80 வயது படகு அரசர்



கலெக்டர்ஸ்

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கிறது அந்த வீடு. ஆனால், அங்கிருக்கும் யாரிடமும் ‘ராவ் வீடு எதுங்க?’ என்று கேட்டால் பதில் வராது.  மாறாக, படகு வீடு என்றால் சட்டென்று அடையாளம் காட்டுகிறார்கள்!80 வயதான ஹேமச்சந்திர ராவ், கட்டட வடிவமைப்பாளர்.  வரலாற்றாசிரியரும் கூட. கடந்த 15 வருடங்களாக பாலங்கள், கலங்கரை விளக்கங்கள் மற்றும் சென்னையின் இப்போதைய கூவமாக மாறி  யிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி முழு ஆய்வு செய்துள்ளார். இதெல்லாம் அவரது இன்னொரு முகம். எனில் நிஜ முகம்?
கப்பல்! யெஸ். கடற்கரை, கடல் மற்றும் கப்பல் மேல் இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தன் வீட்டின் ஓர் அறையை முழுக்க முழுக்க  கப்பல் சார்ந்த அருங்காட்சியகமாக மாற்றியமைத்துள்ளார். அங்கு பாய்மரக் கப்பல்கள், நங்கூரங்கள், கப்பலில் பயன்படுத்தப்பட்ட  விளக்குகள்... என கப்பல் சார்ந்த விஷயங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளன.  

‘‘பிறந்தது கொச்சில. 1942ல சென்னைக்கு வந்தோம். பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துல சிவில் படிப்புல பொறியாளர் பட்டம்  பெற்றேன். தென்னிந்திய ஷிப்பிங் நிறுவனத்துல வேலை கிடைச்சது. 2001ல ஓய்வு பெற்றேன். 2003ல உத்தண்டில இருக்கிற கடல்சார்  பல்கலைக்கழகத்துல இருந்து அழைப்பு வந்தது. ஒரு கப்பலை மாடலா அமைச்சுத் தரச்சொன்னாங்க. அந்த பல்கலைக்கழகத்துல கப்பல்  சார்ந்த படிப்பு படிக்கிறவங்களுக்கு கப்பல் எப்படி இருக்கும்னு காட்ட புரோடோடைப் வைச்சிருக்கணும்னு அரசு உத்தரவு. அதுக்காக  கேட்டாங்க.நானும் ஒரு கப்பல் மாதிரியை அமைச்சுக் கொடுத்தேன். ஒரு நாள் பல்கலைக்கழத்தின் பின்புறம் கால்வாய் போவதைப்  பார்த்தேன். விசாரிச்சப்ப அது பக்கிங்ஹாம் கால்வாய்னு தெரிஞ்சுது. சின்ன வயசுல கால்வாய் வழியா மகாபலிபுரம் போனது நினைவுக்கு  வந்தது. அதுவே ஆர்வமா மாறி கால்வாய்கள் பத்தின ஆய்வை மேற்கொள்ளச் செய்தது. இதனோட எக்ஸ்டென்ஷனா தமிழகத்துல  இருக்கிற கலங்கரை விளக்கங்கள், சென்னைல இருக்கிற பாலங்கள் பத்தின ஆய்வா விரிஞ்சுது.

