தலபுராணம்- மெட்ராஸ் பிஞ்சராபோல் (பசுமடம்)



யாருமற்ற, உறவுகளால் கைவிடப்பட்ட மனிதர்களுக்காக அனாதை இல்லங்களும், முதியோர் காப்பகங்களும் ஆங்காங்கே செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஆனால்,  கைவிடப்பட்ட, கவனிக்க முடியாத வீட்டு விலங்குகளுக்கு..? இருக்கிறது ஒரு காப்பகம். அதன்பெயர், ‘மெட்ராஸ் பிஞ்சராபோல்’. பெரம்பூர் கொன்னூர் ெநடுஞ்சாலையில் இருக்கும் இந்த அமைப்பு நூற்றாண்டு கடந்த பழமையானது. 1906ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
1877ம் வருடம் மெட்ராஸில் விலங்குகளை வதைப்பதைத் தடுக்கவும் அதை சரிசெய்யவும் ஆங்கிலேயர்களால் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்பெயர் கால்நடை துயர் தடுப்புக் கழகம் (SPCA). இதன் முதல் காப்பாளராக மெட்ராஸ் மாகாண கவர்னர் பக்கிங்ஹாமும், முதல் தலைவராக மெட்ராஸ் பிஷப்பான ஃபிரடெரிக் ஜெல்லும் இருந்தனர்.

இக்கழகம், 1898ம் வருடம் வேப்பேரியில் ஒரு நிலம் வாங்கி கட்டடம் கட்டியது. ஆனால், அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட வயதான கால்நடைகளை இறக்கும் வரையில் கவனிக்க போதுமான வசதிகள் இல்லை. இதனால், உயர்நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டது.

அந்த வழக்கின் நீதிபதியாக இருந்த ஹங்கர்ஃபோர்டு டியூடர் போத்தம் கால்நடைகளுக்கான முதியோர் இல்லம் ஒன்று ஆரம்பிக்கலாம் என கருத்து தெரிவித்தார். இதனால்தானோ என்னவோ இவரின் சிலை பொதுமக்களின் நன்கொடையில் உருவாகி இன்று சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தினப் பூங்காவில் உள்ளது.

இந்த போத்தமின் முயற்சியாேலயே இந்தியர்கள் கால்நடை துயர் தடுப்புக் கழகத்தில் இணைந்தனர். இவர்களின் நிதி உதவியுடன் 1906ம் வருடம் கால்நடை துயர்தடுப்புக் கழகம், மெட்ராஸ் பிஞ்சராபோலை தொடங்கியது.

இதற்காக 12 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தவர் திவான் பகதூர் கோவிந்தாஸ் சதுர் பூஜாதாஸ். இந்நிலத்தை தனது தந்தை சதுர் பூஜாதாஸ் குஷால்தாஸ் நினைவாக வழங்கினார். பல வருடங்களாக ெமட்ராஸில் வாழ்ந்து வரும் குஜராத்தி குடும்பம். கீழ்ப்பாக்கத்திலுள்ள குஷால்தாஸ் கார்டன் இவர்களுடையதே!

இந்த கோவிந்தாஸ் சதுர் பூஜாதாஸ் மெட்ராஸின் ஷெரீப்பாகவும் இருந்தார். மெட்ராஸின் மாபெரும் கொடையாளராகவும் திகழ்ந்தார். பூக்கடை காவல் நிலையம் அருகிலுள்ள மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலை நிறுவ நன்கொடை அளித்தவர் இவர்தான். பிறகு, பிஞ்சராபோலுக்கு விஜயநகர மகாராணி நன்கொடை வழங்க, அவரின் பெயரில் முகப்பு அமைக்கப்பட்டது. இதை இன்றும் அங்கே காணலாம்.

ஆரம்பத்தில் மெட்ராஸ் பிஞ்சராபோல் 250 விலங்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பசுக்களும், காளைகளும், எருதுகளும், குதிரைகளும், நாய்
களும், பறவைகளும், ஆடுகளும் அடங்கும். ‘உள்ளே அனுமதிக்க குறைந்தபட்ச நன்கொடையாக குதிரைகளுக்கு 60 ரூபாயும், பசுமாடு, காளை, எருது, கன்றுக்குட்டி என ஒவ்வொன்றுக்கும் 21 ரூபாயும், ஆடு, நாய், பறவைகளுக்கு ரூ.5ம் வசூலிக்கப்பட்டன...’ என ‘The Madras Year Book 1923’ நூல்
குறிப்பிடுகிறது.

ஆனால், போதுமான நிதியில்லாமல் நிர்வாகம் திணற அன்று தாராள நன்கொடையாளர்களாக இருந்த சவுகார் சமூக மக்களான மார்வாடிகள், குஜராத்திகள், சிந்திகளிடம் நிதி கோரப்பட்டது. இதனால், பிஞ்சராபோல் கமிட்டியானது, மெட்ராஸ் மகாஜன் பிஞ்சராபோல் கமிட்டி எனப் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.

