலும் மற்ற மாநிலங்களிலும் இதன் இயற்கை வளங்கள் பரவியிருக்கின்றன...’’ என்ற பிரபாகர் தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
‘‘தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள வல்ல நாடு, சாய மலை, காரிசாத்தான் மலை, கரட்டு மலை, கழுகு மலை, திருப்பரங்குன்றம் மலை, நாக மலை, அழகர்கோவில் மலை, ஆனைமலை, சிறுமலை, கரந்தமலை, கடவூர்மலை மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பச்சை மலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை உள்ளிட்ட மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமானவை.

இதில் கிழக்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் உள்ள கஞ்சன் மலை, சருகு மலை, கல்வராயன் மலை, கவுந்தி மலை, சேர்வராயன் மலை, அறநூற்று மலை, வேடியப்பன் மலை, தீர்த்த மலை ஆகியவற்றின் ஊடாகத்தான் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவிருந்தது.இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை மற்றும் பாலாறு நதிகளுக்கு இடையே உள்ள ஜவ்வாது மலையும் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவமுடையவை.

எட்டு வழிச்சாலை செல்லும் கல்வராயன் மலைக்கு சுமார் 40 கி.மீ தொலைவில்தான் இந்த ஜவ்வாது மலைத்தொடர் உள்ளது. சேர்வராயன் மலையில் ஏற்காடும், ஜவ்வாது மலையில் ஏலகிரியும் அமைந்துள்ளன. ஏழைகளின் ஊட்டி இந்த ஏற்காடு. ஜவ்வாது மலையில்தான் செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. அத்துடன் அங்கே உள்ள பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி போன்றவை சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை.

சேலம் மாவட்டம் ஆத்தூர், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட கல்வராயன் மலையில்தான் கோமுகி ஆறு உற்பத்தியாகி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. சாத்தனூர் அணைக்கட்டு, மணிமுத்தாறு அணை, ஆத்தூர் கணவாய் போன்றவை இந்த கல்வராயன் மலையில் உள்ள முக்கியமான நீர்த்தேக்க அணைகள். இவை எல்லாம் இந்த எட்டு வழிச்சாலையால் பாதிப்படையப்போகும் பகுதிகள்...’’ என்ற பிரபாகர், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்போகும் மற்ற வளங்கள் குறித்தும் விளக்கினார்.

‘‘இந்த மலைப் பகுதிகளில் அபூர்வ மூலிகைகளும் அரிய தாதுக்களும் நிறைந்துள்ளன. உதாரணமாக பாக்சைட், மாங்கனீசு, கிராபைட், குரோமைட், இரும்பு, செம்பு, துத்தநாகம், அப்படைட், மைக்கா, கிரானைட், பெல்ட்ஸ்பார், சிலிக்கா மணல், குவார்ட்சைட் போன்றவை.

அத்துடன் காட்டு யானைகள் இந்த மலைத்தொடரில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. இதுபோக சிறுத்தை, புலி, காட்டு எருமை, கரடி, கடம்பை மான், புள்ளி மான், குரைக்கும் மான், சுண்டெலி மான், காட்டுப் பன்றிகள், நரி, ஓநாய், காட்டுப் பூனை, புனுகுப் பூனை, குரங்கு, பறக்கும் அணில் உள்ளிட்ட விலங்குகளும், நாரை, வண்ணக் கொக்கு, காடை, கவுதாரி போன்ற பறவைகளும், முதலை, பாம்பு வகைகளும் இங்கேதான் அதிகமாக வசிக்கின்றன.

தவிர, 2500 தாவர இனங்களும், 271 இனங்களைச் சேர்ந்த 528 வகையான மரங்களும் இந்த மலைத் தொடரில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.  இந்த இயற்கை வளங்கள் எல்லாம்  எட்டு வழிச்சாலை திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம்...’’ என்று கவலையுடன் முடித்தார் கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.தமிழக முதல்வர் இதையெல்லாம் அறியவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்!                           

டி.ரஞ்சித்