#metooசென்ற இதழ் தொடர்ச்சி...

பயிற்சிக் காலத்தில் அவளுக்கு பழக்கமான இஸ்மாயிலுக்கு குழந்தை பிறந்திருந்தது.
‘‘எண்ணூர் போகணும்...’’
‘‘கீழ இறங்கி வா...’’‘‘வாட்?’’
‘‘உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்...’’

கரும்பச்சை நிற நைட்டியுடன் எட்டிப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் ‘‘அடப்பாவி...’’ என்றாள்.
‘‘நேத்து இஸ்மாயில் உனக்கு தகவல் சொன்னப்பவே நீ கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தேன்...’’
‘‘ஒட்டு கேட்டியா?’’
‘‘இல்ல. நீ பேசினது காதுல விழுந்தது...’’
‘‘பத்தே நிமிஷம்...’’

சொன்னபடி அடுத்த அறுநூறாவது நொடியில் வந்தாள். உச்சி வெயிலில் கே.கே.நகரில் இருந்து எண்ணூர் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. மருத்துவமனையில் இஸ்மாயிலின் குழந்தையைத் தூக்கவே ராதா அஞ்சினாள். ‘‘ஏம்மா, நாளைக்கே உனக்கு குழந்தை பிறந்தா என்ன செய்வ?’’ என்று நர்ஸ் கிண்டலடித்தபோது ராதாவின் முகம் சிவந்தது. உதடுகள் அதிர சிரித்து சமாளித்தவள், ‘‘பாரு கிருஷ் இந்த நர்ஸ் சொல்றதை...’’ என்று காதில் முணுமுணுத்தாள்.

குப்பென்று வியர்த்தது. இருப்புக் கொள்ளாமல் நாற்காலியில் அசைந்தேன். தயக்கத்துடன் குழந்தையின் அருகில் சென்ற ராதா, முதலில் அதன் சருமத்தை தொட்டுப் பார்த்தாள். எப்படி தூக்க வேண்டும் என்று இஸ்மாயிலின் அப்பா கற்றுத் தர அதை அப்படியே கடைப்பிடித்தாள். அதன் பிறகு கிளம்பும் வரை குழந்தையை தன் மடியை விட்டு ராதா இறக்கவேயில்லை.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவள் செல் ஒலித்தது. இனம் புரியாத உணர்வு மனதை ஆக்கிரமிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தேன். இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், என் காதுக்கருகில் குனிந்தாள்.

‘‘இப்படிக் கூட அப்பா இருப்பாங்களா?’’
அமைதியாக இருந்தேன்.
‘‘அன்பான அப்பா கிடைச்சவங்க பாக்கியசாலிங்க இல்லையா?’’
நதியின் ஆழம் முகத்தில் அறைந்தது.

‘‘பீச் போயிட்டு போகலாமா?’’
வண்டியை பேலன்ஸ் செய்தேன். இல்லாவிட்டால் இருவருமே விழுந்திருப்போம்.
‘‘மெரீனா வேண்டாம். எலியட்ஸ் போகலாம்...’’ என்ற படி தன் முடியை கொத்தாகப் பிடித்து ரப்பர் பேண்டை மாட்டினாள்.

நம்ப முடியவில்லை. சென்னை முழுக்க என்னுடன் நகர்வலம் வருபவள், ஒருபோதும் கடற்கரைக்கு வந்ததில்லை. சீக்கிரமே வேலை முடிந்த ஒருநாள் ‘‘பீச் போகலாமா..?’’ என்று கேட்டதற்கு, ‘‘எதுக்கு? இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா?’’ என்று கொதிக்கும் தணலை தலையில் கவிழ்த்திருக்கிறாள்.

பெசன்ட்நகர் பீச்சை அடைந்தபோது மாலை சூரியன் குளிர்ச்சியை தூவிக் கொண்டிருந்தான்.
வண்டியை ஸ்டாண்ட் போட்டேன்.
‘‘க்ருஷ்...’’ சீட்டை நோண்டியபடியே பார்த்தாள்.
‘‘சொல்லு...’’