இதையெல்லாம் வைச்சு ‘ஃபர்ஸ்ட் லைட் அவுஸ் ஆஃப் மெட்ராஸ்’ நூலை எழுதி வெளியிட்டேன். இப்ப பாலங்கள், பக்கிங்ஹாம் கால்வாய்  பத்தின நூலை எழுதிட்டு இருக்கேன்...’’ என்று சொல்லும் ஹேமச்சந்திர ராவுக்கு 2007ம் ஆண்டுதான் தன் வீட்டை அருங்காட்சியகமாக  மாற்றவேண்டுமென்று தோன்றியிருக்கிறது. ‘‘கோழிக்கோடுல என் நண்பர் ஒருத்தர் தன் வீட்டையே சிம்னி விளக்கு மியூசியமா  மாத்தியிருந்தார். அதைப் பார்த்துட்டுதான் என் வீட்டையும் அருங்காட்சியகமா மாத்தணும்கிற எண்ணம் வந்தது. சின்ன வயசுல இருந்தே  கப்பல் சார்ந்த விஷயங்கள் மேல அவ்வளவு ஈடுபாடு!ஆக்சுவலா முதல்ல ஸ்டாம்ப்தான் கலெக்ட் பண்ணினேன். குறிப்பா கப்பல் படம்  போட்டது. இதை ராஜாஜி அரங்குல தமிழ்நாடு தபால்துறை நடத்தின கண்காட்சில வைச்சேன். அப்ப நான் பள்ளி மாணவன். எனக்கு முதல்  பரிசும் தங்கப் பதக்கமும் கிடைச்சது!’’ என்று மகிழும் ராவ், இதன் பிறகு கப்பல் படமுள்ள காசுகள், காப்பிமக்குகள், வைன் பாட்டில்கள்...  என சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘‘ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாசத்தை மெட்ராஸ் மாசம்னு கொண்டாடுவாங்க. அதுமாதிரி ஒரு ஆகஸ்ட்டுலதான் கப்பல் மியூசியத்தை  ஆரம்பிச்சேன்! என் கார் கேரேஜ்ல 16 அடி நீளமுள்ள மாதிரி கப்பலை நானே டிசைன் செஞ்சு அமைச்சேன். அதை அப்படியே வைச்சா  நல்லா இருக்காதே... அதனால ஊஞ்சல்ல அதை வைச்சேன்! ஊஞ்சல் ஆடறப்ப கடல்ல பயணம் செய்யற ஃபீல் கிடைக்கும்! அதே போல  கப்பல் மாதிரிகள் உள்ள அறைக்கு நீல பெயின்ட்டை அடிச்சேன். அதுதானே கடலின் நிறம்!’’ என்றவர் ஒரு இளைஞனுக்குரிய  உற்சாகத்துடன் தன் சேகரிப்பை விளக்கத் தொடங்கினார். ‘‘என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு நான் கப்பல் காதலன்னு தெரியும்!  அதனால எனக்கு பரிசு கொடுக்கிறப்ப கப்பலைத் தருவாங்க! ஆனா, கப்பல் சார்ந்த விஷயங்களை நானாதான் தேடித் தேடி வாங்கறேன்.  மது பாட்டில்ல கப்பல் வரைஞ்சிருந்தா கூட அதை விட மாட்டேன்!

எந்தக் காலத்துல இருந்து படகுகள் புழக்கத்துல இருக்குனு இப்ப ஆய்வு செஞ்சுட்டு வர்றேன்! வணிகத்துக்காக எகிப்தியர்கள்தான்  ஆரம்பத்துல படகுகளைப் பயன்படுத்தியிருக்காங்க. தமிழகக் கோயில் சிற்பங்கள் ஒருவகைல நம் புராதன வரலாற்றை சொல்லக் கூடியது.  நெல்லை நம்பிராயர் பெருமாள் கோயில் நுழைவாசல்ல அழகான கப்பல் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கு. தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி  ெபருமாள் கோயில், நவதிருப்பதிகள்ல ஒண்ணு. அங்க இருக்கிறதி யான மண்டபத்துல இரண்டு படகு சிற்பங்கள் இருக்கு! 1400  வருஷத்துக்கு முந்தைய பெருமாள் கோயில் புதுச்சேரில இருக்கு. அங்க அஞ்சடில மூணு பேர் பயணம் செய்யற மாதிரியான படகு  அமைக்கப்பட்டிருக்கு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். கோவால படகுல கடவுள்கள் அமர்ந்திருக்கிற மாதிரி கோயில் இருக்கறதா  சொல்றாங்க. அடுத்த மாசம் அங்க போறேன்!’’ என்று சொல்லும் ஹேமச்சந்திரராவ், கப்பல் விளக்குகளை வாங்கும்போது சில  சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்ததாகக் குறிப்பிடுகிறார்.

