எதிர் சமூகத்தோடு பேச விரும்பினேன்...
‘ஆஹா... அடுத்த செட் வந்துட்டாங்கப்பா!’ என அத்தனை பேரையும் வியக்க வைத்த படம் ‘பரியேறும் பெருமாள்’. ஒரு சின்ன புரிதலை ஏற்படுத்தக்கூட இங்கே நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் பரியனுக்குக் கிடைத்த வெற்றி உன்னதமானது. அபூர்வமானதும் கூட. இயக்குநர் பா.இரஞ்சித் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘கூகை’ நூலகத்திற்குப் போனால் அங்கே குழுவினரோடு காத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். தாடிக்குள் விரல்கள் விளையாடச் சிரிக்கிறார் இரஞ்சித். மாரி செல்வராஜ், நடிகர் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், ஆர்ட் டைரக்டர் ராமு, கராத்தே வெங்கடேசன் என வந்திருந்து ஒன்றுகூட நடந்தது உரையாடல்.‘‘எளிய மனிதர்கள் வாழ்க்கையை ரொம்ப கொண்டாட்டமா வாழ்றாங்க. அதைப் பதிவு செய்ததுதான் ‘அட்டகத்தி’. இந்த வெற்றி கூட சென்னையின் சாமான்ய இளைஞர்களின் வெற்றிதான். அதற்குப் பிறகு எனக்கு திரைப்படம் எடுக்கணும்னு மனதில் பட்டது... நான் எடுக்க நினைக்கிற, எடுக்க முடியாத விஷயங்களை பிறர் சொல்லி பதிவு பண்ணணும்னு நினைச்சேன்.  அப்போதுதான் ராம், மாரியின் கதை பற்றி சொன்னார். எனக்கு முன்னாலேயே பல தயாரிப்பாளர்களை அணுகியிருக்கிறார் மாரி. ‘இதுமாதிரி கதையை எங்களால் தயாரிக்கவே முடியாது...’ என மறுத்திருக்கிறார்கள். ‘அட்டகத்தி’ கூட கதையை நம்பி எடுத்ததுதான். அப்படியே இதையும் நம்பினேன். ஆனால், இதை நான் தயாரிக்கிறபோது சில தயக்கங்கள் இருந்தது. நான் பொலிடிக்கலா பேச ஆரம்பித்திருந்தேன். அதனால் என் மீது சிலருக்கு விமர்சனங்கள் இருந்தது. நான் என் அரசியலுக்கு உண்மையாக இருக்க விரும்பினேன். அதன் தொடர்பாகவே படம் தயாரிக்கவும் முடிவு செய்தேன். நான் விரும்புகிற உரையாடலை தம்பி மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தது எனக்கு சந்தோஷம். முக்கியமாக நான் எதிர் சமூகத்தோடு பேச விரும்பினேன். இருவரும் பேசி கலந்துகொள்ளாமல் எப்படி நாம் ஒன்றாக முடியும்? அதனால் இதற்கு எதிர்ப்பு வருமா, ஆதரவு பெருகுமா என்ற எனது சிறிய பயத்தைத் தாண்டி மக்கள் ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம்தான்...’’ ஆர்வமாக ஆரம்பித்துப் பேசினார் இரஞ்சித்.
 ‘‘என் பெயர் கராத்தே வெங்கடேசன். கோர்ட்டில் வக்கீலாகப் பதிவு செய்திருந்தேன். ஆரம்பத்தில் சினிமா ஸ்டண்ட் யூனியனில் இருந்த காலங்கள் உண்டு. பிறகு அதற்கே ஆலோசகரா மாறினேன். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். இறுக்கமான ஒரு பெரியவரைத் தேடியபொழுது நான் மாரி செல்வராஜ் கண்களில் பட்டுவிட்டேன். இப்போது வெளியே போனால் என்னைக் கண்டிக்கிறார்கள். ‘இப்படிச் செய்யலாமா அய்யா..?’ என பாமர மக்கள் கோபமாகவும், வருத்தமாகவும் கேள்வி கேட்கிறார்கள். ஏதேனும் என் கதாபாத்திரம் மூலம் ஒரு சின்ன அசைவோ, மனமாற்றமோ நடந்தால் கூட நான் மகிழ்வேன். இப்போது கூட பல படங்களுக்கு அழைக்கிறார்கள். ஆனால், பரியனுக்குப் பிறகு எனக்கும் பொறுப்பு கூடியிருக்கிறது...’’ என்பவரின் கண்களில் மின்னுகிறது கனவு.
‘‘தினம் தினம் பத்திரிகைகளில் வருகிற செய்திகளின் உண்மை பலருக்குத் தெரிவதில்லை. சங்கர் கொலை செய்யப்பட்டதெல்லாம் வரலாறாக எஞ்சிவிட்டது. எதையும் மறைப்பதற்கில்லை. நீங்கள் என்னோடு வாருங்கள். இதோ ஆவடிக்கு பக்கத்தில் கர்லபாக்கம் என என் ஊர் இருக்கிறது. அங்கே நாங்க எல்லோரும் சேர்ந்து வெளியே திரிவோம். சினிமாவுக்குப் போவோம். ஒண்ணா அலைவோம். ஆனால், கோயில் திருவிழாவை ஒண்ணாச் சேர்ந்து பங்குபெற்று கொண்டாட முடியாது. ஏன் கோயில் காலனிக்குள் வரலை? திரௌபதி அம்மன் கூட எங்கள் பகுதிக்கு உள்ளே வர்றதில்லை. ஸ்கூலில் லீவு விடுவாங்க. பசங்க காப்பு கட்டிக்குவாங்க. எங்களுக்கு வழிபாடு அனுமதி உண்டு. காப்பு கட்ட முடியாது. இது ஏக்கம்தானே! நான் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தினால் உடனே எதுவும் மாறிடும்னு நம்பலை. இந்தப் பரியன் என்கிற பையனைப் பார்த்து கவலைப்பட்டு, பலருக்கு ஒரு சின்ன யோசனை உருவாகும். ஆமா, நாம அண்ணன் தம்பிகள்தானே... சமம்தானேன்னு யோசிச்சா கூட நல்லதுதான்...’’ பக்குவமாகப் பேசுகிறார் இரஞ்சித்.
