கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்!



விடிந்தது. கண்ணன் குளித்து முடித்துவிட்டு வாசலுக்கு வரவும் எதிர் வீட்டில் நாகராஜ தாத்தா பூஜை செய்து கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.‘‘தோடுடைய செவியன்...’’ என நாட்டை ராகத்தில் சுருதி பிசகாமல் அவர் தேவாரம் பாடியது அவன் செவியில் தேனாக இனித்தது.
உடனே தாத்தாவைப் பார்க்கச் சென்றான். கதவு திறந்திருந்தது. நுழைந்தான். பூஜை அறையில் அமர்ந்தபடி தாத்தா பாடிக் கொண்டிருக்க ஆனந்தவல்லி பாட்டி சாமி படங்களுக்கு பூ வைத்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் பேசாமல் பூஜை அறைக்குச் சென்றவன், பயபக்தியோடு தாத்தாவின் அருகில் அமர்ந்தான். பூஜை முடிந்ததும் தாத்தா கற்பூரம் காட்டினார். தன் கண்களில் அதை ஒற்றிக் கொண்டான். தாத்தாவும் அவனும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் எதிர் எதிரே அமர்ந்தார்கள். நைவேத்தியம் செய்த பாயாசத்தை இருவருக்கும் பாட்டி கொடுத்தாள்.

‘‘கதை கேட்க காலைலயே கண்ணா வந்துட்டான்...’’ பாட்டி புன்னகைத்தாள்.‘‘இல்ல... என் ஃப்ரெண்டோட அக்காவுக்கு கல்யாணம் ஆக எந்தக் கோயிலுக்குப் போகணும்னு கேட்க வந்தேன்!’’ கண்ணன் வெட்கத்தோடு சொன்னான்.‘‘அவ்வளவுதானே... திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலுக்குப் போய் உன் ஃபிரெண்டை பிரார்த்தனை செய்யச் சொல்லு கண்ணா...’’

‘‘ஆமா கண்ணா... அந்தப் பெருமாளை வணங்கினா கண்நிறைந்த கணவன் அமைவான்...’’ பாட்டி தன் பங்குக்கு சொன்னாள்.
‘‘இப்படி ஒரே வார்த்தைல சொல்லிட்டா எப்படித் தாத்தா..? அந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்க...’’ ஆர்வத்துடன் கண்ணன் கேட்டான்.
மலர்ச்சியுடன் தாத்தா சொல்லத் தொடங்கினார்.

சரஸ்வதி நதிக்கரையில் அந்த ஆசிரமம் அமைந்திருந்தது. அமைதியான சூழல். எங்கு பார்த்தாலும் ஒரு தெய்வீகமான சாந்தி நிலவி வந்தது.
இதற்குக் காரணம் காலவ மகரிஷிதான். அவரது தவ வலிமையால்தான் அந்த ஆசிரமமே தெய்வீகமாகத் திகழ்ந்தது.
அப்படிப்பட்ட ஆசிரமத்தை நோக்கி ஓர் இளம்பெண் வந்து கொண்டிருந்தாள். பார்க்க தபஸ்வினி போலவே அவளும் காட்சியளித்தாள். ஆசிரமத்துக்கு வந்தவள் காலவ மகரிஷியை வணங்கினாள்.

முனிபுங்கவர் அவளுக்கு ஆசி வழங்கினார். ‘‘பெண்ணே நீ யார்? என்னை நாடி வந்ததன் காரணம் என்ன?’’
‘‘சுவாமி! நான் குனி முனிவரின் புதல்வி. என் தந்தையைப் போலவே தவங்கள் பல புரிந்து முக்தி பெற விரும்பினேன். அப்போது தேவரிஷி நாரதர் எங்கள் ஆசிரமத்துக்கு வந்தார். சதி - பதியாக, அதாவது கணவனும் மனைவியுமாக செய்யும் தவமே விரைவில் இறைவனை அடைய வழிவகுக்கும் என்று உபதேசித்தார். ஆகவே தங்களை மணம் புரிந்துகொண்டு தவமியற்ற முடிவு செய்துள்ளேன். இந்தப் பேதையின் வேண்டுதலை அங்கீகரியுங்கள் சுவாமி!’’

