எங்கே நிம்மதி..?பகவான் - 2

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் உலக மக்கள் ஒரு மாதிரியாக ‘ரெஸ்ட்லெஸ்’ ஆக உணர்ந்தார்கள்.அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பனிப்போரால் உலகமே எதிர் எதிராக இரு தரப்பில் நின்று முறுக்கிக் கொண்டிருந்தது.இருதரப்பு நாடுகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக அரசியல் ஸ்திரத்தன்மை பெரும்பான்மையான நாடுகளில் பாதிக்கப்பட்டிருந்தது.

கம்யூனிஸமும் இல்லாமல், கேப்பிடலிஸமும் இல்லாமல் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் கொடுத்துவிட்டு அரசாங்கங்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தன.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரச்னை.

நம் நாட்டைப் பொறுத்தவரை ஜனநாயகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக எமர்ஜென்ஸி வெறியாட்டங்கள் நடந்ததின் சுவடு அடங்கியிருக்கவில்லை. புதியதாக அமைந்த அரசும், பதவிச்சண்டையால் பாதியிலேயே கவிழ்ந்தது. மீண்டும் எமர்ஜென்ஸியை நடைமுறைப்படுத்திய இரும்புத் தலைவியே நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்து, மக்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்.

உலகின் எல்லாப் பிரச்னைகளின் சுமையும் கடைநிலையில் இருக்கும் சாதாரண மனிதர்களின் தலையில்தானே விடியும்?

மனிதர்கள் நிம்மதி தேடி அலைந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் உலக மக்களில் பத்தில் ஒருவரை போருக்கு பலி கொடுத்தபோது போன நிம்மதி அது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரும்பவே இல்லை.‘எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்பதுதானே கடைசி நம்பிக்கை?

மேலே இருப்பவன் யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.எனவேதான் ‘நான்தான் கடவுள்’ என்று அறிவித்துக் கொண்டவர்களுக்குப் பின்னால் பகுத்தறிவை அடகு வைத்துவிட்டு திரண்டார்கள்.உலகெங்கும் ஆன்மீகம், விலை போகக்கூடிய தயாரிப்பாக மாறிய காலகட்டம் இதுதான்.

ஒவ்வொரு நாட்டிலுமே திடீர் திடீரென கார்ப்பரேட் சாமியார்கள் உருவானார்கள். மதத்துக்கும், மரபுக்கும் கணிசமான பங்களிப்புகளைக் கொடுத்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. நிம்மதி தேடியலைந்த மக்களை ஒருவகையில் ஆற்றுப்படுத்தினார்கள் என்பதையும் ஏற்றுதான் ஆகவேண்டும்.

ஊடகங்கள் இந்த சாமியார்களை எல்லா வகையிலும் பிரபலப்படுத்தின. பிரபலமடைந்த சாமியார்கள் தங்கள் பிரபலத்தைத் தக்க வைத்துக்கொள்ள அதிகார மையங்களாக உருவெடுத்தார்கள்.நேரடியாகவும் / மறைமுகமாகவும் அரசியலிலும் ஈடுபட்டார்கள். ஆட்சிகளை உருவாக்கினார்கள். கவிழ்த்தார்கள். சாமியார்கள் மீது கொலை / வன்புணர்வு குற்றச்சாட்டுகள் எல்லாம் இன்றுவரை சகஜம்தானே?

உலக வரலாறு நெடுகிலுமே அரசு என்கிற அமைப்பின் பின்ன ணியில் அந்தந்த பிரதேச மதகுருமார்களின் செல்வாக்கு கொடிகட்டித்தான் பறந்திருக்கிறது.எனினும் நாம் குறிப்பிடக்கூடிய காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானது. உலகமயமாக்கலுக்கு ஒருமாதிரியாக உலகம் தயாராகிக் கொண்டிருந்த நெருக்கடியான காலம்.

ஏதாவது அதிசயம் நிகழ்ந்து எல்லாமே மாறிவிடாதா என்று அத்தனை பேரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம். எனவேதான் அற்புதங்களை எங்களால் நிகழ்த்த முடியுமென்று சொல்லியவர்களை கேள்வி ஏதும் கேட்காமல் அவர்களுக்குப் பின்னால் திரண்டார்கள்.
ஆரஞ்சு மனிதர்கள் என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷியர்கள் பெரும் இயக்கமாக, மதமாக, கலாசாரமாக உருவெடுத்ததற்கு வலுவான சமூக, அரசியல் பின்னணி இப்படித்தான் ஏற்பட்டது.

