ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 19
திறந்த சிவகாமியின் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான்! இருவரது அமிர்தங்களும் இரண்டறக் கலந்தன. சங்கமித்துப் பெருகின. ஒற்றியதை விலக்காமல் தன்இரு கரங்களால் அவள் வதனத்தை ஏந்தினான். போருக்கு ஆயத்தமாகும் படைக்கலன்களைப் போல் இருவரது உடல் ரோமங்களும் குத்திட்டு நின்றன. ஆற்றுப்படுத்தவும் பரஸ்பர துணையின் அவசியத்தை உணர்த்தவும் இருவருக்குமே அந்தக் கணம் தேவைப்பட்டது. தங்களைப் பூரணமாக அதற்கு ஒப்புக் கொடுத்தார்கள். தன் அதரத்தைத் தவிர வேறு எங்கும் அவன் உதடுகள் நுழையாதது இன்பத்தையும் நிம்மதியையும் வெறுமையையும் ஒருசேர சிவகாமிக்கு அளித்தது.
இன்பத்துக்குக் காரணம், ஹிரண்யவர்மர் தன்மீதான ஐயங்களைக் கிளப்பியபிறகும் கரிகாலன் அவளை நம்புவதை அவன் உடல் வெளிப்படுத்தியது. நிம்மதிக்குக் காரணம், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும் கரைகள் உடையாதபடி பார்த்துக் கொள்ளும் அவன் கண்ணியம். வெறுமைக்குக் காரணம், கரைகள் உடைந்தால்தான் என்ன... எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுடன் அதற்கு அணை போட வேண்டும்... என்ற கேள்வி. பூத்த மூன்று உணர்ச்சிகளிலும் வெறுமையே ஜெயித்தது! அதை வெளிப்படுத்தும் விதமாக அடிவயிற்றிலிருந்து பெருமூச்சை வெளியேற்றினாள்.
இதன் விளைவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபோது எலும்புகளுடன் ஒட்டிய அவள் ஸ்தனங்கள், சுவாசத்தை வெளியேற்றும்போது அளவுக்கு மீறி வளர்ந்து கச்சையின் முடிச்சைத் தளர்த்தின! தனது உடல் தன் வசத்தில் இல்லை என்பதை வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கிய அந்நிலையிலும் உணர்ந்தாள். இச்சூழலில் தன் முகக்குறிப்பை அவன் கண்டால் என்ன நினைப்பான்..? தாங்க முடியாமல் அதரங்களை விலக்கியவள், என்ன ஏது என கரிகாலன் பார்வையால் வினவுவதற்குள் கிளைகளில் அமர்ந்திருந்த அவன் மடியில் சாய்ந்தாள்.
நல்லவேளை... குப்புறப் படுத்திருக்கிறோம். வதனத்தில் பீறிட்டு ஓடும் குருதியோட்டத்தை அவன் காணவில்லை என்று நினைக்கும்போதே... குழையத் தொடங்கிய அவள் உடலின் வெப்பம், அவன் தொடைகளில் அழுத்தத் தொடங்கிய தன் ஸ்தனங்களின் வழியே கரிகாலனின் உடலுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தாள்! கையறு நிலையில் சிவகாமி தவித்தது எத்தனை யுகங்களோ... தலைக்கு மேல் பாய்ந்த வெள்ளம் எத்தனை அடிக்கு உயர்ந்தால்தான் என்ன... என்ற முடிவுக்கு அவள் வந்தபோது அவள் செவிக்குள் அவன் சுவாசம் பாய்ந்தது!
கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவள் உடல் ரோமங்களும் புலப்படத் தொடங்கின! இமைகளை மூடினாள்.‘‘சிவகாமி...’’ அவள் பெயர்தான். பலமுறை அழைத்துப் பழக்கப்பட்ட நாமகரணம்தான். ஆனால், அப்போது அதை உச்சரிப்பதற்குள் கரிகாலனுக்கு வியர்த்துவிட்டது! படர்ந்த கொடியைத் தாங்கும் வல்லமை அவன் உடல் என்னும் மரத்துக்கு இருந்தது. ஆனால், ஏனோ அக்கணத்தில் கொடியே மலையாகக் கனத்தது. பாரம் தாங்காமல் நிமிர்ந்தான் கரிகாலனின் தடுமாற்றம் சிவகாமிக்கு சிரிப்பை வரவழைத்தது.
