காமிரா அல்ல, காவலன்!
இது கண்காணிப்புகளின் யுகம். கண்காணிக்கப்படுவது தனிமனித சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு பக்கம் சுதந்திரவாதிகள் கதறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகக் குறைந்திருப்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். குற்றத் தலைநகரம் என்று ‘செல்லமாக’ வர்ணிக்கப்படும் மும்பையில், சிசிடிவிகளின் வருகைக்குப் பிறகு மாஃபியாக்களின் செயல்பாடுகள் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றப்பதிவேடு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டுமே 50,000 சிசிடிவி கேமிரா கண்கள், 24 மணி நேரமும் மக்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை போதாது, மேலும் 50,000 கேமிராக்கள் அரசு மற்றும் தனியார்களால் பொருத்தப்படுவது அவசியமென்று காவல்துறையினர் கோரிக்கை வைக்கின்றனர். தெருக்களில் 500 மீட்டருக்கு ஒரு சிசிடிவி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்தமுடியும். அதையும் தாண்டி நடக்கும் குற்றங்களில் குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு தண்டனை வாங்கித்தர முடியும் என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படுவதால் செயின் பறிப்பு சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து வருவதாக காவல்துறையினர் புள்ளி விவரத்தோடு சொல்கிறார்கள். மேலும், அப்படிப்பட்ட சம்பவங்களில் கையும் களவுமாக பல குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன்பாக ஆதாரபூர்வமாக நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவும் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகள் உதவிக் கொண்டிருப்பதை தினமும் செய்தித்தாள்களில் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாகனத் திருட்டு, வழிப்பறி, ஈவ்டீசிங், வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மற்ற குற்றச் செயல்பாடுகளிலும் குற்றவாளி களை சுலபமாக அடையாளம் காண இவை உதவுகின்றன.
எனவேதான் தெருக்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என்று அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். எந்த வகையில் எல்லாம் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகள் உண்மையை வெளிப்படுத்துகின்றன, தேவையற்ற பிரச்னைகளைக் குறைக்கின்றன என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகப் பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே மதுரவாயலில் தலைமைக் காவலர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு காரை மடக்கி விசாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கார் ஓட்டுநர் மர்மமான முறையில் மரண முற்றார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைக் காவலர், ஓட்டுநரைத் தாக்கியதால்தான் அவர் மரண மடைந்தார் என்கிற தகவல் பரவி, பொதுமக்கள் காவல்துறைக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டது. சமூகவிரோதிகள் சிலரும் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். நல்லவேளையாக அங்கே கடையொன்றில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்ததை காவலர்கள் கண்டனர்.
அதில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் தலைமைக் காவலர், காரை மறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது தெரியவந்தது. சிசிடிவி மட்டும் உதவியிருக்காவிட்டால் காவல்துறை மீது அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டு தேவையற்ற பதற்றம் ஏற்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட காவலரின் பணியும் பறிபோயிருக்கும். குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மட்டுமல்ல; இதுபோல அப்பாவிகள், குற்றவாளிகளாக முத்திரை குத்தப்படாமல் இருப்பதற்காகவும் சிசிடிவி உதவுகிறது.
சுருக்கமாக அடிப்படையான சில நன்மைகளைக் குறிப்பிடலாம். பொதுமக்கள் பாதுகாப்பு: தெருக்களில் நடமாடும் மக்களை பாதுகாக்கக்கூடிய காவலனாக சிசிடிவி பணிபுரிகிறது. தெருவில் ஏதேனும் குற்றச்சம்பவமோ, போக்குவரத்துச் சிக்கலோ அல்லது யாருக்கேனும் மருத்துவ உதவியோ தேவைப்பட்டால் அருகிலிருக்கும் காவல்நிலையங்கள் விரைந்து வந்து உதவுவதற்கு பயன்படுகிறது. ஆம், நம்முடைய காவல்துறை சிசிடிவி கேமிராக்கள் வழியாக நம்மை 24 மணி நேரமும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களில்:
அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை சிசிடிவி மூலமாகக் கண்காணிக்க முடியும். ஓபி அடிக்கும் பணியாளர்களை அடையாளம் கண்டு திருத்த முடியும் என்பதோடு, நன்கு பணிபுரியும் ஊழியர்களை அடையாளம் கண்டு பாராட்டவும் உதவும். வணிக வளாகங்களில் கடைகளில் சிறிய அளவிலான திருட்டுகள் நடைபெறுவது சிசிடிவியால் தடுக்கப்படும்.
குற்றங்களைத் தடுப்பதற்கு:
சிசிடிவி கேமிராக்கள், குற்றவாளிகளைக் காவலர்களைப் போல ஓடிப்போய் பிடிக்காது. ஆனால், சிசிடிவி பொருத்தப்பட்ட இடங்களில் குற்றத்தை நிகழ்த்துவதற்கு முன்பாக குற்றவாளிகள் ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பார்கள். ஒரு குற்றம் நடந்துவிட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சிசிடிவி உதவும்.
வீடுகளுக்கு:
குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை சிசிடிவி கேமிரா மூலமாகத் தடுத்து நிறுத்த முடியும். அந்நியர்கள் நம் வீடுகளுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கக்கூடிய காவல் வேலையையும் சிசிடிவி செய்யும்.
செலவு?
எத்தனை கேமிராக்களை பொருத்தப் போகிறோம், அவை எத்தகைய துல்லியத்தோடு இயங்கப் போகின்றன என்பதையெல்லாம் பொறுத்து செலவு கொஞ்சம் மாறுபடும். வீடுகளில் வைக்கக்கூடிய கேமிராக்களுக்கான செலவு ரூ.15,000/-த்தில் தொடங்குகிறது. அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் வேறு வேறு பகுதிகளைக் கண்காணிக்க வேண்டுமென்றால் ரூ.50,000/-க்கும் சற்று கூடுதல் ஆகலாம். வணிக வளாகங்களில் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்தால் நல்ல கண்காணிப்பு கிடைக்கும். ஒருமுறை செலவுதான். பராமரிப்புக் கட்டணமெல்லாம் மிகவும் குறைவே. சிசிடிவி நமக்குக் கொடுக்கக்கூடிய பாதுகாப்பை உத்தேசித்தால், இந்தச் செலவு மிகவும் குறைவே.
- யுவகிருஷ்ணா
|