நியூஸ் வியூஸ்கதை கதையாம்... தோரணமாம்!

தமிழ் சினிமாவில் சமீபமாக கதைப்பிரச்னை பெரும் பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. பெரிய படம் ஒன்று பிரும்மாண்டமாக வெளியாகும்போதோ, அல்லது ஒரு படம் பெரிய வெற்றியை எட்டும்போதோ யாரோ ஒருவர் அந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி வந்து
நிற்கிறார்.ஒரே மாதிரியான சிந்தனை பலருக்கும் வரக்கூடும்தான். குறிப்பாக ஒரு படத்தின் ஒன்லைனர் என்று சொல்லப்படும் ஒருவரிக் கதை என்னுடையது என்றுதான் பலரும் கதைத்திருட்டு புகார் சொல்கிறார்கள்.

உதாரணத்துக்கு, “ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”. சிறுவயதில் நாம் விளையாட்டாக இந்த ஒன்லைனரை பலரிடமிருந்தும் கேட்டிருப்போம். நாமும் பலருக்கும் சொல்லியிருப்போம். ஒரு நரியின் கதையை ஒருவர் திரைப்படமாக எடுத்தால், அந்தக் கதை என்னுடையது என்று யாரேனும் உரிமை கோரமுடியுமா?நரியை வைத்து கதை சொல்ல முடியுமா என்று கேட்டால், முடியுமே? ‘ஈ’யை வைத்தே ராஜமவுலி ஒரு முழுநீளப்படம் எடுத்திருக்கிறார். நரியை வைத்து எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?சினிமாவுக்கு அது போதும்.சினிமாவே இதுதான்.ஏனெனில், ஸ்வரங்கள் ஏழு என்பது மாதிரி ஒட்டுமொத்தமாக கதைகளும் ஏழுதான் என்று சொல்கிறார்கள். கிறிஸ்டோபர் புக்கர் என்கிற ஆங்கில எழுத்தாளர் ‘தி செவன் பேசிக் ப்ளாட்ஸ்’ என்று விரிவாகவே இந்தக் கருத்தைக் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஒட்டுமொத்த கதையுமே ஏழுதான் என்று நிறுவ அவர் முப்பத்திநான்கு ஆண்டுகள் ஆய்வு செய்துதான் இந்நூலைப் படைத்தாராம்.

“ஒரு கதையில் நூறு பாத்திரங்கள் இருக்கலாம். ஆனால், அந்தக் கதை சொல்லப்படுவதற்குக் காரணம் ஒரே ஒரு பாத்திரம்தான். அது கதையின் நாயகன் அல்லது நாயகி. அந்த மையப்பாத்திரத்தின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், அவனுக்கு வாழ்க்கை வழங்கும் அனுபவங்கள் வாயிலாக தன்னைத்தானே அவன் உணரும் நிலையை நோக்கித்தான் ஒவ்வொரு கதையும் போகிறது.

கதையின் மற்ற பாத்திரங்கள் எல்லாமே நாயகனுக்கோ/நாயகிக்கோ சம்பவங்களையோ, அனுபவங்களையோ வழங்குவதற்காகவே படைக்கப்படுகின்றன” என்கிறார் கிறிஸ்டோபர் புக்கர்.அதாவது நம்மால் அதிகபட்சமாக  ஏழு கதைகளைத்தான் சொல்ல முடியும் எனும்போது, திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொல் வதைப் போன்ற சலிப்பு ஏற்படுத்தாமல் வேறு வேறு பாத்திரங்கள், வேறு வேறு சம்பவங்களை வைத்துதான் ‘வெரைட்டி’ காட்ட முடியும். சினிமாவில் திரைக்கதையின் பங்கு என்பது கதைகளை வேறுபடுத்திக் காட்டுவதுதான்.

சினிமா கதைத்திருட்டு புகார்களைப் பொறுத்தவரை, ‘கதை என்னுடையது’ என்று கோருவது கொஞ்சம் அபத்தமானதுதான். ஏற்கனவே சொன்னபடி இருப்பதே ஏழு கதைதான். நீங்கள் சிந்தித்த கதையையே ஏழில் ஒருவர் சிந்திக்க முடியும். எனினும், ‘திரைக்கதை என்னுடையது’ என்று ஒருவர் புகார் தெரிவிக்கும் பட்சத்தில், அதைத்தான் சீரியஸான புகாராக பரிசீலித்து விசாரிக்க முடியும்.

ஒருவரிக் கதையை Plot என்று சினிமா மொழியில் சொல்லுவார்கள். கிறிஸ்டோபர் புக்கர் சொல்லுவது மொத்தமாகவே ஏழு பிளாட்டுகள்தான் இருக்கின்றன என்பதுதான். இதுபற்றி நிறைய அபிப்ராய பேதங்கள் உண்டு. இருபதோ அல்லது இருபத்தெட்டு பிளாட்கள்தான் மொத்தமாக இருக்கின்றன என்று சினிமா கதை மன்னன் பாக்யராஜ் கூட ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்கிற நூலில் குறிப்பிடுகிறார். இந்தக் கருவைச் சுமந்து, ஒரு படைப்பாளி எப்படி சுகப்பிரவசம் செய்கிறான் என்பதிலேயே அவனது படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

ஒரு படைப்பாளி கேட்ட, பார்த்த, கேள்விப்பட்ட ஏதோ ஒரு கதையின் தாக்கத்தில் அதன் அடிநாதத்தை மட்டும் பிடித்து, அவனுடைய படைப்பாற்றலின் விளைவாக உருவாகக்கூடிய கதை அவனுடைய கதைதான். அதில் சந்தேகம் எதுவுமில்லை.

