நவீன இலக்கியத்துக்கு வித்திட்டதே திராவிட இலக்கியம்தான்!!



இலக்கியத்தில் சமூகப் பிரச்னைகளைப் பேசக்கூடாது என்றிருந்த தமிழ்ச்சூழலை உடைத்தவர் என்பதுதான் இமையத்தின் முதல் அடையாளம். எல்லோரும்  வழமையான கண்ணீர், துக்கம், காதல், கசப்பு, பழி உணர்ச்சி, அவநம்பிக்கை, சுய இரக்கம் எழுதிக் கொண்டிருந்தார்கள். இதற்கெதிராக தலித் வாழ்வின்  செழுமையையும், உள்முரண்களையும், மதிப்புகளையும் தன் எழுத்தில் பிரகாசப்படுத்தினார் இமையம். உண்மைகளைப் பேசத் தயங்காத எழுத்தே அவர் முகம்.  சாதிய சமூகத்தில் தலித்துக்கு எதிரான ஆதிக்கச் சாதியினரின் வன்முறையைப் பேசுவதுடன், அவர்களிடையே நிலவும் சுயசாதி தீண்டாமையையும்  காட்சிப்படுத்தினார் இமையம். தமிழில் எதிர்ப்பு இலக்கியம் இவரிடம் இருந்தே தொடங்குகிறது. அரிதினும் அரிதான இந்தப் போக்கு கொண்ட இமையத்திடம்  நடந்தது இந்த உரையாடல்.

‘இயல்’ விருதுக்கான அறிவிப்பு வந்ததும் உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?


மனதில் பெரும் அமைதியும், அச்ச உணர்வும்தான் ஏற்பட்டது. சமூகம் நம்மை உற்று கவனிக்கிறதே என்ற பய உணர்வு வந்தது. இன்னும் பொறுப்புடனும்,  எச்சரிக்கையுடனும், நேர்மையுடனும் எழுத வேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டுள்ளது.

உங்கள் எழுத்துக்கள் அதன் அழகியல், கருத்துக் கூர்மையோடு புரிந்து கொள்ளப்பட்டதா? தமிழில் தரமான படைப்புகளுக்குரிய விமர்சனமும், அங்கீகாரமும்  கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுவது உண்மையா?

முழு உண்மை எனச் சொல்ல முடியாது. விமர்சனங்களை, சமூக அங்கீகாரத்தை எதிர்பார்த்து எழுதப்படுவதல்ல இலக்கியம். தரமான இலக்கியப் படைப்புகளுக்கு  அவையெல்லாம் கிடைக்கவே செய்கின்றன. ஒரு மொழியில் ஓராண்டுக்கு ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டால், அவற்றில் ஒன்றிரண்டு நூல்கள்தான்  இலக்கியத் தகுதி பெற்றதாக இருக்கும். அந்த ஒன்றிரண்டு நூல்களை இலக்கிய விமர்சகர்களும், சமூகமும் கொண்டாடவே செய்கின்றன. எழுதப்படுவது,  அச்சிடப்படுவதை எல்லாம் இலக்கியம் எனச் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. பேப்பர் கடைசலுக்குப் போகிற குப்பைகளுக்கெல்லாம் விமர்சனங்களை  எதிர்பார்ப்பதும், சமூக அங்கீகாரத்தைக் கோருவதும் தவறு. சமூகம் தரமற்றவைகளை ஏற்பதுமில்லை. தரமானவற்றைப் புறக்கணிப்பதுமில்லை.

மார்க்சிய, தலித்திய, பெண்ணிய, நவீன எழுத்தாளர்கள் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் திராவிட இயக்க எழுத்தாளன் என்று யாரும் சொல்லிக்  கொள்வதில்லை?


இப்படிச் சொன்னால்தான் இன்று இலக்கியத் தகுதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்! இந்த நம்பிக்கை என்பது ஒரு நாடகம், பாவனை. திராவிட இயக்க  எழுத்தாளன் என்று சொன்னால் தன் இலக்கிய பிம்பம், தகுதி போய்விடும் என்று நம்புகிறார்கள். இதில் ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது.2000 ஆண்டுகளாக  படிக்கக்கூடாது என்றிருந்த மரபை உடைத்து எல்லோரும் படிக்க வேண்டுமெனச் சொன்னது யார்? எல்லோரையும் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டது யார்? நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என ஆசைப்பட்டது யார்? பழைய இலக்கியங்களையெல்லாம் பொதுச் சமூகத்தின்  பார்வைக்குக் கொண்டு வந்து சேர்த்து, அவற்றையெல்லாம் படிக்க வைத்தது யார் ? எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என எழுத்தில் ஜனநாயகத்  தன்மையைக் கொண்டு வந்தது யார்?

