பகவான்



மாண்புமிகு மாணவன்! 10

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்

இயற்கை வழங்கிய ஞானத்தைப் பெற்றுவிட்டாலும், லௌகீகத் தேவைகளுக்காக கல்லூரியில் சேர்ந்தார் ரஜனீஷ்.சொந்த ஊரான காதர்வாராவில் இருந்து 80  மைல் தொலைவில் இருந்தது ஜபல்பூர். அங்கிருந்த ஹிட்டாகர்னி கல்லூரியில் சேர்ந்தார். ஜபல்பூரில் அவரது அத்தை வீடு இருந்தது. அத்தைக்கு குழந்தைகள்  இல்லை. எனவே, ரஜனீஷை தங்கள் வீட்டில் தங்கவைத்து படிக்க வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.ஆனால், அவரது கணவருக்கு ஏனோ ரஜனீஷ்  என்றாலே ஆரம்பத்திலிருந்தே அலர்ஜி. தங்களுக்கு புரியாத மொழியில் ஏதேதோ தத்துவங்கள் பேசும் இந்தப் பையனால் அமைதியான வாழ்க்கை வாழக்கூடிய  தங்களுக்கு ஏதேனும் இடையூறு வரலாம் என்று அவர் தயங்கினார்.

“குழந்தைகள் இல்லை என்பதால் அத்தையும், மாமாவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால், தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாததால் சந்தோஷமான  வாழ்க்கை தங்களுக்கு அமையவில்லை என்று அவர்களாகவே ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டு புலம்பிக்கொண்டே இருந்தனர். ‘‘எனக்கு ஒன்றுதான்  புரியவில்லை. குழந்தை பெற்றவர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழமுடியும்? பொறுப்பு என்கிற சுமை மனசை அழுத்திக்கொண்டே இருக்கும்போது அவர்களால்  எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனக்குப் புரிந்த இந்த சின்ன தர்க்கம் கூட என்னைவிட வயதில் முதிர்ந்த பலருக்கும் தெரியவில்லையே?” என்று  பின்னாளில் கொஞ்சம் சிந்திக்கவைக்கும் நகைச்சுவையோடு அந்நாட்களை நினைவு கூர்ந்திருக்கிறார் ரஜனீஷ்.இதே காலக்கட்டத்தில் ரஜனீஷுக்கு திருமணம்  செய்து பேரன், பேத்தி பார்த்துவிட வேண்டும் என்று அவரது பெற்றோர் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். ஒருவேளை மேலே சொன்ன சிந்தனை அவருக்கு  இருந்ததாலோ என்னவோ திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அத்தை தங்கியிருந்தது மிகப்பெரிய பங்களா வீடு. இரண்டே பேர்தான் வசித்தார்கள். ஏராளமான அறைகள் இருந்தன. இருந்தாலும் சுயமரியாதையோடு அந்த  வீட்டுக்குள் நுழைய ரஜனீஷ் மறுத்தார். வாடகைக்கு வெளியே அறை எடுத்துத் தங்கினார்.அத்தைக்கு தொண்டையில் உறுத்தும் முள்ளாக தன் அண்ணன்  மகனின் இந்தச் செயல் உறுத்தியது.“இவ்வளவு பெரிய வீட்டை வைத்துக் கொண்டு, உன்னை வெளியில் தங்க வைத்தால் ஊர் உலகம் என்னையும், என்  கணவரையும் பற்றி என்ன பேசும்?”“உலகம் பேசுவது இருக்கட்டும் அத்தை. மனசில்லாமல் மாமா என்னை உங்கள் வீட்டுக்குள் அனுமதித்து நான் அங்கே  தங்கியிருப்பதைவிட தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் தங்குவதையே விரும்புவேன்!”அத்தையும், மருமகனும் பேசுவதை வீட்டுக்குள்ளிருந்து மாமா  கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ரோஷத்தோடு வெளியே வந்தார்.

