ஓர் அமைச்சரின் தினசரி வசூல் ரூ.11 கோடி!



விளாசுகிறார் பீட்டர் அல்போன்ஸ்

வி.சந்திரசேகரன்


எல்லாவற்றிலும் கூர்மையான பார்வை, அறிவார்ந்த விவாதம், கவனமான வார்த்தைகள்... பீட்டர் அல்போன்ஸிடம் பேசுவது ஒரு மாறுபட்ட  அனுபவம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர், தமிழக காங்கிரஸின் செய்தித்  தொடர்பாளர் என்று அவரது பயோடேட்டா நீள்கிறது!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி எந்தவித ஆயத்தப்பணியிலும் ஈடுபடுவது போல்  தெரியவில்லையே... தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் சில தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என்ற வழக்கமான மனநிலையில்  இருக்கிறீர்களா..?

சில காலமாகவே தமிழக காங்கிரஸில் சோர்வு இருந்து வருவது உண்மை. மற்ற பல மாநிலங்களில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பில்  காங்கிரஸ் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்ற முடிவுக்கு வந்து நாடாளுமன்றத்  தேர்தலை நோக்கியே காங்கிரஸ் பயணிப்பதாக நினைக்கிறேன். தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டியது அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டியின் கடமை. ராகுல் காந்தி, தலைமைப் பதவிக்கு பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைப்  புனரமைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.

ராகுல் இங்கே அப்படி எதையும் முடுக்கிவிட்டது போல் தெரியவில்லையே?


முன்பு ஒரு பொதுச்செயலாளர் நான்கு மாநிலங்களை பார்த்துக் கொள்வார். இப்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு பொதுச்செயலாளரும்  அவருக்குக் கீழ் மூன்று அல்லது நான்கு செயலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாவட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.  உள்ளூர் மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்ற வேண்டும் என்று களப்பணிக்கான வரைவுத் திட்டங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு  முன்னுரிமை தரப்படுகிறது.

ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸின் தலைவராக நியமிக்க உள்ளதாக செய்திகள் அடிபடுகிறதே..?


அப்படி எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. ஒருவேளை ப.சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டால் நிச்சயமாக அந்தப் பதவிக்கு ஒரு  கவுரவம் கிடைக்கும். அவரது அனுபவம், நுண்மான் நுழைபுலம் எல்லாம் கட்சிக்கு புதிய அந்தஸ்தைத் தரும்.

அவரும் அவரது குடும்பத்தினரும் பல வழக்குகளில் சிக்கிக்கொண்டு கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்களே..?

எந்த வழக்கிலும் இதுவரை எந்த குற்றச்சாட்டும் நிருபிக்கப்படவில்லையே! இன்று பிரதமர் மோடியின் அரசை குறிப்பாக விமர்சிக்கும் ஒரு  தலைவராக இந்தியாவில் ப.சிதம்பரம் அங்கீ கரிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை முடக்க பாஜக செய்யும் சூழ்ச்சியாகவே இதைப்  பார்க்கிறோம். அமலாக்கத்துறை ஒரு முறை விசாரித்தால் போதாதா? நான்கு நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நடத்த வேண்டுமா?ப.சிதம்பரத்தின் பேட்டிகளை, சுற்றுப்பயணங்களை முடக்க நினைக்கிறார்கள். இது ஒரு வித டார்ச்சர். நீதிமன்றமே அவரைத் தொடக்கூடாது  என உத்தரவிட்டுள்ளது. இந்தப் பொய் வழக்குகளால் அவரது நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை!

மோடியின் ஆளுமைக்கு சமமாக உள்ளாரா ராகுல்? பாராளுமன்றத்தில் மோடியை அணைத்தபடி கண்ணடித்தது... பிரதமரை ‘திருடன்’ எனக்  கூறுவது... ஆகியவை எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக விமர்சிக்கப்படுகிறதே..?

என்ன பெரிய ஆளுமை மோடியிடம் உள்ளது? ஒரு பிரதமர் போலவா அவர் பேசுகிறார்..? ஊடகங்கள் விலைக்கு வாங்கப்பட்டு  சிறுபிள்ளைத்தனம் என்ற விமர்சனம் பரப்பப்படுகிறது. இப்படிப்பட்ட எதிர்மறையான பிம்பத்தை ராகுல் மீது ஏற்படுத்த பல கோடிகளை  பாஜக இறைக்கிறது.

