முதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நயன்தாரா!தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் சொல்லும் ‘ஐரா’ ரகசியங்கள்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் ஒரு நம்பிக்கை வரவு கோட்டபாடி ஜே.ராஜேஷ். நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் மூலம் சிறந்த தயாரிப்பாளராக கவனம் ஈர்த்த அவர் மீண்டும் நயனுடன் ‘ஐரா’வுக்காக கைகோர்த்திருக்கிறார். பொங்கல் விருந்தாக வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் அவரது ‘கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ்’ நிறுவனம்தான் வெளியிடுகிறது. ராயப்பேட்டையில் உள்ள ராஜேஷின் அலுவலகத்துக்கு சென்றால் காலேஜ் ஸ்டூடண்ட் லுக்கில் அசத்துகிறார்.

‘‘முதல் தயாரிப்பான ‘அறம்’ உருவாக காரணமே நயன்தாராவின் சப்போர்ட்தான். அந்த ஒரு படத்துலயே நூறு படங்களைத் தயாரிச்ச நல்ல அனுபவமும் பெயரும் புகழும் கிடைச்சிருக்கு. இண்டஸ்ட்ரீல பலரும் ‘அறம்’ ராஜேஷ்னுதான் என் பெயரை அவங்க போன்ல ஸ்டோர் பண்ணியிருக்காங்க!’’ சந்தோஷத்தில் நெகிழ்பவர், தயாரிப்பாளராகும் முன் வங்கியில் வேலை பார்த்திருக்கிறார்.

‘‘பேங்க் வேலையை உதறும்போது தென்னிந்திய ஹெட்டா இருந்தேன்! தனியார் வங்கில ஒன்பது வருஷங்கள் வேலை பார்த்தேன். அதுதான் என் சினி கேரியருக்கான அஸ்திவாரம். திரைத்துறையைச் சேர்ந்த பலரின் நட்பு கிடைச்சது. சினிமா பத்தின என் கனவும் லட்சியமும் ஸ்ட்ராங்காச்சு!

மும்பை கிளைல ஃபைனான்ஸ் செக்‌ஷன்ல இருந்தப்ப பாலிவுட் ஃபைனான்ஸியர்கள் பழக்கமானாங்க. சினிமா பிசினஸ் புரிஞ்சது. தவிர, ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவி சாரும் என் நண்பர். இண்டஸ்ட்ரி பத்தி நிறைய விஷயங்களை அவர் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.

அந்த அனுபவங்களோடு ‘கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தை ஆரம்பிச்சேன்...’’ என இன்ட்ரோ கொடுக்கும் ராஜேஷின் பூர்வீகம் செங்கல்பட்டு.
‘‘திருவள்ளூர் மாவட்டம் மாப்பேடு கிராமத்துல பிறந்தேன். கோட்டப்பாடிங்கறது எங்க குடும்பப் பெயர். ஸ்கூல் படிப்பெல்லாம் சென்னைலதான். சின்ன வயசுல இருந்தே எம்ஜிஆர் ரசிகன்.

அவரை நேர்ல பார்த்ததில்ல. ஆனா, அவர் கூடப் பழகினவங்க அவரைப் பத்தி சொன்னதை எல்லாம் ஆர்வமா கேட்டு ரசிச்சிருக்கேன். அரசியல் நீங்கலா, தனி மனிதரா இப்ப வரை அவர் சொன்ன நல்ல விஷயங்களை ஃபாலோ பண்ண முயற்சிக்கறேன்.
ஸ்கூல் படிக்கிறப்ப க்ளாஸ்ல நிறைய ராஜேஷ் இருந்தாங்க. அதனால ‘கே.ஜே.ஆர்.’னு ஷார்ட்டா என்னை கூப்பிட்டாங்க. எம்ஜிஆர் மாதிரி கேஜேஆர் மூன்றெழுத்து! ரொம்பவே சந்தோஷப்பட்டேன் இப்ப அதுவே நிலைச்சுடுச்சு!

லயோலால பி.காம் முடிச்சுட்டு லண்டன்ல இன்டர்நேஷனல் பிசினஸ் கோர்ஸை படிச்சுட்டு அங்கயே ஒரு பேங்க்ல ஒரு வருஷம் ஒர்க் பண்ணினேன். அப்புறம்தான் சென்னை வந்தேன்...’’ என்று சொல்லும் ராஜேஷ், தனது வலது கை புஜத்தில் ‘மைல்ஸ் டு கோ’ என்ற வாக்கியத்தை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.

