யு டர்ன்



யு டர்ன் அடிப்பவர்களின் மர்மச் சாவுகளுக்குக் காரணமானவர்களைச் சிக்க வைப்பதே ‘யு டர்ன்’. பத்திரிகையில் வித்தியாசமான ஒரு கவர் ஸ்டோரியை எழுதி கவனம் பெற நினைக்கிறார் சமந்தா. வேளச்சேரி மேம்பாலத்தில் தடுப்புகளை அகற்றிவிட்டு வரம்பு மீறிச் செல்வதால் ஏற்படும் அபாயங்களை  ஆய்வு செய்கிறார். அப்படிச் செல்லும் வாகனங்களின் எண்களை ஒருவரிடம் கேட்டுப்பெறுகிறார். சம்பந்தப்பட்ட ஒருவரை விசாரிக்கச் செல்லும்போது, அவரே இறந்து கிடக்க, பிரச்னை சிக்கலாகிறது. போலீஸ் உயர் அதிகாரி நரேன் அவரைச் சந்தேகப்பட, இன்னொரு அதிகாரி ஆதி அவரை நிரபராதி என நம்புகிறார்.

கடைசியாக யு டர்ன் அடித்த நபர்களில் சமந்தாவின் காதலர் ராகுல் இருக்க, அவரைக் காப்பாற்ற ஆதியும், சமந்தாவும் பரபரக்கிறார்கள். இந்த அடுக்கடுக்கான  மரணங்களுக்குக் காரணம், ராகுல் தப்பினாரா... போன்ற கேள்விகளுக்கு பதிலே க்ளைமேக்ஸ். அதிக அக்கறையும், கொஞ்சம் அப்பாவித்தனமும், பிடிவாதத்தோடு உண்மையை அறிந்துகொள்ளும் செய்தியாளராகவும் சமந்தா தேர்வு சிறப்பு. எதற்காக நாம் காவல்துறையால் அழைத்துச் செல்லப்படுகிறோம் என அறியாமல் தவிக்கும்போது அவரது மொத்த உடல் மொழியும் பதறுகிறது.

பாப் தலைமுடியில், இளம் பத்திரிகையாளராகத் துறுதுறு நடிப்பில் பொருந்துகிறார். ராகுல் ரவீந்திரன் அடக்கமான நடிப்பு. தேர்ந்த பக்குவத்துடன் சமந்தாவின் பிரச்னைகளுக்குத் தோள் கொடுக்கிறார். நேர்மையான அதிகாரியாக அண்டர்ப்ளே நடிப்பில் ஆதி. உயர் அதிகாரியின் கட்டளைகளைப் பணிவுடன் ஏற்றுக்கொள்வதும், பின் அவர் கடிந்துகொண்டாலும் பொறுத்துக் கொள்பவராகவும் யதார்த்தமாக வருகிறார். பரபரப்பு சூழல் நிரம்பிய நகர போலீசின் அவசர எத்தனங்கள், பிரச்னைகள், ப்ரஷர் எல்லாமே அப்பட்டமாகத் தெரிகிற சூழல்.

படத்தில் மொத்த ஆபீஸர்கள் குழுவும் நேர்த்தியாக உழைக்கிறது. ஆதி, சமந்தாவோடு சேர்ந்து சுமுகமாகப் பயணப்படும்போது, காதலாக எதையும் காட்டி விடாத கண்ணியமும் அழகு. பூமிகா தொடர்பான காட்சிகளில் ஏனோ நம் மனதுக்கு நெருக்கம் ஏற்படவில்லை. நரேன் கேரக்டரின் பாதிப்பும் குறைவுதான். ‘ஆடுகளம்’ நரேன் தெளிவு. கதைப் போக்குடன் சேர்ந்து இயங்கும் வசனங்களில் உயிர் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவின் கிளிஷே எதுவு மில்லாமல் படத்திற்கு உயிரூட்டியிருப்பது நன்று. போலீசின் பதற்றத்தையும், அவசரத்தையும், இறுதி நிகழ்வுகளையும் படமாக்குவதில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மி ரெட்டி.

பதற்ற, இறுக்க கணங்களில், திகிலூட்டும் திருப்பங்களில் இசையமைப்பாளர் பூர்ணசந்திர தேஜஸ்வி பெட்டர் ஸ்கோர். போலீஸ் காவலில் இரண்டு பேர் அடித்துக்கொள்வதும், அதை போலீஸ் அதிகாரிகள் தடுக்க முடியாததையும் நம்ப முடியவில்லை. தமிழ் சினிமா அதிகம் கண்டிராத திரைக்கதை அமைத்ததில் இயக்குநர் பவன்குமார் கவனம் பெறுகிறார். இறுக்கி வேகம் எடுத்திருப்பதில் ‘யு டர்ன்’ ரசிக்க வைக்கிறது.

- குங்குமம் விமர்சனக்குழு