ஆப்பிரிக்காவில் 81 பள்ளிகளைக் கட்டியிருக்கும் டென்னிஸ் வீரர்!ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது தெரியாதா என்று அடிக்க வருவீர்கள். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த ஈடு இணையற்ற சர்வீஸ் கிங், இன்று அவரின் வேறொரு சர்வீஸுக்காக உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறார்!

யெஸ்! தலைப்பில் நீங்கள் பார்த்த விஷயமேதான். ஆப்பிரிக்காவின் மாளவி நாட்டு மக்களுக்காக 81 பள்ளிக்கூடங்களைக் கட்டித் தருகிறார் இந்த டென்னிஸ் சூப்பர் ஸ்டார்.இதன் மொத்த மதிப்பு 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சொல்வதென்றால் தொண்ணூற்று நான்கரைக் கோடி ரூபாய்!

‘ரோஜர் பெடரர் பவுண்டேஷன்’ என்ற சேவை அமைப்பை நடத்தி வரும் பெடரர், ஏற்கெனவே உலகம் முழுதும் இந்த அமைப்பின் மூலம் பல கோடி ரூபாய்களுக்கு நற்பணிகள் செய்துவருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த நன்கொடையையும் கொடுத்து உலகத்தையே தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

‘அரசியலுக்கு வருவேன்’ என்று சவடால் விடாமல்; மீடியாவைக் கூட்டி ஊரெல்லாம் களேபரம் செய்யாமல், இடது கை கொடுப்பதை வலது கைக்குத் தெரியாமல் செய்வதுதான் பெடரர் பாணி. இத்தனைக்கும் இவர் சேவையாற்றிக் கொண்டிருப்பது இவரது சொந்த நாட்டு மக்களுக்கு அல்ல. உலகின் எந்தப் பகுதியில் அதிக வறுமையும் கல்லாமையும் இருக்கின்றதோ அங்கு சென்று பணியாற்றுகிறார் பெடரர். இதில்தான் அவரின் உண்மையான மனித நேயம் வெளிப்படுகிறது.

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்று சொல்வார்கள். வளரும் நாடுகளின் தலையாய பிரச்னைகளில் ஒன்று கல்வியறிவின்மை. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வறுமை. இளம் வயதில் வறுமை காரணமாக கல்வியறிவு பெறாதவர்களாக இருப்பதனாலேயே தங்களுக்கான எதிர்காலம் என்ன என்று தெரியாமல் பல கோடிப் பேர் வாழ நேர்கிறது.

இதுதான் பெடரரை உலுக்கும் விஷயமாக இருக்கிறது. பெடரரால் இந்தக் கொடுமையைத் தாங்க இயலவில்லை. ஒரு பக்கம் மில்லியன் கணக்கான பணம் எங்கோ குவிந்திருக்க இன்னொரு பக்கம் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் வாடுவதைக் கண்டுதான், தான் சமூக சேவையில் இறங்கியதாகத் தெரிவிக்கிறார்.

‘‘ஒருவரின் வாழ்வைத் தீர்மானிப்பதே கற்றல்தான். இளம் வயதில் ஒருவருக்கு ஆரோக்கியமான கல்வியும் கற்பதற்கான சிறப்பான சூழலும் வாய்க்கப் பெற்றால் பின்னாளில் அவரின் எதிர்காலத்தை அவராகவே தீர்மானிக்க முடியும்...’’ என்று சொல்லும் பெடரர், இப்படி அடையாளம் தெரியாத மக்கள் திரளுக்குள் எத்தனை பெடரர்கள், எத்தனை ஸ்டெஃபி கிராப்புகள் வெளியே தெரியாமலேயே போனார்களோ என்று வருந்துகிறார்.

குறைந்தபட்ச கல்வியறிவே இவர்களை இந்தக் கொடுமையிலிருந்து மீட்க வழி என்று இதுவரை 81 ஆரம்பக் கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளார்! இதற்காக, மேலும் 140 கோடி ரூபாயைத் தந்து இந்தத் திட்டத்தை விரிவாக்கியுள்ளார்.

பெடரரின் இந்தத் திட்டத்தின் மூலம் வருடந்தோறும் ஒன்றரை லட்சம் மாளவி குழந்தைகளுக்கு கல்விக் கண் கிடைக்கும் என்கிறார்கள். ஒரு பத்து வருடங்கள் தொடர்ந்து இந்தக் கல்விப் பணி நடந்தால் ஒரே தசமத்தில் மாளவி தேசத்தின் கல்வியறிவு விகிதமே கணிசமாக உயர்ந்துவிடும்.
இப்படி ஒரு மகத்தான கல்விப் புரட்சியைத்தான் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி செய்து கொண்டிருக்கிறார் பெடரர்.

தெய்வம் மானுஷ்ய ரூபியாம் என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். அதாவது, கடவுள்கள் மானுட வடிவில்தான் வருவார்களாம். பெடரரை தங்கள் கடவுளாகவே கொண்டாடுகிறார்கள் மாளவி மக்கள். தொடரட்டும் இந்த டென்னிஸ் பேரரசரின் சேவை. தழைக்கட்டும் மனிதம்.

இளங்கோ கிருஷ்ணன்