“என் வீட்டுக்குள் நீ தங்குவதற்கு உனக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறேன்…”அவர் பேச ஆரம்பித்ததுமே ரஜனீஷ் இடைமறித்தார். “மன்னிக்கவும். நான்  வேண்டுமானால் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன்!” அதிர்ச்சியடைந்த மாமா, “என்ன பேசுகிறாய்? என் வீட்டுக்குள் நீ தங்குவதற்கு நான் வாய்ப்பளிக்க வேண்டுமா  அல்லது என் வீட்டுக்குள் வருவதற்கு நீ எனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா?” “உங்களுக்கு அது மெதுவாகத்தான் புரியும்…” கோபத்தோடு மாமா தோளில்  துண்டை உதறிப்போட்டு விட்டு நடந்தார். “நீ இப்படி அவரிடம் பேசலாமா ரஜனீஷ்? என்ன இருந்தாலும் அவர் என் கணவர். என்னை அம்மா வீட்டுக்கு  அனுப்பிவிட்டால் உன் அப்பாவுக்குத்தானே சிரமம்? இத்தனைக்கும் நான் பிள்ளை பெறாதவள் வேறு. அவரது ஆதரவில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...”  அத்தையின் கண்கள் கசிந்தன. ரஜனீஷுக்கு அத்தையின் நிலைமை புரிந்தது. இந்தக் காலத்திலேயே குழந்தைப் பேறில்லாத பெண்ணின் சமூக நிலை  சாபக்கேடானது எனும்போது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சூழல் எப்படி இருந்திருக்கும்?

அவரை சமாதானப்படுத்துவதற்காக அந்த வீட்டில் வசிக்க சம்மதித்தார்.ஆனால், மாமாவும் அவரும் எப்போதும் கீரியும், பூனையும்தான். அவர் ஏதாவது  சொன்னால் அதற்கு நேரெதிராக இவர் பேசுவார். மாமா சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விஷயமாக இருந்தாலும், இவர் விதண்டாவாதம் செய்து  கொண்டிருந்தார். அவரும் அப்படித்தான். ஜென்ம விரோதிகளைப் போல இவர்கள் ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று அத்தைக்கு ஆச்சரியம்.இருபது நாட்கள்தான் அந்த வீட்டில் ரஜனீஷ் இருந்திருப்பார். அத்தையிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேறு அறை பார்த்துபெட்டியை எடுத்துக் கொண்டு  கிளம்பிவிட்டார்.அப்போது இருபது நாட்களுக்கு மேல் அவரால் ஒரே அறையில் தங்க முடியாது. மாற்றிக்கொண்டே இருப்பார். தன் மாமாவிடம் மட்டுமல்ல,  எல்லோரிடமும், தான் முரண்பட்டுக் கொண்டே இருப்பதை ரஜனீஷ் உணர்ந்தார். அது மனிதர்களுடனான முரண்பாடு அல்ல. காலம் காலமாக நிலவிக்  கொண்டிருக்கும் அபத்தமான கருத்துகளுடனான முரண்பாடு என்பதை உணர்ந்தார்.

“ஒவ்வொரு வீடு மாறும்போதும் வேறு வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. வெவ்வேறான அனுபவங்களைப் பெற முடிந்தது. ஒருகட்டத்தில்  காரணமே இல்லாமல் கூட நான் அறைகளை மாற்றிக்கொண்டே இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம்...” என்றார்.இதே மாதிரி முரண்பாடு அவருக்கு  கல்லூரியிலும் ஓர் ஆசிரியரிடம் ஏற்பட்டது. அவர் இலக்கியப் பாடம் எடுக்கும் ஆசிரியர்.சிறு வயதிலிருந்தே இயற்கையை ரசித்து அனுபவிப்பவர் ரஜனீஷ்.  துரதிருஷ்டவசமாக அந்த ஆசிரியருக்கு இது புரியவில்லை.அதிகாலை சூரிய உதயத்தையும், மாலையில் அஸ்தமனத்தையும் அமைதியாக தவம் போல  பார்த்துக்கொண்டே இருப்பார். வயதுப்பையன் சிலை மாதிரி ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வானத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அந்த  ஆசிரியருக்கு வினோதமாகப் பட்டிருக்க வேண்டும்.