ஒரு பணக்காரப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஏழைப்பையன் காதலித்தால் என்ன ஆகும்? இந்தக் கதை உங்களுக்கோ, எனக்கோ தோன்றாததா என்ன? இந்தக் கதையை யாரேனும் படமெடுத்தால், அதற்கு நாம் உரிமை கோரமுடியுமா?இதே கதையைத்தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் ‘காதல்’ என்கிற படமாக எடுத்து, தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தினார்.

ஒரு ரயில் பயணத்தில் தான் சந்தித்த மனிதர் ஒருவரின் வாழ்க்கை அனுபவங்கள்தான் ‘காதல்’ படத்தின் கதையை எழுதத் தூண்டியது என்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். நாமும் எவ்வளவோ பயணிக்கிறோம். எத்தனையோ பயணிகள் நம்மிடம் பேசுகிறார்கள். எத்தனை பேருக்கு இந்தப் பேச்சுகளில் ஒரு சினிமா ஒளிந்திருக்கிறது என்று தோன்றியிருக்கிறது?

பாலாஜி சக்திவேல், ஒரு படைப்பாளி. ஒரு கதையை சாதாரண ஒருவர் சிந்திப்பதற்கும், படைப்பாளி ஒருவர் சிந்திப்பதற்குமான வேறுபாடு இதுதான்.
மகாபாரதத்தில் தான் வாசித்த கர்ணனின் கதையைத்தான் இயக்குநர் மணிரத்னம், ‘தளபதி’யாக எடுத்திருக்கிறார். வியாசரின் கதை திருடப்பட்டது என்று ‘தளபதி’ பார்த்த ரசிகர் யாராவது சொல்லிவிட முடியுமா?

ஒரு குறிப்பிட்ட கதையில் படைப்பாளி பெரும் ஆர்வம் கொண்டு, அக்கதையைத் தழுவி, புதியதாக திரைக்கதை எழுதி, பாத்திரங்களை, சம்பவங்களையும் செதுக்கி படமாக எடுப்பது குற்றமல்ல. அதற்காக வெட்கப்பட வேண்டியதுமில்லை. சினிமா தோன்றிய காலத்திலிருந்தே இதிகாசங்களிலிருந்து, நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து கதைகளைத் தழுவியே படமாக்கி வருகிறார்கள்.

நாம் சிறுவயதில் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் கதைகள் பெரும்பாலும் வேறுமொழிப் படங்களிலிருந்தோ, கதைகளிலிருந்தோ தழுவியவைதான். அப்படியே காப்பி அடிப்பதற்கும், ஒரு கதையில் ஈர்க்கப்பட்டு அதை மெருகேற்றி புதிய கதையாக உருவாக்குவதற்கும் வித்தியாசமுண்டு.

ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தையோ, கொரியன் படத்தையோ அப்படியே சீன் பை சீனாக சுடுவதுதான் ஈயடிச்சான் காப்பி. தனக்குப் பிடித்த கதையை, தன் பாணியில் புதுக்கதையாக உருவாக்கிக் கொடுப்பது சினிமாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான்.

‘டைட்டானிக்’ சம்பவத்தை அப்படியே காப்பி அடித்துவிட்டார் என்று ஜேம்ஸ்கேமரூனை யாராவது குற்றம் சாட்ட முடியுமா என்ன? நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தழுவி, தன் பாணியில் கொடுத்ததால்தானே உலகமே அசந்து போகக்கூடிய மகத்தான காவியத்தை அவரால் தரமுடிந்தது?

கதைகள் ஏழு மட்டுமல்ல. காட்சிகளும் கூட ஒட்டுமொத்தமாக 36 சூழல்களில் அடங்கி விடுகிறதாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் ழார் போல்தி (Georges Polti) என்பவர் இருந்தார். இதிகாசங்கள், புராணங்கள், நாடகங்கள், நாவல்கள் என்று அனைத்தையும் ஆராய்ந்த இவர் கதைகளைக் குறித்து ஏராளமான நூல்களை எழுதினார். நமது காளிதாசரின் ‘சாகுந்தலம்’ கூட அவரது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.

1895ல் அவர் வெளியிட்ட நூல், 1916ல் ‘Thirty six Dramatic Situations’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றி வெளியிடப்பட்டது. இன்றுவரை அதுவே உலக கதைக்காரர்களின் பைபிளாக விளங்குகிறது.இந்நூல் சொல்வது என்னவென்றால், உலகின் மொத்தக் கதைகளுமே வெறும் முப்பத்தி யாறு சிச்சுவேஷன்களில் அடங்கிவிடுகின்றன என்பதுதான். இதுவரை எழுதப்பட்ட கதைகளும், இதற்குப் பிறகு எழுதப்படப் போகிற கதைகளும் கூட இந்த முப்பத்தியாறில் அடங்கிவிடும் என்றார் போல்தி.

மொத்தக் கதைகளுமே ஏழுதான். அந்தக் கதைகளுக்கு அமைக்கக்கூடிய சூழல்களுமே முப்பத்தியாறுதான். நிலைமை இப்படியிருக்க, புதியதாக வெளிவரும் ஒரு சினிமா, இதற்கு முன்பு எடுக்கப்பட்ட சினிமாக்களிலிருந்து எடுக்கப்பட்ட விதத்திலோ, கதையை வித்தியாசமாக சொல்லக்கூடிய முறையிலோ எப்படி மாறுபட்டிருக்கிறது என்றுதான் பார்க்க முடியுமே தவிர, நீங்கள் வாசித்த சிறுகதையையோ, பார்த்த சீரியலையோ, வாசித்த நாவலையோ நினைவுபடுத்து கிறது என்றால், அது நிச்சயமாக கதைத்திருட்டு அல்ல.

யுவகிருஷ்ணா