எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்!
முகநூல் / டுவிட்டரில் உங்கள் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்கிறீர்களா..? இதைப் படியுங்கள்!
ஐந்தாம் படை என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கோள்மூட்டிக் கொடுப்பவரையும் நம்பகத்தன்மை இல்லாத வரையும் திட்டும் வசைச் சொல் என நினைக்கிறோம். உண்மையில் அச்சொல் குறிப்பிடுவது அரசின் உளவுத்துறையை! ஓர் அரசிடம் உள்ள நால்வகைப் படைகள் நேரடி எதிரியை எதிர்கொள்ளவும், ஐந்தாவது படை கண்ணுக்குத் தெரியாமல் இயங்கும் எதிரிகளை இனங்கண்டு வீழ்த்தவும் இயங்குகின்றன. அரசுகள் எப்போது உருவானதோ அப்பொழுதே உளவுப் படைகளும் தோன்றிவிட்டன. உளவுப் படைகள் உருவானதுமே பொதுமக்களும் கண்காணிக்கப்படத் தொடங்கிவிட்டார்கள்.
இரவுகளில் அரசன் மாறுவேடமிட்டுக்கொண்டு நகர்வலம் போனதெல்லாம் அக்காலம். அமெரிக்காவின் பென்ட கனில் அமர்ந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் பின் லேடன் எங்கு இருக்கிறார் என சேட்டி லைட் மூலமாகப் பார்த்துத் தாக்குதல் நடத்துவது இக்காலம்! ஒரே சமயத்தில் பல்லாயிரம் பேரை ஒரு சிறு கேமரா வழியாகக் கண்காணிப்பது என்ற குழு கண்காணிப்பில் தொடங்கி, ஜிபிஆர்எஸ் டிவைஸ்கள், ஃபேஸ் ரெகக்னைசர், அதிநவீன சென்சார்கள் ஆகியவை மூலம் ஒரு தனிநபர் எங்கெல்லாம் செல்கிறார், யாருடன் என்ன பேசுகிறார் என்பதை எல்லாம் கண்காணிப்பது வரை இன்று ஐந்தாம் படை முன்னேறியுள்ளது.
சமூகப் போராளிகள், தீவிர அரசியல் சிந்தனையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், சமூகப் பிரச்னைக்காக வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் மக்களைப் பொறுத்தவரை சமூக அந்தஸ்து மிக்க செயல் வீரர்கள். ஆனால், இவர்களை எந்த ஓர் அரசும் சந்தேகத்தோடும் எரிச்சலோடும்தான் பார்க்கிறது. அதனால், வேறு யாரையும்விட இவர்கள் அதிகமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ‘கண்காணிக்கப்படும் எழுத்தாளர்கள்… எஃப்.பி.ஐயின் கோப்புகள்’ (Writers Under Surveillance… The FBI Files) என்ற நூல் சர்வதேச அளவில் மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புக்கான உளவு அமைப்பான FBI எப்படி சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி யில் அமெரிக்காவின் பெருமிதத்துக்குரிய கவிஞர்களை, எழுத்தாளர்களை கண்காணித்தது என்பதை ஆதாரத்துடன் இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது. ஜே.எட்கர் ஹூவர் அமெரிக்காவின் ரியல் ஜேம்ஸ் பாண்ட் என்று வர்ணிக்கப்பட்டவர். சுமார் ஐம்பது ஆண்டு காலம் FBI இயக்குநராக இருந்தவர். நவீன பரிசோதனைக்கூடங்கள் மூலம் எஃப்.பி.ஐ அமைப்பை உலகின் தலைசிறந்த உளவு அமைப்பாக உருவாக்கிக்காட்டியவர். இவரைத்தான் இந்த நூல் கிழிகிழியென்று கிழிக்கிறது.
