புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு?



நமது இந்தியத் தேர்தல் முடிவுகள் பற்றி திட்டவட்டமாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். அது, எந்தத் தேர்தலிலும் அப்படித் திட்டவட்டமாக எதையும் சொல்லிவிட முடியாது என்பதுதான்!அந்த அளவுக்கு தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகள் பலவகையாக உள்ளன. அதில் புதிய வாக்காளர்கள் திரளும் ஒன்று.கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆண்டுதோறும் இரண்டு கோடிப் பேர் பதினெட்டு வயதைக் கடந்து வாக்களிக்கும் உரிமைக்குள் நுழைகிறார்கள்.

 ஆண்டுக்கு இரண்டு கோடி என்றால் ஐந்து வருடங்களில் இத்தொகை பத்து கோடியாகி இருக்கிறது. இவர்களின் பெரும்பகுதி வாக்களிக்கவும் செய்கிறார்கள் என்பதையும் இங்கு நாம் சொல்ல வேண்டும். இந்த எண்ணிக்கை என்பது மொத்த வாக்களிக்கும் விகிதத்தில் கணிசமான சதவீதம். இந்தப் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, வேறுவகையிலும் பொருட்படுத்தப்படவேண்டியவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நன்கு கற்றவர்கள். பின்தங்கிய குடும்பங்களில் அந்தக் குடும்பத்திலேயே அதிகக் கல்வியறிவு உடையவர்களாகவும் இருப்பார்கள். அதற்கு முன்பு அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களைவிட அதிக விவரமானவர்களாகவும்,  வாக்கு இயந்திரம் உள்ளிட்டவற்றை சரியாகக் கையாளத் தெரிந்து அதைப் பற்றிய புரிதல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்; இருக்கிறார்கள்.

சில குடும்பங்களில் காலம் காலமாய் இருந்து வரும் வாக்களிக்கும் மரபை  மாற்றுகிறவர்களாகவும் (அதாவது, குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிப்பேன் என்ற மனோபாவம் இல்லாதவர்கள்), அவர்களது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் வட்டம் ஆகியவற்றில் கருத்து ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாகவும்கூட இவர்கள் இருப்பார்கள்.

இப்படியானவர்கள் தேர்தலின் முடிவை மாற்றியமைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இவர்களில் கணிசமானவர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே இருப்பது அரசியல் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடி. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இவர்களில் சுமார் இரண்டரை கோடிப் பேருக்கு மேல் வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கிவிட்டார்கள். இவர்கள் அனைவருமே பதினெட்டு முதல் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதுவும்கூட ஓராண்டுக்கு முந்தைய நிலவரம்தான். அதன் பிறகு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மேலும் பல கோடிப் பேர் இணைந்திருக்கக் கூடும்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் மகத்தான வெற்றிக்கு இந்த இளைஞர்கள் சக்தியின் ஆதரவும் எழுச்சியும் மிக முக்கியமாக இருந்ததாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்கள் மூலம் மோடி அலை பெரிய அளவில் செயல்பட்டபோது அதில் அதிக ஊக்கத்துடன் பங்குபெற்றது இத்தகைய புதிய வாக்காளர்கள்தான் என சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதேபோல கடந்த 2015ம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக ‘முன்னா சே நிதிஷ்’ என்ற பிரசாரத்தை ஃபேஸ்புக்கில் முன்னெடுத்து பரவலாக்கியதும் இந்த இளைஞர் கூட்டம்தான். 2017ம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் ‘காபி வித் காப்டன்’ என்ற பிரசாரத்தை அமரேந்தர் சிங்குக்கு ஆதரவாக இளைஞர்களைத் திரட்டப் பயன்படுத்தினார்கள்.

