கோடையை எப்படி சமாளிப்பது? விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்னை…



இன்னும் கோடையே தொடங்கவில்லை. அதற்குள் அனல் காற்றுடன் சுட்டெரிக்கிறது வெயில். சில இடங்களில் செஞ்சுரி அடித்து படுத்தியெடுக்கிறது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கத் ெதாடங்கிவிட்டது.

பல வீடுகளிலும், அபார்ட்மெண்ட்களிலும் நிலத்தடி நீர் கீழே போய்விட்டதால் லாரித் தண்ணீரை நிரப்பி சமாளிக்க ஆரம்பித்துள்ளனர். இதுவும் எத்தனை நாட்களுக்குக் கைகொடுக்கும் எனத் தெரியாது.இதில், தனியார் லாரிகள் தண்ணீர் தர தயாராக இருந்தாலும் விலை அதிகமாகச் சொல்கின்றனர். ஆனால், மாநகராட்சி குடிநீர் லாரிகளோ மூன்று வாரங்களுக்கு ஒருமுறையே விநியோகிக்க முடியும் என்கின்றனர். அந்தளவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால், கோடையில் குடிநீர் தேவையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே இன்று எல்லோர் முன்னிலையிலும் உள்ள கவலை தோய்ந்த கேள்வி.‘‘இந்தக் கோடையில் சென்னை மிகப் பெரிய குடிநீர் வறட்சியை சந்திக்க இருக்கிறது. காரணம், குடிநீர் ஆதாரங்களில் போதுமான நீர் இல்லை...’’ என ேவதனையுடன் சொல்கிறார் ஓய்வுபெற்ற சென்னை குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளரும், குடிநீர் பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருபவருமான மீனாட்சிசுந்தரம்.

‘‘சென்னையின் குடிநீர் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் என நான்கு ஏரி நீரைச் சார்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி. தவிர, வீராணத்திலிருந்து மூன்று டிஎம்சி நீர் கிடைக்கும். இன்றைய நிலவரப்படி இந்த ஏரிகளில் ஒரு டிஎம்சியும், வீராணத்தில் முக்கால் டிஎம்சியும் உள்ளது. ஆனால், கடந்தாண்டு இதே நாளில் ஆறரை டிஎம்சி நீர் இருப்பில் இருந்தது. அதனால், சென்ற ஆண்டு குடிநீர் பிரச்னையில்லாமல் சமாளித்தனர்.

ஆனால், இந்த வருடம் வெறும் ஒண்ணேமுக்கால் டிஎம்சி நீரே உள்ளது. இதைக் கொண்டு கோடையை எப்படி சமாளிக்க முடியும்? இப்போது அடிக்கின்ற வெயிலுக்கு ஏப்ரல் வரைதான் இந்நீர் தாக்குப் பிடிக்கும். பிறகு, மிகப் பெரிய வறட்சி ஏற்படும்.பொதுவாக உலகக் கோளம், மூன்றில் இரண்டு பங்கு நீராலானது. ஆனால், அந்த இரண்டு பங்கு நீரில் நாம் பயன்படுத்தக்கூடிய நீர் என்பது வெறும் ஒரு சதவீதம்தான்.

அதாவது, நிலத்தடி நீர், ஏரி, குளங்களில் தேக்கி வைக்கும் நீர், கடல்நீர் என மூன்றுவிதமான நீரைப் பயன்படுத்துகிறோம். இதில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிகம் செலவு பிடிக்கக் கூடியது. ஆனாலும், நெம்மேலி, காட்டுப்பள்ளி போன்ற இடங்களில் இருந்து நாளொன்றுக்கு இருநூறு மில்லியன் லிட்டர் நீர் எடுத்து வருகிறோம்.

இருந்தும், குடிநீர் பற்றாக்குறைதான். சென்னையில் தினசரி தேவையான குடிநீரின் அளவு நாளொன்றுக்கு சுமார் 900 மில்லியன் லிட்டர். இந்நிலையில் பற்றாக்குறையால் ஒருநாள் விட்டு ஒருநாள் 675 மில்லியன் லிட்டரே குடிநீர் தருகின்றனர். ஐநாவின் கணக்கின்படி ஒருவருக்கு தினமும் 135 முதல் 150 லிட்டர் வரை தேவை. ஆனால், இன்று சென்னையில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 90 லிட்டர்தான் தரப்படுகிறது. இதிலும், நாம் குடிநீருக்கென பயன்படுத்துவது ஒரு சதவீதமே!’’ என கவலையை வெளிப்படுத்தும் மீனாட்சிசுந்தரம், குடிநீர்க் குழாய்களிலும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார்.

