இந்தியர்களை கொல்கிறதா மன அழுத்தம்?
அதிகநேரம் உழைப்பது உலகளவில் இந்தியர்களின் பெருமை. அதேசமயம், மூளையின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஏராளமான கமிட்மென்டுகளை நிறைப்பதால் மனஅழுத்தம் அதிகரித்து திடுக் மரணங்களும், நோய்களும் இந்தியர்களைத் துரத்தி வருகின்றன! தினசரி 12 மணி நேரத்துக்கும் மேலாக அலுவலக வேலைகள் உடல்நலனைக் காவு வாங்குவதோடு மகிழ்ச்சிக்கும் வேட்டு வைக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டுவிட்டனர். கிடுகிடு வேகத்தில் அதிகரிக்கும் இதயநோய், நீரிழிவு, உளவியல் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம், வேலைப்பளுதான் என உலகளவிலான பல்வேறு ஆய்வறிக்கைகள் தகவல் கூறுகின்றன.
அன்லிமிட்டெட் வேலை காரணமாக கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்துள்ள இதயநோயின் அளவு 34%. உலக சுகாதார அமைப்பின்(WHO) அறிக்கைப்படி 1971 - 2000 காலகட்டத்தில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயின் அளவு 12%. 19 ஆயிரம் இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 52 மணிநேரம் பணிபுரிவது மேன் பவர் குழும ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மன அழுத்தத்தில் தடுமாறும் 95% இந்தியர்களுக்கு 40 வயதுக்குள்ளாகவே இதயநோய் தாக்குதல்கள் தொடங்கிவிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது இந்தியன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கை (2018). இதில் மக்களுக்கு வழிகாட்டும் டாக்டர்களும் அடக்கம்!
மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளால் 2030ம் ஆண்டு இந்தியாவில் ஏற்படும் பொருளாதார இழப்பு 4.58 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்கிறது 2014ம் ஆண்டு வெளியான உலக வணிக அமைப்பு (WEF) மற்றும் ஹார்வர்ட் மருத்துவப்பள்ளி அறிக்கை. ஒருவரின் அலுவலகச்சூழல் அவரின் மரணத்திற்கு ஐந்தாவது காரணம் என விளக்கியுள்ளது ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி பெஃபர் எழுதிய ‘Dying for a paycheck’ என்ற நூல்.ஆபீஸில் பணியாளர்களின் மன அழுத்தம் போக்க கஃபே, ஜிம், நூலகம் என வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் வேலைசெய்யும்போது உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்படி நேரம் கிடைக்கும்? ஜப்பான், தென்கொரியாவில் அதிகரிக்கும் மன அழுத்த தற்கொலைகளை தடுக்க மாலை 6 மணிக்கு மேல் பணியாளர்கள் ஆபீசில் இருக்கக்கூடாது என அந்நாட்டு அரசுகள் சட்டத்திருத்தங்களே கொண்டு வந்துள்ளன. தாராளமய பொருளாதாரத்தில் வேலை நெருக்கடி என்பது இயல்பானதாக மாற்றப்பட்டு அதனை நாம் ஏற்றுக்கொள்ளும் சமரசம்தான் மன அழுத்த தற்கொலைகளில் முடிகிறது.
மனஅழுத்தம் காரணமாக இந்தியர்கள் பேங்க் பேலன்ஸை உயர்த்தி நாற்பது வயதில் ஓய்வுபெறுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தப் பிரச்னையால்தான் என்கிறது ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ். ஆறு நாட்கள் வேலை என்பதை மாற்றி 5 நாட்கள் வேலை என்பதை உலகிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்த பர்பெக்சுவல் கார்டியன் நிறுவனம், 4 நாட்கள் மட்டுமே வேலை என அறிவித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் டவர்பெடல் போர்ட்ஸ் நிறுவனம் (ஸ்டீபன் ஆர்ஸ்டல்), காலை 8 முதல் நண்பகல் 1 மணிவரை வேலை என ஐந்து நாட்களின் நேரங்களை மாற்றி பணியாளர்களின் மனதையும் லாபத்தையும் வென்றுள்ளது. வேலைப்பளு நெருக்கடியை மாற்றி உடல்நலனையும் மனநலனையும் பாதுகாக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவே
-கோமாளி
|