தல புராணம் - டிராம் வண்டியின் கதை..!



‘‘திருமகளுலவும் சென்னை யெழும்பூர்
டிராம் வண்டி சேட்டில் போர்மேனாம்
அருமையுள்ள தியாகராய ஆச்சாரி
அர்ப்புத வண்டியின் புதுமையைக் கேள்’’

- இப்படியாகத் தொடங்குகிறது மெட்ராஸில் ஓடிய டிராம் வண்டி பற்றிய ஓர் அலங்காரக் கும்மி பாடல்!
ஆனால், இன்று இந்தியாவில் கொல்கத்தா நகரில் மட்டுமே இந்த டிராம் போக்குவரத்து சேவை இயங்கிவருகிறது.

இன்றைய தலைமுறையினர் ‘டிராம் வண்டினா என்ன..?’ என்றுகேட்டால் ‘மதராசப்பட்டிணம்’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிக்க டிராமில் ஏறும் காட்சியைத்தான் காட்டவேண்டும். ஏனெனில், இங்கே டிராமின் சேவை நின்று அறுபதாண்டுகள் ஓடிவிட்டன.

மெட்ராஸில் போக்குவரத்து என்பது 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வளரத் தொடங்கியது. ராணுவ பயன்பாட்டிற்காகத்தான் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ரயில்வே தொடங்கப்பட்டு 1856ம் வருடம் மெட்ராஸில் முதல் ரயில் இயக்கப்பட்டது.

பின்னர், சாலைகளில் இருப்புப்பாதைகளை அமைத்து டிராம் வண்டிகள் இயக்கும் முறை 1873ம் வருடம் அன்றைய கல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வண்டிகள் எஞ்சினோ, மின்சாரமோ இல்லாமல் குதிரைகள் மூலம் இழுக்கப்பட்டன. தொடர்ந்து இந்த டிராம் சேவை பம்பாயிலும் பிறகு மெட்ராஸிற்கும் வந்து சேர்ந்தது.

1892ம் வருடம், ‘மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி’ தொடங்கப்பட்டு மின்சார டிராம்வே பாதைகள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லண்டனைச் சேர்ந்த ‘ஹட்சின்சன் அண்ட் கோ லிமிடெட்’ நிறுவனத்திற்கு ஒரு லட்சம் பவுண்ட்டுகள் முதலீட்டில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
1895ம் வருடம் முதல் மின்சார டிராம்வே பாதை முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ‘‘இந்தியாவில் மற்ற நகரங்களில் மின்சார டிராம் வண்டிகள் ஓடத் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மெட்ராஸில் மின்சார டிராம் வண்டிகள் ஓடிவிட்டன. மட்டுமல்ல.

அப்போது லண்டனிலோ மற்ற இங்கிலாந்தின் பெரிய நகரங்களிலோ கூட மின்சார டிராம் வண்டிகள் வரவில்லை. மெட்ராஸ் வளர்ச்சியில் முன்
மாதிரியாக இருந்ததற்கு இது மற்றுெமாரு உதாரணம்...’’ என, ‘The Madras Tercentenary Commemoration Volume’ என்ற மலரின் ஒரு கட்டுரையில் சிம்சன் நிறுவனத்தின் இயக்குநர் ஹெச்.ஹெச்.சாப்மன் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.

குதிரைகள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் வண்டி என்பது அன்றைய நாளில் புதுமை. இதனால், மெட்ராஸ்வாசிகள் டிராமில் ஏற தயக்கம் காட்டினர். எனவே, முதலில் அதிகாரபூர்வமாக இயக்குவதற்கு முன் இலவச சேவையை டிராம் நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கினர்.
பின்னர், ஓர் அதிகாலை வேளையில் ஆறு வண்டிகளுடன் டிராமின் கட்டணச் சேவை தொடங்கியது. மைலுக்கு ஆறு பைசா, அதாவது ஓர் அணா வசூலிக்கப்பட்டது. இதற்காக கண்டக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டது. பின்னர் டிரைவர், கண்டக்டர் இருவருக்கும் காக்கி யூனிபார்ம்கள் எல்லாம் தரப்பட்டன.

