பிரேம்ஜி நடிக்காத வெங்கட்பிரபுவின் ஜாலி பாட்ர்டி



‘‘இது கலாட்டா ‘பார்ட்டி’. கலர்ஃபுல் ஜாலி, கேலிக் கொண்டாட்டம்தான் நம்ம ‘பார்ட்டி’. கோவாவில் நடக்கிற கதை. ஊர் பெயரைச் சொன்னதுமே ஒரு ஹாலிடே உற்சாகம் உள்ளுக்குள்ளே உதைக்குதுல்ல... அதுதான் படத்தோட பக்கா பேக்கேஜ். முழு நீள காமெடி. கடைசியா எந்த இடத்தில் சிரிச்சோம்னு மறந்துபோற அளவுக்கு உங்களைச் சிரிக்க வைச்சுக்கிட்டே இருக்கும். ‘சென்னை-28’ஐ செல்போனில் எடுத்த படம்னு சொன்னாங்க. அது நின்னது பெரிய உயரம். ‘சரோஜா’ ஒரு ராத்திரி கண்ணாமூச்சி.‘பார்ட்டி’ல கேமராமேன் ராஜேஷ் யாதவுக்கு மெகா சுதந்திரம் கொடுத்திருக்கோம். சந்தோஷமா பரபரனு போற மாதிரி ஒரு படம்..!’’ அருவியாகக் கொட்டுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.


இப்ப வருகிற காமெடிக்கெல்லாம் நீங்கதான் அடித்தளம்...

நமக்கு இந்த ‘பார்ட்டி’ என்கிற வார்த்தையே ரொம்பப் பிடிக்கும். கிரேஸிமோகன் ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘பஞ்சதந்திரம்’ படங்களில் ஒரு ஜானரில் காமெடி வச்சிருப்பாரு. யெஸ்.... அதே, அதே ரகம்தான் இது. 2016 டிசம்பர் 31ந்தேதி ராத்திரி கோவாவில் நடக்கிற கதை. ஒரு ராத்திரி எட்டு மணி போல பண மதிப்பிழப்புன்னு ஒரு அறிவிப்பு வருது. பெரிய பெரிய பணக்காரர்கள் பழைய பணத்தை எப்படி புதுப்பணமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன்லைன்.

அந்தப் பணம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகலை. எப்படி அதை கைமாற்றி பணத்தையும் மாற்றிக் கொண்டார்கள் என்பதன் விரிவே ‘பார்ட்டி’.‘மங்காத்தா’வில் கூட ஐபிஎல் பணத்தைக் கைப்பற்றுவதுதான் கதையாக இருந்தது. ‘Comedy of Errors’னு சொல்வாங்க. அப்படித்தான் இந்தப் படத்தில் சம்பவங்கள் சுழலும். ‘கோவா’வில் எடுக்கவேண்டிய முழுப்படத்தையும் பிஜித் தீவில் எடுத்தோம்.

என்னாச்சு... உங்க பழைய மக்களுக்கு... சிவா, ஜெய் தவிர இந்தப் படத்தில் எல்லோருக்கும் ‘தடா’வா?

மந்தையில் ஒரு ஆடு விலகித் தனியாகப் போனாலும் ‘எங்கே உங்க கேங்’னுதான் கேட்கிறாங்க! அவங்களைக் குறை சொல்லவே முடியாது. என்ன சேட்டைகள் செய்திட்டு திரிஞ்சாலும் ஷூட்டிங்னு சொல்லிட்டால் ‘படார்’னு ஸ்பாட்டில் நிக்கிற அருமையான பசங்க. இதில் என் கேங்கில் சிவா, ஜெய் மட்டும் இருக்காங்க. அதற்கும் மேலே சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், நாசர், ‘கயல்’ சந்திரன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, சுரேஷ், ஷாம்... இன்னும் எக்கச்சக்க நட்சத்திரங்கள்.

முதல் பாதியில் புதுசா ஓர் அணுகுமுறையை வைச்சிருக்கேன். உங்களது பார்வையில் போய் ஒரு காட்சி முடிவானதும், அங்கிருந்து மத்தவங்க பார்வையில் படம் போகும். மிகச்சிறிய குழப்பத்துக்கு இடமிருக்கு. பிறகு அதுவே பழகிப்போகும்! ஆனால், சத்யராஜ் சாரை மறக்க முடியாது. அவருக்கு கேரக்டர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. படத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு விக் வைச்சுக்கிட்டு திரிகிற கேரக்டர். கெட்டவர் இல்லை... அராத்து! அவருக்கே போராளியா, பெரியவரா, தகப்பனா நடிச்சு நடிச்சு சலிச்சுப்போச்சு.