ஆரஞ்சு உடை, கழுத்தில் வித்தியாசமான மணி மாலையோடு கூட்டம் கூட்டமாகக் கிளம்பிய சந்நியாசிகள் கலர்ஃபுல்லாக இருந்தார்கள். அறிவுபூர்வமாக இருந்தார்கள். அப்போது பேசாப்பொருளாக இருந்த ‘செக்ஸ்’, அவர்களுடைய கூட்டத்தில் பேசுபொருளாக இருந்தது என்பதைக் கேள்விப்பட்டதுமே மக்கள், காந்தமாக ஈர்க்கப்பட்டார்கள்.

அந்த இயக்கத்துக்குத் தலைவராக விளங்கிய ஓஷோ என்று அழைக்கப்பட்ட ரோஹன் சந்திர ரஜ்னீஷ் குறித்த செய்திகளை மக்கள் விரும்பி வாசித்தார்கள். கிட்டத்தட்ட நூறு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள், தனி விமானங்கள், அமெரிக்காவில் தனக்கென்று தனியாக ஒரு நகரம் என்று கோலோச்சி வாழ்ந்தார் பகவான். ஆம், பக்தர்கள் ரஜ்னீஷை பகவான் என்றுதான் அழைப்பார்கள். ஊடகங்கள், அவரை செக்ஸ் சாமியார் என்று செல்லமாக அடைமொழி இட்டுப் பேசும்.

1953ல் தன்னுடைய 21வது வயதில் ஞானம் பெற்றதாக ரஜ்னீஷ் அறிவித்திருந்தார். அவருடைய அபாரமான சொற்பொழிவுகள் மற்றும் பிரமாதமான எழுத்தாற்றல் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களை எளிதில் ஈர்த்தார்.எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மூலமாக ரஜ்னீஷின் புகழ் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தது.

அவருடைய எழுத்தும், பேச்சும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மாற்றப்பட, தூர தேசங்களிலும் ரஜ்னீஷுக்கு பக்தர்கள் உருவானார்கள்.வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமாகப் பெருக ரஜ்னீஷின் இயக்கம் பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பத் தொடங்கியது. பக்க விளைவாக புனேவில் இருந்த தலைமை ஆசிரமத்துக்கு எக்கச்சக்கமாக வருமானமும் பெருகியது.1980களின் தொடக்கத்தில் ‘The ashram’ என்கிற பெயரில்
ரஜ்னீஷின் ஆசிரமம் குறித்து எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படம், ஐரோப்பாவில் ஆர்வங்களைக் கிளப்பியது.

பொதுவாக ஒரு மனிதரின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் செக்ஸ், வன்முறை, பணம். ரஜ்னீஷ் ஆசிரமம் குறித்த செய்தி களில் செக்ஸ், பணம் பற்றிய எதிர்பார்ப்புகள் கிளப்பப்பட்டன.பகவானை நாடுபவர்களுக்கு பாலியல் மற்றும் பணரீதியான திருப்தியான வாழ்க்கை அமைவதாக மக்கள் நம்பும் வகையிலான கதைகள் பரப்பப்பட்டன.ரஜ்னீஷின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் உலகம் முழுக்க இருந்தார்கள்.

தங்கள் பகவானைப் பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளை அவர்களே திட்டமிட்டுப் பரப்பினார்கள்.பாசிட்டிவ்வாக மட்டுமே ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால், அந்தச் செய்திகளை நம்ப மறுப்பது மனித மனம். எனவேதான் பத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் பகவானைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளும் அவ்வப்போது அவர்களாலேயே பரப்பப்படும். மேலும், ‘There is no such thing as bad publicity’ என்றொரு பிரபலமான விளம்பர மந்திரமும் உண்டுதானே?

இம்மாதிரியான விளம்பர முயற்சிகளும், வாய்வழி கட்டுக் கதைகளும் பல்லாயிரக்கணக்கானோரை பகவானை நோக்கி ஈர்க்க வைத்தன.
தன்னிடம் வந்தவர்களை தக்கவைக்கும் திறமை, பகவானுக்கும் இருந்தது.அவரிடமிருந்த எல்லையில்லா வாசிப்பு, இயல்பாகவே அமைந்திருந்த இந்திய ஞானம், தெளிவான போதிப்புத் திறன் உள்ளிட்ட பண்புகள், வந்தவர்களை வளைத்துப் போட உதவின.

