ரத்த மகுடம்-45



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘நில் சிவகாமி..!’’
சொல்வதற்காக வாயைத் திறந்த கரிகாலன் அப்படியே நின்றான். ஏனெனில் முன்பு அவனது கட்டளைக்கு அடிபணிந்து சிறைச்சாலையின் வாயிலை நோக்கி வளைந்து நெளிந்து சென்ற பாதையில் ஓட முற்பட்டவள் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு திரும்பியதுதான்!
‘என்ன’ என்று தன் பார்வையால் வினவினான்.‘பின்னால் பார்...’ என கருவிழிகளை அசைத்தாள்.

கரிகாலன் உதடுகள் விரிந்தன. எதற்காக அவளை நிற்கும்படி அழைக்க நினைத்தானோ, அதையே அவளும் உணர்ந்தது அவனுக்கு ஆசுவாசத்தை அளித்தது.அதேநேரம் குருதி வழிய தரையில் கிடந்த தன் தந்தையின் நிலை அவனுக்கு கவலையை ஏற்படுத்தியது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தன் தந்தைக்கு ஆபத்துதான் என்பதை அவனது ஒவ்வொரு அணுவும் உணர்த்தியது.திரும்பிப் பார்க்காமல் சிவகாமியை ஏறிட்டபடியே
நிதானமாகக் குரல் கொடுத்தான். ‘‘வெளியே வரலாமே...’’அசைவேதும் இல்லை.

கரிகாலனின் குரல் மட்டும் சிறைச்சாலையின் பாறைகளில் மோதி எதிரொலித்தது.சிவகாமியின் கருவிழிகளையே உற்றுப் பார்த்தான். தனக்குப் பின்னால் இருக்கும் தூணின் மறைவில் ராமபுண்ய வல்லபர் பதுங்குவது தெரிந்தது.மற்ற சமயம் என்றால் சற்றே போக்குக்காட்டி அவரைத் தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பான். இப்போது அதற்கெல்லாம் வழியில்லை. உடனடி சிகிச்சை தேவை என்பதால் அவன் தந்தையின் வயிற்றில் சற்றே ஆழமாகவே குறுவாளை சிவகாமி பாய்ச்சியிருந்தாள்.

சோழ மன்னரின் மார்புத் துடிப்பை அவனால் நின்ற இடத்திலிருந்தே கேட்க முடிந்தது. போராடிக் கொண்டிருக்கிறார்... காப்பாற்ற வேண்டும்... அதற்கு முதலில் வெளியேற வேண்டும்...‘‘அதுதான் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுவிட்டீர்களே... இனியும் ஏன் பதுங்கியிருக்க வேண்டும்! வாருங்கள் சாளுக்கிய போர் அமைச்சரே... நிதானமாகவே உரையாடலாம்!’’

‘‘முன்பே நான் இருப்பதை அறிந்திருப்பாய் என்று நினைத்தேன்...’’ புன்னகையுடன் தூண் மறைவிலிருந்து ராமபுண்ய வல்லபர் வெளிப்பட்டார்!
சிவகாமியின் கருவிழிகளை விட்டு தன் பார்வையை கரிகாலன் விலக்கவில்லை. சாளுக்கிய போர் அமைச்சர் மட்டுமே மறைவி
லிருந்து வெளிப்பட்டு முன்னோக்கி வந்தார்.

அவருக்குப் பின்னால் இருந்த கற்சுவர் மூடியிருந்தது. சிறிதும் அசையவில்லை.அது சுரங்கத்தின் மற்றொரு வாசல். காஞ்சி பெருவணிகரின் மாளிகையையும் இந்த சுரங்கத்தையும் இணைக்கும் வழி அதுதான். அவ்வழி மூடியிருக்கிறது என்றால் ராமபுண்ய வல்லபர் தனியாகத்தான் வந்திருக்கிறார் என்று அர்த்தம். சிறைக்கு வெளியே சாளுக்கிய வீரர்கள் காவலுக்கு நிற்பது இந்த தைரியத்தை அவருக்கு வழங்கியிருக்கலாம். அல்லது மூடப்பட்ட சுரங்க வாயிலின் அந்தப்பக்கம் சில வீரர்களைத் தன் பாதுகாப்புக்கு அவர் நிறுத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் இப்போது இந்த இடத்தில் தனியாகத்தான் இருக்கிறார். எத்தனை வீரர்கள் இருந்தாலும் சமாளிக்க முடியும் என்னும்போது, தனியாக வந்திருப்பவரை எதிர்கொள்வது ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், துரிதமாகச் செயல்பட வேண்டும். அது முக்கியம்; அவசியம்.
சிவகாமியிடம் கண்களாலேயே தன் தந்தையைக் காட்டி சைகை செய்தான்.