இதில் ‘நடிகன்’, ‘அமைதிப்படை’ சத்யராஜ் மாதிரி வெளுத்து வாங்கியிருக்கிறார். படம் ஒரு சமயம் சத்யராஜ் சாரைச் சுத்தி வரும். பிறகு அதுவே ஜெயராம் சார்கிட்டே மாறும். அப்புறம் ஜெய் மேலே பயணம் போகும். அதற்கடுத்து சிவாவை நோக்கிச் செல்லும். ஆளாளுக்கு பல்லக்கைத் தூக்கிட்டுப் போற மாதிரி கதையை எடுத்து போய்க்கிட்டே இருப்பாங்க. இடைவேளைக்குப் பிறகு கதை நேரடியா போய்க்கிட்டே இருக்கும்.

பிஜித் தீவில் 75 நாட்களா..?

ஷூட்டிங் நடந்தது 57 நாட்கள்தான். நிறைய ஏற்பாடுகள் செய்வதற்காக முன்னமே போய்ச் சேர்ந்திட்டோம். அருமையான தீவு. பணக்காரர்களுக்கானது. வாழ்க்கையை அங்கே அனுபவிக்கிறாங்க. மாலை 5 மணிக்கெல்லாம் கடையைச் சாத்திட்டு போயிடுறாங்க. ஒரு நாளில் நடக்கிற கதை வேறயா... அதனால் இரவெல்லாம் ஷூட்டிங் நடக்கும். அங்கிருந்த ஒவ்வொரு நாளும் நெருக்கடியான வேலையில் இருந்தாலும் சந்தோஷம்தான்.


ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி... மூன்று அழகிகள் வேற...

அவங்களை கவர்ச்சியாகவெல்லாம் காண்பிக்கலை. அவங்களே அப்படித்தான் இருக்காங்க! ரெஜினா இந்தப் படத்தில் கொஞ்சம் ஆண் தன்மையோடு இருக்கிற பொண்ணு. நிவேதா, ரெஜினா, சஞ்சிதாவெல்லாம் கொண்டாட்டத்தில் கொண்டுபோய் வைச்சு உங்களைச் சக்கரமாக சுத்தி விடுவாங்க. யப்பா... பாருங்க!

உங்க தயாரிப்பாளர் டி.சிவா என்ன சொல்றார்?

கதை சொன்னேன். புரிஞ்சிக்க சிரமப்பட்டார். ‘நீ எடுத்துக்காட்டிடு தம்பி...’னு சொல்லிட்டார். ‘சரோஜா’ கதையே அவருக்கு க்ளைமேக்சில்தான் புரிபட்டது.  அவர் சினிமாவுக்கு வந்து 25 வருஷங்களாச்சு. அவருக்கு சந்தோஷமா ஒரு ட்ரீட்டை இந்த ‘பார்ட்டி’யின் மூலமா தரணும். அவர் என்மேல் வைச்சிருக்கிற நம்பிக்கைதான் அழகு. அவர்தான் இந்தப் படத்தின் மியூசிக்கை பிரேம்ஜி செய்யட்டும்னு சொல்லிட்டார். இதெல்லாம் யுவனின் சம்மதத்தின்படிதான் நடந்தது.

இந்தப் படத்தில் பிரேம்ஜி நடிக்காமல் போனதால் அவனது நாலைந்து ரசிகர்கள் கோபிப்பார்கள். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்! பதிலாக அவனது இசை படமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஐந்து பாடல்களையும் சூர்யா - கார்த்தி, அனிருத், ஜி.வி.பிரகாஷ், இமான், எஸ்.பி.பி. பாடியிருக்கிறாங்க. அத்தனை இசையமைப்பாளர்களும் அன்புக்காக பாடிய நிகழ்வு இது. பிரேம்ஜி நடிப்பை விட்டுட்டு, இசையுலகிற்கு நகர்ந்து செல்ல வேண்டிய கட்டத்துக்கு வந்திட்டான். இசை பயின்றவன். இசையை தீவிரமாக நினைக்கிறவன். அவனுக்கு அதுதான் சரி.


சரி, பிஜித் தீவில் ‘பார்ட்டி’ நடந்ததா?

ஆஹா... ஞாபகப்படுத்திட்டீங்க... அங்கே ‘காவா’ன்னு ஒரு பானம் இருக்கு. அது செம ஐட்டம். ஒரு குறிப்பிட்ட மரத்தோட வேரை அப்படியே பிடுங்கியெடுத்து தண்ணியில போட்டு கலக்கி கொடுக்கிறாங்க. அந்த ஊர் தேசிய பானம். குடிச்சதும் கொண்டு போய் தள்ளாமல், உள்ளேயே இருந்து தெம்பு, அமைதி, சின்ன உந்துதல் அளிக்கிற பானம்! எல்லோரும் அதை டேஸ்ட் பண்ணிப் பார்த்தோம். கார் ஓட்டுனா கூட நம்மை அடக்கமா வழிநடத்துது இந்த ‘காவா’. பார்ட்டி எல்லாம் ஜாலிதான். அங்கே ஷூட்டிங்தான் ஜோலி!
        
- நா.கதிர்வேலன்