இலக்கிய மாதிரிகளை உருவாக்கித் தந்தது யார்? திராவிட இயக்கங்கள்தானே! சோறு போட்டு வளர்த்தவர்களையே  தெரியாது என்று சொல்வீர்களா? ‘திராவிட இயக்க எழுத்தால் நான் பாதிக்கப்பட்டதே இல்லை, அது எனக்கு உந்து சக்தியாக இருந்ததில்லை’ என ஓர் ஆள்  சொல்ல முடியுமா? திராவிட இலக்கியம் இல்லாமல் நவீன இலக்கியம் இல்லை. நவீன இலக்கியத்திற்கு வித்திட்டது திராவிட இலக்கியம்தான்! திராவிட  இலக்கியம் சாதிக்காததை நவீன இலக்கியம் சாதித்துவிட்டதா? சாதனைக்கான பட்டியலைத் தாருங்கள். திராவிட இலக்கியம் சமூகத்தைப் பேசியது. நவீன  இலக்கியம் தனிமனித புலம்பலை முன்னிலைப்படுத்துகிறது. இன்று தமிழில் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தாளனும் திராவிட இயக்க எழுத்தாளன்தான். திராவிட  இயக்கங்களுக்கு நன்றிக் கடன்பட்டவன்தான்.

எழுத்தின் உண்மையான நோக்கம் தனி மனித மனங்களின் அவஸ்தைகளின் வெளிப்பாடா? சமூக மாற்றத்திற்கான வெளிப்பாடா?

தனி மனிதனின் துன்பத்தை, கண்ணீரை எழுதுவதைக் காட்டிலும் சமூகத்தின் வலியை, காயத்தை, இழிவை எழுதுவதுதான் முக்கியமானது. சமூகத்தின்  நிஜமுகத்தைக் காட்டி உண்மைகளைச் சொல்ல வேண்டும். அதன் வழி அறிவுரீதியாக சமூகம் மேம்பட வேண்டும். இலக்கியத்தின் அடிப்படையே சமூக  மேம்பாடுதான். அதற்கு எதுவெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறதோ, அதைத்தான் எழுத வேண்டும். சமூக வாழ்விற்கும், நல்லிணக்கத்திற்கும் சாதியும்,  மதமும், அதனுடைய நம்பிக்கைகளும் சடங்குகளும்தான் எதிரி என்றால் அவற்றிற்கு எதிராக எழுத வேண்டும். அப்படி எழுதப்படுவதே மக்கள் இலக்கியம்.  இலக்கியத்தில் கோஷத்திற்கு இடமில்லை. அதையும் மறக்கக்கூடாது.

‘எங் கதெ’ நாவல் பெண்களுக்கெதிராக ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டுள்ளது எனச் சிலர் கூறுவதில் உண்மையிருக்கிறதா?


அது உண்மைக்கு எதிரானது. குடும்ப, சமூக அமைப்புகளில் பெண்கள் எந்தெந்த விதங்களில் பாலியல் ரீதியாக துன்பப்படுகிறார்கள், சீண்டப்படுகிறார்கள்  என்பதைத்தான் ‘எங் கதெ’ பேசுகிறது. இது பெண்ணிய நாவல் என்ற முழக்கத்தோடு எழுதப்படவில்லை. ஆனால், பெண்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்.  கோஷமில்லாமல், வாழ்க்கை அனுபவமாக, சமூக வாழ்வியலாக எழுதப்பட்டிருக்கிறது. நான் எழுதின நூல்களில் அச்சான முதல் வாரத்திலேயே ஆயிரம்  பிரதிகளுக்கு மேல் விற்றது ‘எங் கதெ’தான். அதிகமாக விமர்சிக்கப்பட்டதும் அதுவே. பெண்களுக்கெதிராக, ஆணாதிக்க, மேலாதிக்க மனோபவத்துடன்  எழுதப்பட்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது.

இமையம் கறாரானவர், தடாலடியாகப் பேசுபவர் என ஒரு படிமம் தமிழில் உள்ளதை அறிவீர்களா?

உண்மையை கொஞ்சம் சத்தமாகப் பேசுவதால் அப்படித் தோன்றலாம். எழுத்தில் ஒரு போதும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. அதே மாதிரி பேச்சிலும்.  இனியும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. எழுத்திலும், பேச்சிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்  வாழ்க்கை நெறி, கொள்கை. எழுத்தாளன் எவ்விதமான சார்புநிலையும் அற்றவன் என்று சமூகம் நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கு நான் நியாயம் செய்ய  வேண்டாமா? மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி, லாப நட்ட கணக்குப் பார்க்காமல் பேசுகிறேன். அதைத்தான் தடாலடி என்று சொல்கிறார்கள். காய்ச்சல்  கண்ட குழந்தை அழுகிறது என்பதற்காக ஊசி போடாமல் இருக்கிறோமா? அப்படித்தான் என் எழுத்தும் பேச்சும்!  

-நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்