எம்.எஸ்.பாஸ்கரின் மகன்
‘யாருப்பா இந்தப் பையன்... என்னமா நடிக்கிறான்... ப்ச், அப்படியே ஸ்கூல் டைம் ஞாபகம் வந்துடுச்சு...!’‘96’ படம் பார்த்தவர்கள்  அனைவரும் இப்படித்தான் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்தவரைப் பார்த்து வியக்கிறார்கள்!இந்த வியப்புக்கும் பாராட்டுக்கும்  சொந்தக்காரர், வேறு யாருமல்ல... எதார்த்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர்தான்! தனியார் கல்லூரியில் விஸ்காம்  படித்து வரும் இவருக்கு இதுதான் முதல் படம். ‘‘ஒரு பத்திரிகைல வந்த என் போட்டோவை பார்த்துட்டு அப்பாகிட்ட பேசியிருக்காங்க.  கதை ரொம்ப வித்தியாசமா எமோஷனலா இருந்துச்சு. எங்க குடும்பத்துக்கு சினிமாதானே எல்லாம்! இப்படியொரு வாய்ப்பு வந்தா எப்படி  வேண்டாம்னு சொல்லத் தோணும்..!’’

இயல்பாகப் பேசும் ஆதித்யா பாஸ்கருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்திருக்கிறது. ‘‘மேக்ஸிமம் எல்லா படத்தையும்  பார்த்துடுவேன். அப்பாவோட நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு தெரியலை... அது ரொம்ப  கஷ்டம்!’’ என்ற ஆதித்யா, இளம் வயது விஜய்சேதுபதியாக நடிக்க ரொம்பவே சிரமப்பட்டாராம்.‘‘இந்தப் படத்துல நான்தான் டப்பிங்  பேசினேன். நடிப்புல இன்னும் பயிற்சி வேணும்னு படம் பார்த்தப்ப எனக்கே தெரிஞ்சுது. ஆனா, படம் பார்த்த எல்லாரும் நான் நல்லா  நடிச்சிருக்கறதா சொல்றாங்க. சேது சார், ‘உங்க பையனை கட்டிப்பிடிச்சு பெருமைப்படுங்க! கலக்கியிருக்கான்!’னு சொன்னாரு. த்ரிஷா மேம்  டைரக்டர் கிட்ட என்னைப் பாராட்டியிருக்காங்க.  இதெல்லாமே நான் நல்லா வரணும்னு நினைச்சு அவங்க சொன்னதா எடுத்துக்கறேன்.

அவங்க நம்பிக்கையை நிச்சயம் காப்பாத்துவேன்!’’ நெகிழும் ஆதித்யா, படம் பார்க்கும்போது தன் அம்மாவையே பார்த்துக்  கொண்டிருந்தாராம்.‘‘அவங்க அழுதுகிட்டேதான் படம் பார்த்தாங்க. அது ஆனந்தக் கண்ணீர்! அப்படி என்னைப் பாராட்டி னாங்க. மொத்த  கிரெடிட்டும் டைரக்டருக்கு போய்ச் சேரணும்...’’ ஆத்மார்த்தமாகச் சொல்லும் ஆதித்யாவுக்கு டைரக்டராக வேண்டும் என்பதுதான் கனவாம்.  ‘‘அதுக்காகத்தான் விஸ்காம் எடுத்தேன். நிச்சயம் ஒருநாள் டைரக்டராவேன். அதுக்கான தகுதியை வளர்த்துக்கணும்...’’ என்ற ஆதித்யாவுக்கு  அவர் அப்பா கூறியிருக்கும் அட்வைஸ் என்ன தெரியுமா?‘நடிகனா, இயக்குநரா... என்ன வேணா ஆகிக்க. ஆனா, நல்ல மனுஷன்னு பெயர்  வாங்கு! கேரக்டரை மட்டும் ஸ்பாயில் செய்துக்காத!’ கோடியில் ஒரு வார்த்தை!

-ஷாலினி நியூட்டன்