மீண்டும் கருப்பட்டி கடலை மிட்டாய்!‘‘‘கடக்’னு சத்தம் கேட்டாலே முதல்ல ஞாபகம் வர்றது கடலை மிட்டாய்தான். ஒவ்வொரு கடியா கடிச்சு, மென்னு சாப்பிட்ட பிறகும் அரை நாளுக்கு அந்த தித்திப்பு சுவை அப்படியே நாக்குல நிக்கும்.
ஒரு காலத்துல குடும்பம் குடும்பமா சேர்ந்து குடிசைத்தொழிலா பண்ணிக்கிட்டிருந்த கடலை மிட்டாய் தயாரிப்புத் தொழில் இப்ப கார்ப்பரேட் கம்பெனிகள்கிட்ட போயிடுச்சு. சின்ன வயசுல நான் சாப்பிட்ட கடலை மிட்டாயோட சுவையை எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல...’’

ஏக்கத்துடன் பேசுகிறார் ஸ்டாலின். தான் சுவைத்த தின்பண்டங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘மதர்வே’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி வழக்கொழிந்துபோன பாரம்பரிய தின்பண்டங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் கருப்பட்டி கடலை மிட்டாய்க்குத் தனி மவுசு.

‘‘சொந்த ஊர் விருதுநகர் பக்கத்துல காரியாபட்டி. வீடு, ஸ்கூல், படிப்புனு வெளியுலகமே தெரியாம வளர்ந்தேன். பிளஸ் டூவுல நல்ல மார்க். வீட்டுல எஞ்சினியரிங் சேர்த்துவிட்டாங்க. அப்புறம் எலெக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் நிறுவனத்துல ஆராய்ச்சிப் பணி.

கை நிறைய சம்பளம் கிடைச்சாலும் செஞ்ச வேலைக்கான ரிசல்ட்டை கண்ணுல பாக்கவே முடியல. எந்த பொருள் செஞ்சாலும் பத்து நாட்களுக்கு கண்காட்சியில வச்சிருந்து மூலையில போட்ருவாங்க. மக்களோட பயன்பாட்டுக்கு எதுவுமே வராது.

இது ரொம்பவே மன நெருக்கடியைக் கொடுத்துச்சு. அப்ப என் அண்ணன், ஃப்ரெண்ட்ஸ் மூலமா குழந்தைகள் கூட பழக வாய்ப்பு கிடைச்சது. அது என் வாழ்க்கையையே மாத்திடுச்சு...’’ என்கிற ஸ்டாலின் தின்பண்டம் நோக்கி தன் பயணம் திரும்பிய நாட்களை நினைவு கூர்ந்தார்.

‘‘குழந்தைகள் கூட இயங்க ஆரம்பிச்சதும் வேலையை விட்டுட்டேன். ஆறு மாசமா வீட்டுக்குக் கூட ஒழுங்கா போகலை. அப்ப நண்பர் ஒருவர், ‘இங்க ஒரு நல்ல தின்பண்டம் கூட இல்லை. எல்லாமே பிராண்டாதான் இருக்கு. சாக்லேட்னு கூட கேட்க மாட்டேங்கிறாங்க. பிராண்ட் பெயர் சொல்லித்தான் கேட்கறாங்க. அந்தளவுக்கு மக்கள் தின்பண்டங்களையே மறந்துட்டாங்க.

குழந்தைகள் மேல இவ்வளவு ஈடுபாட்டோட இருக்குற நீ ஏன் அவங்களுக்காக நல்ல தின்பண்டங்களைச் செய்யக்கூடாது...’னு கேட்டதோடு, கைல கொஞ்சம் பணத்தையும் கொடுத்து என்னை அனுப்பி வைச்சார். ‘தின்பண்டங்கள் தயாரிக்கிற தொழிலைச் செய்யப் போறேன்...’னு வீட்டுல சொன்னப்ப யாரும் சம்மதிக்கலை. ‘நல்ல வேலையை விட்டுட்டு ஏன் இப்படி காடு மலைல சுத்தித் திரியிறே...’னு கவலைப்பட்டாங்க.

