அடையார் திருக்குறள் சிறுதானிய உணவகம்
லன்ச் மேப்
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு உகந்துவரக்கூடிய உணவை அருந்த வேண்டும். அதுவே சிறந்த உணவு... என்கிறார் திருவள்ளுவர் தனது ‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல / துய்க்க துவரப் பசித்து’ என்ற குறளில்.அப்படியான உடலுக்கு உகந்த அனைத்தும் சிறுதானியங்களில் அதிகமாகவே உள்ளன. இதைத்தான் சென்னை அடையாறிலுள்ள திருக்குறள் உணவகம் கடைப்பிடிக்கிறது. சிறுதானிய ரெஸிப்பிக்கள்தான் இவர்களது சிறப்பே. கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை, தினை... என மதிய உணவை மட்டுமல்ல... இரவு டிபனையும் சிறுதானியங்களைக் கொண்டே தயாரிக்கிறார்கள்.
 “இந்தத் தலைமுறை மக்களுக்கு பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சேர்க்கவே திருக்குறள் உணவகத்தைத் தொடங்கினோம்...’’ என உற்சாகமாக பேசத் தொடங்கினார் சுரேஷ். ‘‘சிறுதானியத்தை சமைக்க அதிக நேரமாகும். சமைச்ச பிறகு நாம எதிர்பார்க்கிற சுவை கிடைக்காது. அதிக சுவைக்கு நம்ம நாக்கு பழக்கப்பட்டதால ஒரு மாதிரி இருக்கும். ஆனா, இதுதான் இயற்கையான சுவை. இதை உணர்ந்து சாப்பிடணும். அப்படித்தான் மக்களும் சாப்பிடறாங்க.வேணும்னா பாருங்க... அடுத்த 10 வருஷங்கள்ல சிறுதானிய உணவுகளுக்குத்தான் அதிக கிராக்கி ஏற்படும்...’’ என சுரேஷ் முடிக்க, திருக்குறள் என உணவகத்துக்கு பெயர் வைத்ததற்கான காரணத்தை விளக்கினார் கார்த்திகேயன் இமயவரம்பன்.
‘‘சிறுதானியங்களும் சரி திருக்குறளும் சரி... இரண்டுமே அளவுல சின்னது. ஆனா, அதிக பலன் தரக்கூடியது. திருக்குறள்ல எப்படி வாழ்க்கைத் தத்துவங்கள் எல்லாம் அடங்கியிருக்கோ அப்படி நுட்பமான சத்துகள் எல்லாம் சிறுதானியங்கள்ல இருக்கு. அதனாலதான் இந்தப் பெயரை வைச்சோம்!’’ புன்னகைக்கும் கார்த்திகேயன் இயமவரம்பனும் சுரேஷைப் போலவே பொறியியல் பட்டதாரி தான். ‘‘நாங்க இரண்டு பேருமே பல மென்பொருள் நிறுவனங்கள்ல வேலை பார்த்தோம். எதுவும் திருப்தி தரலை. கல்லூரி நாட்கள்ல நம்மாழ்வார் பத்தியும் இயற்கை விவசாயம் பத்தியும் மணிக்கணக்குல பேசுவோம். வேலைக்குப் போன பிறகும் நாங்க பேசறது நிக்கலை.அப்படித்தான் ஒருநாள் பேசிட்டு இருந்தப்ப சமூகத்துக்கு பயன்படற உணவகம் பத்தின டாபிக் வந்தது. சிறுதானியங்களை மட்டுமே வைச்சு உணவகம் தொடங்கினா என்னனு யோசிச்சோம்.
 ஆரம்பத்துல கரையாஞ் சாவடில ஆர்கானிக் உணவகம் தொடங்கினோம். சில காரணங்களால அதை தொடர்ந்து நடத்த முடியலை. ஆனா, மக்கள்கிட்ட நல்ல பெயர் வாங்கினோம். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரலை.அப்பதான் முதல்ல மக்களை சிறுதானியங்களுக்கு பழக்கப்படுத்தணும்னு தோணிச்சு. நடுத்தர மக்கள்கிட்ட இது போச்சுனா எல்லார்கிட்டயும் போய்ச் சேர்ந்த மாதிரிதானே? ஆனா, மத்த உணவுப் பொருட்களோடு ஒப்பிடறப்ப சிறுதானியங்கள் விலை அதிகம். ஆக, லாபம் அதிகம் வராதுனு தெரிஞ்சும் மக்கள்கிட்ட இதைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு வெறும் சிறுதானியங்களை மட்டும் வைச்சு இந்த உணவகத்தை ஆரம்பிச்சோம்.எதிர்பார்த்த மாதிரியே ஒரு வருஷத்துக்கு லாபம் வரலை. ஆனாலும் நாங்க பின்வாங்கலை. இப்பக் கூட பெருசா லாபம் வர்றதில்ல. ஆனாலும் நாங்க விடறதா இல்ல. மெல்ல மெல்ல இப்ப மக்கள்கிட்ட உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பிச்சிருக்கு. இது ஆரோக்கியமான விஷயம்.
