முடக்குவாதம் வெண்புள்ளிகளுக்கு சித்த மருத்துவத்தில் மருந்தே இல்லை!சித்து விளையாட்டு -3

முடக்குவாதம், வெண்புள்ளிகள் உள்ளிட்ட மரபணு நோய்களான கன்ம நோய்களைத்  தீர்க்க முடியாது என அகத்தியரே சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். சித்த  மருத்துவத்தில் இவற்றிற்கு மருந்தில்லை என இந்தத் துறை சார்ந்தவர்கள்  சுட்டிக் காட்டுகிறார்கள்!

நாள்பட்ட ஆஸ்துமா, மூட்டு வலி மருந்துகளில் கார்டிகோ ஸ்டிராய்டை  அதிகளவில் கலக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலெல்லாம் சில  வருடங்களில் வீங்கிவிடும்!இரும்புச் சத்து மாத்திரை  கெட்டுப் போகாமல் இருக்க தொடர்ந்து அதிகமான அளவு சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் கல்லீரல்  பிரச்னைகளை உருவாக்குவதாக ஆங்கில மருத்துவத்திலேயே அலாரம் அடிக்கும்  பென்சோயிக் ஆசிட்டை அதிகமாகக் கலக்குகிறார்கள்! ஐந்து வருடங்களுக்கு முன்பு உண்மையிலேயே மெடிக்கல் ரெப்பாக இருந்த நபர் ஒருவர் இப்போது பிரெஞ்ச் தாடியுடன் ஆண்மை மருத்துவத்தை போதித்துக் கொண்டிருக்கிறார்!

பெரிதும் நான் விரும்பிப் பார்க்கும் புலி விலங்கு சேனலில் இன்னொருவர் இறை மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய மருத்துவத்தின் பலனாக இளம்பெண் ஒருத்தர் சமீபத்தில் இறந்து போனார். உடனடியாக அந்த மருத்துவர், தான் மருத்துவரே இல்லை, ஒருங்கிணைப்பாளர் என்று பணம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டார்.

பிரச்னைகள் எல்லாம் முடிந்த பிறகு மறுபடியும் ஒரு போலி எம்டி பட்டம் வந்து அவருடைய பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டது. அவரிடம் மட்டுமே கிட்டத்தட்ட, சித்த மருத்துவத்தை முறையாகப் பயின்ற 35 பேர் 35,000 ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்! அதிலிருக்கும் பெண் மருத்துவர் ஒருவர் அவருக்காகவும் பணத்திற்காகவும் சிலுவை சுமந்தார். பிற்பாடு அவரும்கூட விடுவிக்கப்பட்டார்.

முடக்குவாதம், வெண்புள்ளிகள் உள்ளிட்ட மரபணு நோய்களான கன்ம நோய்களைத் தீர்க்க முடியாது என அகத்தியரே சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவத்தில் இவற்றிற்கு மருந்தில்லை என இந்தத் துறை சார்ந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், அவற்றைத் தீர்ப்பதாக இந்த இறை மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். கலெக்டருக்கு நிகரான பதவியில் இருந்த ஒருவர் வெண்புள்ளி களை நீக்குவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்ததாகச் சொல்கையில், சாதாரணமானவர்கள் குறித்து என்ன சொல்ல?

இவரைப் போன்றவர்களிடம் போனவர்கள் மூட்டு வலி உடனடியாகக் குறைந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். இவர் மட்டுமா என்ன? அந்த மருந்து சாப்பிட்டால் இரண்டே நாட்களில் மூட்டு வலி குணமாகிறது என விளம்பரங்களில்கூட நிறைய வயதானவர்கள் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் அதெப்படி இரண்டே நாட்களில் வயதானதன் காரணமாக உருவாகும் நாள்பட்ட மூட்டு வலி விலகும்? நாள்பட்ட ஆஸ்துமா, மூட்டு வலி மருந்துகளில் கார்டிகோ ஸ்டிராய்டை அதிகளவில் கலக்கிறார்கள் என இந்தத் துறை சார்ந்த மருந்து உற்பத்தியாளர் ஒருத்தர் சொன்னார். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலெல்லாம் சில வருடங்களில் வீங்கி விடுமாம்.