‘‘நீ கிளம்பிடு...’’ என்றபடி பார்வையைத் திருப்பினாள். பெரிதாக எழுந்த அலை ஆர்ப்பாட்டத்துடன் கரையைத் தொட்டது.
‘‘கேசவ் வர்றான்... அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மணலில் நடக்க ஆரம்பித்தாள்.
மறுநாள் அலுவலகத்துக்கு செல்லவில்லை. ‘டிரைவருக்காக காத்திருக்க வேண்டாம்’ என ராதாவுக்கு மெசேஜ் அனுப்பினேன். மதியம் போல் வீட்டு காலிங்பெல் ஒலித்தது. ராதாதான்.

‘‘அம்மா இல்ல?’’
‘‘ஊருக்கு போயிருக்காங்க...’’
ஹால் சுவரில் மாலை
யுடன் காட்சி தந்த அப்பாவின் புகைப்படத்தை கொஞ்ச நேரம் பார்த்தாள்.
‘‘சாப்பாடு?’’
‘‘சமைச்சிருக்கேன்...’’

நேராக சமையல் அறைக்கு சென்று மூடியைத் திறந்து பார்த்தாள்.
‘‘பட்டினி கிடப்பேன்னு நினைச்சியா?’’ அவளைப் பார்த்தபடி கேட்டேன்.‘‘உன் வயிறு. உன் பசி. எப்படியிருந்தா எனக்கென்ன?’’ வழக்கம்போல் புருவம் உயர வார்த்தைகளை விட்டவள், அங்கிருந்த தட்டை எடுத்தாள்.‘‘உன்னோட தட்டா?’’ பதிலை எதிர்பார்க்காமல் அதில் சோற்றைப் போட்டாள். சாம்பாரை ஊற்றினாள். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.

‘‘ரேகா போலவே நல்லா சமைக்கிற...’’ சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டைக் கழுவினாள். ஃபிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.
‘‘எதுக்காக இன்னிக்கி லீவ்?’’

பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அழுத்தக்காரி. பார்வையை விலக்காமல் எதிர்கொண்டாள். கடைசியில் நான்தான் கண்களை விலக்கும்படி ஆயிற்று.‘‘நைட்டெல்லாம் தூங்கல.... கண்  எரியுது. கொஞ்ச நேரம் படுக்கறேன்...’’ என்றபடி பெட்ரூம் சென்றாள்.அறைய வேண்டும் போல் தோன்றியது. ஒன்று, இரண்டு, மூன்று... என நூறு வரை எண்ணினேன். சோபாவை விட்டு எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். முடியவில்லை. சட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஏசியின் உறுமல் சீராக ஒலிக்க, எனக்கு முதுகைக் காட்டியபடி கட்டிலில் கால்களைக் குறுக்கி படுத்திருந்தாள். கதவை மூடிவிட்டு அவளையே பார்த்தேன். திரும்பவேயில்லை. மெல்ல நடந்து அருகில் சென்றேன். அசைவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்தினேன்.

‘‘டீசண்ட்டா பிஹேவ் பண்றதா நினைப்பா?’’ திரும்பாமல் கேட்டாள்.
‘‘அப்படி நீ நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...’’
‘‘என்ன பழிக்குப் பழியா?’’ சீறலுடன் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன.
‘‘அனு...’’
‘‘ஷட் அப். கால் மீ ராதா...’’ கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் வெறித்தாள்.
‘‘தூங்கும்போது மாரைத் தொட மாட்டியே?’’

‘‘என்னது..?’’ பூமி பிளந்தது.‘‘அப்படினா சரி. கதவை மூடிட்டு போ. கொஞ்ச நேரம் நான் தூங்கணும்...’’ என்றவள் போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டாள்.அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ஹாலுக்கு வந்தேன். டிவி பார்த்தேன். புத்தகம் படித்தேன். பாட்டு கேட்டேன். பால்கனியில் நின்றபடி சிகரெட் பிடித்தேன். உள்ளம் மட்டும் கொதித்துக்கொண்டேயிருந்தது.

