இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கியதால் தூக்கில் தொங்கிய டாக்டர்!



நியூஸ் வியூஸ்

யுவகிருஷ்ணா


ஜூன் 19, 1981. டாக்டர் சுபாஷ் முகோபாத்யாயா தூக்கில் தொங்கினார்.அவர் செய்த குற்றம்?இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை  உருவாக்கியது! அந்த டெஸ்ட் ட்யூப் பேபியான துர்கா என்கிற கனுப்ரியா அகர்வால், கடந்த 3ம் தேதி, தன் 40வது பிறந்தநாளைக்  கொண்டாடினார்!துர்காவுக்குப் பிறகு லட்சக்கணக்கான குழந்தைகள் செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்திருக்கிறார்கள். பிள்ளைப்பேறு  இல்லாத தம்பதியினருக்கு வரப்பிரசாதமாக IVF (In vitro fertilisation) என்கிற மருத்துவ அதிசயம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.இந்திய  அளவில் தைரியமாக இதைத் தொடங்கி வைத்தவர்தான் தூக்கில் தொங்கிய டாக்டர் சுபாஷ். சொல்லப் போனால் உலகின் இரண்டாவது  டெஸ்ட் ட்யூப் பேபியே, இந்தியாவில் பிறந்த துர்காதான். துர்கா 1978, அக்டோபர் 3ல் பிறந்தார்.

வெறும் 67 நாட்களுக்கு முன்புதான் உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான மேரி லூயிஸ் பிரவுன், இங்கிலாந்தில் பிறந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து அறிவியலாளர்களான ராபர்ட் ஜி.எட்வர்ட்ஸ் மற்றும் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரும், டாக்டர் சுபாஷும்  ஒரே நேரத்தில்தான் செயற்கை கருத்தரிப்பு முறை குறித்த ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நம் இந்திய மருத்துவருக்கு இரண்டு  மாதங்கள் அவர்கள் முந்திக் கொண்டார்கள்.பிரிட்டிஷ் மருத்துவர்களுக்கோ அவர்களது அரசாங்கம் அனைத்து வசதிகளையும் செய்து  தந்திருந்தது. மாறாக முறையான ஆய்வு வசதிகள் இல்லாமலேயே வழக்கமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தன் வீட்டில் இருந்த  ஃப்ரிட்ஜின் உதவியால் இந்த சாதனையை டாக்டர் சுபாஷ் செய்திருந்தார்.

1931ல் ஹஸரி பாக் என்கிற நகரில் (அன்றைய பீகார், இன்றைய ஜார்க்கண்ட்) பிறந்தவர் டாக்டர் சுபாஷ். அப்பாவும் மருத்துவர்தான்.  1955ல் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், ஸ்காட்லாந்தின்  எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் அடுத்தடுத்து முனைவர் பட்டங்கள் பெற்றார். மருத்துவம் படிக்கும்போது யதேச்சையாகத்தான் புதிய  முறையிலான பிரசவ அறுவை சிகிச்சைகள் குறித்து அவர் கற்க நேர்ந்தது.1967ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகே செயற்கை  முறையிலான கருத்தரிப்பு குறித்த ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். கிரையோபயால ஜிஸ்டாக பணிபுரிந்த சுனித் முகர்ஜி, கருத்தரிப்பு  நிபுணரான சரோஜ் காந்தி பட்டாச்சார்யா ஆகிய இருவரின் துணையோடு அவர் செய்த ஆய்வுகளின் முடிவாகவே துர்கா பிறந்தார்.

பிரிட்டிஷ் மருத்துவர்கள் பயன்படுத்திய முறைக்கும், டாக்டர் சுபாஷ் செயல்படுத்திய cryopreservation என்கிற மருத்துவ முறைக்கும்  வேறுபாடுகள் உண்டு. இன்று உலகில் அதிகம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்கை கருத்தரிப்பு முறை, நம் மருத்துவர் சுபாஷுடையது  தான்.1978, துர்கா பூஜையின் முதல்நாள் பிறந்ததால் துர்கா என்று பெயரிட்டு, தன்னுடைய சாதனையை உலகுக்கு அறிவித்திருந்தார்  டாக்டர் சுபாஷ்.அக்காலகட்டத்தில் இயல்பான கருத்தரித்தல் அல்லாத இம்முறை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. மேற்கு வங்க  அரசாங்கம், உடனடியாக ஒரு விசாரணைக் கமிட்டியை அமைத்தது. அந்த விசாரணைக் கமிட்டி, ஏனோதானோவென்று விசாரணை செய்தது.  சுபாஷ் தரப்பின் சாதனைகளை இயற்கைக்கு முரணான குற்றமென்று அறிவித்தது.

அப்போது ஜப்பானில் செயற்கை முறை கருத்தரித்தல் தொடர்பான ஓர் அரங்கில், தன்னுடைய சாதனையை விளக்க டாக்டர் சுபாஷ்,  அழைக்கப்பட்டிருந்தார். அவர் ஜப்பானுக்கு செல்ல அரசாங்கம் தடை விதித்தது. மேலும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை  மேற்கொண்டு ஒரு டம்மி போஸ்ட்டுக்கு இடமாற்றமும் செய்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூர் மூலிகை பெட்ரோல் ராமர்  கணக்காகவே, மாபெரும் மருத்துவ சாதனையாளர் டாக்டர் சுபாஷ் நடத்தப்பட்டார்.அரசாங்கத்தின் அடுத்தடுத்த இத்தகைய  நடவடிக்கைகளால் மனவுளைச்சல் அடைந்தே, டாக்டர் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார்.ஆசிரியையான அவரது மனைவி நமீதா  முகர்ஜி, தன்னுடைய கணவரின் சாதனையை உலகம் ஒப்புக் கொள்வதற்கான நெடுநாள் போராட்டத்தை அன்றே தொடங்கினார். டாக்டர்  சுபாஷின் குழுவில் இருந்த சுனித் முகர்ஜியும், தங்கள் சாதனையை அறிவியல்ரீதியாக நிரூபிக்கப் போராடினார்.