‘‘சிவப்பு, பச்சைனு இரண்டு நிறங்கள்ல கப்பல்ல பயன்படுத்தற விளக்கு வரும். 2016 நவம்பர்ல குஜராத் போயிருந்தேன். கூட வந்த நண்பர்  வேலை காரணமா சென்னைக்கு திரும்பிட்டார். சரியா அவர் சென்னைல கால் பதிச்சப்ப ஆயிரம், ஐநூறு ரூபா நோட்டுக்கள் செல்லாதுனு  அரசு அறிவிச்சுடுச்சு! உடனே எனக்குத் தகவல் சொன்னார்.அப்ப என்கிட்ட ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஒரு லட்சம் வரை இருந்தது.  முதல்நாள் ராத்திரி செல்லுபடியான நோட்டு பொழுது விடிஞ்சதும் செல்லாததா ஆகிடுச்சு! ஒண்ணுமே புரியலை. எங்க போய் பணத்தை  மாத்த..? எல்லா வங்கிலயும் கூட்டம். என்கிட்ட ஒரு பழக்கம் உண்டு. எந்த ஊருக்குப் போனாலும் தபால் உறைல அந்த ஊர் முத்திரையை  வாங்குவேன். அப்படி அங்க இருக்கிற போஸ்ட் ஆபீசுக்கு போய் அங்க இருக்கிறவங்க கிட்ட என் நிலையை எடுத்துச் சொல்லி 3000 ரூபாய்  மாத்தினேன். அப்புறம் லோத்தால்ல இருக்கிற போஸ்ட் ஆபீஸ்ல 1500 ரூபாய் மாத்தினேன். உடனே சென்னை கிளம்பினேன்.

வழில பாவ்நகர்ல இருந்த சாலைல, கிட்டத்தட்ட 15 கப்பல்ல பயன்படுத்தின விளக்குகளை அடுக்கி வைச்சிருந்தாங்க. பேரம் பேசி  அத்தனையையும் வாங்கினேன். நல்லவேளையா பழைய நோட்டுகளை வாங்க அவங்க சம்மதிச்சாங்க. இந்த விளக்குகளோடு சென்னைல  நான் இறங்கினப்ப என்கிட்ட வெறும் ரூ.7 ஆயிரம்தான் இருந்தது! இப்படி பல சுவாரஸ்யமான அனுபவங்கள் நடந்திருக்கு. கேரளால கப்பல்  வீடுகள் பிரபலம். இதை நினைவுபடுத்தற மாதிரி கோழிக்கோடுல ஒரு கப்பல் மாடலை வாங்கினேன். எனக்கு இயந்திரக் கப்பல்களை விட  பாய்மரக் கப்பல்கள் மேலதான் தனி ஈடுபாடு. வெறும் காற்றின் திசையை வைச்சே படகு செலுத்தியிருக்காங்களே... எப்பேர்ப்பட்ட  விஷயம்!சதுரம், முக்கோணம்னு இரண்டு வடிவங்கள்ல பாய்மரக் கப்பல்கள் இருக்கும். காற்றின் திசைக்குத் தகுந்த மாதிரி பாய்மரத்தை  மாத்திக் கட்டுவாங்க. ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு பெயர் உண்டு. அந்தக் காலத்துல ஒவ்வொரு முறை கப்பல்ல பயணம் செய்யறப்பவும்  ஒரு பில் தருவாங்க. அதுக்கு ‘ஷிப் ஆஃப் லேண்டிங்’னு பேரு. அதையும் தேடிப்பிடிச்சு வாங்கினேன்.

முத்தண்டி போயிருந்தப்ப இரண்டு துடுப்புகள், புலிகாட் போயிருந்தப்ப திமிங்கலத்தின் எலும்புக் கூடு, இன்னொரு இடத்துல நூறு வருஷ  பழமையான கட்டுமரம், நங்கூரம்... இப்படி எங்க போனாலும் கப்பல் சார்ந்ததைப் பார்த்தா வாங்காம வரமாட்டேன்!கடற்படைல அவங்கவங்க  சாதனைக்கு ஏற்ப பதக்கம் தருவாங்க. மொத்தம் 31 பதக்கங்கள். இதுல உயர்ந்தது பரம்வீர் சக்ரா. இந்த 31ல 29வது பதக்கம் விதேஷ்  சேவா. இந்த ஒரு பதக்கத்துல மட்டும்தான் கப்பல் படம் போட்டிருக்கும். என் நண்பர்கிட்டேந்து அந்தப் பதக்கத்தை வாங்கினேன்!எனக்கு  வயசாகிட்டே போகுது. இன்னும் எத்தனை வருஷம் ஓட முடியும்னு தெரியல. டிரஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சு என் சேகரிப்பை எல்லாம்  கொடுக்கலாம்னு இருக்கேன்!’’ என்கிறார் இந்த கடல் காதலரான ஹேமச்சந்திர ராவ்.

- ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்