ஆணின் பலவீனம், பெண்ணின் உடல் குழைவதைக் காண்பதுதான் என்பதை அனுபவபூர்வமாக அப்போது உணர்ந்தாள். அறிவையும் வலுவையும் செயல்படுத்த முடியாமல் தன் முன் ஒடுங்கி நிற்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது! முகத்தைச் சாய்த்து இமைகளைப் பிரித்து தன் பார்வைக் கணையை அவன் நெஞ்சில் பாய்ச்சினாள்! ‘‘அழைத்தீர்களா...’’ ‘‘ம்...’’ ‘‘எதற்கு..?’’என்னவென்று சொல்லுவான்..? அவள் இடுப்பில் தன் கரங்களைத் தவழவிட்டான். தொடு உணர்ச்சி தாங்காமல் அசைந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த கிளையும் அசைந்து இருவரையும் நடப்புக்கு அழைத்து வந்தது. கரிகாலன் சட்டென்று கிளைகளை லேசாக விரித்து கீழே பார்த்தான்.
‘‘யாராவது வந்துவிட்டார்களா..?’’ கேட்டபடி எழுந்திருக்க முற்பட்ட சிவகாமியைத் தடுத்து, முன்பு போலவே படுக்க வைத்தான். ‘‘இல்லை...’’ ‘‘சாளுக்கிய வீரர்கள் வரவில்லையா..?’’‘‘இல்லை என்றேனே...’’ காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். சிவகாமிக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அதற்கு...’’‘‘ம்...’’ இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை. எந்த சாளுக்கிய வீரனும் சந்தேகப்பட்டு இங்கு வராததால் நாம் இப்படியே இருக்கப் போகிறோமா... என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அவன் கை விரல்கள் தன் முதுகில் கோடு கிழிக்கத் தொடங்கியதும் பார்வையைத் தாழ்த்தினாள்.
‘‘சிவகாமி...’’இப்போது ‘ம்’ கொட்டுவது அவள் முறையானது. ‘‘ம்...’’‘‘எதற்காக உன்னை அழைத்தேன் என்று கேட்டாய் அல்லவா..?’’ எப்போது கேட்டாள்... ஆம். சில கணங்களுக்கு முன். ஏன் கேட்டாள்... அவன் விரல்கள் ஏன் இப்படி முதுகில் ஊர்கின்றன... கச்சையின் முடிச்சுப் பக்கமாக நகர்கிறதே... முடிச்சை நிமிண்டுகிறானே... ஏற்கனவே முடிச்சின் இறுக்கம் தளர்ந்திருக்கிறதே... ஒருவேளை... ‘‘ஆம் கேட்டேன்...’’‘‘பதில் தெரிய வேண்டாமா..?’’ எந்த பதில்..? தளர்ந்த கச்சையின் உட்புறத்துக்குள் விரல் நுழையப் போகிறதா... இந்த இடம்... இச்சூழல்... ‘‘சொல்லுங்கள்...’’
‘‘எதைச் சொல்ல வேண்டும்..?’’பித்து நிலை. மாறி மாறிப் பிதற்றுவதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். உடல்களின் மொழி அதன் போக்கில் உரையாடலைத் தொடர... பேச்சு மொழி தொடர்பற்று ஒலித்துக் கொண்டிருந்தது. ‘‘எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதை..!’’ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதை உச்சரித்தாள். ஆனால், அதுவே அதுவரை மறைந்திருந்த அனைத்தையும் கரிகாலனுக்கு நினைவுபடுத்திவிட்டது! குறிப்பாக மரத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தை. கச்சையின் முடிச்சை தன் கை கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் உருட்டிக்கொண்டிருந்த கரிகாலன், நிதானத்துக்கு வந்தான்.
அதுவரை தன் வெற்று முதுகில் அளைந்துகொண்டிருந்த அவன் விரல்கள் ஒரு நிலைக்கு வந்ததிலிருந்து அவனது மனப்போக்கை சிவகாமி ஊகித்துவிட்டாள். மேற்கொண்டு உரையாடலைத் தொடர்ந்த அவனது குரலின் தொனியும் அவன் மனநிலை மாறிவிட்டதை வெளிப்படுத்தியது.‘‘வனத்தைச் சுற்றி சாளுக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்க இங்கிருந்து எப்படி வெளியேறப் போகிறோம்... பல்லவ இளவலைச் சந்திக்கப் போகிறோம்... என்று கேட்டாய் அல்லவா..?’’அவள் வினவியது, ‘எப்படி வனத்திலிருந்து வெளியேறுவது..?’ என்று மட்டும்தான். ஆனால், அவள் சொல்லாமல் விட்ட சகலத்தையும் கரிகாலன் சொல்லிவிட்டான்.
எனில், ஏதோ திட்டம் வகுத்திருக்கிறான் என்று அர்த்தம். அதைக் கேட்பதற்காக எழுந்திருக்க முற்பட்டாள். ‘‘எதுவாக இருந்தாலும் இப்படியே கேள்...’’ கரிகாலன் அதட்டினான். ‘‘இ..ப்..ப..டி..யே..வா..?’’‘‘ஆம். இப்படியே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் அவள் முதுகில் தன் விரல்களைப் படரவிட்டான். முன்பு அவன் விரல்கள் படர்ந்து அளைந்தன என்றால் இப்போது அதே விரல்கள் யாழை மீட்டுவதுபோல் அவள் சருமத்தை வருடின. அதை அனுபவித்தபடியே தொடர்ந்தாள். ‘‘ஆம்... எப்படி வெளியேறப் போகிறோம் என்று கேட்டேன்... வழி கிடைத்துவிட்டதா..?’’