மூன்று மணிநேரங்களுக்குப் பின் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். ‘‘காபி குடிச்சியா?’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்குச் சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை?’’ கேட்டவள் ஃபிரிட்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்தாள். பாத்திரத்தில் ஊற்றி கேஸை பற்ற வைத்தாள். ஹாலுக்கு வந்தவள் எதுவும் பேசாமல் சோபாவில் என்னருகில் அமர்ந்தாள். அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தேன். சட்டென்று என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.

‘‘ராதா...’’
‘‘சரியா தூங்கி ஏழு வருஷங்களாகுது க்ருஷ்...’’
‘‘...’’
‘‘எங்க என்னை மீறி தூங்கும்போது யாராவது மாரை பிடிச்சிடுவாங்களோன்னு பயம்...’’
‘‘ராதா...’’
‘‘எங்க சித்தப்பா அப்படித்தான் செஞ்சாரு க்ருஷ்... அப்ப எனக்கு வயசு பதிமூணு...’’
நரம்புகளைச் சுண்டியது போல் தவித்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தேன்.
‘‘உங்க சித்தப்பா உன்னை ‘அனு’னு கூப்பிடுவாரா?’’

‘‘ம்... ஏன் கேட்கற?’’
‘‘ஒண்ணுமில்ல... மேல சொல்லு...’’
‘‘அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? பல கஷ்டங்களைப் பொறுத்துக்கிட்ட அம்மாவால எனக்கு நடந்த கொடுமையைத் தாங்கிக்க முடியல. சித்தப்பா வீட்டை விட்டு வெளில வந்தோம். படிச்சுகிட்டே வேலை பார்த்தேன். அக்காவுக்கு விவரம் பத்தாது. தம்பி ரொம்ப சின்னப் பையன். ஒவ்வொரு நாள் நைட்டும் சாஞ்சுக்க தோள் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிப்பேன்...’’ தன் போக்கில் தொடர்ந்து பேசினாள்.
‘‘ரிலாக்ஸ் ராதா...’’

‘‘பால் பொங்கப் போகுதுனு நினைக்கறேன்...’’ கொண்டை போட்டபடியே சமையலறைக்குச் சென்றாள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் இரு டம்ளர்களில் காபியுடன் வந்தாள். ஒன்றை என் கையில் திணித்துவிட்டு என்னருகிலேயே அமர்ந்தாள். இது போல் இதற்கு முன்பு அவள் நெகிழ்ந்ததுமில்லை. ஈஷிக்கொண்டு அமர்ந்ததுமில்லை. ஆதரவாக தலையைத் தடவினேன்.

‘‘தொடாத...’’ சீறினாள். ‘‘இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்களே...’’ குண்டுக் கண்களால் எரித்தாள். பழைய ராதா. வாய்விட்டுச் சிரித்தேன்.
பதிலுக்கு அழுதுகொண்டே சிரித்தாள்.‘‘ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இன்னிக்கிதான் என்னை மறந்து தூங்கியிருக்கேன். அதுவும் பகல்ல... ரொம்ப தேங்க்ஸ்...’’ என்றவள் குடித்த காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு செருப்பை மாட்டினாள். படீரென்று கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள்.

மறுநாளில் இருந்து வழக்கம்போல் சாரதி பணியைத் தொடர்ந்தேன். மேற்கொண்டு அவள் வாழ்க்கை குறித்து நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. ஆனால், சாட்டையின் நுனியை மட்டும் தினமும் சாைண தீட்டினாள். வார்த்தைகளால் சுண்டி சுண்டி அடித்தாள்.

இதற்கெல்லாம் சிகரம் நேற்றிரவு நடந்தது. அலுவலகத்தில் எதுவும் சொல்லாதவள், ‘‘மண்டைக்குள்ள என்னவோ குடையறா மாதிரி இருக்கே...’’ என்று கேட்டபோதும் வாயே திறக்காதவள், தன் வீட்டு வாசலில் இறங்கிய பிறகு அந்த விஷயத்தைச் சொன்னாள்.

