ஹோம் அக்ரி -313 வகையான கவர்ச்சிப் பொறிகள்!

கவர்ச்சிப் பொறிகளில் முக்கியமாக மூன்று வகைகள் இருக்கின்றன. ஒளி மூலமாக கவரக்கூடிய முறை, இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் நிறக்கவர்ச்சிப் பொறி.பலவிதமான பூச்சிகள் ஒளியால் கவரப்படுகின்றன. மழைக்காலங்களில் நம் வீட்டின் வாசலில் எரியும் மின்விளக்கை நோக்கி பல பூச்சிகளும் வருவதைப் பார்த்திருக்கிறோம்.

தாவரங்களைத் தாக்கும் பெரும்பாலான பூச்சிகள் வெளிச்சத்தால் கவரப்படுகின்றன. இவ்விதம் மின்விளக்கோ, எண்ணெய் விளக்கோ தோட்டத்தில் ஆங்காங்கே அமைத்து அதன் அருகில் நீரை ஒரு தொட்டியிலோ சட்டியிலோ வைக்கும்போது வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகள் இதில் விழுந்து இறந்து விடுகின்றன.

இந்தத் தண்ணீரில் கொஞ்சம் சோப்புக்கரைசலை விட்டுவைக்கலாம். இது நல்ல பலன் தரக்கூடிய முறை. இந்த முறையில் இரவில் மட்டும் விளக்கை பொருத்த வேண்டி இருப்பதால் 5 - 6 மணி நேரங்கள் எரியக்கூடிய டார்ச் லைட்டை உபயோகப்படுத்தலாம். சார்ஜ் செய்து உபயோகப்படுத்தக் கூடிய லைட்டாக இருந்தால் செலவு குறையும். ஒளி மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், வெள்ளை நிறத்தில் இருந்தாலும் ஒரே பலன்தான் கிடைக்கும்.

இதில் நீர் வைக்கும் சட்டியில் தினசரி நீரை மாற்ற வேண்டும். இலை உண்ணும் பூச்சிகள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், ஈக்கள் மற்றும் பலவிதமான பூச்சிகளும் கூட இதனால் கவரப்படுகின்றன. புற ஊதாக் கதிர்களை வெளியிடும் விளக்குகளை உபயோகப்படுத்தும்போது இன்னும் அதிகமான பூச்சிகள் கவரப்படுகின்றன.

ஆனால், இந்த விளக்குகளை வெட்ட வெளியில் உபயோகப்படுத்தும் போது நமக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்பிருப்பதால் இதைத் தவிர்ப்பது நல்லதுஇரண்டாவதாக, மிகவும் எளிதானதும் செலவு மிகவும் குறைவானதானதுமான நிறக்கவர்ச்சிப்பொறிகள். ஒரு சில பூச்சிகள் மஞ்சள் நிறத்தால் எளிதில் கவரப்படுகின்றன. ஒரு சில பூச்சிகள் நீல நிறத்தால் கவரப்படுகின்றன. இந்த நிறத்தில் இருக்கும் அட்டைகளில் கிரீஸ் அல்லது எண்ணெய் அல்லது பசைகளை தடவி வைப்பதன் மூலம் பூச்சிகள் இந்த அட்டைகளில் வந்து ஒட்டி பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

இந்த அட்டையிலிருந்து பூச்சிகளை வழித்து எடுத்துவிட்டு மீண்டும் கிரீஸ் அல்லது எண்ணெய் தடவி தொங்க விடுவதன் மூலம் தினசரி பூச்சிகளைப் பிடிக்கலாம். காய்கறி, பருத்தி மற்றும் பூந்தோட்டங்களில் வரும் வெள்ளை ஈ, லீஃப் மைனர் மற்றும் மாவுப்பூச்சிகளை இந்த முறையில் (மஞ்சள் அட்டை) நன்றாக கட்டுப்படுத்தலாம்.

இதை பழைய டின் அல்லது பெட்டிகள், பிளாஸ்டிக் அட்டைகள், வாளிகள் கொண்டு தயாரிக்கலாம். விசேஷமான பசைகளைக் கொண்ட அட்டைகள் கிடைக்கின்றன. நீல நிறத்தை இதே முறையில் பயன்படுத்தும் போது இலைப்பேன்கள் தொல்லையை ஒழிக்கமுடியும்.மூன்றாவதாக உள்ள முறை இனக்கவர்ச்சிப் பொறி. இந்த முறையில் ஆண்களைக் கவரக்கூடிய செயற்கையாக தயாரிக்கப்பட்ட பெண்களின் கவர்ச்சி ஹார்மோன்கள் ஒரு பெட்டியில் வைக்கப்படுகின்றன. இதை நோக்கிவரும் ஆண் பூச்சிகள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி தளர்ந்து இறந்து விடுகின்றன.

மற்றொரு முறையில், இந்த ஆண் பூச்சிகள் பெண் ஹார்மோன் இருக்கும் இடத்தில் அமர்ந்து பின் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். பெண் ஹார்மோன்களைத் தொட்டு பின் பறப்பதான மற்ற ஆண் பூச்சிகள் இவைகளைத் தொடரும். ஆணை ஆண் துரத்துவதால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு பூச்சி எண்ணிக்கை குறையும்.

ஆனால், இந்த முறையில் ஹார்மோன்கள் பல்வேறு விதமாக தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பூச்சிக்கும் வேறுவிதமான ஒன்றை உபயோகிக்கவேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்துவதில் இவை மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன. மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப்பொறிகளை அரசு வேளாண் அலுவலகங்களிலும், தனியார் கடைகளிலும் வாங்கலாம்.

இந்த பழ ஈக்களைக் கவர நமது வில்லேஜ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முறையும் நன்றாக வேலை செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த முறையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் ஆணி மூலமாக மேற்புறம் ஒரு சில துளைகள் இட வேண்டும். ஒரு சிறிய ஈ உள்ளே போகும் அளவுக்கு துளையிட்டால் போதும்.

பின்னர் இந்த பாட்டிலில் அரைப்பாகம் நீரை நிரப்ப வேண்டும். மேற்பகுதியின் மூடியில் துளையிட்டு ஒரு கருவாட்டை நீர் அருகில் லேசாக தொடும்படி தொங்க விடவேண்டும். இதன் வாடை பெண் இனக்கவர்ச்சி மணம் போலவே இருக்கும். இதை நம் தோள் அளவு உயரத்தில் தொங்க விடுவதன் மூலமாக பல பழ ஈக்களைக் கவரலாம். இதனால் கவரப்படும் ஈக்கள் இதன் அருகில் வந்ததும் எங்குமே போகாது. அங்கேயே சுற்றிச் சுற்றி இறந்து விடும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இந்த பொறிகள் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த மூன்று வகையான பொறிகளுமே இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அவசியமானவை. எப்படி கால்நடைகளை வளர்ப்பதும், சில அடிப்படையான மூலிகை செடிகளை வளர்ப்பதும் இயற்கை விவசாயத்துக்கு தேவையோ, அது போலத்தான் இந்த முறைகளும்.

இந்த முறைகள் பூச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் அதன் இருப்பையும், எண்ணிக்கையையும் கூட நமக்கு தெரியப்படுத்துகின்றன. இயற்கை விவசாயம் செய்யாதவர்கள் இந்த முறையை அவசியம் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது, பூச்சிமருந்துகளின் தேவையும், அளவும் குறையும்.

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாக நன்றாக வேலை செய்யக்கூடிய, மிகவும் பரவலாக இயற்கை விவசாயம் செய்யக்கூடியவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை பூச்சி விரட்டியை எப்படி தயாரிப்பது என்று இப்போது பார்ப்போம்.முதலில் எருக்கு, வேம்பு மற்றும் சோற்றுக் கற்றாழையை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பிரண்டை, ஊமத்தை, பீச்சங்கு, காட்டாமணக்கு, புங்கன், நிலவேம்பு, துளசி, ஆடாதோடை, காட்டாமணக்கு - இவைகளில் எவை கிடைக்கிறதோ அவற்றின் (குறைந்தது மூன்று வகைகள்) இலைகளை 25 கிலோ எடுத்து பிளாஸ்டிக் டிரம்மில் இடித்து போட வேண்டும்.

பின் 10 லிட்டர் கோமியம், 15 லிட்டர் நீர் கலந்து இந்த இலைகள் மூடுமளவு அமுக்கி ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேப்பங்கொட்டை தூள் 200 கிராம், எட்டி விதைத்தூள் 200 கிராம் மற்றும் புங்க விதைத்தூள் 200 கிராம் இட வேண்டும். புகையிலைச் சாறு, பச்சை இஞ்சி, பூண்டு சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை ஒன்றாகக் கலக்கி ஒருசில நாட்கள் வைக்கலாம். பின்னர் தேவையான அளவு வடிகட்டி எடுத்துக்கொண்டு 5 - 10 சதவீதம் கரைசலை உபயோகப்படுத்தலாம்.

அதாவது 5 - 10 லிட்டருள்ள இந்த மருந்தில் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இது ஒரு பொதுவான பூச்சி விரட்டி. சரியான கால இடைவெளியில் இதை உபயோகித்துக் கொண்டிருந்தால் எந்த பூச்சியும் வராது. இதை உபயோகிக்கும் போது அவசியம் ஒரு ஒட்டும் திரவத்தையும் பயன்படுத்த வேண்டும்.

ஒட்டும் திரவம் தயாரிக்க 100 கிராம் காதி பார் மஞ்சள் சோப்பை ஒரு லிட்டர் நீரில் ஒரு நாள் / இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். நன்றாகக் கலக்கியபின் இதை பத்திரப்படுத்தி வைக்கலாம். இந்தக் கரைசலில் 4 மிலி, ஒரு லிட்டர் மருந்துக்கு என்ற விகிதத்தில் கலந்து உபயோகப்படுத்தலாம்.இந்த மூலிகைப்பூச்சி விரட்டியை மாலை நேரத்திலோ, சூரிய உதயத்திற்கு முன்பாகவோ தெளிப்பது நல்ல பலன் தரும்.  

(வளரும்)
 
- மன்னர் மன்னன்