குறிப்பால் அதை உணர்ந்து சட்டென குனிந்து அவரது இடுப்பு வஸ்திரத்தின் நுனியை தன் குறுவாளால் கிழித்தாள். குத்துப்பட்ட இடத்தைச் சுற்றிலும் கட்டி குருதி வெளியேறுவதைத் தடுத்தாள்.இமைகளை கணத்துக்கும் குறைவான நேரம் மூடித் திறந்துவிட்டு இயல்பாகத் திரும்பினான் கரிகாலன். ‘‘முன்பே நீங்கள் இருப்பதை அறிந்தால் மட்டும் என்னவாகி விடப் போகிறது சாளுக்கிய அமைச்சரே..?’’
ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லவில்லை. குத்துப்பட்டுக் கிடந்த சோழ மன்னரின் அருகில் வந்து நின்றார். ‘‘இதைத் தவிர்த்திருக்கலாம்!’’ அவர் உதட்டில் விஷமம் வழிந்தது.

‘‘நீங்கள் இருப்பதை அறிந்ததாலேயே சிவகாமி இவர் வயிற்றில் குறுவாளைப் பாய்ச்சினாள்... பாய்ச்சும்படி சொன்னேன் என்றால் நம்பப் போகிறீர்களா..?’’‘‘நம்புவேன்!’’ அழுத்தமாகச் சொன்ன சாளுக்கிய போர் அமைச்சர் நிமிர்ந்து கரிகாலனை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘தந்தையை பிணையாக வைத்து தப்பிக்க முற்படும் தனயனை... அதுவும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வீராதி வீரரைப் பார்க்கும் பாக்கியம் இல்லாவிட்டால் அடியேனுக்கு எப்படிக் கிட்டும்..?!’’

‘‘குறுநில மன்னரை சிறையில் அடைத்து தங்களுக்கு இணங்க வைக்க முற்படும் ஒரு ராஜ்ஜியத்தின் போர் அமைச்சரைக் காணும் வாய்ப்பு எங்களுக்கும் இப்போதுதானே கிடைத்திருக்கிறது..!’’‘‘அது யுத்த தந்திரம்!’’‘‘எனில், இது போர்த் தந்திரம்..!’’‘‘தோல்வியில் முடியும் தந்திரம் என்று சொல் கரிகாலா..!’’ இடுப்பில் கைவைத்தபடி இடி இடியெனச் சிரித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘அதாவது நீங்கள் தனியாக இல்லை... உங்கள் பாதுகாப்புக்கு வீரர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்கள்..?’’
‘‘அதுவும்தான். ஆனால், அதுமட்டுமல்ல...’’ நிறுத்திய சாளுக்கிய போர் அமைச்சர், இரண்டடி எடுத்து வைத்து கரிகாலனின் அருகில் வந்தார். ‘‘தன் நாட்டின் மன்னரை எதிர்த்து செயல்படத் துணிந்த ஓர் அமைச்சனுக்கு எவ்வளவு எச்சரிக்கை தேவையோ அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு என்னிடம் இருக்கிறது!’’

முடிச்சிட்ட கரிகாலனின் புருவங்கள் விலகி இயல்புக்கு வந்தன. தன் மீது அதீத நம்பிக்கை  கொண்ட ஒரு வீரனை வீழ்த்துவது சுலபம். இது போர் தந்திரத்தின் பாலபாடம். இதற்காகவே எதிராளியை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து ஒருவிதமான மயக்கத்தில் ஆழ்த்தும் பயிற்சி போர் வீரர்களுக்கு அளிக்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பயிற்சியையே பல்லவ வீரர்களுக்கு அளிக்கும் தகுதி படைத்த கரிகாலனுக்கு இந்த வாய்ப்பு போதாதா..?! கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்தப் பிடி இறுக அவரை மேலும் அந்த அதீத மயக்கத்துக்குள் ஆழ்த்தும் வகையில் தன் உரையாடலைத் தொடர்ந்தான்.