எட்கர் ஹூவர் 1924 முதல் 1972 வரை FBIஇன் இயக்குநராக இருந்தார். இந்தக் காலகட்டம் அமெரிக்க வரலாற்றில் முக்கியமானது. முதலாம் உலகப் போர் சற்று ஓய்ந்து இரண்டாம் உலகப் போருக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிய காலத்தில் பதவி ஏற்றவர், இரண்டாம் உலகப் போரையும் சந்தித்து, அதற்குப் பின் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போரையும் எதிர்கொண்டார். இதில், பனிப்போர் காலகட்டத்தில்தான் எட்கர் தன் சம கால எழுத்தாளர்களைக் கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
பூர்வீக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களோடு நெருங்கிப் பழகிய ஹெமிங்வே, பீட் கலாசாரம் எனப்படும் வீழ்த்தப்பட்டவர்களின் அரசியலையும் பின்னர் ஹிப்பி என்னும் கிழக்கின் ஆன்மிக மரபையும் பேசிய ஆலன் கின்ஸ்பெர்க், தன்னம்பிக்கைவாதம் மற்றும் தனி நபர் சுதந்திரவாதம் பேசிய ஐயன் ராண்ட், ஆப்ரோ அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையைப் பேசிய ஜேம்ஸ் பால்ட்வின் உட்பட சூசன் சொண்டாக், அன்னா அரண்டிட், ட்ரூமேன் கேப்போட், கென் கென்ஸி, நார்மன் மெய்லர் என மக்களோடு மக்களாக நின்ற பல்வேறு எழுத்தாளர்களையும் அந்நாளில் கண்காணித்திருக்கிறது அமெரிக்க அரசு.
இந்தக் கண்காணிப்பு ஒவ்வொரு எழுத்தாளரின் நடவடிக்கைகள் சார்ந்தும் சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை நீண்டிருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படி கண்காணிக்கப்பட்டார், அவர்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பது விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி, பதிவு செய்யப்பட்ட கோப்புகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றுதான் இந்நூலை எழுதி இருக்கிறார்கள்! இந்த ஆவணங்களை எழுதிய கண்காணிப்பு அதிகாரிகள் மக்களின் அபிமானம் பெற்ற கலைஞர்களைக் கொழுத்த பன்றி என்றும் சைக்கோ என்றும் வக்கிரம் பிடித்தவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்!
அவர்கள் எழுதிய ஒவ்வொரு நூலையும், கட்டுரைகளையும், குறிப்புகளையும் படித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் பொருள் காண முயன்றிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... நல்ல போதையில் இக்கலைஞர்கள் உளறியதைக்கூட பதிவு செய்திருக்கிறார்கள்! அமெரிக்காவின் புகழ்பெற்ற விஞ்ஞானக் கதை எழுத்தாளரான ரே பிராட்பரிகூட இந்தக் கண்காணிப்புக்கு ஆளாகியிருக்கிறார். வானியல் ஆய்வில் அப்போது ரஷ்யாவும் முழு மூச்சில் ஈடுபட்டிருந்ததுதான் இதற்குக் காரணமாம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டும் அல்ல...
இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் இப்படியான கண்காணிப்புகள் நடக்கின்றன. சமீபத்தில்கூட மனித உரிமைச் செயல்பாட்டாளரும் தெலுங்குக் கவிஞருமான வரவரராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உட்பட ஐந்து பேரைக் கைது செய்து சிலரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முதிர்ச்சியான சிவில் சமூகங்களில் இப்படியான ரகசிய கண்காணிப்புகள், கைதுகள், விசாரணைகள் போன்றவைப் பற்றி எல்லாம் முறையான ஆவணங்கள் இருக்கும். பிரச்னை ஓய்ந்தபிறகு அவற்றை பொது மக்களின் பார்வைக்கும் வைப்பார்கள்.
ஆனால், நம் நாட்டில் அரசு யார் யாரை எல்லாம் கண்காணிக்கிறது என்பதற்கும், அந்தக் கண்காணிப்பில் என்னென்ன தகவல்கள் திரட்டப்பட்டன, அவை எல்லாம் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றனவா என்பதற்கும் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்பதுதான் கசப்பான எதார்த்தம். எனவே, இனி முகநூல் / டுவிட்டர் மாதிரியான சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவதற்கு முன்னும் கட்டுரை / நூல் எழுதுவதற்கு முன்பும் ஒன்றுக்கு இருமுறை யோசிப்பது நல்லது.
- இளங்கோ கிருஷ்ணன
|