‘‘என் சந்ததியை விருத்தி செய்ய நல்ல வதுவை தேடிக் கொண்டிருந்தேன். அந்த மாலவன்தான் உன்னை இங்கு அனுப்பி உள்ளான். பெண்ணே, எனக்கு பரிபூரண சம்மதம்!’’ என்றார் காலவ மகரிஷி.இருவருக்கும் சுபயோக சுபமுகூர்த்தத்தில் திருமணம் நடந்தது. முனிவரின் வேண்டுதலும் நிறைவேறியது. அந்த தபஸ்வினியின் வேண்டுதலும் நிறைவேறியது.

ஆம். இருவரும் இல்லறத்தில் துறவறம் பூண்டு புதுமை படைத்தனர். இருவருக்கும் ஒரே வருடத்தில் முன்னூற்றி அறுபது பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த முன்னூற்று அறுபது பாவைகளும் வளர்பிறை போல் வளர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரிடமும் சொல்லொணா அழகும் ஞானமும் தேஜசும் நிறைந்திருந்தது.

இத்தனை இருந்தும் முனிவர் மனதில் மகிழ்ச்சி இல்லை. கானகத்தில் தவம் இருக்கும் அவர் எப்படி இந்தக் காரிகைகளுக்கு வரன் தேடுவார்? பார்த்துப் பார்த்து வளர்த்த பெண்களாயிற்றே... வரும் வரன் இவர்களைத் தோள்மீது வைத்துத் தாங்க வேண்டும் என்று விரும்பினார்.

தவிர, கானகத்தில் வளர்ந்த இவர்கள் வீட்டு வேலைகள் அறியமாட்டார்கள். ஆகவே இவர்களைப் புரிந்து நடக்கும் படி ஒரு குடும்பம் வேண்டும். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முன்னூற்று அறுபது வரன்கள் வேண்டும். ஒரு மகள் வாழ்வு பாதித்தாலும் தங்கள் மனதில் உதிரம் கொட்டும்...
என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ரிஷி தம்பதிகள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு தீந்தமிழ் கானம் அவர்கள் செவிகளில் விழுந்தது.

வாமவீகபுரி செல்வோம்
ஆதி வராகத்தை காண்போம்
குறையெல்லம் தீர்ப்போம்
பரமன் அடி சேர்வோம்
- என்று அழகாகப் பாடிக்கொண்டு அடியவர் கூட்டம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

காலவ முனிவர் அவர்கள் அருகே சென்று, ‘‘நீங்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு இருக்கிறது நீங்கள் புகழும் அந்த வராஹ சுவாமியின் கோயில்..? தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்...’’ என்று வேண்டினார்.கூட்டத்தில் இருந்த முதியவர் இதற்கு பதில் அளித்தார். ‘‘தமிழகத்தில் உள்ள அற்புதமான தலம் அது. அங்கே பலி என்னும் (இவர் வேறு, மஹாபலிச்சக்ரவர்த்தி வேறு) அசுர வேந்தன் தேவர்களை எதிர்த்து போர் புரிந்து வென்றான்.

என்றாலும் இருதரப்பிலும் உயிர்ச் சேதம் அதிகம். அந்தப் பாவம் அனைத்தும் இந்த பலியையே வந்தடைந்தது. அந்த ஜீவஹத்தி பாவம் நீங்க மாதவனை நோக்கி பலி தவம் புரிந்தார். அசுரன் ஆயினும் மாதவனைச் சரணடைந்துவிட்டார். தன்னிடம் சரணடைந்தவர்களை மாதவன் கைவிட்டதே இல்லை. இந்த அசுரனுக்கும் அருளினான் அந்தப் பரம்பொருள்...’’ ‘‘ஆஹா! மாதவனின் கருணையே கருணை. அவருக்கு எப்படி அருளினான்?’’ ஆர்வத்துடன் கேட்டார் காலவ முனிவர்.

