இசைக் குடும்பத்திலிருந்து ஒரு ஸ்டில் போட்டோகிராபர்!



நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வரப்போகிறாரா... என்பதில் ஆரம்பித்து அவரது ‘எல்கேஜி’ படத்தின் ரிலீஸ் வரை பட புரொமோஷன் போஸ்டர்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் பார்கவி மணி.

‘எட்ஜ் டிசைன் ஹவுஸ்’ என்ற நிறுவனதை நடத்தி வரும் இவர் இன்டீரியர் டிசைனர், பாடகி, விளம்பரப் பட மேக்கர், ஸ்டில் போட்டோகிராபர்... என பன்முகம் கொண்டவர். சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வில் அவரது நர்ஸ் கெட்டப் போஸ்டர் லுக் கலக்கியதல்லவா..? அதற்கும் இவர்தான் சூத்திரதாரி! ‘‘ஆர்.ஜே.பாலாஜி முதல் முறை எங்க ஸ்டூடியோவுக்கு வந்தப்ப எங்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசல. அந்த சந்திப்பு இன்னும் பசுமையா நினைவுல இருக்கு. அப்புறம் அடுத்தடுத்து அவரோட ஒர்க் பண்ணினோம்.

இப்ப ‘எல்கேஜி’ல எங்க கான்சப்ட் அருமையா ஒர்க்அவுட் ஆகியிருக்கு. அந்தப் படத்தை எப்படி புரொமோட் பண்ணினா சரியா வரும்னு கிட்டத்தட்ட ஒருமாசம் நூறு ஐடியாக்கள் வரை யோசிச்சு படிப்படியா பாலாஜியும் நாங்களும் அதை வடிகட்டி 20 கான்சப்ட்ஸ்ல கொண்டு வந்தோம்.

அப்புறம் டைட்டில் பேனர்ல தொடங்கி, மொத்த போஸ்டர் டிசைனையும் ரெண்டே நாட்கள்ல முடிச்சோம்...’’ பரவசத்துடன் சொல்லும் பார்கவி மணி, இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.  

‘‘எங்க பாட்டி டி.பட்டம்மாள், தமிழ்ப் பாடல்கள் நிறைய எழுதியவர். எங்க அப்பா எம்.டி.எஸ்.மணி, ஆடிட்டர். அம்மா சுப மணி, இசைக் கலைஞர். அம்மாவோட தாத்தா பிரபலமானவர். அவர் வீணை சபேஸ் ஐயர். ஆனா, எனக்கு சங்கீத்தை விட ஃபேஷன் டிசைனிங்லதான் ஆர்வம். சிங்கப்பூருக்கு படிக்கப் போனப்ப இன்டீரியர் பெஸ்ட்டுனு தோணுச்சு. அதைப் படிச்சு முடிச்சுட்டு அதே ஸ்கூல்ல விசிட்டிங் ஃபேகல்டியா இருந்தேன். பிறகு துபாய் போய் இன்டீரியர் நிறுவனம் ஒண்ணை நடத்தினேன்.

எனக்கு போட்டோகிராஃபியில ஆர்வம் வரக் காரணமே எங்க அண்ணா கார்த்திதான். அவரோட கேமரால ஷூட் பண்ணக் கத்துக்கிட்டேன்.
ஒருமுறை அம்மா எனக்கு வைரம் வாங்கித் தர்றேன்னு சொன்னப்ப அந்தப் பணத்துக்கு நல்ல கேமரா வாங்கித்தானு கேட்டேன். இப்படித்தான் 2010ல சொந்த கேமரா கிடைச்சது. அந்த டைம்ல நான் சென்னை வந்துட்டேன்...’’ என்ற பார்கவி மணியை சினிமா பார்க்கவே வீட்டில் அனுமதித்ததில்லையாம்.