அன்று வண்டிகளை இயக்கத் தேவையான மின்சாரம், டிராம் பாதையின் நடுவில் பூமியின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பருவமழை
களாலும் வெள்ளத்தாலும் இம்முறை பாதிக்கப்பட, சில மாதங்களிலேயே மேலே எலக்ட்ரிக் லைன்கள் அமைக்கப்பட்டு டிராம்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் ஐந்தாண்டுகளில் ‘மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி’ நஷ்டத்தைச் சந்திக்க,நிறுவனத்ைத விற்க ஏற்பாடாகியது. இதை, ‘தி எலக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்‌ஷன் கோ லிமிெடட்’ என்ற இங்கிலாந்து நிறுவனம் வாங்கி நான்காண்டுகள் வரை ஓட்டியது. இந்நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நிறைவில் 1904ம் வருடம், ‘மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் டிராம் வண்டிகளை இயக்க ஆரம்பித்தது. கடைசி வரை இந்நிறுவனமே டிராம் வண்டிகளை இயக்கி வந்தது.மின்சார விநியோகம் செய்யும் பொருட்டு, ‘மெட்ராஸ் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனம் வந்தது. இதுவே தென்னிந்தியாவில் மின்சாரம் வழங்கிய முதல் நிறுவனம். 1907ம் வருடத்திலிருந்து இந்நிறுவனம் பொதுமக்களுக்கும் மின்சாரம் விநியோகித்தது. தவிர, டிராம், ரயில்வே, துறைமுகம், பொது நிறுவனங்கள் பலவற்றுக்கும் மின்சார சப்ளை செய்தது.

மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வேஸைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் தன்னுடைய டிராம் சேவையை விரிவுபடுத்தியது. இதனால், மவுண்ட் ரோடு, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என நகரின் பல்வேறு பகுதிகளில் டிராம் வண்டிகள் ஓடின.

மட்டுமல்ல. பல இடங்களில் டிராம் செட்கள் அமைக்கப்பட்டன. வேப்பேரியில் அமைக்கப்பட்ட டிராம் செட்தான் இன்றைய பெரியார் திடல்! தவிர, இன்று மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருக்கும் மின்வாரியத்தின் அலுவலகமும் முன்பு டிராம் செட்டாக இருந்த ஒன்றுதான்.

1914ல் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து பீச் ரோட்டில் கஸ்டம்ஸ் ஹவுஸ் வரை டிராம்கள் இயக்கப்பட்டன. இந்தப் பாதை ஜார்ஜ் டவுனில் பிஸியாக உள்ள வணிகத் தெருக்களைத் தொட்டுச் செல்லும்படியாக இருந்தது. இதனால், பொதுமக்கள் டிராம் சேவையைப் பெரிதும் விரும்பிப் பயன்படுத்தினர். மயிலாப்பூரிலிருந்து உயர்நீதிமன்றத்திற்குச் செல்லும் வக்கீல்கள் பலரும் டிராம் வழியே வந்து சென்றனர்.

இந்தச் சேவை பொதுமக்களுக்கு ஒரு புதிய தளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இதற்கு முன்பு தங்கள் வசதிக்கேற்ப பயணம் செய்து வந்தவர்கள் இப்போது எல்லோருக்குமான ஒரு பொது வண்டியில் பயணப்பட்டனர். 1933ம் வருடம் மேலும் சேவை விரிவுபடுத்தப்பட்டது. முக்கியமாக ஒன்பது மைல் தூரம் டபுள் டிராக்போடப்பட்டது. இன்னும் ஏழரை மைல் தூரத்திற்கு ஒரு வழி டிராக் பாதையும் அமைக்கப்பட்டது. தவிர, பழைய ஓபன் டைப் வண்டி களுக்கு பதில் புதிதாக கதவுகள் மூடப்படும் வகையிலான வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் டிராம் சேவையைப் பயன்படுத்தினர்.