ஆனால், அடுத்தடுத்த மாநில தேர்தல்களில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தோற்றுக் கொண்டிருக்கிறதே..?


யார் சொன்னது? சமீபத்தில் பஞ்சாப்பில் நடந்த ஊராட்சித் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  வென்றுள்ளது. பாஜக அறுபது இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பெருவாரியான இடங்களில் பாஜக தோற்றுள்ளது. வர இருக்கும் மூன்று  மாநில தேர்தல்களில் அக்கட்சி தோற்கப் போகிறது என சர்வேக்கள் சொல்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சிறு சிறு சறுக்கல்களையும்  பெரும் வரலாற்றுப் பிழையாகச் சித்தரிப்பதையும், ஒரு தலைவரின் சாதாரண உரையாடலின்போது ஏற்படும் சின்னச் சின்ன சமிக்ஞைகளை  பெரிதாக்குவதையும் ஊடகங்கள் தொடர்ந்து செய்கின்றன.

ஏன் அப்படிச் செய்யவேண்டும்?

பணம்... பணம்..!

ஏன்... காங்கிரஸிடம் பண வசதி இல்லையா?

காங்கிரஸ் கட்சி பொருளாதார நிலையில் பலவீனமாக, கட்சி நடத்த முடியாத நிலையில் உள்ளது! கட்சி எங்கெல்லாம் மேலே  வருகிறதோ, அங்கெல்லாம் கட்சித்தலைவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்  தலைவர் வீட்டில் ரெய்டு. அதே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த டி.ஆர்.எஸ்., ‘ஓட்டு போட்டால் ஐந்து லட்ச ரூபாய் தருகிறேன்’ என்று  வாக்குறுதி வழங்கி சுய உதவிக் குழுவிடம் சத்தியம் செய்து தரச் சொல்லிக் கேட்கிறார்! அவர் மீது நடவடிக்கை இல்லை. கர்நாடகத்தில்  வெளிப்படையாக ‘30 கோடி ரூபாய் தருகிறேன்’ என மகளிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ விடம் பேரம் பேசுகிறார்கள் எடியூரப்பாவின் ஆட்கள்.  அவர்கள் மீது எந்த ரெய்டும் இல்லை.

இப்படிப் பல கொடுமைகள். இதையெல்லாம் மீறித்தான் தேர்தல் களத்தில் பணியாற்றுகிறோம். நடக்கப் போவது சாதாரண தேர்தல்  அல்ல... இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிற யுத்தம்! இது மோடி, ராகுலுக்கு இடையிலான போர் அல்ல. ஜனநாயகத்துக்கும்  சர்வாதிகாரத்துக்கும் இடையில் நடக்கும் யுத்தம்! ஊழலின் மொத்த உருவமே மோடி அரசுதான்..! போபர்ஸ் ஊழல் வெறும் ரூ.65  கோடிதான். அதற்கும் இதுவரை சாட்சியே இல்லை. அதை பெரிதாக ஊதிவிட்டார்கள். ஆனால், ரஃபேல் பற்றி ஊடகங்கள் வாயே  திறக்கவில்லை. இந்த ரஃபேல் என்ற மிகப்பெரிய விமான ஊழலை முதலில் வெளியே கொண்டு வந்ததே ராகுல்தான்.

முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே இதுகுறித்து பேசும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.500 கோடிக்கு  பேசியதை எப்படி ரூ.1500 கோடிக்கு மோடி அரசு பேசலாம்? அப்போதைய பிரான்ஸ் அதிபரின் காதலி எடுத்த திரைப்படத்துக்கு அனில்  அம்பானியின் ரிலையன்ஸ் நிதி உதவி செய்துள்ளது! ஒரு முக்கியமான ஒப்பந்தம் போடப்படும்போது எப்படி ஒரு தனியார் கம்பெனிக்கு  அது நிதி கொடுக்கிறது? பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதற்கும் தெளிவாக பதில் சொல்லவில்லை. பிரதமரோ இதுபற்றி  பேசவே இல்லை. பிரச்னையை திசை திருப்ப ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்’ (நுண்ணிய தாக்குதல்) இரண்டாவது கொண்டாட்டம் பற்றி ஊடகங்கள்  பேசிகின்றன. இதற்கு இப்போது என்ன அவசியம்? பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என சிந்திக்க வேண்டிய நாட்டை, ‘என்னிடம்  துப்பாக்கி இருக்கு, ஏவுகணை இருக்கு’ என்று திட்டமிட்டே பேச வைக்கிறார்கள்! இது வன்முறைக் கலாசாரத்துக்கு மக்களைத்  தூண்டுவதாகவே அமையும்.