நிர்வாகக் குழுவில் இருந்த பனிரெண்டு இடங்களில் எட்டு இடங்களை மகாஜன் சமூக மக்களும், மீதி நான்கு இடங்களை கால்நடை துயர் தடுப்புக் கழகத்தினரும் வகித்தனர். பின்னர்,  மாடுகளுக்கு வைக்கோல், காய்கறிகள், புல் எல்லாம் தனிநபர்களாலும் வாங்கித் தரப்பட்டன.
இந்நிலையில், 1936ம் வருடம் இந்தக் கமிட்டியால் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. அதாவது, வயதான மற்றும் கவனிக்க முடியாமல் கைவிடப்பட்ட பசுமாடுகள், காளைகள், குதிரைகளுக்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மகாஜன் கமிட்டி உறுப்பினர்களும், அடிமாடாக கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப்படும் மாடுகளைக் கண்டறிந்து பிஞ்சராபோலில் சேர்த்தனர். இதனால், மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.  இதற்கிடையே 1936ல் சவுகார் சமூக மக்களின் மகாஜன் கமிட்டி அதே பகுதியில் ஒரு கோசாலையை நடத்தி வந்தது. பின்னாளில் இந்தக் கோசாலை மெட்ராஸ் பிஞ்சராபோலுடன் இணைந்தது. அதிலிருந்த சுமார் நூற்றி ஐம்பது பசுமாடுகளும் பிஞ்சராபோலில் சேர்க்கப்பட்டன.

பின்னர், 1948ம் வருடம் கால்நடை துயர் தடுப்புக் கழகம் பிஞ்சராபோல் கமிட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இந்நிலையில், மெட்ராஸ் பிஞ்சராபோல் தனி சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. மகாஜன் கமிட்டி உறுப்பினர்கள் பிஞ்சராபோலை ஏற்று நடத்தினர். ஆனால், இதன் தலைவர் பொறுப்பை மட்டும் அன்றிலிருந்து இன்று வரை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரே வகித்து வருகிறார். அத்துடன், நிர்வாகமும் நன்கொடை வழியாகவே இன்றுவரை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் இப்போதைய செயல்பாட்டை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிஞ்சராபோலின் மேலாளரான சுரேஷ்குமார்.
‘‘பிஞ்சராபோல் என்பது குஜராத்தி மொழி. இதற்கு பசுமடம் என்று பொருள். எங்கள் நோக்கமே கசாப்புக் கடைகளுக்குப் போகும் மாடுகளைக் காப்பாற்றி அவை இயற்கை மரணம் எய்தும்வரை பராமரிப்பதுதான்.

பசு வதை செய்யக் கூடாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம். ஆரம்பத்தில், பல்வேறு விலங்குகளைப் பராமரித்தோம். இப்போது பசு, காளை, எருமை மாடுகளை மட்டும் பராமரிக்கிறோம். பொதுவாக, ஒரு பசுவின் ஆயுட்காலம் சுமார் 25 வருடங்களாகும். அதில், பத்து பதினைந்து வருடம் வரை மட்டுமே பால் கொடுக்கும். அதன்பிறகு பால் வற்றிவிடும். பின்னர், அதைப் பராமரிக்க வளர்ப்பவர்களால் முடியாது. அப்படிப்பட்ட மாடுகளை அடிமாட்டுக்கு விற்பார்கள். அப்படிச் செய்யாமல் எங்களிடம் ஒப்படைக்கச் செய்கிறோம்.

இப்படி வந்து சேரும் மாட்டுக்கு ஒருமுறை மட்டும் அனுமதிக் கட்டணமாக 16 ஆயிரம் ரூபாய் நன்கொடை வாங்குகிறோம். அதன்மூலம் அது இயற்கையாக மரணிக்கும் வரை பராமரித்து வருவோம். தவிர, இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் நிறைய கோசாலைகள் உள்ளன. பசுமாடுகள் பராமரிக்கப்படுகின்றன. அங்கே பராமரிக்க முடியாத சூழல் வரும்போதும் எங்களிடம் அந்த மாடுகளை விட்டுவிடுவார்கள். நாங்கள் அதை மேற்கொண்டு பராமரிப்போம்.

இப்போது எங்கள் கோசாலையில் 2 ஆயிரம் மாடுகள் உள்ளன. 2005ம் வருடம் எங்கள் கோசாலை மத்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தால் ‘மாதிரி கோசாலை’ என விருது பெற்றது...’’ என உற்சாகமானவர், கோசாலைக்குள் அழைத்துப் போனார்.

‘‘இங்கே மொத்தம் 58 ஷெட்டுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஷெட்டிலும் 40 மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதில், கன்றுக்குட்டிகளுக்கு தனி ஷெட்டுகள். ஒவ்வொரு ஷெட்டுக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பணியாளர்கள் போட்டுள்ளோம். அவர்களே அந்த ெஷட் மாடுகளின் தாய், தந்தையர்.

இவற்றைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆக, மாதத்திற்கு 60 லட்சம் ரூபாய் தேவை. இவையெல்லாம் நன்கொடை மூலமே பெற்று வருகிறோம். மகாஜன சமூக மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் நிறைய தானமும், நன்கொடையும் அளித்து வருகின்றனர். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிறைய பேர் வந்து மாடுகளுக்கு உணவிடுவார்கள்.

