கால் டாக்சியில் பயணம் செய்யும் பெண்களின் கவனத்துக்கு...
‘‘தனியாக என் டாக்சியில் வரும் பெண்கள் அல்லது சாலையில் நடந்து செல்லும் பெண்கள்... இவர்களைத்தான் குறிவைப்பேன்!’’- கால் டாக்சி டிரைவர் சுரேஷின் வாக்குமூலம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. இந்த வாக்குமூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள், பணி முடித்து இரவு தாமதமாக வீட்டுக்குத் திரும்பும் பெண்கள் என சகலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம், சுரேஷ் செய்தது அனைத்தும் பாலியல் க்ரைம்ஸ்! பத்தாவது படித்துவிட்டு டாக்சி ஓட்டத் தொடங்கிய சுரேஷ்குமார், தன் காரில் பயணம் செய்யும் பெண்களிடம் நூதனமான முறையில் பணம், நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது...
என அத்தனை க்ரைம்களையும் பல வருடங்களாகச் செய்து வந்திருக்கிறான்.‘‘பெரும்பாலும் திருமணமான பெண்கள்தான் என் டார்கெட். ஆளில்லா பகுதியில் காரை நிறுத்தி, கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகள் செய்வேன். இவர்களால் வெளியில் சொல்ல முடியாது... அப்படிச் சொன்னால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்... என்பதுதான் எனக்கான துருப்புச் சீட்டு...’’ என்கிற சுரேஷ், இரண்டு பெண்கள் தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததால் இப்போது கம்பி எண்ணுகிறான். ‘‘வெளிச்சத்துக்கு வந்திருப்பது ஒரு சுரேஷ்குமார்தான்.
ஆனால், சமூகத்தில் எண்ணற்ற சுரேஷ்கள் உண்டு. இவர்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கத் தயங்குவதுதான்...’’ என்று பேச ஆரம்பித்தார் ஐபிஎஸ் அதிகாரியான அருண் (டிராஃபிக் ஏடிஜிபி). கால் டாக்சியில் பயணம் செய்யும் பெண்கள் இதுமாதிரியான சிக்கல்களுக்கு ஆளானால் என்ன செய்யவேண்டும்... உதவிக்கு எப்படி அழைக்க வேண்டும் என்றும் விவரித்தார்.‘‘எந்த app மூலம் டாக்சி புக் செய்கிறோமோ அந்த ஆப் காட்டும் ரூட்டில்தான் டிரைவர் செல்கிறாரா என்பதை அவ்வப்போது பார்க்க வேண்டும்.
டாக்சியில் ஏறுவதற்கு முன்பே மொபைல் சார்ஜ் முழுமையாக இருக்கிறதா... இணைய வசதி தகுந்த செயல்பாட்டில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். 100ஐ மட்டுமல்ல 1091 டோல்ஃப்ரீ நம்பரை அழைத்தாலும் உடனடியாக உதவிகள் கிடைக்கும். இது பெண்களுக்காகவே ஸ்பெஷலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் டோல்ஃப்ரீ எண். டாக்சியில் ஏறியதும் வீட்டாரிடம் / நண்பர்களிடம் எந்த எண்ணுள்ள டாக்சியில் ஏறியிருக்கிறோம்... எந்தப் பாதை வழியாக வருகிறோம்... எந்த ஏரியாவைக் கடக்கிறோம்... என்பதை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை டிரைவர் கேட்கும் வகையில் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை டிரைவரின் போக்கில் சின்ன மாற்றம் தெரிந்தாலும் உங்கள் ஆப் கொடுத்திருக்கும் பாதுகாப்பு ஆப்ஷனை உடனே அழுத்தினால் அருகிலிருக்கும் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் செல்லும். தவிர ‘உன்னைக் கண்காணிக்கிறோம்... சரியாக நடந்து கொள்...’ என டிரைவருக்கும் எச்சரிக்கை செய்தது போல் ஆகும்...’’ என அருண் முடிக்க, ஆன்லைன் பயன்படுத்தி இக்கட்டான சூழல்களில் இருந்து எப்படித் தப்பிக்கலாம் என விவரித்தார் சென்னைப் பல்கலைக்கழக குற்றவியல் துறை விரிவுரையாளரான திருமதி லதா சுப்ரமணியன்.
‘‘பெரும்பாலான பெண்கள் டாக்சியில் ஏறி அமர்ந்ததுமே மொபைலில் மூழ்கி விடுகிறார்கள் அல்லது பாடல்கள் கேட்க ஆரம்பித்துவிடுகிறார்களே தவிர வண்டி எந்த திசையில் செல்கிறது என்று பார்ப்பதில்லை. இதை முதலில் தவிர்க்க வேண்டும். பிறகு, ‘என் உடை... என் உரிமை...’ டயலாக்கை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடை, நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மொபைலில் எமர்ஜென்சி கான்டாக்ட் பகுதியை ஏற்படுத்தி பெற்றோர், சகோதரர்கள், கணவன், மகன் அல்லது நண்பர்களின் மொபைல் எண்களைப் பதியுங்கள்.
டாக்சி ஆப்பிலும் நமக்கு வேண்டிய ஓரிருவருக்கு டிராக் விவரங்களைப் பகிரும் ஆப்ஷன்ஸ் இருக்கின்றன. இரவு நேரப் பயணங்களில் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்துங்கள். ஏசி வேண்டாம் என்று கூறி கார் ஜன்னலைத் திறந்து வையுங்கள்.‘SOS’ ஆப்ஷனைப் பற்றி எல்லாப் பெண்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டாலும் அடுத்த நொடி பட்டனை அழுத்துங்கள். பின்புற சீட்களை மட்டும் பயன்படுத்துங்கள். தெரிந்தவராகவே இருந்தாலும் டிரைவரிடம் சொந்த விஷயங்களைப் பேசாதீர்கள். பெப்பர் ஸ்பிரே, வைப்ரேட்டர், மிளகாய்ப்பொடி போன்றவற்றை எப்போதும் வைத்திருங்கள்...’’ என்கிறார் லதா சுப்ரமணியன்.
- ஷாலினி நியூட்டன்
|