மொபைல் கேம்: அள்ள அள்ள பணம்!



“நாள்பூரா கம்ப்யூட்டரையே பார்த்துக்கிட்டிருக்கியே... அதுல என்னதான் இருக்கோ?” என குடும்பமே எரிச்சலாக பேசிக்கொண்டிருந்தாலும் ஜென் இசட் இளசுகள் எதையும் கண்டுகொள்ளாமல் வைஃபையில் டீமாக இணைந்து சாகச த்ரில்லுடன் பப்ஜி விளையாடுவதை இனிமேலும் நிறுத்தப்போவதில்லை!

கம்ப்யூட்டர்களில் மட்டுமே விளையாடும் வசதி இன்று டேப்லட்டிற்கு நகர்ந்து மெல்ல பட்ஜெட் போன்களிலும் கூட விளையாடலாம் என்றளவுக்கு ஜனரஞ்சகமாகியுள்ளது!இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டான இந்தியாவை கச்சிதமாக மோப்பம் பிடித்த சீன நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா, யூஸூ ஆகியவை இந்திய மொபைல் விளையாட்டுகளில் முதலீடுகளை கொட்டத் தொடங்கியுள்ளன. அதனால்தான் இந்திய கணினி மற்றும் ஸ்மார்ட்போன் விளையாட்டுத்துறையில் இந்தளவுக்கு ராட்சஷ வளர்ச்சி!

இப்போது ரூ.90 கோடி முதலீட்டில் வளர்ந்துவரும் இந்திய விளையாட்டுத்துறை 2020ம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடாகப் பெறும் என மார்க்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். கம்ப்யூட்டரில் விளையாடுவதை விட வெளியில் சென்று விளையாடுவது நல்லது என்று கூறினாலும் அதற்கு மைதானங்கள் தேவை அல்லவா?

நகரின் வேறு பகுதியிலுள்ள நண்பர்களுக்கும் கூட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வைஃபையில் ஸ்மார்ட்போன்களை இணைத்தால் போதும். ஜாலியாக, குழுவாக இணைந்து இணைய மையத்திலிருந்து விளையாடி எதிரிகளைக் கொன்று குவித்து கொண்டாடலாம்.

இன்று இணையத்தில் ப்ரௌசிங் செய்பவர்களை விட கேம் விளையாடு பவர்கள் மூலமாகத்தான் இணைய சென்டர்கள் கொஞ்சமேனும் காசு பார்க்கின்றன. பல்வேறு நகரங்களிலுள்ள ஷாப்பிங் மால்களில் விஆர், ஏஆர் என கணினி விளையாட்டுகளின் அப்டேட் மிரட்டுகிறது.

மொத்தத்தில் சாதாரண விளையாட்டுகளிலிருந்து திகில், சாகசம், மூளையைப் பிழியும் கான்செப்ட் விளையாட்டுகள், செயற்கை நுண்ணறிவு விளையாட்டுகள் என அளவில்லாத கிரியேட்டிவிட்டி கொட்டிக்கிடக்கும் துறையாக கணினி மற்றும் மொபைல் விளையாட்டுத்துறை மாறிவருகிறது.

2016ல் உலகமெங்கும் 104.8 பில்லியன் டாலர்களை சம்பாதித்துத் தந்த கம்ப்யூட்டர் விளையாட்டுத்துறை, 2021ல் 151.7 பில்லியன் டாலர்களாக உயரும் என ஃப்ரோஸ்ட் அண்ட் சுலிவன் ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. கலி முத்திடுத்து!