‘‘ஆங்கில மருந்துதானே அது. வேறொரு வகையில் அதைச் சாப்பிடத்தானே செய்கிறோம். சித்த மருந்தில் கலந்ததால் என்ன குடிமுழுகிப் போய்விட்டது...” என அறியாமையில் அவரிடம் கேட்டேன். அவர் அதற்கு விரிவாகப் பதிலளித்ததோடு மட்டுமல்லாமல், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்ம ரிஷி ஒருவரிடம் அழைத்துச் சென்றார்.

நெஞ்சு வரை தாடியோடு இருந்த அந்த மகானின் தரிசனத்திற்காக மக்கள் அலைமோதிக் காத்துக் கிடந்தனர். வேறு வழியில்லாமல் நாங்களும்கூட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். பிரம்மரிஷி பட்டத்தை யார் அவருக்குத் தந்தது? அவராகவே வைத்துக் கொண்டாராம். அழைத்துப் போன மருந்து உற்பத்தியாளர், “சாமி உங்க பெருமையைச் சொல்றதுக்காக கூப்ட்டு வந்திருக்கேன். உங்க சமீபத்திய கண்டுபிடிப்பை சொல்லுங்க...” என்றார்.

தாடியைத் தடவியபடி முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டு கூர்ந்து பார்த்து. “ரஷ பஷ்பம்!” என்றார். அவர் ஆசிரமத்திற்குள் சிறு நடை போனபோது மருந்து உற்பத்தியாளரிடம், “ரஷ பஷ்பம் என்கிற பெயரே அடர்த்தியாக இருக்கிறது.

இது சித்தர்கள் செய்யக்கூடியதுதானே?” என்றேன்.அவர் சிரித்தபடி, “இதையெல்லாம் செய்வதற்கு இங்கே ஆட்களே கிடையாது. அப்படி ஒருவர் இந்த பூமியில் இருந்தால் அவருக்கு தனியாகக் கோயில் கட்டி விடலாம்!” என்றார்.

அந்த ரஷ பஷ்பத்தை பக்கவாதத்திற்கு மருந்தாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரம்மரிஷி. ஆட்களின் விரல்களில் இருக்கிற மோதிரங்களின் எண்ணிக்கையைப் பார்த்து நாலாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரை அதற்கு விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்.இயற்கையான மூலிகைகள் கலந்த ரஷபஷ்பம் அப்படி யென்ன உடலுக்குச் செய்து விடப் போகிறது?

“படிகாரம், சுண்ணாம்பு, பாதரஸத்தை அரைத்துப் பொடியாக்கினால் வெண்மையாக வரும். அதைத்தான் இவர் ரஷ புஷ்பம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்...” என்றார் மருந்து உற்பத்தியாளர்.

தொடர்ந்து இதைச் சாப்பிட்டால், சீக்கிரமே சாப்பிடுபவர் இறந்து விடுவார். உலகநாடுகளில் மருத்துவ உபயோகத்திற்கு பெரும்பாலும் பாதரஸத்தைத் தடை செய்து விட்டார்கள். அதிலும் ஒரு கை அள்ளிப் போட்டால் என்னாகும்?

“முதல் தடவை சாமி என்னி டம் இதைச் சொன்னபோது இவற்றைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள் என்று சொன்னேன். சித்தர்கள் பாவம் சும்மா விடாது என்றேன்...” என்றார்.

