மீண்டும் ஒரு demonetisation வந்தால் தாங்குவோமா..?



கடந்த ஒரு வாரமாக செய்தித்தாள்களிலும், டிவிகளிலும் அடிக்கடி அடிபடும் பெயர் நீரவ் மோடி.  பிரபலமான வைர வியாபாரியான இவரும் இவரது உறவினர்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்றார்கள். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டனர்.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து இவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்பு இதேபோலத்தான் விஜய் மல்லையாவும்.

நீரவ் மோடி, விஜய் மல்லையா மட்டுமல்ல; இவர்களைப் போல சுமார் 30 பேர் ஒட்டுமொத்தமாக இந்திய வங்கிகளில் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று வங்கிகளுக்கும், பொதுநிறுவனங்களுக்கும் நாமம் போட்டிருக்கிறார்கள்.இவையெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தவை. பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்ட பொருளாதாரக் குற்றங்கள். கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்பட்டவை இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகளோ?
நவம்பர் 8, 2016. நினைவிருக்கிறதா?

வங்கியில் இருந்த நம் சொந்தப் பணத்தை எடுக்கவே நீண்ட வரிசைகளில் பிச்சைக்காரர்கள் மாதிரி நாட்டு மக்கள் மொத்தப் பேரும் நின்றோமே? நாம் என்னவோ வங்கிகளில் திருடப் போனது மாதிரி வரிசையில் நின்றவர்களை போலீஸை விட்டு அடித்துத் துரத்தினார்களே? அதே நாள்தான்.

கருப்புப் பணத்துக்கு எதிரான அறுவை சிகிச்சை என்கிற பெயரால் இந்தியப் பிரதமர் மோடி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற நடவடிக்கைக்கு இந்த நீரவ் மோடிகளும், விஜய் மல்லையாக்களும் ஏனைய மோசடி மன்னர்களும்தான் ஒருவகையில் காரணம். கடன் கொடுத்துவிட்டு திரும்பி வாங்க முடியாமல் திவால் ஆகும் நிலையிலிருந்த வங்கிகளை
ஸ்திரப்படுத்துவதற்காகவே அம்முடிவு எடுக்கப்பட்டது என்று பொருளாதார நிபுணர்கள் அப்போதே சுட்டிக் காட்டினார்கள்.

அதற்கேற்ப நம்முடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பிய உடனேயே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, முதலாளிகளுக்கு கடனாக வழங்கப்பட்ட சுமார் 7000 கோடி ரூபாயை வாராக்கடன் என்று அறிவித்து, கடன்காரர்கள் வயிற்றில் பால் வார்த்த சம்பவமும் நினைவிருக்கலாம்.

ரிச்சர்ட் பேக்கர் என்பவர் எழுதிய ‘அமெரிக்கா: ஜனநாயக மோசடியும், வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்’ கட்டுரை நமக்கு, இந்த ஒயிட் காலர் மோசடிகளின் பின்னால் இருக்கும் நிஜமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.

இக்கட்டுரை அமெரிக்காவின் சோசலிஸம் மற்றும் விடுதலைக்கான கட்சியால் வெளியிடப்பட்டது. தமிழில் 48 பக்க சிறுநூலாக விடியல் பதிப்பகத்தால் நிழல்வண்ணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு 2013ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்நூலின் பதிப்புரையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித்துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு/நடுத்தர/குறு முதலாளிகள்) முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை தங்கள் உபரி சேமிப்பை/உழைப்பை வங்கிகள் என்கிற கொள்ளையர்களிடம் இழந்துவருகிறார்கள். நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், ‘அத்தகைய கொள்ளையின் அடுத்தகட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது’ என்றும் குறிப்பாக எச்சரிக்கப்பட்டது.

வாயை வயிற்றைக் கட்டி நாம் சிறுகச் சிறுக வங்கிகளில் சேர்த்து வைத்த பணம், நீரவ் மோடி மற்றும் மல்லையா வகையறாக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு, அவை திருப்பிச் செலுத்தப்படாமல், சம்பந்தப்பட்டவர்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவுக்கும் படையெடுத்து விட்டார்கள். நம்முடைய பணத்தையே நாம் எடுக்க முடியாமல் வங்கிகளின் ஏடிஎம் வாசல்களில் அலைக்கழிக்கப்பட்டோம்.

வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு எப்படி உள்ளாக்கியது, அந்த நெருக்கடியை அரசின் மீது திணித்து தம்மை மீட்டுக் கொள்ளும் முயற்சியில் மக்களை எப்படி தெருத்தெருவாக விரட்டித் தள்ளினார்கள், மக்களின் வரிப்பணத்தின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்டு மக்களை எப்படி ஓட்டாண்டி ஆக்கி வருகிறார்கள் என்பதை விளக்குவதே நாம் மேற்குறிப்பிட்ட நூலின் சாரம்.

வீட்டுக்கடன், கல்விக்கடன், பர்சனல் லோன், கடன் அட்டைகள் எனும் பெயரில் மக்களை சுரண்டிக் கொழிக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளுக்கு மக்களின் பணத்தை கூலாகக் கொடுத்துவிட்டு, மக்கள் தங்கள் கடனைக் கட்டாததால்தான் தாங்கள் திவாலாகப் போகிறோம் என்று அரசை மிரட்டி, அரசிடமிருந்து மக்களின் வரிப்பணத்தையும் அபகரிக்கின்றன என்று அந்நூல் விலாவரியாக தகுந்த உதாரணங்களோடு சொல்கிறது.

2008ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசாங்கம் மக்களின் வரிப்பணத்திலிருந்து 700 பில்லியன் டாலரை (42,00,000 கோடி ரூபாய்) வங்கிகள்,
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக செலவிட்டது.இந்திய அரசுக்கு அவ்வளவு தைரியமில்லை. மக்களை வலுக்கட்டாயமாக பணமதிப்பிழப்பு என்கிற மறைமுக மிரட்டலில் தங்களிடமிருக்கும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட்டாக செய்யவைத்து, வங்கிகளைக் காப்பாற்றியது. இவ்வகையில் முதலாளித்துவத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அமெரிக்காவைவிட மிக மோசமாகச் செயல்பட்ட நாடு என்கிற அவலமான பெருமைதான் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

கடந்த 2016ன் முதல் காலாண்டுத் தொடக்கத்தில் 15 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக தங்களுக்கு 23,493 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டியிருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் (5,367 கோடி), கனரா பேங்க் (3,905 கோடி), பேங்க் ஆஃப் இண்டியா (3,587 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (3,230 கோடி) என்று நஷ்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றன நமது வங்கிகள். இத்தனைக்கும் அதற்கு முந்தைய ஆண்டு தொடக்கத்தில் அதே காலாண்டில் இந்த வங்கிகள் 8,500 கோடி ரூபாய் லாபம் காட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.

2015ன் முதல் காலாண்டு மற்றும் 2016ன் முதல் காலாண்டு என்கிற ஓராண்டுக்குள் எத்தனை முதலைகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு பணம் திரும்பப்பெறப்பட்டது என்றெல்லாம் தெரியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது திருந்தினார்களா என்பதும் புரியவில்லை.

ஒரு நீரவ் மோடி, ஒரு விஜய் மல்லையா மாட்டிக்கொண்டார்கள். இன்னும் எத்தனை பாம்புகள் வரிசையாக புற்றிலிருந்து வெளிவருமோ தெரியவில்லை. மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு கொடுமையைத் தாங்கும் சக்தியை இந்தியர்களுக்கு எல்லாம் வல்ல இயற்கைதான் அருள வேண்டும்.

யுவகிருஷ்ணா