‘‘சென்னையில் சுமார் 5,750 கிமீ குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதில், முதுகுத்தண்டுவடம் போலிருக்கும் பிரதான குடிநீர் குழாய்களின் தூரம் ஆயிரம் கிமீ. ஆனால், இந்தக் குழாய்களில் பெரும்பாலானவற்றின் ஆயுட்காலம் முடிந்துவிட்டன. பொதுவாக, குழாய்களின் ஆயுட்காலம் முப்பது வருடங்கள்தான். வேண்டுமானால் கூடுதலாக சில வருடங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால், இங்கே 1914ம் வருடம் முதல்முதலாகப் போடப்பட்ட குடிநீர் குழாய்கள்கூட இன்னும் சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. பல இடங்களில் 1960களில் போடப்பட்ட குழாய்களே செயல்பட்டு வருகின்றன. இதனால், குழாய்களில் படியும் துருப்பிடித்த தூசிகளும், பாசிகளும் வரக்கூடிய தண்ணீரின் அளவைக் குறைக்கின்றன. அத்துடன், குழாய்களில் நிச்சயம் கசிவு இருக்கும்.

ஆக, கொடுக்கப்படும் நீரில் பதினைந்து சதவீத நீர் நமக்குத் தெரியாமலேயே வீணாகிறது. மொத்தத்தில் இன்று நபர் ஒருவருக்கு 50 லிட்டர் கிடைப்பதே அரிதாகி வருகிறது. வருகிற மே மாதம் இந்நிலை இன்னும் மோசமாகலாம்...’’ என்ற மீனாட்சி சுந்தரம், தமிழக அணைகள் நிலவரங்களையும் சுட்டிக்காட்டினார்.

‘‘தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் வெறும் 32 சதவீத நீரே உள்ளது. இதேபோல், வைகையில் 23 சதவீதம், பாபநாசத்தில் 13 சதவீதமும் உள்ளன.

கடும்கோடையில் இந்த இருப்புத் தண்ணீரும் ஆவியாகி பற்றாக்குறை ஏற்படும். அதனால், இனி தனிநபர் நீர் மேலாண்மை அவசியமாகிறது. ஒருவர் எந்தவகையில் எல்லாம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியுமோ அதைப் பின்பற்ற வேண்டும்...’’ என்றவரிடம், இப்போதைய குடிநீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்றோம்.

‘‘சென்னையைப் பொறுத்தவரை நான்கு ஏரிகள், வீராணம் நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தவிர, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் முக்கியமானது. இதிலிருந்து ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு டிஎம்சி நீர் வர வேண்டும். ஆனால், இதுவரை முக்கால் டிஎம்சி நீர்தான் வந்துள்ளது. அதன்பிறகு வரவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு ெமத்தனமாக இருக்கிறது.

இந்த நான்கு டிஎம்சி நீரும் முழுவதுமாக வந்தால் செப்டம்பர் வரை சமாளித்துவிடலாம். பிரச்னை வராது. இல்லையென்றால் குவாரிகளையும், மற்ற நீர்நிலைகளையும் தேடி ஓடவேண்டும். அது கைகொடுக்கவில்லையெனில், தண்ணீர்ப் பஞ்சத்தை சந்தித்தே ஆக வேண்டும்...’’ என எச்சரிக்கிறார் மீனாட்சிசுந்தரம்                 

தண்ணீரை எந்த வகையில் எல்லாம் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்?

*மெட்ரோ வாட்டர் வரும் போது நிறைய பேர் அண்டா அண்டாவாக பிடித்து வைத்துக்கொள்கின்றனர். ஒரு நாள்விட்டு ஒருநாள் குடிநீர் வருகையில், ஃப்ரெஷ் வாட்டர் வேண்டுமென ஏற்கனவே முந்தைய நாள் பிடித்து வைத்த  நீரைக் கொட்டிவிடுகின்றனர். இது தவறு.

*குளிக்கும்போது ஷவரில் குளிக்காமல் பக்கெட்டில் பிடித்து வைத்து குளிப்பதன் மூலம் நீர் வீணாவதைக் குறைக்கலாம்.

*சிலர் வாஷ்பேசின் முன் நின்று தண்ணீரைத் திறந்துவிட்டபடியே பல் தேய்க்கிறார்கள்; முகச்சவரம் செய்கிறார்கள். இதற்கு மாறாக ஒரு கப்பில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டு இக்காரியங்களைச் செய்யலாம்.

*துணி துவைக்கும்போது சிலர் குழாயில் தண்ணீரை திறந்துவிட்டபடியே அலசுகிறார்கள். பக்கெட்டில் பிடித்து வைத்து அலசுவதே சரி.

*சிலர் காய்கறிகளையும், பழங்களையும் கழுவும் நீரை அப்படியே கொட்டிவிடுவார்கள். இதனை கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

மழைநீர் சேகரிப்பு அவசியம்

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் அரசு நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் 2001ம் வருடம் முதல் அமைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சேகரிப்பில் மழைநீர் முழுமையாக ஊடுருவிச் செல்லவில்லை. காரணம், இந்தச் சேகரிப்பு அமைப்பை மூன்று முதல் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இதை அரசு நிறுவனங்களோ, தனி வீடுகளோ பின்பற்றியதாகத் தெரியவில்லை. அரசும் மழைநீர் சேகரிப்பு மறுசீரமைப்பை செயல்படுத்தாமல் உள்ளது. இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தினால்தான் கோடைமழை மற்றும் பருவமழை பெய்யும்போது  முழுமையாக சேமிக்க முடியும். நிலத்தடி நீரும் உயரும்.

பேராச்சி கண்ணன்