‘‘அழகும், ஆண்மையும், ஆற்றலும் கொண்ட வராஹனாக காட்சி  கொடுத்து பலியின் பாவம் நீக்கி மோட்சம் தந்தான். இன்றும் அந்த வராஹ ரூபத்தில், வாமவீகபுரியில்,  அடியவர் வேண்டும் வரம் அருள்கிறான் அந்த பரந்தாமன். அவனைக் காணவே செல்கிறோம்..!’’
அவர் சொன்னதைக் கேட்டதும் காலவ முனிவருக்கு ஒரு யோசனை வந்தது. ‘வேண்டும் வரம் அருளும் வராஹன் என் பெண்களுக்கு வரன் தரமாட்டனா என்ன..? அவன் சரணங்களைப் பிடித்து மன்றாடுவோம். அதுவே சிறந்த வழி...’

தன் மனைவி, மக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த அடியவர் கூட்டத்தின் பின்னே சென்றார் காலவ முனிவர்.
நீண்ட பயணம். சரஸ்வதி நதிக்கரையில் இருந்து தமிழகம் வரவேண்டும் அல்லவா? ஆனால், முனிவருக்கோ அவர் குடும்பத்திற்கோ இந்தப் பயணம் சலிக்கவில்லை. தங்கள் குறை தீர வழி கிடைத்த மகிழ்ச்சியுடன் பயணத்தை எளிதாக முடித்தார்கள்.

முனிவரின் குடும்பம் அந்த வராஹப் பெருமானை கண்குளிர சேவித்து மகிழ்ந்தனர். முனிவரின் பெண்கள் அனை
வரும் அந்த வராஹனைக் கண்டதும் அவனையே மணக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டனர். சுவாமி அத்தனை அழகாக இருந்தார்!
‘‘என்ன தாத்தா இது..? வராஹம்னா பன்னிதானே? எங்கயாவது ஒரு பன்னிய போய் அதுவும் 360 பொண்ணுங்க காதலிப்பாங்களா?’’ கண்ணன் நம்ப முடியாமல் கேட்டான்.

இப்படி அவனிடமிருந்து கேள்வி வரும் என்று எதிர்பார்த்த ஆனந்தவல்லி பாட்டி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். அதைவிட பெரிய சிரிப்பாக தாத்தா சிரித்தார். ‘‘இப்பிடிச் சிரிச்சா என்ன அர்த்தம் தாத்தா..? பதில் சொல்லுங்க...’’ ‘‘அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்பேன். நீ பதில் சொல்லணும்...’’ வழக்கம் போல் நாகராஜ தாத்தா புதிர் போட்டார். ‘‘கேளுங்க தாத்தா...’’

‘‘இப்ப உன் ஃபிரெண்ட் ஒருத்தன் அமெரிக்கா போறான்னு வைச்சுப்போம். போன வேலை நல்லபடியா முடியுது. ஊரையும் சுத்திப் பார்த்துட்டு இந்தியா திரும்ப ஏர்போர்ட் வர்றான்...’’
‘‘ம்...’’‘‘செக்கிங்குல நிக்கறான். பைல கையை விடறான். பார்த்தா பாஸ்போர்ட் காணும்!’’
‘‘அச்சச்சோ...’’‘‘உன் ஃபிரெண்ட் பதறிப் போறான். என்ன செய்யறதுனு தெரியலை. தலைல கை வைச்சு உட்கார்ந்துட்டான். அப்ப பார்க்கவே அருவருப்பா இருக்கிற பிச்சைக்காரன் அவரைத் தேடி வந்து, ‘இந்தாங்க... ரோட்ல கிடந்தது’னு அவரோட பாஸ்போர்ட்டை தர்றான்... இந்த நேரத்துல உன் ஃபிரெண்ட் என்ன பண்ணுவான்..?’’ தாத்தா கேட்டார்.

