ஆசிரியர் பணியை விரும்பும் உலகக் கோடீஸ்வரர்!
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக கம்ப்யூட்டரைத் தொட்டுப் பார்த்தவர், இன்று ஆன்லைன் பிசினஸில் உலக முன்னோடியாக வலம் வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்; ஆன்லைன் வர்த்தக இணையதளமான ‘அலிபாபா’வின் சேர்மன் ஜாக் மா-தான் அந்த முன்னோடி. கம்ப்யூட்டர் அவருக்கு அறிமுகமானபோது வயது 29. சீனாவில், காங்சூ நகரில் பிறந்த ஜாக் மாவின் இயற்பெயர் மா யுன். தனது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்ததில் கிடைத்த பணத்தை வைத்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலத்தில் பேசிப் பேசி மொழித்திறனை வளர்த்துக்கொண்ட மா யுன்னிற்கு, ஒரு சுற்றுலாப்பயணி சூட்டிய பெயரே ஜாக் மா! கல்லூரி நுழைவுத்தேர்வில் கடைசி மதிப்பெண், முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணலில் தோல்வி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10 முறை சேர்க்கை விண்ணப்பம் நிராகரிப்பு... என இளம் பருவத்தில் ஜாக் மா சந்தித்தது எல்லாமே தோல்வியிலே முடிந்தன.
துவண்டுபோகாத ஜாக் மா, ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக மிகக் குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவரது முதல் மாதச் சம்பளம் 12 அமெரிக்க டாலர்கள். அதாவது 870 ரூபாய்.. இன்று ஜாக் மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.79 லட்சம் கோடி! 1999ல் ஒரு சிறிய அறையில் எண்பதுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் திரட்டிய 60 ஆயிரம் டாலர் முதலீட்டில், தன்னிடம் பாடம் பயின்ற மாணவர்களைக் கொண்டே ‘அலிபாபா’வை நிறுவினார்.
ஏற்றுமதியாளர்கள் நேரடியாகத் தங்களின் பொருட்களை இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்யவும், பணப் பரிமாற்றத்துக்கும் ஏற்ற ஒரு தளத்தை அதில் அறிமுகப்படுத்தினார். இது பெருமளவில் வெற்றி பெறவே, ‘சைனா கூட்ஸ்’ உலகளவில் பிரபலமானது. ஜாக் மாவின் கல்லாவும் நிரம்பியது. இன்று 200 நாடுகளின் ஆன்லைன் வர்த்தகத்தில் ‘அலிபாபா’வின் ராஜ்ஜியம்தான்! சமீபத்தில் சேர்மன் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த ஜாக் மாவை, 2019 வரை பணியில் இருக்குமாறு நிறுவனப் பங்குதாரர்கள் கேட்டுள்ளனர். இந்நிலையில் ஜாக் மா, தன்னை உருவாக்கிய ஆசிரியப் பணியைத் தொடரப் போவதாக விருப்பம் தெரிவித்துள்ளதுதான் ஹைலைட்!
- த.சக்திவேல்
|