 ‘‘கவனிச்சிங்கன்னா படத்துல எல்லாரையும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ள அனுமதிச்சிருக்கேன். இங்கே நடக்கிற பயங்கரங்களை நாம் எத்தனையோ வீடியோக்களில் பார்த்திருக்கோம். சங்கர் கொலை லைவ் வீடியோவாக காணக் கிடைச்சது. இங்கே ஒவ்வொருத்தரும் எளிய மனிதர்கள்தான். இதில் உள்ளவர்கள் இன்னொரு பக்கம் சரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனந்தியின் அப்பாவிற்குக் கூட பாசம் இருக்கிறது. தடுமாறுகிறார். ஆனால், நிறுவி இருக்கிற கற்பிதங்களுக்கும் சரியாக இருக்க வேண்டும். எல்லாப் பக்கத்திலும் அவரவர்களுக்கான நியாயம் இருக்கிறது. முரண்படுகிற எல்லோரையும் உரையாட வைத்துவிட்டேன். பரியனை அவமதிக்கிற ஆனந்தியின் சித்தப்பா பையன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவன். அவன் பேசுவதற்கு ரெடியாக இல்லை. யாரையும் நான் வெறுத்து ஒதுக்கவில்லை. இப்படியான சூழலில்தான் எல்லோரும் இதில் உலவுகிறார்கள். அதனால்தான் யாருக்கும் யார்மீதும் வெறுப்பு எழவில்லை. ஒரு சின்ன புரிதலுக்கான வழிவிடல்தான் இதன் பொருள் என்று கூட நினைக்கிறேன்...’’ நிதானித்துப் பேசுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
 ‘‘எனக்கு அந்த கருப்பியின் முடிவு பற்றிய எபிசோடைக் கொண்டு வந்து முதலில் காண்பித்தார் மாரி. அதுவே போதுமானதாக இருந்தது. அவர்கள் கருப்பியோடு உட்கார்ந்து நீராடு கிற குளத்தில் எதிர் சாதியினர் ஒண்ணுக்கு அடிக்கும்போது எல்லாம் புரிந்துவிடுகிறது. அந்தக் காட்சியின்போது நிலம் பற்றிய உரையாடலைக் காட்டுவதற்காக கேமரா உயரத்திற்குப் போய்விடும். அப்புறம் கதிர் உயிர் தெறிக்க ஓடிவரும் ஓட்டத்தில் எனக்கு மாரிமேல் நம்பிக்கை வந்துவிட்டது...’’ மாரியை வாஞ்சையில் தட்டுகிறார் இரஞ்சித்.‘‘எனக்கு பரியனின் அப்பாதான் ஆகச்சிறந்த கேரக்டர். பெண் மாதிரியான இயல்பு கொண்ட அப்பாவை தமிழ் சினிமாவில் காட்டியது நம்ம படம்தான். இதில் இருந்த எல்லா குறியீடுகளும் பாமரனுக்கும் புரியும்படி இருந்தது. அவர் பிரின்ஸ்பால் ரூமிற்குப் போய் அப்பாவாக இன்னொருவரைக் கூட்டிட்டு வந்ததற்கு மகன் மேல் கோபப்படாமல் உரையாற்றுவதுதான் படத்தின் மொத்த ஆன்மா பேசிய இடம் என நண்பர்கள் சொன்னார்கள்.
 கடைசியில் குளோசப்பில் முடியும் இரண்டு டீ கிளாஸ் களைப் பார்த்துக்கூட மக்களால் கைதட்ட முடிந்தது. மிதவாதியாகவே இதில் மாரி செயல்பட்டிருக்கிறார்...’’ அர்த்தம் பொதிந்து பேசுகிறார் நடிகர், இயக்குநர் மாரிமுத்து.‘‘எனக்கு இதில் பொறுப்போடு, கதையில் கேரக்டராகவே உணர்ந்து கொள்வதுதான் சரியென்றுபட்டது. வெயில் அடிக்கிற முழுப் படத்தில் வித்தை காட்டுவதற்கெல்லாம் வேலை இல்லை. பாத்திரங்களைப் பின்தொடர்ந்து உணர்வுகளைப் பதிவு செய்வதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை...’’ என மனதை ஒப்புக்கொடுத்து பேசுகிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.‘‘வாழ்க்கையில் ஒளிச்சு வைச்சிருக்கிற மனித உணர்ச்சிகளை, மனித வேறுபாடுகளை மேக்கப் போடாம, பிரிச்சு அள்ளி பிலிம்ல வந்து கொட்டிரணும். அன்பும் கோபமும் கொண்டு எளிமையாக வாழ முடிகிற மனுஷங்களை எப்பவும் காப்பாத்தி, அடையாளம் காண்பிக்கிறதுதான் இனிமேலும் என் வேலை...’’ கண்கள் மின்ன தன் நெஞ்சில் கைவைத்துப் பேசுகிறார் மாரி.
- நா.கதிர்வேலன் படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|