‘‘உடனே அந்த பிச்சைக்காரனைக் கட்டி அணைச்சுக்குவான்...’’ சட்டென கண்ணன் பதிலளித்தான்.‘‘ஏன்..? பார்க்கவே அருவருப்பா இருக்கானே..?’’ பாட்டி குறும்புடன் கேட்டாள்.‘‘அதனால என்ன பாட்டி... ஆபத்தான நேரத்துல யார் உதவினாலும் அவங்க முகத்தைப் பார்த்து ரசிக்க மாட்டோமே..? அவங்க உள்ளத்தின் அழகுதானே நம்மை மயக்கும்... ஈர்க்கும்..?’’ ‘‘அவ்வளவுதான் கண்ணா..! கேள்வி கேட்டு நீயே பதிலையும் சொல்லிட்டியே!’’ பாட்டி சிரித்தாள்.

கண்ணன் புரியாமல் விழித்தான்.தாத்தா வாஞ்சையோடு சொல்லத் தொடங்கினார். ‘‘பன்னிய போய் எப்படி விரும்புவாங்கனு கேட்டே இல்லையா..?’’
‘‘ம்...’’‘‘அந்த மாதவன் ஏன் வராஹ அவதாரம் எடுத்தார்..? பூமியைக் காக்க! கடலுக்குள்ள மறைச்சு வைச்ச பூமியை வெளிய கொண்டு வர அவர் வராஹ உருவத்தை எடுத்தாரு. ஆக, ஆபத்துல இருந்த பூமாதேவியைக் காப்பாற்றினவர்தானே பூமிக்கும் அதுல வாழற நமக்கும் அழகானவர்..?’’
‘‘லாஜிக் இடிக்குதே தாத்தா..?’’‘‘எப்படி..?’’

‘‘கடலே பூமிலதானே இருக்கு..? அப்புறம் பூமியை எப்படி கடலுக்குள்ள மறைச்சு வைக்க முடியும்..?’’
‘‘இதுக்கு விடை பாகவதத்துல இருக்கு கண்ணா...’’ என்றாள் பாட்டி.‘‘ஆமா... பாட்டி சொல்றது சரி. ஹிரனியாக்‌ஷன் அப்படீங்கற அசுரன், நிலப்பரப்பை கடல்ல மூழ்கடிச்சுட்டான். அதாவது வெள்ளம் வந்து நிலமெல்லாம் நீராகிடுச்சு. அதாவது கடலுக்குள்ள பூமியை மறைச்சு வைக்கலை. நிலம் முழுக்க தண்ணீரால நிரம்பி இருந்தது...’’‘‘புரியுது தாத்தா...’’

‘‘இப்ப அழகுக்கு வர்றேன். தண்ணீர்ல மூழ்கின நிலத்தை வராஹ வடிவம் எடுத்து பெருமாள் வெளில கொண்டு வர்றார்...’’
‘‘ம்...’’‘‘மகிழ்ந்து  போன பூமாதேவி, பரவசத்தோடு வராஹ மூர்த்தியைப் பார்க்கிறா... ‘நமஸ்தே கமாஷ’ அப்படீன்னு வணங்கறா...’’
‘‘இதுக்கு என்ன அர்த்தம் தாத்தா..?’’

‘‘வராஹ சுவாமியோட கண்ணு ரெண்டும் தாமரைப் பூ மாதிரி இருக்குனு சொல்றா! இதையே ‘கப்யாசம் புண்டரீக மிவ அக்ஷினி’னு உபநிஷத் சொல்லுது கண்ணா. இதுக்கு அந்தப் பெருமாளின் கண்ணு சூரியனைப் பார்த்து மலர்ந்த தாமரை மாதிரி  இருக்குனு அர்த்தம். பன்னி உருவத்தை சுவாமி எடுத்தாலும் அவர் அழகுதான். இந்த அழகுதான் காலவ முனிவரோட மகள்களான 360 பேரையும் மயக்கினது!’’

‘‘வராஹ அவதாரத்துல இவ்வளவு விஷயம் இருக்கா தாத்தா..?’’ ‘‘இன்னும் இருக்கு கண்ணா... சொல்றேன் கேளு...’’ நாகராஜ தாத்தா சொல்லத் தொடங்கினார்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்