‘‘அதுக்குக் காரணம் ஒரு ஜோசியக்காரர். எங்க அப்பாகிட்ட ஒருமுறை அவர், ‘உங்க பொண்ணு பெரிய ஹீரோயினாகிடுவா’னு கொளுத்திப் போட்டுட்டார்! அவ்வளவுதான். வீட்ல சினிமா பார்க்கத் தடை விதிச்சிட்டாங்க. அதையும் மீறி திருட்டுத்தனமா நான் பார்த்த படங்கள் ‘சிந்துபைரவி’யும், ‘சலங்கைஒலி’யும்.

அப்புறம் சொந்தக்காரங்க மூலமா ‘சின்னத்தம்பி’ பார்த்தேன். அவ்ளோதான். வேற படங்கள் பார்க்கல. ஆனா, ஜோசியக்காரர் சொன்னதுல பாதி பலிச்சுடுச்சு!’’ கண்சிமிட்டி சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவர், சட்டென சிரித்தார்.‘‘கே.பாலசந்தர் சாரின் ‘காசளவு நேசம்’, கிரேஸிமோகன் சார் நாடகங்கள்னு டிவி சீரியல், டிராமாக்கள்ல நடிச்சிருக்கேன்! கிரேஸி சார், மாது பாலாஜினு நிறைய பேர் நட்பு கிடைச்சது. ஆனா, எனக்கு ஆக்ட்டிங் பிடிக்கல. திரைக்குப் பின்னால் ஒர்க் பண்ணவே விரும்பினேன்...’’ எனச் சொல்பவர், அதன்பிறகு டிசைனிங் ஸ்டூடியோ ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

‘‘ஹாபியா ஃபேமிலி போர்ட்ரெயிட்ஸ்னு பண்ண ஆரம்பிச்சேன். ஷூட் அத்தனையும் பார்த்துட்டு அம்மா ஆச்சரியமாகி ‘நீ ஏன் ஒரு புரொஃபஷனல் போட்டோகிராஃபராகக் கூடாது’னு கேட்டாங்க. தனியா நிறுவனம் ஆரம்பிக்க தைரியம் கொடுத்தது அவங்கதான். 2011ல இன்டீரியர், போட்டோகிராஃபி ரெண்டையும் ஃபோக்கஸ் பண்ணலாம்னு ‘எட்ஜ் டிசைன் ஹவுஸை’ ஆரம்பிச்சேன். எங்கிட்ட ஒரு பழக்கம் உண்டு. எந்த விஷயத்தை யோசிச்சாலும் வருங்காலத்துல அது என்னவா ஆகும்னு கணிச்சுடுவேன்.

கம்பெனி ஆரம்பிச்ச சில மாதங்கள்ல நண்பர் கோட்டா (கோதண்டராமன்) நட்பு கிடைச்சது. நான் எப்படி பத்து வருஷங்கள் ஃபாரீன்ல இருந்திருக்கேனோ அப்படியே எங்களோட கிரியேட்டிவ் ஹெட் கோட்டாவும் வெளிநாடுகள்ல ஒர்க் டிசைனிங்ல இருந்தவர். ஒரு புது நிறுவனம்... கிளையன்ட்னு யாரும் அமையாத சூழல்ல கோட்டா சப்போர்ட்டா இருந்தார்.

ஆரம்பத்துல நாங்க ஸ்டில் போட்டோகிராஃபில மட்டும்தான் கவனம் செலுத்தினோம். என் உறவினர் ஒருத்தர் திருப்பூர்ல கார்மென்ட்ஸ் வச்சிருந்தார். அவர்தான் எங்களை அட்வர்டைஸிங்லயும் கவனம் செலுத்த வச்சார்.நகைக்கடை, துணிக்கடைகளுக்கு ஸ்டில் விளம்பரங்கள் நிறைய பண்ணினோம். அதுல எங்க ஸ்டூடியோ பிரபலமாச்சு. எங்க ஒர்க் பார்த்துட்டு எங்க கிளையன்ட்ஸே புது வாடிக்கையாளர்களை அழைச்சுட்டு வரத் தொடங்கினாங்க. இப்படித்தான் நாங்க டெவலப் ஆனோம்.