சிறுதானியங்களை வைச்சே நாங்க பல வெரைட்டி செய்யறோம், அதுவும் மக்களுக்கு பிடிக்கிற மாதிரி. உதாரணமா, முடக்கத்தான் கீரைல பானியும்; கேழ்வரகுல பானி பூரியும் செய்து தர்றோம். இதெல்லாம் எங்க கண்டுபிடிப்புதான்...’’ என்கிறார் கார்த்தி கேயன் இமயவரம்பன்.இந்த உணவகத்தின் அமைப்பே அழகாக இருக்கிறது. இருக்கைகள் அனைத்தும் மூங்கிலால் உருவானவை. ஜன்னல் திரைகளை வெட்டிவேரால் அமைத்திருக்கிறார்கள். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.சாதம் சாப்பிடுகையில், ‘நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பூங்கர் அரிசி இந்த விவசாய நிலத்தில் விளைந்தது.
இதில் இப்படியான சத்துக்கள் உள்ளன...’ என திரையிட்டுக் காட்டுகின்றனர். நம்மாழ்வார் விருந்து, தொல்காப்பியர் விருந்து... என இருவகையான மதிய உணவுகள். பாரம்பரிய அரிசி சோறு, சீரக சம்பா பிரியாணி, ஆவாரம்பூ சாம்பார், தூதுவளை ரசம், சிறுதானிய சப்பாத்தி, தானியத் துவையல்... என மெனு அசத்துகிறது.நம்மாழ்வார் விருந்தில் சிறுதானிய உணவுகள் அதிகம் இருக்கும். இயற்கை முறை சாலட்கள். இவர்களது ஸ்பெஷல் உளுந்தங்களியும், வாழைப்பூ வடையும்.வெரைட்டி ரைஸும் உண்டு- அதுவும் குதிரை வாலி சாம்பார் சாதம், வரகு எலுமிச்சை சோறு, மிளகு சோறு, சாமை தயிர் சோறு, தினை சாதம், எள்ளுச்சோறு, சீரக சம்பா பிரியாணி என..!
-திலீபன் புகழ் படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
 உளுந்தங்களி
வறுத்து அரைத்த கறுப்பு உளுந்து மாவு - 100 கிராம் பச்சரிசி மாவு - ஒரு சிட்டிகை கருப்பட்டி - 100 கிராம் நெய் அல்லது நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் சுக்கு, ஏலக்காய் -சிறிதளவு தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பக்குவம்: உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கரைக்கவும். கருப்பட்டியைக் கரைத்து, வடிகட்டி, அடி கனமான கடாயில் கரைத்து வைத்துள்ள அரிசி, உளுந்து கலவையை சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கருப்பட்டிக் கரைசலை வடிகட்டிச் சேர்க்கவும். நன்றாகச் சேர்ந்து வரும்போது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கிளறி இறக்கவும். குறைவான அனலில் நீண்ட நேரம் கிண்ட வேண்டும். இறுதியாக சுக்கு, ஏலக்காய் பொடி, தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.
வரகு புளியோதரை சோறு
வரகரிசி - ஒரு கப் முழு மல்லி (தனியா), எள் - தலா ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் - கால் சிட்டிகை காய்ந்த மிளகாய் - 10 புளி - எலுமிச்சை அளவு வேர்க்கடலை - 5 டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு பொடித்த கருப்பட்டி வெல்லம் - சிறிதளவு மஞ்சள்தூள், மிளகு - ஒரு சிட்டிகை எண்ணெய் - கால் கப் உப்பு - தேவைக்கேற்ப
பக்குவம்: வரகரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து பொடிக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து; புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கிளறி, இறுக வற்றி எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால் புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை வரகரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
|