| கவிதை வனம்
 
 
 தூக்கி வீசப்படும் கருணைகள்  நிமிர்ந்தபடியே
 தூக்கி வீசுகிற நமது
 கருணைகள்
 யாசகன் தட்டில்
 போய் விழுந்ததும் எழும்
 ருத்ரதாண்டவ சப்தம்
 காட்டிக்கொடுத்துவிடுகிறது
 நமது
 ஆணவத்தின் உயரத்தை
 
 - நா.கி.பிரசாத்
 
 அந்திவேளை
 
 பேசும் வெள்ளை வெயில்
 அதனோடு நேசம் வளர்க்கும்
 மெல்லிய பனித்துளி
 அணைப்பைத் தளர்த்தாத
 மாலை நிழல்
 ஒரே கோப்பையில்
 பருகிக்கொள்வதற்காய்
 வற்றாத தேநீர்
 நீள்வானில்
 உரசியபடி மிதக்கும்
 இரு மேகங்கள்
 பருவக்காற்றில் பேசிக்களிக்க
 பல கதைகள்
 வேறென்ன
 வேண்டும்
 புலரும் பொழுதுகளை நிரப்ப
 போர்வாளின்
 வேகத்தையொத்த
 நம் காதலுக்கு?
 
 
 -  நவீனா 
 
 |