எதையும் காதுல போட்டுக்காம சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டினு ஊர் ஊரா சுத்தினேன். கடலை மிட்டாய் செய்ற எல்லா இடங்களுக்கும் போய் அவங்ககிட்ட ஐடியா கேட்டேன். ‘நாங்களே இந்தத் தொழில்ல கஷ்டப்படுறோம், லாபகரமா இல்லை, வேலையாட்கள் கிடைக்க சிரமமா இருக்கு, சரியான மாஸ்டர் இல்லைன்னா தொழிலே நின்னு போயிடும், உற்பத்தியில நிறைய பிரச்னைகள் இருக்கு, சின்ன வயசில இருந்தே இதுல இருக்கணும்...’னு சொன்னாங்க.

ஒருத்தர் கூட பாசிட்டிவா பேசல. பெரிய கம்பெனிகளுக்குப் போனா கேட்டுக்குள்ளயே விடலை.நான் என்ன கேட்க வர்றேன்னு கூட அவங்களுக்குப் புரியல. போற இடமெல்லாம் பை நிறைய கடலை மிட்டாயை அள்ளிட்டு வருவேன்.

ஒவ்வொரு ஊர் கடலை மிட்டாய்க்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கும். ஆனா, நான் சின்ன வயசுல சாப்பிட்ட கடலை மிட்டாயோட சுவையை எதுவுமே கொடுக்கலை. ஏற்றுமதிக்கு போற குவாலிட்டில கூட அந்த சுவையில்லை.

இந்த நிலைல தஞ்சாவூர் கூடலிங்கம் ஐயா கிட்ட நான் தேடுன கடலை மிட்டாயைக் கண்டுபிடிச்சேன். அவர்தான் இந்தத் தொழிலை எனக்கு கத்துக்கொடுத்தார்...’’ சடசடவென பேசின ஸ்டாலின், கருப்பட்டி கடலை மிட்டாய் பக்கம் போனதற்கான காரணங்களையும்
விவரித்தார்.‘‘தின்பண்டங்கள் செய்யலாம்னு முடிவு செஞ்சபிறகு மனசு தானாவே கடலை மிட்டாய் பக்கம் போயிடுச்சு. கடலை மிட்டாய் பத்தின விஷயங்களை இணையத்துல தேடிப்பார்த்தேன். அப்பதான் கருப்பட்டி கடலை மிட்டாய்னு ஒண்ணு இருந்ததே தெரிய வந்துச்சு.

60 வருடங்களுக்கு முன்னாடி அதை செஞ்சிட்டு இருந்தாங்க. இப்ப அது வழக்கொழிஞ்சு போச்சு. அதனால அதை கையில எடுத்தேன். கடலை, கருப்பட்டி, சுக்கு, ஏலக்காய் பொடி.. இந்த நாலும்தான் மூலப்பொருள்.

மிஷின் எதையும் பயன்படுத்துறதில்லை. தின்பண்டம் செய்றதே பேரானந்தமா இருக்கு. ஒவ்வொரு நாளும் புது வேலை. இன்னைக்குப் போய் அடுப்பு முன்னாடி நின்னா அடுப்பு ஒரு பாடம் சொல்லிக்கொடுக்குது...’’ என்கிற ஸ்டாலி னுக்கு மனைவி கவுதமியும், பெற்றோரும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

கடலை மிட்டாயின் பளபளப்புக்கும், அதன் சுவைக்கும் ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இந்த கருப்பட்டி கடலை மிட்டாய்கள் உருவாகின்றன. இவை வெறும் இனிப்புப் பண்டம் மாத்திரம் அல்ல; மலிவாகக் கிடைக்கும் புரதச் சத்துக்கள். நமது நாக்கைக் கட்டிப்போட்டிருக்கும் இந்த கடலை மிட்டாய்க்குப் பின்னே நாம் என்றுமே சந்தித்திராத மக்களின் உழைப்பும், ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் ஒளிந்து கிடக்கிறது.

எந்நேரமும் கொதிக்கும் உலை அடுப்பில் சூடு பட்ட கைகள்தான் கடலை மிட்டாயை அழகழகாக கட் செய்கின்றன. அவைதான்  பெட்டிக் கடைகளிலிருக்கும் கண்ணாடி பாட்டில்களில் மின்னுகின்றன.‘‘இப்ப மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இனி மத்த தின்பண்டங்களையும் கொண்டு வரணும்; கொண்டு வருவேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்டாலின்.

த.சக்திவேல்