எடப்பாடி அரசியலுக்கு வந்தது... குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல்... என்று அடுக்கடுக்கான விஷயங்களை வரிசையாக திமுக  அம்பலப்படுத்தும்போது உள்ளூர் காங்கிரஸ் அமைதியாக வேடிக்கை பார்க்கிறதே?

அப்படியில்லை. எதிர்க்கட்சியின் பணியை திமுக செம்மையாகச் செய்கிறது. நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, மதச்சார்பற்ற  அரசியல் சக்திகளை ஒருங்கிணைந்து மு.க.ஸ்டாலின் தலைமையை பலப்படுத்தி வருகிறோம்.

தமிழக அரசு பெரும்பான்மையை இழந்தும் எப்படித் தாக்குப்பிடிக்கிறது?

பணம்தான்! பிறகு ஊடகங்களின் ஒத்துழைப்பு. மக்கள் மெதுவாக போர்க் குணத்தை இழந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டு  போடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அன்றாடப் பிரச்னைகளை எதிர் கொள்கவதே பெரும் போராட்டமாக உள்ளதே!இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அரசாங்கமே நடக்கவில்லை. மாறாக பத்துப் பதினைந்து பேர் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து,  எங்கெல்லாம் பணம் வருகிறது என்று பார்த்து அங்கெல்லாம் கசக்கிப் பிழிந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிலக்கரி, மின்சாரம், முட்டை வாங்குவது, பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத்துறை... இப்படி தொட்ட இடத்தில் எல்லாம் ஆயிரங்கால்  பூதம்போல் தோண்டத் தோண்ட ஊழல் வந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக எந்த தமிழக அமைச்சரைச் சொல்கிறீர்கள்..?

எல்லாரும்தான்! எனக்கு ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு பெரிய அமைச்சர் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி வசூல்வேட்டை நடத்துகிறாராம்!  இந்த அக்கிரமத்தை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது! அவர் தவிர மற்றவர்களும் அவரவர் சாமர்த்தி யத்துக்கு ஏற்ப கல்லா  கட்டுகிறார்கள். வனத்துறையில் என்.ஓ.சி. வாங்குவதிலிருந்து, மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அனுமதி பெறுவது, வீட்டுமனை பட்டாக்களை  முறைப்படுத்துவது... என எல்லாவற்றுக்கும் கலெக்‌ஷன்! இதில் அதிகாரிகளும் கூட்டணி அமைத்துள்ளனர் என்பதுதான் பெரும் சோகம்!    ஒரு சாதாரண மோட்டார் ஆய்வாளர் வீட்டில் எத்தனை கிலோ தங்கம் எடுத்தார்கள்? அப்படியிருந்தால் அவருக்கு மேலுள்ள கமிஷனர்,  செகரட்டரி, அமைச்சர்களுக்கு எவ்வளவு போயிருக்கும்? பணம் கொட்டுகிறது!

டி.ஜி.பி வீட்டில் ரெய்டு என்பது தமிழக அரசியலில் பெரிய விபரீதம்! முதல்வர் மீது ஊழல் புகாரை விசாரிக்கச் சொல்லி விஜிலன்ஸ்  கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. அந்த ஊழல் புகாரை விசாரிக்கும் ஏ.டி.ஜி.பி. மீது பாலியல் புகார் சொல்லி ஒரு எஸ்.பி.  புகார் தருகிறார். அதன் மீது விசாரிக்க வேண்டிய டி.ஜி.பி. மீது குட்கா ஊழல்! இவர்கள் மேல் விசாரிக்க வேண்டிய முதல்வர் மீது ஊழல் வழக்கு!அதாவது வட்டமாக அமர்ந்து அனைவரும் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்! எல்லோரையும் எல்லோரும் காப்பாற்ற  வேண்டும்! நீதிமன்றச் செயல்பாடுகளோ மிகவும் மந்தமாக உள்ளது. சில தீர்ப்புகளைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை!