மத்திய அரசு Vs ரிசர்வ் வங்கி என்ன நடக்கிறது?அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான திரு. விரல் ஆச்சார்யா ஒரு நினைவு தின பேச்சில் முதலில் திரியைக் கிள்ளிப் போட்டார்.

“மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுகிறது; பொருளாதார விஷயங்களில் அரசியல் பார்வையினை உள்ளே தள்ள, மூக்கினை நுழைக்கிறது...” இதுதான் ஆரம்பம்.இதற்கு உடனடியாக நிதி அமைச்சகத்தில் இருந்து “ரிசர்வ் வங்கி எல்லை மீறுகிறது...” என்றும் “அரசும் ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள், அந்த பொறுப்பிலிருந்து வெளியேற முடியாது...” என்றும் காட்டமாக பதில் வந்தது.

இரண்டு பக்கங்களில் இருந்தும் அதற்குப் பின்பு மாறி மாறி பழி போடல்கள் நடக்க ஆரம்பித்தன. இந்த சிக்கல்களின் பின்னணி என்ன?
இந்தியாவின் பொருளாதாரப்பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம் ‘வாராக் கடன்கள்’. பெரு நிறுவனங்களின் கடன்கள் நிலுவையில் இருப்பதால் பல பொதுத்துறை வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன.

இதைத் தீர்க்க ரிசர்வ் வங்கி 14க்கும் மேற்பட்ட வங்கிகளை பி.சி.ஏ. என்கிற கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து புதிய கடன்கள் வழங்குவதை நிறுத்தியது. கொடுத்த கடன்களை வசூலிக்கவும், அப்போதும் வாராத கடன்களின் நிறுவனங்களை ‘திவால் சட்டத்தின்’ கீழ் நிறுத்தவும் அறிவுறுத்தியது.

மத்திய அரசுக்கோ அடுத்த வருடத்தில் தேர்தல். நிறுவனங்களுக்கான கடன் சுழற்சி இல்லாமல் பொருளாதாரம் முன்னேறாது. பொருளாதார வளர்ச்சி இல்லாமல் வாக்காளர்களைச்சந்திக்க முடியாது. அதனால் பெருநிறுவனங்களுக்கு இல்லாமல் போனாலும், சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்களை விரிவுபடுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை வற்புறுத்தியது.

அதை ரிசர்வ் வங்கி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இது முதல் சிக்கல். இந்த முதல் சிக்கலில் அரசின் பார்வை - கடன்களை முழுமையாக ரத்து செய்தால் பொருளாதார சுழற்சி இயங்காது. அதனால் வாராக் கடன்கள் சிக்கல் இருந்தாலும், வங்கிகள் கடன் தர வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் பார்வை- ஏற்கனவே 10 லட்சம் கோடிகளுக்கு மேல் வாராக் கடன்கள் இருக்கும் போது, எந்தவிதமான பிடிமானமும் இல்லாத சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்கள் அளித்தால் அது இன்னும் சுமையை ஏற்றும். மேலும், பெருநிறுவனங்களுக்கு சொத்துகள் இருக்கிறது.

விற்று ஒரளவிற்கு அசலை ஈடு செய்யலாம். சிறு, குறு நிறுவனங்கள் பெரும்பாலும் பெரு நிறுவனங்களை நம்பி தொழிலில் இருப்பவை. அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் பெருநிறுவன வாராக் கடன்களில் ஏற்கனவே சிக்கலில் இருப்பவை. இப்போது அவர்களுடைய கடன் சுமையை ஏற்றினால், அதுவும் இன்னொரு அடுக்கு வாராக் கடனில் போய் நிற்கும். ஆகவே அதைத் தர இயலாது.

இரண்டாவது சிக்கல், பெரு நிறுவன வாராக் கடன்களில் பவர் நிறுவனங்களுக்கு (மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், நீர் ஆலைகள்) மட்டுமாவது விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்பது மத்திய அரசின் பார்வை. ரிசர்வ் வங்கி சொல்வதுபோல் ஒரு துறைக்கு விலக்கு அளித்தால், வரிசையாக மற்ற துறைகளும் லாபி செய்வார்கள். அதனால் அதைச் செய்ய முடியாது.

மூன்றாவது சிக்கல் - டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டுப்பாட்டு ஆணையத்தை (Payments Regulator Board) ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லாமல் நேரடியாக மத்திய அரசே நிர்வகிக்கும் என்று வட்டல் கமிட்டியின் பரிந்துரைகளை முன்வைத்து அரசு அடம் பிடிக்கிறது.
ரிசர்வ் வங்கி சொல்வது நாட்டின் எல்லாவிதமான பணப் பரிவர்த்தனைகள் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டிஜிட்டல் ஆணையமும் தங்களுக்குக் கீழே வருதல் அவசியம் என்று தர்க்கரீதியாக மத்திய அரசுக்கு செக் வைக்கிறது.

வட்டல் கமிட்டி பரிந்துரையானது ரிசர்வ் வங்கிக்கு உள்ளேயே, ஆனால் தனியாக ஓர் ஆணையம் தேவை என்று சொல்கிறது. இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.இதைத் தாண்டி வட்டி விகிதம், பணவீக்க மேலாண்மை, வாராக் கடன்கள் உருவானதற்கு யார் பொறுப்பு என்கிற சீண்டல்கள் இரண்டு பக்கமும் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

இதற்கு நடுவில் 83 வருட ரிசர்வ் வங்கி வரலாற்றில் எந்த மத்திய அரசும் பயன்படுத்தாத பிரிவு ஏழு என்கிற ரிசர்வ் வங்கியின் தனி சுதந்திரத்தினைத் தாண்டி, மத்திய அரசால் உள்ளே நுழைய முடியும் என்கிற அரசியல் ஓட்டையை மத்திய அரசு பயன்படுத்த முடிவெடுத்தது, இதை இன்னும் ஆழமான சிக்கலாக மாற்றியிருக்கிறது.இப்போதைக்கு நவம்பர் 19ம் தேதி கூடப் போகும் ரிசர்வ் வங்கியின் சந்திப்புதான் இந்த இரு தரப்பு வார்த்தை யுத்தத்திற்கு முடிவு கட்டும். அதுவரை இந்த வார்த்தை யுத்தங்களும், வரம்பு மீறல்களும் நிற்காது.

ஏற்கனவே சிபிஐ, ஈடி, செபி என மத்திய அரசு தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டப் போய், அதில் உருவாகி இருக்கும் பிரச்னைகளையும், சட்ட சிக்கல்களையும் உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டி இருக்கிறது. இப்போது இது. மொத்தத்தில் இதில் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்களும், சாமான்யர்களும்தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்களும் அரசியல் அமைப்பு சட்டமும் வழங்கிய சுதந்திரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்தும் ரிசர்வ் வங்கியும் இப்படி பொதுவெளியில் சண்டை போட்டால்... மக்கள் எங்கே போவார்கள்?                        

செனகா