DATING APPS‘டிண்டர்’, ‘வூ’, ‘ஐஸில்’, ‘ஹேப்பன்’, ‘ஹிங்கே’, ‘படூ’, ‘ஓகே கியூபிட்’, ‘குவாக் குவாக்’…
என்ன முழிக்கிறீர்கள்..?
இந்தியாவில் டாப் வரிசையில் இடம்பிடித்துள்ள டேட்டிங் appகள் இவைதான்!

ஹாய்!
ஹவ் ஆர் யூ?!
மீட்டிங் எப்போ?!
டேட்டிங் போலாமா?!

- இதுதான் இந்த டேட்டிங் ஆப்களின் தாரக மந்திரம். ‘கொஞ்சம் கூட உறவு
களில் நம்பிக்கை இல்லாத இளைஞர் சமூகம் உருவாக இவைதான் காரணம்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனால், ‘இந்த appகளை பயன்படுத்துபவர்கள் இளசுகள் மட்டுமல்ல; பெரிய பெரிய விஐபிகள் கூட இந்த டேட்டிங் ஆப்களை மகிழ்ச்சியாக பயன்படுத்துகிறார்கள்...’ என குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் டெக் நிபுணர்கள்!

‘‘‘tinder’ மாதிரி ஆப் வேணும். சாட் செஞ்சா அதை save பண்ணவோ அல்லது ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ முடியாதபடி இருக்கணும்...’’ என டேட்டிங் ஆப்களுக்கு கண்டிஷன் போடுவதாக புன்னகைக்கிறார் ப்ளாக்ஹெய்ன் ஆப் ஃபாக்டரியை உருவாக்கியவர்களில் ஒருவரும் அதன் ஆபரேஷன் டைரக்டருமான காமேஷ்வரன் இளங்கோவன்.

‘‘‘ஐ லவ் யூ’ எல்லாம் பாகவதர் கால பழசு. ‘ஐ டேட் யூ’தான் இப்ப புதுசு! ஆர்குட் காலத்துலயே இது வந்தாச்சு. அப்புறம் முகநூல் வந்ததும் தனக்குப் பிடிச்ச நபர்கிட்ட மறைச்சு மறைச்சு நூல் விட்டாங்க.டுவிட்டர், இன்ஸ்டா வந்தபிறகு வேலைக்கு பயோடேட்டா அனுப்புற மாதிரி கடலை போடுவது வளர்ந்துடுச்சு! ஆனா, இதுல ‘மாட்ட’ வாய்ப்பு இருந்தது. டேட்டிங் ஆப்ஸ் இந்தக் குறையைத் தீர்த்திருக்கு!

சாட்டிங், மீட்டிங், டேட்டிங்-அவ்வளவுதான் இங்க! ஸோ, யாரும் கேள்வியும் கேட்க முடியாது, ‘கெட்டவர்’னு முத்திரையும் குத்தமுடியாது! ‘யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை’னு யாரும் நாக்கைப் பிடுங்கற மாதிரி கேட்டுடக் கூடாதில்லையா?! அதனால சொந்த புகைப்படத்தை பெரும்பாலும் கொடுக்கறதில்ல. என்ன வேணும்னாலும் பேசலாம்... எப்படி வேணும்னாலும் பேசலாம்... என்பதுதான் டேட்டிங் ஆப்ஸோட ப்ளஸ்...’’ என்ற காமேஷ்வரன், ஆசிய நாடுகளில்தான் டேட்டிங் ஆப்ஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

‘‘பெரும்பாலும் ஸ்வைப் டைப்லதான் டேட்டிங் ஆப்ஸ் இருக்கும். வரிசையா போட்டோஸ். அதை ஸ்வைப் பண்ணி, வேண்டும் - வேண்டாம் என தீர்மானிக்கலாம். ஒரு போட்டோல லைக் போட்டா அந்த குறிப்பிட்ட நபர் மேல எனக்கு விருப்பம் இருக்கு... அவர் மெசேஜையும் அழைப்பையும் ஏற்க நான் தயார்னு அர்த்தம்.

டைவர்ஸ் ஆனவங்க, துணை இல்லாதவங்க, திருமண வாழ்க்கைல எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்காத மக்கள்தான் கணிசமா இந்த ஆப்ஸை உபயோகப்படுத்தறாங்க. இங்க காதல், அன்பு, பந்தம், கலாசாரம்னு எதுக்கும் இடமில்ல! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு... உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. போதும். ஒரு நாள் மீட்டிங், பிறகு டேட்டிங். அப்புறம் டாட்டா... பை பை!

இதுல ஒவ்வொருத்தரும் கொடுக்கும் விவரங்கள் பெரும்பாலும் பொய்யாதான் இருக்கும். நேர்ல பார்க்கறவரை யாரை சந்திக்கப் போறோம்னு கெஸ் பண்ணவே முடியாது. இன்னொண்ணு ஒரு app வழியே சில நபர்களோடு மீட்டிங் டேட்டிங் முடிஞ்சதுமே அந்த ஆப்ல இருந்த தங்கள் கணக்கை டெலீட் பண்ணிட்டு இன்னொரு ஆப்ல வேற ஒரு போட்டோவுடன் புதிய அக்கவுண்ட்டை ஓபன் செய்துடுவாங்க...’’ என அடுக்கிய காமேஷ்வரன், இதற்கு தீர்வு ஏதும் இல்லை என்கிறார்.

‘‘இதுதான் எதிர்காலத் தலைமுறை. செக்ஸ், ரொமான்ஸ்லாம் இனிமே மலிவு ரகமா மாறிடும். ஒரே வழிதான். குறிப்பிட்ட வயசு வரைக்கும் குழந்தைங்ககிட்ட மொபைல் கொடுக்காம இருக்கலாம். இணையத்தை உங்க கண் பார்வைலயே அவங்க பயன்படுத்தற மாதிரி செய்யலாம்.

இப்ப உள்ள குழந்தைங்க பெத்தவங்களை விட வெளிலதான் அதிகம் கத்துக்கறாங்க. ஸோ, நண்பனா மாறி குழந்தைகளுடன் பேசிப் பழகுவதுதான் இப்போதைக்கு ஒரே வழி. மெடிக்கல் ஷாப்ல மருந்தும் கிடைக்கும்... விஷமும் கிடைக்கும். எதை நாம வாங்கறோம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் apps மற்றும் இணையமும்...’’ என்கிறார் காமேஷ்வரன் இளங்கோவன்.  

ஷாலினி நியூட்டன்