இதற்கு பிரம்மரிஷி என்ன சொன்னார் தெரியுமா? ‘‘நானே ஒரு பெருஞ்சித்தன்!” அதென்ன ஒரு கையள்ளிப் போடுவது என்று கேட்டேன். இங்கு எந்த அளவு முறைகளும் கிடையாது என்று சொல்லி விட்டு உதாரணமாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார். ஒருதடவை புகழ்பெற்ற முன்னணி சித்த மருத்துவ நிறுவனமொன்றிடம் இருந்து இரும்புச் சத்து மாத்திரை செய்வதற்கு இவருக்கு ஆர்டர் வந்திருக்கிறது.

அது கெட்டுப் போகாமல் இருக்க பிரிஸர்வேட்டிவ் கலக்கும் நுட்பத்தை அறிவதற்காக ஈரோட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சித்த மருத்துவரைப் பார்க்கப் போயிருக்கிறார். ஏற்கனவே இதுமாதிரி அவர் செய்து அனுப்பியது நன்றாக உலராமல் பூஞ்சைகள் வந்து விட்டதால் அதைத் தவிர்ப்பதற்காக இப்போது போயிருக்கிறார். அங்கே சிரப், லேகியம் போன்றவை கெட்டுப் போகாமல் இருக்க எந்தளவிற்கு அதைக் கலக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.

அவர்கள் சொன்ன விகிதத்தைக் கேட்டதும் இவருக்கு தலை சுற்றி விட்டது. நியாயமாக நூறு கிராமிற்கு ஒரு மில்லி கிராம் அளவிற்கே கலக்க வேண்டிய கெமிக்கலை அவர்கள் கையால் அள்ளி அள்ளிப் போட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு கிராமிற்கு ஐந்து கிராம் அளவு!
பதறியடித்து ஏன் என்று கேட்டபோது, “அதெல்லாம் தெரியாது. எங்க ஐயா இப்படித்தான் சொல்லியிருக்கிறார். கடைக்குப் போய் புளிப்பு - சளிப்பு என்று கேள். அதைக் கொண்டு வந்து இப்படி அள்ளிப் போடு என்றார்...” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படி எதைக் கலக்கிறார்கள் தெரியுமா? தொடர்ந்து அதிகமான அளவு சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் கல்லீரல் பிரச்னைகளை உருவாக்குவதாக ஆங்கில மருத்துவத்திலேயே அலாரம் அடிக்கும் பென்சோயிக் ஆசிட்!ஒரு மில்லிகிராம் அளவிற்கு சேர்ப்பதுதான் மனித உடல் நலத்திற்கு உகந்தது என அந்தப் பெரிய சித்த வைத்திய நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார் மருந்து தயாரிப்பாளர்.

அதற்கு அந்நிறுவனம் சொன்ன அளவை நம்மிடம் சொன்ன போது, நமக்கே தூக்கி வாரிப் போட்டது. அந்த நிறுவனம் கலக்கச் சொன்ன அளவு 20 கிராம்! நேர்மையான சித்த வைத்தியர் ஒருத்தரிடம் போய்க் கேளுங்கள். விளக்கமாகச் சொல்லுவார். இங்கே எதை எதில் எவ்வளவு கலப்பது என்பதில் எந்த வரைமுறைகளும் இல்லை. அவர்களது கைகளைப் பிடித்துக் கட்டுப்படுத்த மலையிலிருந்து சித்தர்களும் இறங்கி வரப் போவதில்லை.

ஆண்மைக்குறைவுக்கு மருந்து தருவதாக தினம்தோறும் பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரம் தரும் சித்த வைத்திய சாலையொன்று தன் மருந்துகளில் எதைக் கலக்கிறது? உண்மையில் ஆண்மைக் குறைவு பற்றி பழங்கால சித்த வைத்திய சுவடிகள் பெரியளவிற்குப் பேசவில்லை என்பது அந்தத் துறை சார்ந்த நேர்மையானவர்களுக்கு நன்றாகவே தெரியும்? ஆனால், அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?

(போலிகளை துகிலுரிப்போம்)

சரவணன் சந்திரன்