‘‘இதற்காகவே தங்களைப் பாராட்ட வேண்டும்...’’‘‘உன்னைப் போலவே சாளுக்கிய மன்னரும் உண்மை அறிந்த பிறகு என்னை மெச்சுவார்!’’
‘‘அதில் சந்தேகமென்ன... வேண்டுமானால் தங்கள் ராஜ விசுவாசத்தை என் பங்குக்கு நானும் எடுத்துச் சொல்கிறேன்..!’’
‘‘எதிராளியின் சிபாரிசு அடியேனுக்கு தேவையில்லை! சொந்தக் காலில் நிற்பவன் நான்! உன்னைப்போல் எதிரி நாட்டு மன்னர் அளிக்கும் உயிர்ப் பிச்சையில் தப்பிப் பிழைப்பவன் அல்ல!’’

கரிகாலன் தன் கால் கட்டை விரல்களை அழுத்தி ஊன்றினான். தான் எய்த அம்பை தன் பக்கமே திருப்புகிறார். அவரைப் புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு மாறாக நம்மை ஆத்திரப்பட வைத்து தன் காரியத்தைச் சாதிக்க ராமபுண்ய வல்லபர் முயற்சிக்கிறார்.
இடம் கொடுக்கக் கூடாது. நூல் முனை நுழைய வழி கிடைத்தாலும் அதை அகலப்படுத்தி ராஜபாட்டையாக்கி விடுவார். இந்த வித்தையை அறிந்திருப்பதால்தானே சாளுக்கிய போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்..?எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ராமபுண்ய வல்லபர் பொறுமை இழந்தார். ‘‘சரி... என்ன முடிவு எடுத்திருக்கிறாய்..?’’
‘‘எது குறித்து..?’’‘‘எங்களுடன் இணைவது குறித்து! ஒப்புக்கொண்டால் உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றலாம். பல்லவ சிம்மாசனத்திலும் அமரலாம்!’’
‘‘இல்லையெனில்..?’’‘‘தன் மருமகள் குத்தியதால் மரணமடைந்தார் என்ற கீர்த்தியுடன் உன் தந்தை அழியாப் புகழ் பெறுவார்!’’ அலட்சியத்துடன் தன் தலையைச் சிலுப்பிய ராமபுண்ய வல்லபர், அதிர்ந்துபோய் அப்படியே சிலையானார்!

காரணம், அவர் கழுத்தைத் தடவிய சிவகாமியின் குறுவாள்!
கரிகாலனையே பார்த்துக் கொண்டிருந்ததால் தனக்குப்
பின்னால் அவள் வந்து நின்றதை அவர் அறியவில்லை!

‘‘மாமனாரை குத்தத் தெரிந்தவளுக்கு உங்கள் தொண்டை நரம்பை அறுக்க கண நேரம் போதும்! அசையாமல் நில்லுங்கள்...’’ எச்சரித்துவிட்டு கரிகாலனை ஏறிட்டாள்.புன்னகையை அவளுக்குப் பரிசாக வழங்கிவிட்டு துரிதமாக செயல்பட்டான். எந்தக் கயிற்றைப் பிடித்து மேலிருந்து இறங்கினானோ அதே கயிற்றால் சாளுக்கிய போர் அமைச்சரின் இரு கரங்களையும் பின்புறமாகக் கட்டினான். அவரது தலைப்பாகையை அவிழ்த்து அதை அவர் வாயில் திணித்தான். அப்படியே அவரைத் தூக்கி தன் தந்தை முதலில் அமர்ந்திருந்த இடத்தில் அமர வைத்தான்!

‘‘தொலைவிலிருந்து யார் பார்த்தாலும் சோழ மன்னர்தான் இங்கு அமர்ந்திருக்கிறார் என்று நினைப்பார்கள். தந்தை ஸ்தானத்தில் இருந்து எனக்கு நீங்கள் புரியும் இந்த உதவிக்கு தக்க சமயத்தில் கைமாறு செய்வேன்!’’அவர் கன்னத்தைத் தட்டிவிட்டு தன் தந்தையை அடைந்த
கரிகாலன் அவரை எச்சரிக்கையுடன் தன் இரு கரங்களிலும் ஏந்தினான். ‘‘சிவகாமி... ராமபுண்ய வல்லபர் அமர்ந்திருக்கும் இடத்துக்குப் பின்னால் இருக்கும் சுவர் பக்கமாகச் செல். ஈசான்ய மூலையில் கீழிருந்து மேலாக எட்டாவது பாறையை இரண்டு முறை தட்டு!’’
அவன் சொன்னபடியே சிவகாமி தட்டினாள்.

