PF பணத்தில் இலவச மகளிர் பேருந்து!



வயதான காலத்தில் கிடைக்கும் பென்ஷன் பணத்தை என்ன செய்வார்கள்..? மெடிக்கலுக்கு செலவழிப்பார்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். இதுதானே நடைமுறை?

இதற்கு மாறாக, பேருந்தை இலவசமாக இயக்குவார்களா?

ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் பென்ஷன் பணத்தில் பெண்கள் கல்லூரிக்குச் செல்ல பேருந்தை இயக்கி வருகிறார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியுடன் ராஜஸ்தானிலுள்ள சுரி என்ற பூர்வீக கிராமத்துக்கு சென்றார் ராமேஷ்வர் பிரசாத். வழியில் மழை பெய்யத் தொடங்க, காரின் வேகத்தைக் குறைத்தவர் சாலையோரத்தில் பேருந்தை எதிர்பார்த்து கல்லூரி செல்வதற்காக தவிப்புடன் நின்ற மாணவி களைப் பார்த்தார்.

விவரம் கேட்டு காரில் அவர்களை ஏற்றிக் கொண்ட ராமேஷ்வர் பிரசாத் யாதவ், பதினெட்டு கி.மீ தொலைவிலுள்ள காட்புட்லியிலுள்ள கல்லூரியில் அவர்களை இறக்கிவிட்டார். காரில் மாணவிகளிடம் பேசும்போதுதான், தினசரி கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வரவே 6 கி.மீ நடக்க வேண்டுமென்பதையும், அதன்பிறகு அரசு பேருந்துக்கு மணிக்கணக்கில் காத்திருந்து இளைஞர்களின் கேலி கிண்டல்களைச் சகித்து கல்லூரிக்கு வரவேண்டுமென்பதையும் ராமேஷ்வர் தெரிந்துகொண்டார்.

இதற்கு ஏதாவது செய்யலாமா... என அவரது மனைவி தாராவதி கேட்க, கல்லூரிப் பெண்களுக்கான பேருந்து திட்டம் பிறந்தது. “பென்ஷனிலிருந்து ரூ.17 லட்சமும், சேமிப்பிலிருந்து ரூ.2 லட்சமும் எடுத்து பேருந்தை வாங்கினோம். இறந்து போன எங்களது மகள் ஹேமலதாவின் உருவத்தை கல்லூரி செல்லும் பெண்களின் முகத்தில் பார்த்து மகிழ்கிறோம்...” என்கிறார் ராமேஷ்வர்.

ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள பவாலா, காயம்புரா பாஸ், பனேதி, சுரி ஆகிய ஊர்களிலுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல ராமேஷ்வரின் இலவச பேருந்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தினசரி தாமதமாக கல்லூரிக்குச் சென்று வருகைப்பதிவு இழந்தவர்களும், கல்லூரி தொலைவிலிருந்ததால் படிப்பைக் கைவிட நினைத்தவர்களும் கூட இன்று மகிழ்ச்சியாக இலவச பேருந்தில் பயணித்து படிப்பைத் தொடர்ந்து வருகிறார்கள்.

அதேசமயம் மாதம்தோறும் பேருந்திற்கான டீசல் செலவு ரூ.36 ஆயிரம், ஓட்டுநர், நடத்துநர் சம்பளம், சாலைவரி ரூ.5 ஆயிரம் என எகிறும் செலவுகளை முகம் சுளிக்காமல், அரசை எதிர்பார்க்காமல் செய்து வருகிறார் ராமேஷ்வர் பிரசாத் யாதவ்.

தொகுப்பு: ச.அன்பரசு