உல்லாசமான ஹிப்பி கலாச்சாரம் அலுத்துப் போயிருந்த சூழலில் பகவான் முன்வைத்த அறிவார்ந்த ஆன்மீகம், சுலபமாக பிரபலமானதில் ஆச்சரியம் ஏதுமில்லை.பகவானின் தரிசனத்துக்காக பக்தர்கள் கோடிகளைக் கொட்டினார்கள். குடும்பம், வேலை, நாடு எல்லாவற்றையும் உதறிவிட்டு அவருடைய ஆசிரமத்தில் சந்நியாசிகளாகச் சேர்ந்தார்கள்.அதுவரை தாங்கள் கற்றதையும், பெற்றதையும் துறந்தார்கள். பகவான் போதிப்பதே வேதம், அவர் பேசுவது அறிவு என்று நம்பினார்கள்.

ஒருகட்டத்தில் உலகமெங்கும் இரண்டரை லட்சம் உறுப்பினர்கள், 32 நாடுகளில் 575 மையங்கள் என்று விஸ்வரூபமெடுத்தது ஓஷோவின் அரசாங்கம்.
இதை அரசாங்கம் என்று சொல்லலாம்தானே?

பகவான் கோபித்துக்கொள்ள மாட்டார்.1981ல் திடீரென்று பகவான் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமெரிக்காவில் குடியேறி னார்.ஒரேகான் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்கிற ஒரு நகரையே நிறுவினார். ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் அந்நகரிலேயே வசிக்கத் தொடங்கினார்கள். லட்சக்கணக்கானவர்கள் பகவானின் தரிசனம் நாடி, அந்நகருக்கு வரத் தொடங்கினார்கள். விமான நிலையத்தில் தொடங்கி, தங்கும் விடுதிகள் வரை ஆசிரமத்தாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டன.

பகவான் உருவாக்கியது உலகுக்கு ஒரு புதிய சமுதாயம். நிம்மதியாக வாழ்வதற்கு புதிய வழிகாட்டுதல்களை அவர் ஏற்படுத்தினார்.புதியதாக உருவான இந்த சமுதாயத்துக்கும், ஏற்கனவே அங்கே நிலைகொண்டிருந்த சமுதாயத்துக்கும் முரண்கள் தோன்றின.உள்ளூர் பத்திரிகைகள், வந்தேறிகளான ரஜ்னீஷியர்களைக் குறித்து எதிர்மறையாக எழுதின. பதிலுக்கு ‘தி ரஜ்னீஷ் டைம்ஸ்’ என்கிற புதிய பத்திரிகையை உருவாக்கி தங்கள் தரப்பை இவர்கள் முன்வைக்க முயன்றனர்.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசாங்கம் தலையிடத் தொடங்கியது. ஒருகட்டத்தில் அமெரிக்கர்களை வளைத்துப்போட்டு அமெரிக்காவுக்கே ரஜ்னீஷ் அதிபராகக்கூடும் என்கிற அச்சம்கூட அவர்களுக்கு நிலவியது.உலகையே கட்டியாளும் கனவில் திளைத்திருந்த அமெரிக்கா, தங்கள் அரசுக்குள்ளேயே தனி அரசாங்கம் நடத்திய ரஜ்னீஷைக் கண்டு மிரண்டது.

பகவானுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாகின. அவர்மீது வழக்குகள் பாய்ந்தன. ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்து அவரைக் கட்டுப்படுத்த நினைத்தார்கள். சூழ்ச்சிகளை வென்று தாய்நாடு திரும்பினார் பகவான். அமெரிக்க முயற்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் இங்கிருந்தே பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ஓரளவுக்கு இந்தத் தொடரின் பின்னணியை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்.
பகவான் யார்?

அவரைப் பின்தொடர்ந்த ஆரஞ்சு மனிதர்கள் யார்?
உலகையே எப்படி திரும்பிப் பார்க்க வைத்தார்கள்?
என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
ஏன் வீழ்ந்தார்கள்?
பகவானால் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்