பாறை லேசாக அசைந்தது. மறுகணம் ஓராள் குனிந்து நுழையும் அளவுக்கு ஒரு வாயில் அந்த இடத்தில் தோன்றியது.கண்கள் அகல சாளுக்கிய போர் அமைச்சர் இதைப் பார்த்தார்.‘‘சாதவாகனர்களின் சிற்ப சாஸ்திரத்தில் பல்லவர்கள் நுழைத்த புதிய பாணி இது! சாளுக்கியர்கள் அறியாதது! உங்கள் மன்னரோ நீங்களோ உதவவில்லை என்றாலும் எங்களால் தப்பித்திருக்க முடியும்! இவ்வழி அறிந்தும் என் தந்தை பயன்படுத்தாததற்குக் காரணம், நாங்கள் இருவரும் வந்து சேரவேண்டும் என்றுதான்! வருகிறோம் அமைச்சரே! போர்க்களத்தில் சந்திப்போம்..!’’

முதலில் சிவகாமி நுழைந்தாள். அவளிடம் தன் தந்தையை பக்குவமாக ஒப்படைத்துவிட்டு பிறகு கரிகாலன் நுழைந்தான். இமை மூடித் திறப்பதற்குள் பழையபடி சுரங்கம் மூடிக் கொண்டது.காலம் தாழ்த்தாமல் இருவரும் சுரங்கப் பாதையில் சென்றார்கள். சின்ன அசைவும் தன் தந்தையின் உடலைப் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் கரிகாலன் அவரைச் சுமந்தான்.

கால் நாழிகைக்கும் குறைவான நேரத்துக்குப் பிறகு இருவரும் புரவிக் கொட்டடியை அடைந்தார்கள். இவர்களுக்காகவே அங்கு தேர் ஒன்று காத்திருந்தது! ‘‘காபாலிகனின் வேலை!’’ அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு தன் தந்தையுடன் தேரில் ஏறினான்.
சாரதியின் இருக்கையில் அமர்ந்து சிவகாமி தேரைச் செலுத்தத் தொடங்கினாள்.வாட்களை உயர்த்தியபடி சாளுக்கிய வீரர்கள் தங்கள்
புரவிகளில் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள்!

தமிழகத்தின் சில்க்ஸ்!

கடை கடையாக ஏறி இறங்காமல் தங்க நகைகளையும் ஜவுளிகளையும் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே புத்தம் புதிதாக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது ‘தி சென்னை சில்க்ஸ்’. சென்னையின் இதயப் பகுதியான தி.நகர் உஸ்மான் சாலையில் புதியதாக திறக்கப்பட்டிருக்கும் இந்த பிரமாண்டமான கட்டடத்தின் தங்க நகைப் பிரிவின் தரைத்தளத்தில் திருமாங்கல்ய கலெக்‌ஷன்ஸ், செயின் ஆகியவையும், முதல் தளத்தில் திருமண நகைகளின் கலெக்‌ஷன்ஸும், இரண்டாம் தளத்தில் வெள்ளி ஆபரணங்களும் பூஜைப் பொருட்களும் டிசைன் டிசைனாக கொட்டிக் கிடக்கின்றன.

டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் கீழ்த்தளமும் முதல் தளமும் புடவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்க, இரண்டாம் தளம் முழுக்க பட்டுப்புடவைகள். மூன்றாம் தளம் பெண்களுக்கான சுரிதார் ஆடைகளையும், நான்காம் தளம் சிறுமியர்களுக்கான ஆடைகளையும், ஐந்தாம் தளம் சிறுவர்களுக்கான உடைகளையும், ஆறாம் தளம் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளையும், ஏழாம் தளம் சர்ட்டிங்ஸ் & சூட்டிங்ஸையும் கொண்டிருக்கின்றன.

எட்டாவது தளம் பர்னிச்சர்களுக்கானது. வேறு எங்கும் கிடைக்காத டிசைன்கள் தரமாகவும் குறைந்த விலையிலும் இங்கு மட்டுமே கிடைக்கின்றன.
இது தமிழகத்தின் சில்க்ஸ்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்