“நீ உன் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய். ஒரு மாணவன், தன் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இங்கேயே நின்று வானத்தை  வெறித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, அறைக்குப் போய் படி!” என்று கண்டிப்போடு சொல்ல ஆரம்பித்தார்.இலக்கியம் கற்ற ஆசிரியருக்கு இயற்கையைப்  பற்றிய புரிதல் இல்லையே என்று ரஜனீஷுக்கு வேதனை. இயற்கையையே உணராத ஆள், இலக்கியத்தை அறியாமல், வெறுமனே மனப்பாடம் செய்து  அப்படியேதான் ஒப்பிப்பார். இவரிடம் போய் நாமென்ன கற்பது என்று கருதி, அந்த ஆசிரியரின் வகுப்புக்குப் போவதையே தவிர்த்தார்.இதுபோல வெவ்வேறு  ஆசிரியர்களின் வெவ்வேறு விதமான புகார்கள். கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக இவரை அணுக, இந்தக் கல்லூரியே வேண்டாம் என்று முடிவெடுத்தார்.  ஜபல்பூரில் இருந்த டி.என்.ஜெயின் என்கிற வேறு கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்தார்.

இந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் ரஜனீஷின் உள்ளம் புரிந்தது. அவர் விருப்பப்படி இருக்க அனுமதித்தார்கள். விவாதங்களில் வெளிப்பட்ட  அவரது ஞானம் எல்லோரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.“உனக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. புதியதாக உனக்கு என்ன கற்றுக் கொடுப்பது என்றே  எங்களுக்குத் தெரியவில்லை...” என்றார்கள். எனவே வகுப்புகளுக்கு ‘அட்டெண்டன்ஸ்’ போட்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை ரஜனீஷுக்கு அவர்கள்  வலியுறுத்தவில்லை. விரும்பியபோது வரலாம், போகலாம்; தேர்வு மட்டும் ஒழுங்காக எழுதினால் போதும் என்று சலுகை அளித்தார்கள். எனவே,  கைச்செலவுக்காக உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் உதவியாசிரியராக ரஜனீஷ் பணியாற்ற முடிந்தது.அந்நாட்களில் ஜெயின் சமூகத்தினர் ஜபல்பூரில் ‘சர்வதர்ம  சம்மேளனம்’ என்கிற வருடாந்திர நிகழ்வை நடத்துவார்கள். அதில் கலந்துகொண்டு, தான் உணர்ந்த விஷயங்களை, மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய  விஷயங்களை மேடையில் பேசுவார் ரஜனீஷ்.

அவரைப் பிரபலப்படுத்திய பேச்சுகள் அவை. 1951ல் தொடங்கி 1968 வரை 17 ஆண்டுகள் இந்த நிகழ்வில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டார்.ரஜனீஷ், தன்  மாணவப் பருவத்தில் யதேச்சையாக ஓர் பயணத்தில் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி பெரும் அபிமானம் கொண்டிருந்தார்.அம்மனிதர், சோவியத் புரட்சியில்  நேரடியாகப் பங்கேற்ற இந்தியர். ரஷ்ய அதிபர் லெனினின் படையில் இணைந்து போரிட்டு மாற்றத்தைக் கொண்டு வந்தவர். டிராட்ஸ்கியின் சகா. சர்வதேச  அளவிலான கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ அமைப்பில் உறுப்பினராக இருந்த ஒரே இந்தியர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்.அவர்,  மனமேந்திராநாத் ராய்! சுருக்கமாக எம்.என்.ராய்.அவரைச் சந்தித்தபின் ரஜனீஷ், கம்யூனிஸ்ட் ஆனாரா?

(தரிசனம் தருவார்)