இத்துடன் கோமியம், சாண எரு கேட்டு எங்கள் கோசாலைக்கு பொதுமக்கள் வருவார்கள். அவர்களிடம் கோமியத்திற்கு பத்து ரூபாயும், எருவிற்கு இருபது ரூபாயும் பெற்றுக் கொள்கிறோம். மேலும் எங்களிடம் 150 பால் மாடுகள் உள்ளன. அவற்றிலிருந்து ஒருநாளைக்கு 600 முதல் 700 லிட்டர் பால் கிடைக்கும். இதை எங்களுக்கு நன்கொடை தருபவர்களுக்கு மட்டும் வழங்குகிறோம். இதிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.  

அடுத்து, சிலர் சாணத்தை உரத்திற்காக லாரிகளில் வந்து எடுத்துச் செல்வார்கள். அதற்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை வசூலிக்கிறோம். இப்படி வருகின்ற எல்லா வருமானத்தையும் மாடுகளின் உணவிற்காகவும், பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறோம்.

இதேபோல, அரசியல்வாதிகளும் பொதுமக்களும் இங்கே கோ பூஜை நடத்திச் செல்வார்கள். அதற்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கிறோம். சிலர் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்பார்கள். பரவாயில்லை, முடிந்தளவு நன்கொடை கொடுங்கள் என்போம். அது நூறாக இருந்தாலும் சரி வாங்கிக் கொள்கிறோம்.

மாடுகளுக்கு தீவனம், ெதாழிலாளர்களுக்குச் சம்பளம், மின் மற்றும் குடிநீர் கட்டணம் என அனைத்தும் இப்படியாகக் கிடைக்கும் நன்கொடை மூலமே வழங்கப்படுகிறது. ஆனாலும், மாடுகளைப் பராமரிக்க எங்களுக்கு நிதி போதவில்லை. அதனால், தாராள மனம் கொண்டவர்கள் உதவ வேண்டுகிறோம்.
உணவைப் பொறுத்தவரை முன்பு மாடுகளுக்கு வெல்லம், வாழைப்பழம், ரொட்டி எல்லாம் கொடுத்தோம். இப்போது இந்த உணவுகளை நிறுத்தியிருக்கிறோம்.

ஏனெனில், இந்த உணவுகளினால் மாடுகளுக்கு சில பிரச்னைகள் வருகின்றன. அதனால், காய்கறிகள், கீரைகள், மாட்டுத்தீவனங்கள் மட்டும் தருகிறோம். குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 20 டன் கீரைகள் அளிக்கிறோம்.

இதிலும், கொத்தமல்லி செடி அதிகம் வழங்குகிறோம். இந்தக் கொத்தமல்லிச் செடியை கொடுப்பதால் மாடுகளைக் கோமாரி நோய்கள் தாக்குவதில்லை. அதனால், நாங்கள் பொதுமக்களிடமும் இதை வெளியில் அலைந்து திரியும் மாடுகளுக்கும் கொடுக்கும்படி அறிவுறுத்துகிறோம்...’’ என்றவர், ஓரத்தில் இருந்த மருத்துவமனையைக் காட்டினார்.

‘‘எட்டாயிரம் சதுரஅடியில் இந்தக் கால்நடை மருத்துவமனையை அமைத்துள்ளோம். இதில் மூன்று மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாடுகளைப் பராமரிக்க 120 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 26 குடும்பங்கள் இங்கே தங்கி வேலை செய்கின்றன. தவிர, பதினைந்து வெளிமாநிலத் தொழிலாளர்களின் குடும்பங்களும் உள்ளன. அதனால், தொழிலாளர் சங்கமும் இங்கே செயல்பட்டு வருகிறது...’’ என்ற சுரேஷிடம், மாடுகள் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டோம்.  

‘‘இவை இறந்ததும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே புதைத்துவிடுவோம். இதற்காக அங்கே நாங்கள் சிறப்பு அனுமதி பெற்றுள்ளோம்...’’ என்றார்.இங்கே மாடுகளுடன் சுமார் ஐயாயிரம் புறாக்களையும் பராமரிக்கின்றனர். புறாக்களை வளர்க்க முடியாமல் பலர் விட்டுச் செல்கின்றனர். அதனால், இதற்கென ஒரு கட்டடத்தில் தனிக் கூண்டுகள் வைத்துள்ளனர். ஆனால், இதற்கு எந்த நன்கொடையும் வசூலிப்பதில்லை.

‘‘இங்கே எல்லா மதத்தினரும் வந்து போகின்றனர். எல்லா மதத்தைச் சேர்ந்த நன்கொடையாளர்களும் உள்ளனர். இங்குள்ள வாயில்லா ஜீவன்களுக்கு யார் வேண்டுமானாலும் உணவளிக்கலாம். நிதியுதவியும் செய்யலாம்!’’ என்கிறார் சுரேஷ்குமார்!     

பேராச்சி கண்ணன்

சதீஷ்

ராஜா