ஒரு சாதாரண ஆண்ட்ராய்டு போன் அரசியலைத் தீர்மானிக்குமா என்று கேட்டால்... தீர்மானிக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதிக்கும் அளவுக்கு வலுவான காரணியாகவே அது உயர்ந்துள்ளது என்கிறார்கள். இன்றைய புதிய வாக்காளர்கள் பலரும் செய்தித்தாளைப் படிப்பதில்லை. ஏன், தொலைக்காட்சி செய்திகளைக் கூட பொறுமையாக கவனிப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான எல்லா அரசியல் சமூக நடப்புகளும் சமூக வலைத்
தளங்கள் வழியாகவே அவர்களை அடைகின்றன. எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்படும்போது அது அவர்களை எளிதாகச்
சென்றடைகிறது.

வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, தொகுதி தொகுதியாக பிரசாரம் செய்வதை விடவும் இப்படி ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல கோடி வாக்காளர்களை நேரடியாகச் சந்திப்பது அரசியல் கட்சியினருக்கும் எளிதாக உள்ளது.கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் சுமார் ஆறு லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பிஜேபி அரசு புதிய வாக்காளர்களை தம் கட்சியில் இணைப்பதற்காக ஒவ்வொரு வாக்குப்பதிவு மையம் அளவிலும் இறங்கி பிரசாரம் செய்யத்  தயாராகி வருகிறது.

காங்கிரஸும் சும்மா இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைக் கவர்வதற்காக பலரையும் பிரசாரப் பணியில் அமர்த்தியுள்ளதாக காங்கிரஸின் இளம் தலைவர் ஜோதிஆதித்யா சிந்தியா சொல்கிறார்.இந்த இளைய சக்தி தங்களைப் போலவே இளைஞர்தான் வேண்டும் என்று எப்போதும் கேட்டதில்லை. தங்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய தலைவர்கள் வேண்டும் என்றே கேட்கிறார்கள்.

இதை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட பாஜக, சென்ற தேர்தலில் மோடிதான் பிரதமர் என்று திட்டவட்டமாக தேர்தல் பிரசாரத்தின்போதே அறிவித்தது. இதுதான் இளைய சக்தியை பாஜக நோக்கி ஈர்த்த முக்கியமான வியூகமாகவும் பின்னர் மாறியது. இதை இப்போது காங்கிரஸ் புரிந்துகொண்டு ராகுலை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை திமுக ஸ்ட்ராங் என்பதால் இளையவர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு இந்தக் கூட்டணிக்கு அதிகமாகவே உள்ளது. அதிமுகவுக்கு சமூக வலைத்தளம், இளைய சக்தி என்பதெல்லாம் என்னவென்றாவது தெரியுமா என்பதே கேள்விக்குறிதான். ஆனால், பாஜகவினர் இதில் அதிகமாக இருப்பதால் இந்தத் தேர்தலில் இரு கூட்டணிகளுமே இளையோர் சக்தியைக் கைக்கொள்ள கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் சுமார் 5.86 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தி நான்கு சதவீதம். இதில், 2.96 கோடி வாக்காளர்கள் பெண்கள், 2.90 கோடி வாக்காளர்கள் ஆண்கள், 5,197 வாக்காளர்கள் திருநங்கைகள்.

இந்த மொத்த வாக்காளர்களில் சுமார் அறுபத்தாறு சதவீதம் பேர் இருபது முதல் நாற்பத்தொன்பது வயதுக்குள் உள்ளவர்கள்.
கடந்த 2017ம் ஆண்டு மட்டும் பனிரெண்டு லட்சம் பேர் பதினெட்டு வயது பூர்த்தியடைந்து, புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு எட்டரை லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

சராசரியாக, இந்த ஐந்து ஆண்டில் சுமார் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் புதிய வாக்காளர்களாக நுழைந்திருக்கிறார்கள். நிச்சயமாக இந்த எண்ணிக்கை கணிசமானதுதான். இந்தப் புதியவர்கள் இம்முறை யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பற்றி உறுதியாக எதையும் நம்மால் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், இவர்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தத் தேர்தலைப் பாதிக்கும். இளைய சக்தி எழுகவே!               

இளங்கோ கிருஷ்ணன்