வெளித்தோற்றத்தில் ஓஹோவென டிராம் சேவை சென்றாலும் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சம்பளப் பிரச்னை புகைந்துகொண்டே இருந்தது. அன்று டிராம் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும் மெட்ராஸில் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தது.
1951ம் வருடம் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டது. இதனால்,
 டிராம் சேவை மூடுவிழாவை நோக்கிச் சென்றது.

1953ம் வருடம் ஏப்ரல் 12ம் தேதி இரவுடன் டிராம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது. அன்றைய மெட்ராஸ் முதல்வர் ராஜாஜி, ‘‘அரசால் டிராம் சேவையை கையகப்படுத்தி நிர்வகிக்க முடியாது...’’ என்று அறிவித்தார். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். பொதுமக்களும் கவலை தோய்ந்த முகத்துடன் தங்கள் பயணத்தை பஸ்ஸிலும், ரயிலிலுமாக மேற்கொள்ளத் தொடங்கினர்.

பத்திரிகைகளில் டிராம்...

மெட்ராஸ் டிராம்வே பற்றி அன்றைய இதழ்களில் வந்த செய்திகளைத் திரட்டி, தன்னுடைய, ‘தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள்’ நூலில் ஏ.கே.செட்டியார் தந்துள்ளார். இதன்மூலம் அன்றைய டிராமின் நிகழ்வுகள் பற்றி அறியலாம்.

டிராமில் அதிகக் கூட்டம்

‘‘இப்போது ஊர் கெட்டுக்கிடக்கிற கிடையில் டிராம்காரர்கள் கொஞ்சம் இருக்கிற ஸ்திதியைக் கவனித்து நடந்தால் நலமாகும். தினந்தோறும் காலை, மாலைகளில் ஒரு வரையறையின்றி ஜனங்களை ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதினால் அசுத்தம் ஜாஸ்திப்படுவதுடன் தொத்துவியாதியும் விருத்தியாக இடமாகும். ஆகையால், அதிகக்கூட்டம் அடையாமல் பார்க்க வேண்டும்...’’ - 1898ம் வருடம் ‘சுதேசமித்திரன்’ உபதலையங்கம்.
டிராம்வேயில் கட்டணக் குறைவு

சென்னையிலோடும் டிராம் பாதையில் சிற்சிலவிடங்களில் தவிர மற்றவிடங்களிலெல்லாம் அரையணாவுக்குக் குறையாமலே இதுபரியந்தம் கட்டணம் வாங்கி வந்தார்கள். ஆனாலும் வருகிற ஜூலை மாதம் 2ம் ேததி முதல் கட்டணக் குறைவேற்படுத்தியிருப்பதாய் டிராம்வே கம்பெனியார் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது காலணா கட்டணமாகக் கொடுத்துவிட்டு பின்னர் குறிப்பிட்டவிடங்களுக்குச் செல்லலாம்:எழும்பூரிலிருந்து பெரியமேட்டுக்கு, பெரியமேட்டிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு, சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பிரேஸர் பிரிட்ஜுக்கு, பிராட்வேயிலிருந்து ஜெனரல் போஸ்டாபீசுக்கு, தம்புச்செட்டித் தெருவிலிருந்து கஸ்டம் ஹௌஸுக்கு - 1906ம் வருடம் ‘இந்துநேசன்’.

மதராஸ் ஒற்றைக் கம்பி டிராம்வே

ராவ்சாகிப் டி.நம்பெருமாள் செட்டியார் மேற்குறித்த மோனோ ரெயில் டிராம்வேயைப் பற்றிக் கூறியதை ஆலோசிக்க முனிசிபல் ஸ்பெஷல் கமிட்டியார் கடந்த வெள்ளிக்கிழமை தினம் ஒன்று சேர்ந்தனர். மதிராசு முனிசிபல் இலாகாவுக்குள் 30 மைல் தூரம் இருப்புப்பாதை அமைப்பதாய் கமிட்டியார் கூறினார். - 1903ம் வருடம் ‘ஞானபோதினி’.

பேராச்சி கண்ணன் ராஜா