டாக்டர் சுபாஷ் மீது அரசாங்கம் சுமத்திய முக்கியமான குற்றச்சாட்டே, ‘செயற்கைக் கருத்தரிப்பு என்பதற்கு ஆதாரபூர்வமான  மருத்துவரீதியான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை’ என்பதுதான். மேலும், டாக்டர் சுபாஷின் குழுவில் ஒரே ஒரு பிரசவ நிபுணர்,  ஓர் உளவியல் மருத்துவர், ஒரு பொது மருத்துவர் மற்றும் ஒரு நரம்பியல் நிபுணர் என்று நான்கே மருத்துவர்கள் சேர்ந்து மருத்துவ  உலகின் அதிசயத்தை ஆய்வு செய்து புதிய மருத்துவ முறையைக் கண்டறிந்திருப்பதாக சொல்வதை நம்ப முடியவில்லை என்று  விசாரணைக் கமிட்டி அறிக்கை கொடுத்திருந்தது.“இத்தகைய அரசியலை எல்லாம் டாக்டர் சுபாஷால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர்  ஓர் அறிவியலாளர். இவர்களது அபத்தமான வாதங்களை எதிர்கொள்ளக் கூடிய ஒரு வக்கீல் அல்ல...” என்று வருத்தமாக அந்நாளைய  நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார் டாக்டர் சுனித் முகர்ஜி. 2001ல் வெளியிடப்பட்ட டாக்டர் சுபாஷின் சாதனைகளை விளக்கும்  நூலான Architect of India’s First Test-Tube Baby-யை எடிட்டிங் செய்தவரும் இவர்தான்.

1990ல் ‘ஒரு மருத்துவரின் மரணம்’ என்று டாக்டர் சுபாஷின் வாழ்க்கையை இந்தியில் படமாகவும் எடுத்தார்கள். அவரது சாதனைகளை  அங்கீகரிக்க மறுத்த தேசம், அவரைப் பற்றி எடுக்கப்பட்ட படத்துக்கு மூன்று தேசிய விருதுகளை வழங்கியது என்பதுதான் வினோதம்.1986ல் மும்பையில்தான் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் முதல் குழந்தை பிறந்தது என்று அலுவல்பூர்வமாக இந்தியா ஒப்புக்  கொண்டது. அந்த சாதனைக்கு டி.சி.ஆனந்தகுமார் என்கிற தமிழ் மருத்துவருக்கு மகுடமும் சூட்டியது. இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்  குழுவின் இயக்குநரும் கூட.எனினும், அந்த மகுடத்தை தன் தலையில் இருந்து மனசாட்சியுடன் இறக்கி வைத்தார் டாக்டர் ஆனந்தகுமார்.  1997ல் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக அவர் கொல்கத்தா சென்றிருந்தார்.

அங்கே டாக்டர் சுபாஷின் மருத்துவ சாதனைக்கு ஆதாரமான ஆவணங்கள், டாக்டர் சுனித் முகர்ஜி மூலமாக நேரடியாகவே இவருக்கு  வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணைகளை, ஆனந்தகுமார் தனிப்பட்ட முறையில் செய்தார். துர்காவின் பெற்றோரைச்  சந்தித்து தகவல்களை உறுதி செய்தார். அதன் பின்னர், செயற்கை கருத்தரித்தல் முறையின் இந்திய முன்னோடி டாக்டர் சுபாஷ்தான்  என்பதை 2002ம் ஆண்டு அதிகாரபூர்வமாகவே அறிவித்தார். தவறுதலாக தனக்குக் கிடைத்த கவுரவத்தை, சரியான நபருக்கு மீண்டும்  திருப்பியளித்த வகையில் டாக்டர் ஆனந்தகுமார், உலகெங்கும் வாழும் மருத்துவர்களின் மனங்களையும் வென்றார்.

துர்கா பிறந்து 25 ஆண்டுகள் கழித்து 2003ல் டாக்டர் சுபாஷின் சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு  வெள்ளி விழாவாக பெங்களூரில் கொண்டாடப்பட்டது. சுபாஷின் குழுவில் இருந்தவர்களில் அப்போது உயிரோடு இருந்தவர் டாக்டர் சுனித்  முகர்ஜி மட்டுமே. எனவே, அவருக்கு அவ்விழாவில் சிறப்பு செய்யப்பட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இந்தியாவின்  முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான துர்கா (எ) கனுப்ரியா அகர்வால், வளர்ந்து எம்பிஏ படித்து, திருமணமும் செய்து, நல்ல வேலையிலும்  செட்டில் ஆகிவிட்டார்.

2003ல் பெங்களூரில் நடந்த விழாவில்தான் நாட்டின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியாக அவர் உலகத்துக்கு வெளிப்படையாக அறிமுகமானார்.  டாக்டர் ஆனந்தகுமாரின் முயற்சியால், கொல்கத்தாவில் டாக்டர் சுபாஷின் நினைவாக Dr Subhas Mukherjee Memorial Reproductive  Biology Research Centre என்கிற மையம் நிறுவப்பட்டிருக்கிறது.இன்று, இந்தியாவில் தோராயமாக இரண்டரைக் கோடி தம்பதியினர்  குழந்தை வரம் கிட்டாமல் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் பதினைந்து சதவிகிதம் தம்பதியினர் செயற்கை முறை கருத்தரிப்புக்கு  முயற்சித்து வெற்றியும் காண்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் சிரிப்பில் சுபாஷ், நம்மோடு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.