‘‘எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கறியா க்ருஷ்?’’
‘‘விளையாடறதுக்கு ஒரு அளவிருக்கு ராதா...’’
‘‘நான் சீரியஸா கேட்கறேன்...’’
‘‘அதனாலதான் கண்றாவியா இருக்கு...’’
‘‘உளறாத...’’
‘‘முட்டாள்தனமா பேசறது நீதான்... நான் எப்படி உங்கக்காவை கல்யாணம் செஞ்சுக்க முடியும்?’’
‘‘ஏன் முடியாது..?’’
‘‘பிகாஸ் ஐ லவ் யூ..! அது உனக்கே தெரியும்...’’
‘‘ப்ளீஸ் க்ருஷ்...’’ பெருமூச்சு
களால் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், ‘‘அந்த ஆசையை விட்டுடு...’’ என்றாள்.

‘‘ஏன்?’’
‘‘ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு...’’
‘‘வாட்..?’’
‘‘ரிஜிஸ்டர் மேரேஜ். போன தீபாவளி எனக்கு தலை தீபாவளி. நடுரோட்ல பதினொரு மணிக்கு வெறும் வாழ்த்து சொல்லிட்டு பிரிஞ்சோம்...’’
‘‘கேசவனா?’’
‘‘ஆமா. தினமும் வெந்து வெந்து சாம்பலாகறேன் க்ருஷ்... எங்கக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தராம என்னால எப்படி வாழ முடியும் சொல்லு...’’
‘‘ராதா... அதுக்காக...’’‘‘என் வீடு தவிர என்னால நிம்மதியா உன் ரூம்லதான் தூங்க முடியும். எங்கக்காவை நீ கட்டிக்கிட்டா ‘மாமா வீடு’னு உரிமையோட நான் வருவேன்... தங்குவேன்...’’
‘‘ராதா...’’
‘‘அம்மா வர்றாங்க...மார்னிங் கால் பண்றேன்...’’

சொன்னபடியே காலையில் அழைத்து விட்டாள். மீண்டும் அழைக்கவும் போகிறாள்.
தட்டுப்பட்ட நதியின் ஆழத்தில் யோசனையுடன் நடந்தபோது ஒலியுடன் செல்போன் ஒளிர்ந்தது. ராதாதான்.
‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..?’’

பதிலைச் சொன்னேன்.

டிஸ்னி ஜோடி!

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தைச் சேர்ந்த ஹீதர் - கிளார்க் என்ஸ்மிங்கர் ஜோடி, புளோரிடா - கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள 6 டிஸ்னி பூங்காக்களை 24 மணிநேரத்தில் சுற்றி வந்து சாகச திரில்லை அனுபவித்துள்ளனர். கடந்தாண்டு ஹீதர் - கிளார்க் ஜோடி குடும்பத்துடன் டிஸ்னி பூங்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது திடீரென ஹீதரின் தந்தை மரணிக்க, அன்று தடைப்பட்ட பயணத்தை நிறைவேற்றி மனைவியை மகிழ்வித்துள்ளார் கிளார்க்.

மாரத்தான் கல்யாணம்!

அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள டெட்ராய்டு நகரில் 42 கி.மீ மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. வொய்ட்னி பிளாக் - ஸ்டீவன் பிலிப்ஸ் என்ற காதல் ஜோடி இதில் பங்கேற்று பாதி மாரத்தானிலேயே ரிங் மாற்றி திருமணம் செய்து ஆச்சரியம் அளித்துள்ளனர். ஸ்டீவனின் காதலி வொய்ட்னி பிளாக், அண்மையில் விபத்தில் சிக்கி 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டு உயிர் பிழைத்து மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளார்!

மூக்குக்கு மஃப்ளர்!

கழுத்துக்கு மஃப்ளர் இருப்பதுபோல பனியில் மூக்கு சிவக்காமல் இருக்க இங்கிலாந்தில் தயாராகியுள்ள மூக்கு மஃப்ளர் வைரலாகியுள்ளது. நோஸ்வார்மர் என்ற பெயரில் சந்தையில் பரபர விற்பனையிலுள்ள இந்த ஐடியாவின் பிரம்மா சாலி ஸ்டீல் ஜோன்ஸ். 2009ம் ஆண்டிலேயே சாலியின் மூளையைக் குடைந்த இந்த கிரியேட்டிவ் ஐடியாவின் சந்தை விலை ரூ.737.

கே.என்.சிவராமன்