‘‘ஆக்சுவலா ராபர்ட் ஃப்ரொஸ்ட்டின் கவிதையான ‘The woods are lovely’ல வரும் வரி இது. ஸ்கூல்ல படிச்சது. இப்ப வரை டிஸ்டர்ப் பண்ற வரி ‘மைல்ஸ் டு கோ’. எக்சாம் பேப்பர்ல பிள்ளையார் சுழி போட்டுட்டு இந்த வாக்கியத்தைத்தான் எழுதுவேன். அப்புறம்தான் ஆன்சர்! இப்ப என் புரொடக்‌ஷன் கம்பெனி லோகோலயும் இதையே கொண்டு வந்துட்டேன்!’’ என்ற ராஜேஷ், தனது வெல்விஷராக நயன்தாரா இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘இல்லைனா ‘அறம்’ படத்தை முதல்ல தயாரிச்சிருக்க மாட்டேன். கமர்ஷியல் பாதைல பயணம் செய்திருப்பேன். எங்க ரெண்டு பேர் வேவ்லெங்த்தும் ஒண்ணேதான்.படம் தயாரிக்கலாம்னு முடிவெடுத்ததும் நிறைய கதைகள் கேட்டேன். பணம் சம்பாதிச்சுக் கொடுக்கலைனாலும் என் படம் நல்ல பெயரை சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.

கோபி நயினார் சொன்ன கதை ரொம்பவும் பிடிச்சிருந்தது. அவர் கதை சொல்ல ஆரம்பிச்ச பத்து நிமிஷங்கள்லயே டிஸ்டர்ப் ஆகிட்டேன். அன்னைக்கே நயன்கிட்ட அந்தக் கதையைக் கேட்கச் சொன்னேன். அவங்களுக்கும் கதை ரொம்ப பிடிச்சுடுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் ‘அறம்’.

வியாபார ரீதியா சரியா போகுமானு சின்னதா ஒரு பயம் இருந்தது. ஆனா, கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா அமைஞ்சது. நயன்கிட்ட பிடிச்சதே அவங்க டெடிகேஷன்தான். கதை பிடிச்சிட்டா சீன்கள்ல இருந்து டிசைன்ஸ் வரைக்கும் அத்தனையிலும் அவங்க கவனம் இருக்கும். அந்த அக்கறைதான் அவங்க வெற்றிக்குக் காரணம்.

சமீபத்துல ரிலீஸான ‘இமைக்கா நொடிகள்’ வரை அவங்க விட்டுக் கொடுத்தது நிறைய இருக்கு. என் கம்பெனில அவங்க படம்னா அது நயனுக்கு விருதை அள்ளிக் குவிக்கணும். வித்தியாசமா இருக்கணும்.

எங்களுக்கு நல்ல பெயர் சம்பாதிச்சு கொடுக்கணும். இதுல ஒண்ணாவது நடக்கணும்னு நினைக்கறேன். அப்படி கதைகள் அமையும்போதுதான் நயனோடு படங்கள் இருக்கும்...’’ என நான்ஸ்டாப்பாக சொல்லும் ராஜேஷ், நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் சீக்ரெட்ஸையும் உடைத்தார்.

‘‘எங்களுக்கு ‘ஐரா’ ரொம்பவே ஸ்பெஷல். இது ஒரு எமோஷனல் ஹாரர். வழக்கமான பேய்ப்படம்னு சுருக்கிட முடியாது. ரத்தம், அலறல், கத்தல்னு எதுவுமில்லாத நயன் பாணியில் ஒரு ஹாரர்.புராணத்துல இந்திரனோட வாகனமான யானையை ‘ஐராவத்’னு சொல்வாங்க. அதுல இருந்து வந்ததுதான் ‘ஐரா’.

பொதுவா ஒரு யானைக்கு யாராவது தீங்கிழைச்சா அதை சுலபத்துல அது மறக்காது. ‘ஐரா’வோ சாகாவரம் பெற்ற யானை!