‘‘கிடைத்துவிட்டது...’’ சொன்ன கரிகாலன் இமை மூடித் திறப்பதற்குள் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை அவிழ்த்தான்! அதிர்ந்துபோய் முகத்தைத் திருப்பி அவனைப் பார்க்க அவள் முற்படுவதற்குள், கச்சையை இறுக்கி முடிச்சிட்டான். தன்னை பிரமையுடன் ஏறிட்டவளின் அதரங்களை நோக்கிக் குனிந்தவன் தன் உதடுகளால் அவளை அழுத்தி முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். அவள் முதுகைத் தடவிக்கொண்டிருந்த இடது கை, அவள் தலையைக் கோதத் தொடங்கியது. அங்கிருந்து நகர்ந்து அவள் கன்னங்களைத் தடவிவிட்டு பழையபடி முதுகுக்கு வந்தது.
‘‘சிவகாமி, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் தெரியுமா..?’’லேசாகப் புரண்டு தன் ஸ்தனங்களை இன்னும் அழுத்தமாக அவன் தொடையில் பதித்தபடி, வந்த சிரிப்பை வாயைப் பொத்தி அடக்கினாள். ‘‘கள்ளி!’’ அவள் கன்னத்தைக் கிள்ளி அதே இடத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். ‘‘மல்லை மாநகரத்துக்கு வடமேற்கே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் கிளைகளை விலக்கி கீழேயும் பக்கவாட்டிலும் ஆராய்ந்தான். சாளுக்கிய வீரர்கள் சல்லடை யிட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். உதட்டோரம் புன்னகை வழிய அவளை ஏறிட்டவன் அவள் இடுப்பு முடிச்சைத் தளர்த்தி ஆடையை சற்றே கீழிறக்கினான்.
தடுக்க உயர்ந்த அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான்.‘‘கவனி சிவகாமி... ஏனெனில் மறுமுறை சொல்ல நேரம் இருக்காது...’’‘‘அப்படியானால் அமர்ந்து கொள்கிறேன்... ’’‘‘தேவையில்லை... செவிகளைத் திறந்து வை... தவிர உன் உடலில் நான் வரையப் போகும் கோடுகளை நன்றாக உள்வாங்கு...’’ இரு கரங்களையும் முன்னோக்கி நகர்த்தி சிவகாமியை நன்றாக தன்னை நோக்கி இழுத்தான். கச்சையின் முடிச்சிலிருந்து இடுப்பைத் தளர்த்தி, தான் வெளிப்படுத்திய பிரதேசம் வரை தன் வலது உள்ளங்கையால் நன்றாகத் தேய்த்தான்.
பின்னர் அப்பகுதியின் நான்கு புறங்களிலும் தன் ஆள்காட்டி விரலால் கோடு இழுத்தான்.‘‘இதுதான் தொண்டை மண்டலம் சிவகாமி. வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ என்றபடியே அவள் பின்புற மேட்டின் பக்கம் தன் விரல்களைக் கொண்டு சென்றவன், ‘‘ம்...’’ என சிவகாமி அதட்டியதும் கண்களைச் சிமிட்டி விட்டு தொடர்ந்தான்.
‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென் சுபா.
இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வட கிழக்காகச் செல்கிறது...’’ நிறுத்திய கரிகாலன் அவள் எதிர்பாராத நேரத்தில் குனிந்து அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டு தொடர்ந்தான். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு.
ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ மூச்சுவிடாமல் பல்லவ நாட்டின் எல்லைகளைக் குறிப்பிட்டபடியே வந்த கரிகாலனின் குரல் சட்டென உணர்ச்சிவசப்பட்டது.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம்.
அது இங்கிருக்கிறது...’’ என சிவகாமியின் கச்சையி லிருந்து கீழ்நோக்கிக் கோடிழுத்தான். அவன் விரலுக்கும் தன் ஸ்தனத்துக்கும் அதிக தூரமில்லை என்பதை உணர்ந்த சிவகாமியின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் இவை இருக்கின்றன. இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன.
வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் மூங்கில் காடுகளுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்....’’ கரிகாலன் சொல்லச் சொல்ல சிவகாமியின் கண்கள் விரிந்தன. ‘‘இங்குதான் பல்லவ இளவல் ராஜசிம்மர் இருக்கிறாரா..?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. ‘‘பின் எதற்காக அங்கு செல்லவேண்டும்..?’’ ‘‘அங்குதான் ஹிரண்யவர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன!’’
(தொடரும்)
- கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்
|