அப்புறம் ‘வில்லன்ஸ் அண்ட் காமெடியன்ஸ்’ கான்சப்ட்ல ராதாரவி சாரையும் எஸ்.வி.சேகர் சாரையும் வச்சு ஒரு ஷூட் பண்ணினேன். அடுத்து ‘தி இந்து’ ஆங்கிலப் பேப்பர்ல ஒரு பத்தி எழுதினேன். நாசர் சார், ராதாரவி சார், பாக்யராஜ் சார், எஸ்.வி.சேகர் சார்னு பலரையும் ஷூட் பண்ணி அதன் சுவார ஸ்யங்களை எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது...’’ என்று சொல்லும் பார்கவி மணி, கண்காட்சியும் நடத்தி
யிருக்கிறார்.

‘‘திடீர்னு தோணின ஐடியா இது. 2014ல எங்க ‘அர்ப்பணா’ கண்காட்சி பேசப்பட்டுச்சு. பத்ம, பத்மபூஷண் விருதுகள் வாங்கிக் குவிச்ச சங்கீதக் கலைஞர்களை வைச்சு போட்டோ ஷூட் நடத்தி அதை கண்காட்சியா நடத்தினோம். ஒரு டிசம்பர் சங்கீத சீசன்ல அந்தஎக்ஸிபிஷன் ஒரு வாரம் வரை நடந்தது. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொருத்தரோட கச்சேரியும் இருந்தது.

‘கடம்’ விக்கு விநாயகம், மாண்டலின் சீனிவாஸ், ஆர்.வேதவல்லி, சி.வி.சந்திரசேகர், சித்ரா விஸ்வேஸ்வரன், டி.வி.கோபாலகிருஷ்ணன், சுதாராணி ரகுபதி, டி.என்.சேஷகோபாலன்னு 14 கலைஞர்களை 65 போர்ட்ரெயிட்ஸ் பண்ணியிருந்தோம்.

இசைக்கலைஞர்களுக்கு அவங்க கைதான் பிரதானம். ஷூட்ல அதை ஃபோக்கஸ் பண்ணினோம். ஜாம்பவான்கள் அத்தனை பேர்கிட்டயும் நாங்க பிரமிச்ச ஒரு விஷயம் அவங்க பணிவும் கனிவும்தான். அதுல புரொஃபசர் சி.வி.சந்திரசேகர், சீனியர் ஆர்ட்டிஸ்ட். அவருக்கு 79 வயசு. அவரை நாங்க ஷூட்டுக்கு கூப்பிட்டப்ப மறுநாளே வந்துட்டார். ‘என் குருவோட போட்டோ ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு. அப்படியொரு நிலை எனக்கும் வந்துடக் கூடாதுனுதான் உடனே புறப்பட்டு வந்தேன்’னு அவர் சொன்னப்ப நெகிழ்ந்துட்டோம்.

மறுபடியும் யூனிக் கான்சப்ட் அமையும்போது நிச்சயம் இதேமாதிரி செய்வோம்...’’ புன்னகைக்கும் பார்கவி, சினிமா ஸ்டில் போட்டோகிராஃபி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.‘‘தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சார் மூலமா ‘ரெமோ’ புரொமோஷன் ஒர்க் வந்தது. முழு ஸ்கிரிப்ட்டும் படிச்சாதான் நல்ல கான்சப்ட்ஸ் உருவாக்க முடியும்னு அவங்ககிட்ட சொன்னேன். மறுப்பே சொல்லாம ஸ்கிரிப்ட்டை படிக்கக் கொடுத்தாங்க.

‘ரெமோ’ல வரும் நர்ஸ் போஸ்டர்ஸ் எங்க கான்சப்ட்தான். நாங்க கொடுத்த ஐடியாஸ் எல்லாமே அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அந்த ஷூட்டுக்கு சிவகார்த்திகேயன் சார் கொடுத்த சப்போர்ட் ஆச்சரியப்பட வைச்சது!’ வியக்கிறார் பார்கவி மணி.                      

மை.பாரதிராஜா