இதுல முதன்முறையா நயன் டபுள் ஆக்‌ஷன் பண்றாங்க. ‘மா’ ஷார்ட் ஃபிலிம் பண்ணின சர்ஜுன் இயக்கறார். அவரோட முதல் குறும்படமான ‘லட்சுமி’ல எனக்கு சில டவுட்ஸ் வந்துச்சு. அதை சர்ஜுன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில்கள்ல இம்ப்ரஸ் ஆகிட்டேன். ‘கதை ரெடியா இருக்கா’னு கேட்டதும் ஒரு கதை சொன்னார். அதுதான் ‘ஐரா’.

சில ஸ்கிரிப்ட்டுகளை கேட்டதும் கரெக்‌ஷன்ஸ் சொல்லுவோம். அதை சரிபண்ண டைம் எடுக்கும். ஆனா, ‘ஐரா’ ஸ்கிரிப்ட் கேட்டதும் பிடிச்சுப் போச்சு. உடனே ஷூட் கிளம்பினோம். சென்னை, கேரளா, பொள்ளாச்சில படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. நயன் தவிர, யோகிபாபு, கலையரசன்னு நிறைய பேர் நடிக்கறாங்க. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைச்சிருக்கார். அழகான பாடல்கள் கொடுத்திருக்கார்...’’ உற்சாகமாக புன்னகைப்பவர், தனக்கும் பிரபுதேவாவுக்குமான நட்பைப் பற்றியும் பூரிப்புடன் சொன்னார்.

‘‘என்னைச் சுத்தி நல்ல நண்பர்கள் இருக்காங்க. அதுல பிரபுதேவாவும் ஒருத்தர். என் நலம் விரும்பும் சகோதரர்னு சொல்லலாம். ரொம்ப வருஷங்களா அவரோடு டிராவல் பண்றேன். எது செய்தாலும் முதல்ல அவர்கிட்ட சொல்லிடுவேன். உரிமையா, அழகா ஆலோசனைகள் சொல்வார். அவரோட டான்ஸ்னா அவ்வளவு இஷ்டம்.

அவரோட ரசிகனா, அவர் தம்பியா அவரை வச்சு படம் செய்ய விரும்பி ‘குலேபகாவலி’ எடுத்தேன். மறக்க முடியாத வெற்றி அது. எப்பவும் எளிமையா இருக்கறதுதான் அண்ணனோட பலம்...’’ என்ற ராஜேஷ், தன் நிறுவனம் சார்பில் நான்கு படங்களை இப்போது தயாரித்து வருகிறார்.

‘‘நான்கையும் அறிமுக இயக்குநர்கள்தான் டைரக்ட் பண்றாங்க. ஒவ்வொரு படத்துலயும் குறைஞ்சது நான்கு டெக்னீஷியன்ஸையாவது அறிமுகப்படுத்தணும்னு நினைக்கறேன்.

இந்த இண்டஸ்டீரில எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்க கதைகள் கேட்டு, ‘நல்லா இருக்கு’னு சொல்றதை நான் கேட்கறேன். எம்ஜிஆர் போலவே அஜித்தையும் ரொம்பப் பிடிக்கும். ஒரு ரசிகனா ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிடுவது அவ்வளவு சந்தோஷத்தை தருது.

‘அறம்’ கோபி நயினாரின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும். அடுத்து தயாரிக்கும் ஒரு படத்துல அவரும் எழுதியிருக்கார். ‘அறம் 2’வுக்கான கதையையும் சொல்லியிருக்கார். அது வலுவான கதை. தன் கமிட்மென்ட்ஸை அவர் முடிச்சதும் ‘அறம் 2’வை ஆரம்பிப்போம்...’’ என்ற ராஜேஷ், எலக்ட்ரானிக் பொருட்களை தேடித் தேடி வாங்குவதில் விருப்பமுள்ளவர்.

‘‘அதுவும் கார் மேல அவ்வளவு இஷ்டம். புதுசா எந்த கார் வந்தாலும் வாங்கி அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு, அலசி மறுபடியும் அசெம்பிள் செய்வேன்! இது என் ஹாபி. 5 எனக்கு ராசியான நம்பர். என் கார்களோட நம்பர் எல்லாமே அஞ்சுதான்!’’ என்று சிரிக்கும் ராஜேஷ், தன் மனைவி திவ்யாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு சான்விதா, ஷ்ரேஷ்தா என இரு மகள்கள். இவ்விரு பெயர்களுக்கும் ஒரே அர்த்தம்தான்.
லட்சுமி!                            

மை.பாரதிராஜா